சனி, 12 பிப்ரவரி, 2022

நடிகர் டி.எஸ்.பாலையா வாழ்க்கை வரலாறு

நடிகர் டி.எஸ்.பாலையா

திருநெல்வேலி, சுப்பிரமணியம் பாலையா என்கிற டி.எஸ். பாலையா ஒரு பேரற்புத ஆற்றல் மிக்க கலைஞன், தமிழ் சினிமாவில் பல சாதனைகளை சத்தம் இல்லாமல் செய்த நிகரில்லா நடிகன். இன்றைய தூத்துக்குடி மாவட்டமான சுண்டங்கோட்டை தான் இவர் சொந்த ஊர். பாலையா பிறந்தது 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி.  

அப்போது சினிமா பேச ஆரம்பிக்கவில்லை மவுனப்படங்கள் தான் வெளிவந்தன. பாலையாவின் ஆசை சினிமா மீது அல்ல.! அவர் காதலித்தது சர்க்கஸை.! முதன் முதலாக அவர் பார்த்த சர்க்கஸில் நிகழ்த்திய சாகசங்கள் அவரை அதன்மீது காதல் கொள்ளவைத்தது, அந்த சர்க்கஸ் கலைஞர்களுக்கு கிடைத்த கைத்தட்டலும் பாராட்டும் அவருக்கு ஒரு போதையை தந்தது!

சர்க்கஸ் கம்பெனியில் சேர்த்து விடுவதாக கூறிய ஒருவனை நம்பி  வீட்டுக்கு தெரியாமல் பணத்தை எடுத்துக்கொண்டு மானாமதுரைக்கு கிளம்பினார், பாலையா. இரவு நேரத்தில் அந்த கம்பெனிய தேடி பிடிக்க முடியாது. விடிந்ததும் தேடலாம் என்று அவரை ரயில் நிலையத்தில் தூங்க வைத்தான் அழைத்து போனவன். பொழுது நன்றாக விடிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு படுத்தவர் விடிந்து எழுந்து பார்த்த போது அவனும் இல்லை. பையில் இருந்த பணமும் இல்லை.

அடடா ஏமாந்துவிட்டோமே என்று கலங்கியவர், பிறகு அங்குள்ள  உணவகத்தில் வயிற்றுக்காக வேலைக்கு சேர்ந்தார். கசாப்பு கடைக்காரர் ஒருவர் நாடக் குழு ஆரம்பிக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரிரம் சென்று வாய்ப்பு கேட்டவர், சிறிது நாள் அவருடைய இறைச்சி கடையிலும் வேலை பார்த்திருக்கிறார். 

அங்கு மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் குழு தங்கி நாடகம் போட்ட போது, நாடகத்தை பார்க்க சென்றவர், நாடகம் முடிந்ததும், நாமும் அவர்களைப் போல நடிக்கலாமே என்று மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டார்.

துணிச்சலுடன் சென்று வாய்ப்பு கேட்டார். பாய்ஸ் கம்பெனியில் வாய்ப்பு கிடைத்தது. சிறிது நாட்களில் பாய்ஸ் கம்பெனி உடைந்தது. பால மோஹன சபாவில் இணைந்தவர்கள் அனைவருமே 15 வயதிற்கு உட்பட்டவர்களே. தமிழகத்தின் அன்றைய ஸ்டார் நடிகர்களில் ஒருவரான MKராதா அவர்களின் தந்தை கந்தசாமி முதலியார் அவர்களால் துவங்கப்பட்ட நாடகக் குழு அது. எம்.ஜி.ஆர், சிவாஜி, கலைவாணர், தங்கவேலு, எம்.ஆர்.ராதா போன்றவர்களை அறிமுகம் செய்தது கந்தசாமி முதலியார் தான்! அங்கு சேர்ந்து அவருக்கு மிகப்பிடித்த நடிகரானார் பாலையா!

அதன் பிறகு அவர்கள் நடித்த பதிபக்தி என்னும் நாடகம் பெரும் வெற்றியை பெற அந்த கதை பதிபக்தி என்கிற பெயரில் படமானது. பதிபக்தி நாடகத்தில் நடித்த அதே வேடம் சினிமாவிலும் பாலையாவிற்கு கிடைத்தது, அந்தப்படம் தான் சதி லீலாவதி!

ஆம் MGRக்கு மட்டுமல்ல பாலையா, NSK, தங்கவேலு மற்றும் அப்படத்தின் ஹீரோவான MKராதாவுக்கும் சதிலீலாவதி தான் முதல் படம்! இயக்கியவர் எல்லீஸ் ஆர்.டங்கன் எனும் அமெரிக்க இயக்குநர். முதல் படத்திலேயே வில்லனாக அறிமுகம் ஆனார், பாலையா.

அதன் பிறகு பாலையா நடித்தது இரு சகோதரர்கள். இதையும் எல்லிஸ் ஆர். டங்கனே இயக்கினார். 1937ஆம் ஆண்டு பாலையாவிற்கு மறக்கமுடியாத ஆண்டு, ஆம் அன்றைய மெகா சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதருக்கு வில்லனாக அம்பிகாபதி படத்தில் நடித்தார்! இதுவும் டங்கன் இயக்கமே, தமிழகம் முழுவதும் பாலையா புகழ் பரவ அன்றைய அடுத்த சூப்பர் ஸ்டாரான PUசின்னப்பா நடித்த உத்தமபுத்திரன் படத்திலும் வில்லன்! தியாகராஜா பாகவதர், பி.யூ சின்னப்பா இருவருக்கும் வில்லனாக நடித்து பெரும் புகழ் அடைந்தார் பாலையா.!

பம்பாய் மெயில், பூலோக ரம்பை, ஆர்யமாலா, பிருதிவிராஜன், மனோன்மணி, ஜகதலப்பிரதாபன், சாலி வாஹனன், மீரா முதலிய படங்கள் எல்லாம் அவர் நடித்த முக்கியமான அன்றைய ஹிட் படங்களின் வரிசையாகும்.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் விரக்தியில் சாமியாராகப் போய் விட்டார் பாலையா. பாண்டிச்சேரிக்குப் பட வேலையாகச் சென்றிருந்த மாடர்ன் தியேட்டர் டி.ஆர். சுந்தரம் கண்ணில் பட்டிருக்கிறார். ‘யார்டா அந்தச் சாமியார். பாலையா மாதிரி தெரியுதே’ என்று ‘கண்டு’ அவரைப் ‘பிடித்து’ அந்தக் கணமே அவரை வலுக்கட்டாயமாகத் தனது காரில் ஏற்றிக்கொண்டு சேலம் வந்து சேர்ந்து விட்டார். அடுத்தநாளே அங்கே படப்பிடிப்பு நடந்து வந்த ‘பர்மா ராணி’ என்ற படத்திலும் நடிக்க வைத்து விட்டாராம்.

புகழ்பெற்ற வில்லன் கதாநாயகன் ஆன வரலாற்றையும் பாலையாவே துவக்கி வைத்தார். ஆம் அவர் கதாநாயகனாக நடித்தபடம் சித்ரா! 1946 இல் வெளியானது!

அதன் பிறகு மீண்டும் வில்லனாக வால்மீகியில் நடித்துவிட்டு 1947இல் மீண்டும் கதாநாயகனாக செண்பகவல்லியில் நடித்தார்! MGR ஹீரோவாக நடித்த முதல்படமான ராஜகுமாரியில் பாலையா தான் வில்லன்! அந்தப் படத்தில் இருவரும் போடும் கத்திச்சண்டை படத்தின் சிறப்பம்சமாக விளங்கியது. ஜூபிடர் பிக்சர்ஸின் மோகினி என்ற படத்தில் 2 கதாநாயகர்கள். ஒருவர் எம்.ஜி.ஆர். மற்றொருவர் பாலையா!. இதில் பாலையாவின் ஜோடி மாதுரிதேவி!

பின்பு நாட்டிய ராணி, விஜயகுமாரி, ஏழைபடும்பாடு, சந்திரிகா முதலிய படங்களில் நடித்தார். பேரறிஞர் அண்ணாவின் வேலைக்காரி படத்தில் வரும் இவரது பகுத்தறிவாளன் 'மணி' காரக்டர் தான் பின்னாளில் பராசக்தியில் சிவாஜி நடித்த கேரக்டருக்கு முன்மாதிரி!

1950ஆம் ஆண்டு பட்சிராஜா ஸ்டூடியோ எடுத்த பிரசன்னா என்ற மலையாள படத்தில் அதில் லலிதா கதாநாயகியாகவும் பத்மினி 2வது கதாநாயகியாகவும் நடித்தனர். லலிதாவுக்கு ஜோடியாக பாலையா நடித்தார். இந்த படத்தில் தான் பாலையா சொந்தக்குரலில் பாடினார்!.

ஆம் பாலையா மிகச் சிறந்த பாடகரும் கூட.! அதன் பிறகு 1968 வரை திரையுலகில் பட்டொளி வீசிப் பறந்தது பாலையாவின் கொடி! வில்லன் என்றால் அது பாலையா தான் என்ற நிலை.

மதுரை வீரன் படத்தில் MGRடன் மோதுவது போல ஆவேசமாக இடுப்பிலிருந்து கத்தியை உருவி 'இன்று என்ன கிழமை?' என்பார்! வெள்ளிக்கிழமை என்று ஒருவர் சொல்ல 'அடடா! இன்று விரதம்'என்று எடுத்த கத்தியை உறையில் போட்டு விடுவார். இன்னொரு நகைச்சுவையான வசனம், 'அரசே நாங்கள் பின் தொடர்ந்து போனோம் ஆனால் அவர்கள் முன் தொடர்ந்து போய்விட்டார்கள்' என்பது!

புதுமைப்பித்தனில் MGR ‘அதோ வருகிறது வஞ்சகத்தின் மொத்த உருவம்’ எனும்போது அமுல்பேபி போல நடந்து வருவார். பார்ப்பவர்க்கு வெறுப்போடு சிரிப்பும் வரும்!

பாலையாவின் வில்லன் நடிப்பிற்கு பெரும் பலம் அவரது வஞ்சகமான பார்வை! அதில் ஒரு கயமைத்தனம் அப்படியே தெறிக்கும், அடுத்து அவரது நயவஞ்சகப் புன்னகை! இதிலேயே ஆறேழு வெரைட்டி வைத்திருப்பார்! அடுத்து வசன உச்சரிப்பு வார்த்தைகளை உச்சரிக்கும் லாவகம்!

ஒரு நீளமான வாக்கியத்தை எங்கு ஏற்றி எங்கு இறக்கினால் அது வேறு பொருளில் வரும் என்பதை கனகச்சிதமாகச் செய்வார்! அதிசயத்திருடன் என்னும் படத்தில் கொடூரமான ராஜகுருவாக வருவார், அப்படத்தில் அவர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை "நிலகலகண்டம்" இதை அந்தப்படம் முழுவதும் 20 முதல் 25 விதங்களில் வேறு மாடுலேஷன்களில் உச்சரித்து இருப்பார்!

இப்படி கொடூர வில்லனாக கோலோச்சிக் கொண்டிருந்த பாலையாவை பாசக்கார குணசித்திர நடிகனாக மாற்றிய படம் பாகப்பிரிவினை. அதில் சிவாஜியின் மூத்த சகோதரனாக வந்து பலரை தன் நடிப்பால் அழவைத்திருப்பார், ஒரே காட்சியில் பாலையா அண்ணனும் எஸ்.வி.சுப்பையா அண்ணனும் நம்ம கூட நடிச்சா ஜாக்கிரதையா இருக்கணும்பா! கொஞ்சம் அசந்தா போச்சு நம்ம நடிப்பை தூக்கி சாப்பிட்றுவாங்க! இப்படி பலமுறை சொன்னவர் நம்ம நடிகர் திலகம் சிவாஜி!

காதலிக்க நேரமில்லை படத்தில் கதாநாயகிகளின் அப்பா கேரக்டரில் நடித்த எஸ்.வி.ரங்காராவ் சரியானபடி படபிடிப்பிற்கு வந்து ஒத்துழைக்கவில்லை.! அதனால், அவரிடம் அழுத்தம் கொடுத்தார், இயக்குநர, ஶ்ரீதர். இதனால், ரங்காராவ் கோபித்துக் கொண்டு இந்தப்படமே எனக்கு வேண்டாம் என படத்திலிருந்து விலகிவிட்டார்.! இந்த காரக்டருக்கு யாரை போடலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்த ஸ்ரீதரிடம், பாலையாவை நடிக்க வைங்க என்று ஆலோசனை கூறி இருக்கிறார்,  டி.ஆர்.ரகுநாத்.

ஶ்ரீதர் மனதிலும் ஏற்கனவே பாலையா தான் இருந்தாராம். ஆனால், அப்போது வில்லன், குணசித்திர நடிகராக மட்டுமே பாலையா அறியப்பட்டிருந்ததால் ஒரு சிறு தயக்கம் இருந்தது. இதில் காமெடியும் செய்யவேண்டுமே பாலையா பொருத்தமாக இருப்பாரா என்னும் சந்தேகமே, ஒரு மனதாக துணிந்தார் ஶ்ரீதர். படம் வெளியானதும் பாலையாவின் நகைச்சுவையால் சிரிக்காதவர்களே இல்லை.

பாலையாவின் அசத்தலான உடல் மொழி அவரது வைபரேட்டர் குரல், அதில் பலவிதமான வித்யாசமான மாடுலேஷன் என படம் நெடுக்க அவர் ஆக்ரமித்திருந்தாலும் முக்கியமாக அந்தப் பேய்க்கதை கேட்கும் காட்சி செம மாஸ்.!

அந்த ஒரே படத்தில் பாலையா பெரும் நகைச்சுவை நடிகராக மாறிப்போனார். பிறகு வந்த ஹலோ மிஸ்டர் ஜமீந்தார், பாமா விஜயம் எல்லாவற்றிலும் முத்திரை பதித்தார், அதிலும் அன்றைய இளம் இயக்குநராக மிளிர்ந்த கே.பாலச்சந்தரின் பாமா விஜயத்தில் நடித்த எத்திராஜ் கேரக்டர் அவரது மைல்கற்களில் ஒன்று, வரவுக்கு மீறி செலவு செய்யும் இன்றைய குடும்பத்திற்கும் எடுத்துக்காட்டாய் சொல்லப்படும் ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்கிற பாடல் இடம் பெற்ற படம்.!

அடுத்து பாலையாவின் மறக்கமுடியாத கேரக்டர் திருவிளையாடல் தலைக்கனம் மிக்க ஹேமநாத பாகவதர். ஏ.பி.நாகராஜனின் கலை பள்ளிக்குள் பாலையா நுழைகிறார்!. மன்னரிடத்தில் கர்வம் தொனிக்கும் அதிகாரக் குரலில் சவால் விடுவது, பாணபத்திரரின் மக்கு சீடனே இப்படி பாடுகிறானா எனக் கலங்கி பாண்டிய நாட்டை விட்டு கிளம்பும் போது குரல் தழுதழுத்து பேசுவது, என குரலிலும் நடிப்பிலும் அவர் காட்டும் வெரைட்டிகள், யார் செய்திருக்க முடியும்!

பாலையாவின் மறக்க முடியாத அடுத்த அவதாரம் ‘ஊட்டி வரை உறவு’ வேதாச்சலம் கேரக்டர்! சிவாஜியின் தந்தை! மனைவி இருக்கும் போதே இரண்டாவது மனைவி அவளுக்கு ஒரு பெண் என படம் முழுவதும் பரிதவிப்பான நடிப்பில் அநாசயமாக நடித்திருப்பார், பாலையா.

TSபாலையா என்னும் அற்புத நடிகனுக்காகவே உருவாக்கப் பட்ட கதாபாத்திரம் தான் தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் தவில் வித்வான் ‘முத்துராக்கு’. திருவிடைமருதூர் வெங்கடேசன் என்பவரே பாலையாவின் தவில் வாத்தியார், படத்தில் வரும் தவில் இசையும் அவருடையதே! மதுரை டி.ஶ்ரீனிவாசன் என்பவரிடமும் சிறப்பு பயிற்சி பெற்றார் பாலையா.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக பல கச்சேரிகளுக்கு மறைவாக சென்று தவில் கலைஞர்களின் முக பாவங்களை கற்றுக் கொண்டார் பாலையா, இப்படத்தில் வரும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பாடலைக் கேட்டதும், என்ன நாகராஜா என்னை மறைஞ்சி நின்னு பாத்து எழுதின பாட்டா இது என்று பாலையா கிண்டல் செய்தாராம்.

இந்தப் படத்தில் எந்தக் காட்சியை விவரிக்காமல் செல்வது! ஓடும் இரயிலில் குளிரில் நடுங்கும் குரலில், ‘ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்குதே’ எனச் சிலேடை, எனக்கு அங்க ஒரு சோடாக் கடைக்காரரை தெரியும் என சிவாஜியை மடக்குவது, அடேய் வைத்தி விஷப்பயலே என நாகேஷை திட்டுவது, சிவாஜிக்கு பின் வந்து நின்றுகொண்டு பத்மினியின் நாட்டியத்தை பார்ப்பது, நலம் தானா பாடலில் பத்மினி சிவாஜியை நலம் விசாரிக்க அதை கண்டு கொள்ளாது வாசிக்கும் சிவாஜியிடம் தவில் வாசித்துக் கொண்டே கண்ணால் சைகை காட்டி உன்னை நினைத்து தான் பாடுகிறாள் உன் காதலி என உணர்த்தும் அழகு என வசனத்தாலும் கண்ணாலும் உடல்மொழியாலும் பரவசமான நடிப்பை தந்திருப்பார்..

டி.எஸ். பாலையா ஆங்கிலப் படத்திலும் நடித்திருக்கிறார் என்பது பலருக்கு தெரியாத செய்தி, எல்லீஸ் ஆர்.டங்கன் எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும் அமெரிக்கா செல்லவில்லை, அதே போல எம்.ஜி.ஆர் இவரை அரசியலுக்கு அழைத்தும் நாசூக்காக மறுத்தவர். சிவாஜிக்கு இவர் என்றும் பெரிய சகோதரர், எம்.ஆர்.ராதாவும் இவரும் நெருங்கிய தோழர்கள்.

டி. எஸ். பாலையாவின் குடும்ப மிகவும் பெரியது. இவருக்கு 3 மனைவிகள் முதல் மனைவி பெயர் பத்மாவதி, இவருக்கு 5 மகன்கள், 2 மகள்கள், 2வது மனைவி பெயர் லீலா (இவர் டி. எஸ். பாலையா மரணம் அடைவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்) இவருக்கு 4 மகள்கள், 2 மகன்கள் 3வது மனைவி பெயர் நவநீதம் இவர் நடிகை சந்திரகாந்தாவின் அக்கா. இவருக்கு மனோகரி என்ற மகள்.

பாலையாவின் மூத்த மகன் சாய்பாபா திரையில் நாகேஷுக்கு இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் ‘ஹலோ மை டார்லிங்', ‘வீட்டுக்கு வீடு’ படத்தில் ‘மலர்களில் படுத்தவள் சகுந்தலை' போன்ற பாடல்கள் சாய்பாபா பாடியவைதான்.

அப்பா வழியில் திரைக்கு நடிக்க வந்த அவரது மற்றொரு மகன் ஜூனியர் பாலையா. அப்படியே பாலையாவின் மற்றொரு நகலாக விளங்குகிறார். மகள் மனோசித்ராவும் தமிழ் படத்தில் அறிமுகமாகி, தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்தவர். மற்றவர்கள் திரைத்துறைக்கு வரவில்லை, தில்லானா மோகனாம்பாள் படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தமிழக அரசின் விருது பெற்றவர், பாலையா.

டி.எஸ்.பாலையாவைப் பற்றி அவரது தீவிர ரசிகரான திருநின்றவூர் தி.சந்தானகிருஷ்ணன் அவர்கள் ‘நூற்றாண்டு கண்ட டி.எஸ்.பாலையா’ என்னும் நூலை எழுதியுள்ளார்.

இவர் நடித்த கடைசித் திரைப்படம் அகத்தியர். ஒரு விசித்திரம் என்னவென்றால் அகத்தியர் போல குள்ளம் என கிண்டலடிக்கப் பட்டதாலேயே ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு சர்க்கஸ் கனவு கண்டு, நாடகத்தில் நடித்து சினிமாவில் நுழைந்து எல்லா உயரங்களையும் புகழையும் தொட்ட உன்னத நடிகர் பாலையா! பாலையாவின் மூத்த மகன் சாய்பாபா திரையில் நாகேஷுக்கு இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் ‘ஹலோ மை டார்லிங்', ‘வீட்டுக்கு வீடு’ படத்தில் ‘மலர்களில் படுத்தவள் சகுந்தலை' போன்ற பாடல்கள் சாய்பாபா பாடியவைதான்.

அப்பா வழியில் திரைக்கு நடிக்க வந்த அவரது மற்றொரு மகன் ஜூனியர் பாலையா. அப்படியே பாலையாவின் மற்றொரு நகலாக விளங்குகிறார். மகள் மனோசித்ராவும் தமிழ் படத்தில் அறிமுகமாகி, தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்தவர். மற்றவர்கள் திரைத்துறைக்கு வரவில்லை, தில்லானா மோகனாம்பாள் படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தமிழக அரசின் விருது பெற்றவர், பாலையா.

டி.எஸ்.பாலையாவைப் பற்றி அவரது தீவிர ரசிகரான திருநின்றவூர் தி.சந்தானகிருஷ்ணன் அவர்கள் ‘நூற்றாண்டு கண்ட டி.எஸ்.பாலையா’ என்னும் நூலை எழுதியுள்ளார்.

இவர் நடித்த கடைசித் திரைப்படம் அகத்தியர். ஒரு விசித்திரம் என்னவென்றால் அகத்தியர் போல குள்ளம் என கிண்டலடிக்கப் பட்டதாலேயே ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு சர்க்கஸ் கனவு கண்டு, நாடகத்தில் நடித்து சினிமாவில் நுழைந்து எல்லா உயரங்களையும் புகழையும் தொட்ட உன்னத நடிகர் பாலையா! அவர் மறைந்தது ஜுலை 22 1972 அன்று.!

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக