அப்படி பம்பாய் செல்லும் தமிழக கலைஞர்களை அங்குள்ளவர்கள்
"சாலா மதராஸி" என அழைத்து கேலி செய்தனர். இந்த கேலி வார்த்தை
சென்னையிலிருந்து செல்பவர்களை மிகுந்த எரிச்சலடைய வைக்கும். இருந்தாலும் தாங்களின்
நோக்கம் நிறைவேற தொழிலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர்.
ஆனால், அந்த குஸ்தி கலைஞரிடம் அது நடக்கவில்லை.
தன்னை கிண்டல் செய்தவர்களை தனது பாணியில் உண்டு இல்லை என்கிற நிலைக்கு
ஆளாக்கினார்.
தமிழருக்கு நேர்ந்த அவமானத்தை போக்கி மரியாதை
கிடைக்கச் செய்த அந்த மனிதர் வேறு யாருமல்ல.....ராஜா சாண்டோ.
சிறந்த விளையாட்டு வீரராகவும், குஸ்தி சாம்பியனாகவும் விளங்கிய ராஜா சாண்டோ, 1895 ம் வஆண்டு பொள்ளாச்சியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் பி.கே.நாகலிங்கம்.
நடிகராகவும், இயக்குனராகவும், சிறந்த வசனகர்த்தாவாகவும் பன்முக ஆற்றலுடன் விளங்கிய
ராஜா சாண்டோ, 1915 –ஆம் ஆண்டு தனது இருதாவது வயதில் சென்னை
வந்தார்.
ஒருமுறை கொல்லங்கோடு அரண்மனைக்குச் சென்ற சாண்டோ, அங்கு விஜயம் செய்திருந்த பரோடா மன்னருக்கு தேகப் பயிற்சி
காட்சிகளை நடத்திக் காட்டினார். சிறிய வயதில் அவரது திறமையை பாராட்டிய மன்னர்,
ஆயிரம் ரூபாய் சன்மானமாக கொடுத்து சாண்டோவை கவுரவித்தார். பின்னர்
மங்களூரில் சில காலம் தேகப் பயிற்சிகளை நடத்தினார்.
பம்பாய்யில் புகழ் பெற்ற நேஷனல் பிலிம்
கம்பெனியில் குஸ்தி கலைஞராக நடிக்க சேர்ந்த ராஜா சாண்டோ, அந்த நிறுவனம் தயாரித்த 'பக்தபோதனா" என்ற மௌனப் படத்தில் நடித்தார். 1922 ஆம்
ஆண்டு வெளியான அந்தப் படத்தில் அவருக்கு சம்பளம் 101 ரூபாய்.
அதில் 'சதி மாதுரி", "இடையர் மன்னன்", "ஞான சவுந்தரி",
"டைபிஸ்ட் பெண்", "மும்தாஜ்
மகால்", "படித்த மனைவி", "மனோரமா" ஆகிய படங்கள் இவருக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தன.
சந்த்லால்ஷாவின் டைரக்ஷனில் ''விசுவமோகினி", "கிருகலட்சுமி",
"சந்திரமுகி", "ராஜ
லட்சுமி" ஆகிய படங்களில் கோஹர் என்ற புகழ்மிக்க நடிகையோடு இவர் நடித்தார்.
ரஞ்சித் பிலிம் கம்பெனியார் தயாரித்த பல படங்களில் கதாநாயகனாக ராஜா சாண்டோ
நடித்தார். அவற்றில் "பாரிஸ்டரின் மனைவி" பெரிதும் பேசப்பட்டது.
1922 ஆம் ஆண்டு முதல் 1931 ஆம் ஆண்டு வரை 50
மௌனப் படங்களில் நடித்த ராஜா சாண்டோ, பதினோரு மௌனப் படங்களை இயக்கி இருக்கிறார்.
அவரது இயக்கத்தில் வெளியான முதல் மௌனப் படம் 1928 ல் வெளியான
சினே ஜோதி.
பம்பாய், ரஞ்சித் பிலிம் கம்பெனியில்
திரை நுணுக்கங்களை நன்கு அறிந்துகொண்ட ராஜா சாண்டோ, தன் அனுபவங்களையும்,
திறமையையும் ஆரம்ப நிலையிலிருந்த தமிழ் படத்துறைக்கு அளிக்க விரும்பினார்.
அந்த காலத்தில் புகழ் பெற்ற எழுத்தாளராக
விளங்கிய பெண் எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி அம்மாள் எழுதிய அனாதைப் பெண் என்ற கதையை
அதே பெயரில் அனாதைப் பெண் என்ற திரைப்படமாக 1931ல் எடுத்தார் ராஜா சாண்டோ. நாவல்
ஒன்று திரைப்படமாக எடுக்கப்பட்டது அதுவே முதல் முறையாகும்.
சதி உஷா சுந்தரி, ராஜேசுவரி, பக்த வச்சலா,
பாரிஜாத புஷ்பஹரணம் போன்ற ஊமை படங்களையும் இயக்கினார். இதில பல படங்கள் சமூக
கதையம்சம் உள்ள சீர்திருத்த கருத்துக்கள் கொண்ட படங்களாக அமைந்தன.
பாரிஜாத புஷ்பஹரணம் படம் பேசும்படம் வந்த
காலத்தில் வெளியானது. புராண கதையை மையமாக நரசிம்மராவ், கே.டி.ருக்மணி நடிப்பில்
உருவாக்கிய இந்தப் படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
1931-ம் ஆண்டு வெளிவந்த முதல் தென்னக பேசும் சினிமாவான
'காளிதாஸ்", முழுமையான ஒரு தமிழ்
படமாய் அமையவில்லை என்ற எண்ணம் அவர் மனதில் உறுத்திக்கொண்டிருந்தது. பரிசோதனை
ரீதியில் எடுக்கப்பட்ட ஒரு பன்மொழித் தொகுப்பாக அந்தப் படம் உருவாகியிருந்தது.
அப்போது ‘ஷியாம் சுந்தர்’, ‘பரதேசி ப்ரீதம்’, ‘நூர்-இ-இமான்’,
‘தேவகி’, ‘காஷ்மீரா’, ‘’தூபானி
தருணி, ‘இந்திரா எம்.ஏ’, ‘ராத்-கி-ராணி’,
‘பாரிஸ்டரின் மனைவி’, ‘கல்லூரி கன்யா’,
‘தேஷ் தாசி’ என பதினோரு இந்திப் படங்களில் நடித்தார். இதில் ‘ராத்-கி-ராணி’
என்கிற இந்திப் படத்தையும் இயக்கி, நடித்தார்.
வட இந்தியாவில் ஊமைப் படங்களில் பத்தாண்டுகள்,
பேசும் படங்களில் நான்கு ஆண்டுகள் தனது திறமையை வெளிப்படுத்திய ராஜா சாண்டோ,
மீண்டும் 1935 ஆம் ஆண்டில், சென்னைக்கு வந்து மீண்டும் தமிழ்
பேசும் ‘மேனகா’ படத்தை இயக்கும் பணியை தொடங்கினார்.
அதன் பிறகு ‘பிரபு கா பியாரா’ என்கிற இந்திப்
படத்தில் நடித்தவர், ‘வசந்த சேனா’ என்கிற தமிழ்ப் படத்தை இயக்கி நடித்தார். ‘சாலக்
சோர்’ என்கிற இந்திப் படத்தை இயக்கி, நடித்தவர், ‘சந்திர காந்தா’ என்கிற தமிழ்ப்
படத்தின் திரைக்கதை எழுதி இயக்கினார்.
அதன் பிறகு தில் கா டகு, மத்லபி துனியா, தூபானி டார்சன் ஆகிய
நான்கு இந்திப் படங்களில் தொடர்ந்து நடித்தவர், மைனர் ராஜாமணி என்கிற தமிழ்ப்
படத்தை இயக்கினார். 1938ஆம் ஆண்டில் ஏவி.மெய்யப்ப செட்டியாரின் நந்தகுமார்
படத்தில் நடித்தவர், அதே ஆண்டில் விஷ்ணுலீலா என்கிற படத்தை இயக்கி நடித்தார். தெலுங்கு
மொழியில் புஷ்பவல்லி நடித்த சூடாமணி என்கிற படத்தையும் இயக்கினார்.
வை.மு.கோதைநாயகி |
அதன் பிறகு கோவை கந்தன் ஸ்டுடியோ தயாரித்த ‘ஆராய்ச்சி
மணி’ படத்தை இயக்கினார். மனுநீதி சோழன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்தப்
படம் அவர் இயக்கிய கடைசி படமாக பதிவாகியுள்ளது.
என் குருநாதர் டைரக்டர் பி.கே.ராஜா சாண்டோ
அவர்கள் நடிக்கத் தெரியாதவர்களையும் தனது சமயோசித யுக்தியால் சிறப்பாக நடிக்க
வைத்து விடுவார். அவர் ஒரு பிறவி மேதை" என்று ராஜா சாண்டோ குறித்து பேசி
இருக்கிறார், நடிகர் பி.யு.சின்னப்பா.
டைரக்டர் ராஜா சாண்டோ படமாக்கும் பாங்கும், நடிகர், நடிகைகளிடம் பழகும் பண்பும்
எல்லோராலும் பாராட்டப்பட்ட காலம் அது. அந்த காலத்தில் பி.யு சின்னப்பா மட்டுமின்றி
மக்கள் திலகம் எம்.ஜி. ஆரும் அவரை தன் குரு என போற்றி இருக்கிறார். என்
திரைப்படங்கள் ராஜா சாண்டோ பாணியை பின்பற்றியது என ஒருமுறை குறிப்பிட்துள்ளார், எம்.ஜி.
ஆர்.
ராஜா சாண்டோ, தன் மனைவி
ஜானகி பாய் பெயரில் ஜானகி பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தையும் துவங்கி ஒரிரு
தமிழ்ப்படங்களை துவக்கியதாக குறிப்பு காணப்படுகிறது. ஆனால் அது பாதி தயாரிப்புடன்
நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது.
1942 ஆம் ஆண்டு, ராஜா
சாண்டோவின் முதுகுப் பகுதியில் ஒரு கட்டி உருவாகி அவருக்கு தொந்தரவு அளித்தது. இதை
எடுக்க அவர் புகழ்பெற்ற மருத்துவமனையை அணுகினார். ஆபரேஷன் செய்யப்பட்டது. அதற்கான
செலவை நண்பர்கள் உதவியுடன் செலுத்தினார். இருப்பினும் அதே இடத்தில் அடுத்தடுத்து
கட்டிகள் உருவாகி தொடர்ந்து சிகிச்சையளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
உடல் வலிமை மட்டுமின்றி, மனவலிமையும் அதிகம் பெற்றவரான ராஜாசாண்டோ, அதிலிருந்து மீண்டவர், சில மாதங்களுக்கு பிறகு 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
24 ஆம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.
அதீதி திறமையால், வட
இந்தியாவில் கோலோச்சிய தமிழகத்தின் முதல் கலைஞனான ராஜா சாண்டோவின் சினிமா சேவையைப்
போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு அவரது பெயரில் "ராஜா
சாண்டோ" நினைவு விருதொன்றை நிறுவியது. ஆண்டுதோறும் தமிழ் சினிமா வளர்ச்சிக்கு
அரும் பணியாற்றிய கலைஞர்களில் ஒருவருக்கு வழங்கி சிறப்பிக்கின்றது.
தமிழ்த்திரையுலக வரலாற்றில் ராஜா சாண்டோவின்
சாதனை தவிர்க்க முடியாத பக்கங்கள். திரையுலகின் கடைசி சாதனையாளர் உள்ளவரை அவரது
புகழ் நிலைத்து நிற்கும்!
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக