இவரது தந்தை ராணுவத்தில் வேலை செய்து வந்ததால்
அவர் பிறந்த ஒரு மாதத்தில் வேறு ஊருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. இப்படி இந்தியாவின்
பல மாநிலங்களில் சிறுவயதிலிருந்தே ராணுவ குடியிருப்புகளில் வாழ வேண்டிய சூழல்
அவருக்கு அமைந்தது. ஏழாவது படிக்கும் போது சென்னைக்கு வந்தார். இவரையும், இவரது
தங்கை பிந்துவையும் அவரது அம்மாதான் வளர்த்தார்.
படிக்கும் போது ஏதாவதொரு கலையை கற்றுக் கொள்ள
வேண்டும் என்று விரும்பி ரேவதிக்கு நடனத்தில் ஆர்வம் இருப்பதை அறிந்து அவரை நடன
வகுப்புக்கும் அனுப்பினார், அவரது அம்மா. படித்து டாக்டராக வேண்டும், நடனத்திலும்
புகழ் பெற வேண்டும் என்கிற இரு கனவுகளுடன் இருந்திருக்கிறார், ரேவதி.
பிளஸ் டூ படிக்கிற போது அவருடைய புகைப்படத்தைப்
பார்த்த பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ், இந்தப் பெண்ணை அண்ணனின் படத்தில் நடிக்க
வைக்கலாமே என்று ரேவதியின் உறவினர் சந்தோஷ் சிவராமிடம் கூறி இருக்கிறார்.
ரேவதியின் உறவினர் சந்தோஷ் சிவராமும், பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜும் நெருங்கிய
நண்பர்கள். சொன்னது போலவே அண்ணன் பாரதிராஜாவிடம் ரேவதியின் போட்டோவை காட்டி தனது எண்ணத்தை
தெரிவித்திருக்கிறார், ஜெயராஜ்.
சரி பார்க்கலாம் என்று கூறிய பாரதிராஜா, ஒருநாள்
ரேவதியை நேரில் பார்த்தவர், ‘இந்தப் பொண்ணு, போட்டோவில் பார்த்ததைவிட நேரில்
எதார்த்தமா இருக்கே!’ என்று கூறியவர், தனது படத்தில் ரேவதியை நடிக்க வைப்பதாக கூறி
இருக்கிறார்.
இந்த நிலையில் பாரதிராஜாவின் சகோதரர், ஜெயராஜ்
தயாரிப்பில் பாரதிவாசு இயக்கத்தில் மெல்ல பேசுங்கள் என்கிற படத்தின் வேலைகள்
தொடங்கின. அந்தப் படத்திற்கு கதாநாயகி தேவைப்பட, ரேவதியை அதில்
அறிமுகப்படி=உத்திடலாம் என்று ஜெயராஜிடம் கூறி இருக்கிறார், பாரதிராஜா.
ரேவதியை நேரில் அழைத்துப் பார்த்த இயக்குநர்
பாரதிவாசு, ரேவதி குள்ளமாக இருக்கிறார், என்று கூறி, பிறகு பாரதிராஜா அனுப்பிய
பானுப்பிரியாவை அறிமுகப்படுத்தினார்கள்.
பாரதிராஜா மண்வாசனை படத்தை எடுக்க முடிவு செய்த
போது அந்தப் படத்தில் முதலில் சிவக்குமார் நாயகனாகவும், ராதா நாயகியாவும் நடிக்க
முடிவாகி இருந்தது. பாடல் பதிவு முடிந்த பிறகு படத்தில் புதுமுகங்களை நடிக்க
வைத்துவிடலாம் என்று முடிவு செய்த பாரதிராஜா, அதற்காக நடிகர், நடிகைகளை தேர்வு
செய்தார். கதாநாயகியாக பத்மினியின் உறவுக்கார பெண் என்று ஷோபனாவை கேரளாவுக்கு
சென்று நேரில் பார்த்து அவரை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தவர், அதன் பிறகு தனது லவ்வர்ஸ் இந்திப் படத்தின்
படப்பிடிப்புக்காக மும்பை சென்றுவிட்டார்.
இந்திப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து
மண்வாசனை படத்தின் படப்பிடிப்புக்காக போடிநாயக்கனூர் புறப்படும் போது, நான்
படப்பிடிப்புக்கு வரமுடியாது. பிளஸ் டூ பரிச்சைக்கு படிக்க வேண்டும் என்று படத்தில்
இருந்து விலகிக் கொண்டார், ஷோபனா.
வேறு வழியில்லாமல் உடனே ரேவதியை
படப்பிடிப்புக்கு அழைத்து சென்றிருக்கிறார், பாரதிராஜா. அவரும் அப்போது பிளஸ் டூ
படித்துக் கொண்டிருந்தார்.
முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவரது
மாமா சொன்ன போது `நான் நடிகையா?’ன்னு மிரண்டுபோய் ‘அதெல்லாம்
வேண்டாம்’னு என்று சொன்ன ரேவதி, அவரது மாமா உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தியதால்,
ஆர்வத்துடன் நடிக்க சென்றதுடன், ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநர் பாரதிராஜா சொல்லிக்கொடுப்பதை
உன்னிப்பாக கேட்டு, கவனித்து அப்படியே நடித்து கொடுத்திருக்கிறார்.
நடிப்பதற்கு முன் மாடர்ன் டிரஸ்லயே வளர்ந்த ரேவதி, படத்துக்காக முதன்முறையா புடவை கட்டி கிராமத்து பெண்
முத்துப்பேச்சியாகவே மாறிப் போனார். ஆங்கிலமும், இந்தியும் படித்து வளர்ந்த
ரேவதிக்குள் தமிழை வளர்த்த பாரதிராஜா, அவரையே அவரது பாத்திரத்துக்கு பயிற்சி
கொடுத்து டப்பிங் பேச வைத்தார்.
முதல் படம் `மண்வாசனை’
முடிந்ததுமே இரண்டாவதாக மலையாளத்தில் பரதன் இயக்கத்தில் `காற்றத்தே
கிளிக்கூடு’ படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் இரு மொழிகளிலும் பெரிய வெற்றிப்
படங்களாக அமைந்து அவருக்கு பாராட்டும் பட வாய்ப்புக்களுமாக குவிந்தன.
படங்களை எப்படி தேர்வு செய்வது என்று அப்போது
அவருக்கு தெரியவில்லை. அதனால் பாரதிராஜாவின் உதவியை நாடி இருக்கிறார். `கதை கேளு. உனக்குப் பிடிச்சிருந்தா மட்டும் நடி’ன்னு ஆலோசனை
சொல்லி இருக்கிறார். அப்படி அவர் தமிழில் மூணாவது படமாக ரஜினியுடன் மகேந்திரன்
இயக்கிய `கை கொடுக்கும் கை’ படத்தில் நடித்தார். அதில்
அவருக்கு கண்ணு தெரியாத பாத்திரம். படத்தில் நடிக்க சென்ற போது மேக்கப் வேண்டம்
முகம் மட்டும் கழுவிக்கோ என்று நடிக்க வைத்தாராம், மகேந்திரன்.
மகேந்திரனின் ‘கை கொடுக்கும் கை’ படத்திலும்,
நாசரின் ‘அவதாரம்’ படத்திலும் பார்வையற்ற கதாபாத்திரம் செய்திருந்தார். ஆனால்
இரண்டு படங்களுக்குமான நடிப்பில் வேறுபாடு காட்டியதுதான் ரேவதியின் தனித்துவம்.
மீண்டும் குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் `புதுமைப் பெண்’, `ஒரு கைதியின் டைரி’
படங்களில் நடித்தார். சவாலான வேடங்கள் என்றால் ரேவதிக்கு ரொம்பப் பிடிக்குமாம்.
உடனே ஒப்புக்கொள்வாராம்.
மணிரத்னம் ‘பகல்நிலவவு’, ‘மெளன ராகம்’, ‘அஞ்சலி’ முதலான
படங்களில் ரேவதியை நாயகியாக்கினார். மூன்று படங்களுமே ரேவதியை, அடுத்தகட்டத்துக்கு உயர்த்தின. பாண்டியராஜனின் முதல் படமான ‘கன்னிராசி’யிலும்
அடுத்த படமான ‘ஆண்பாவம்’ படத்திலும் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார்.
கே.ரங்கராஜின் ‘உதயகீதம்’ படத்தில் லட்சுமி, ரேவதி, மோகன் மூவரும்
போட்டிபோட்டுக்கொண்டு நடித்தார்கள். தொடர்ந்து ‘உன்னை நான் சந்தித்தேன்’ முதலான
படங்களில் இவரின் இயக்கத்தில் நடித்து அசத்தினார் ரேவதி.
விவாகரத்து கேட்டு இறுக்கத்துடன் இருக்கும்
‘மெளன ராகம்’ திவ்யா ஒருபக்கம் ஈர்த்தார். ஆர்.சுந்தர்ராஜனின் ‘வைதேகி
காத்திருந்தாள்’ படத்தில், திருமணத்தன்றே கணவனைப்
பறிகொடுத்து விதவையாக வாழ்ந்துகொண்டிருக்கும் வைதேகி இன்னொரு விதமாக ஈர்த்தார்.
பாரதிராஜாவின் ‘ஒரு கைதியின் டைரி’யில் சுறுசுறு துறுதுறு கேரக்டர் என்றால்,
பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ படத்தில் அத்துடன் சேர்த்து காதல்
உணர்வையும் வெளிப்படுத்தினார்.
கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டதை
அறிந்து புழுங்கித் தவிக்கும், ஆத்திரத்தையும் கோபத்தையும்
அடக்கியாளும், வேதனைகளையும் கவலைகளையும் பொத்திவைக்கும்
பாலுமகேந்திராவின் ‘மறுபடியும்’ பட கேரக்டரை அற்புதமாகப் பண்ணியிருப்பார். ‘இவரைத்
தவிர வேற யாரும் பண்ணமுடியாதுப்பா’ என்று சில நடிகர் நடிகைகளை, சில படங்களின் கதாபாத்திரங்களைக் கொண்டு சொல்லுவோம். அவரின் பல படங்கள்
அப்படிச் சொல்லவைத்தன.
ரேவதி எப்போதுமே டைரக்டர்களின் ஹீரோயின். கதை
பண்ணும்போதே, இந்த கனமான பாத்திரத்தை,ரேவதி செய்தால்தான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்துவிடுவார்கள்
இயக்குநர்கள். ஆர்.வி.உதயகுமாரின் ‘கிழக்கு வாசல்’ தாயம்மா கேரக்டரை, ரேவதியைத் தவிர வேறு யார் செய்துவிடமுடியும்? வெயிட்டான
கேரக்டர் மட்டும்தானா. பாசிலின் ‘அரங்கேற்ற வேளை’யின் மாஷா கேரக்டரை ரேவதியைத்
தவிர, இவ்வளவு சிறப்புடனும் ஏக கலாட்டாவுடனும் ரேவதிதான்
செய்யமுடியும். அதனால்தான், தமிழ் சினிமாவில், மறக்க முடியாத கேரக்டராக மாஷா இருந்தது.
கமல், ரஜினி மட்டுமின்றி விஜயகாந்த்,
பிரபு, சத்யராஜ், கார்த்திக்,
முரளி, மோகன், ராமராஜன்
என்று அன்றைய ஹீரோக்கள், அன்றைய இயக்குநர்கள் என எல்லாப்
படங்களிலும் எல்லாருடனும் நடித்து மிகப்பெரிய ரவுண்டு வந்தார். ‘தெய்வ வாக்கு’,
’தொட்டாச்சிணுங்கி’, ’பிரியங்கா’ , ‘இதயத்தாமரை’ மாதிரி எத்தனையோ படங்களை அவரின் நடிப்புக்கு அடுக்கிக்கொண்டே
போகலாம்.
முக்கியமாக... பஞ்சவர்ணம். படம் முழுக்க
அப்பாவித்தனமும் இருக்கும். புரிந்து உணர்ந்து வெளிக்காட்டாத நிலையும் இருக்கும்.
கொஞ்சம் பதட்டமும் இருக்கும். பெரியவீட்டுக்கு மருமகள் என்கிற பெருமையும்
பொறுமையும் கூடவே இருக்கும். இப்படி எல்லா உணர்வுகளையும் முகத்திலும் குரலிலும்
படரவிடுகிற சாதுர்ய நடிப்பு ரேவதி ஸ்பெஷல். அதனால்தான், ’சாவித்திரிக்குப் பிறகு’ எனும் அற்புதமான இடத்தை ரசிகர்கள்
ரேவதிக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
என் முதல் ஏழு படங்களுக்குள், பாரதிராஜா, மகேந்திரன், பரதன், பாபுன்னு நாலு பெரிய இயக்குநர்களின் வெவ்வேறு
ஜானர் படங்கள்ல நடிச்சதுதான், என் நடிப்புக்கான அஸ்திவாரம்.
20 வயசுக்குள்ளேயே நிறைய சவாலான ரோல்களில் நடிச்சுட்டேன். சினிமாத்துறை மேல பெரிய
காதலும் மதிப்பும் உண்டாகிடுச்சு. சினிமாவை என் கரியரா முடிவெடுத்தது அப்போதான்.
பாலசந்தர் சார் இயக்கத்துல நான் நடிக்கணும்னு எங்கப்பா ஆசைப்பட்டார். அது,
`புன்னகை மன்னன்’ மூலம் நிறைவேறிச்சு. நடிப்பு, டான்ஸ்னு கமல் சாருக்குப் போட்டியா நானும் சிறப்பா பர்ஃபார்ம் பண்ண
ஊக்கப்படுத்தினார் பாலசந்தர் சார்.
நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தாலும், ஒருநாளைக்கு ஒரு கால்ஷீட்தான் கொடுப்பார். அப்படி
கொடுப்பதால்தான் ஈடுபாட்டுடன் நடிக்க முடிஞ்சது என்கிறார்.
கதை கேட்பது மட்டுமல்லாது, தனது காஸ்ட்யூம்
எல்லாத்தையும் தானேதான் தேர்வு செய்வார். அவருக்கு செட் ஆகாது என்பதால், கிளாமர் ரோல்களைத் தவிர்த்துவிட்டார். இந்த ஹீரோவோடு நடிக்க
வேண்டும் என்று நினைப்பதைவிட, கதை மற்றும் இயக்குநர்
களைத்தான் முக்கியமா பார்ப்பாராம்.
இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்,
இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் 150 படங்களுக்கு மேல நடித்திருக்கிறார். அதில்
முக்கால்வாசி படங்களில் ஹீரோயின் ரோல். அவர் படங்களுக்கு அவரே டப்பிங் பேசியதோடு, சில இயக்குநர்கள் கேட்டுக்கொண்டதால் பிற நடிகைகளுக்கும்
டப்பிங் பேசி இருக்கிறார்.
இயக்குனராக அவதாரம் எடுத்து, ஆங்கிலம், இந்தி, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் நான்கு
படங்களை இயக்கியிருகிறார். கே.பாலசந்தர் சார், `நீ இயக்கின `பிர் மிலேங்கே’ படம் பார்த்தேன்’னு சொல்லி, அந்தப்
படத்தின் ஒவ்வொரு காட்சியைப் பத்தியும் நீண்ட நேரம் பாராட்டிப் பேசினார். இதுதான்,
இயக்குநரா எனக்குக் கிடைச்ச பெரிய பெருமை என்று தனது இயக்கம் பற்றி
கூறி இருக்கும் ரேவதி, தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதுகளை கிழக்கு வாசல்,
தலைமுறை ஆகிய படங்களுக்காக பெற்றவர், இந்திய அரசின் தேசிய விருதுகளை தேவர்மகன்
படத்தில் நடிப்புக்காகவும், Mitr, My Friend படத்திற்கு இயக்கத்திற்காகவும்
பெற்றிருக்கிறார்.
என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில
முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம். அப்போது கொஞ்சம்
நிதானமா முடிவெடுத்திருந்தால், என் சினிமா ட்ராக் வேறு
மாதிரி மாறியிருக்கும். இன்னும்கூட நிறைய நல்ல படங்கள்ல நடித்திருப்பேன் என்று
சொல்லும் நடிகை ரேவதி இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சுரேஷ் சந்திர மேனனை 1986 ஆம் ஆண்டு திருமணம் திருமணம் செய்து கொண்டார். பிறகு 2003 ஆம் ஆண்டு
அவரை விவாகரத்து செய்தார். நடிப்பில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டவர்,
விவகாரத்துக்கு பின் மீண்டும் நடித்து வருகிறார்.
விவரம் புரிஞ்ச காலத்துல இருந்து, சமூகத்துக்கு என்னாலான பங்களிப்பைக் கொடுக்கணும்னு
நினைப்பேன்.அதனாலதான் ஆறு ஆண்டுகள் அரசியலிலும் ஈடுபட்டேன். ஆனால், அது எனக்குப் பொருத்தமான களம் கிடையாது என்பதால் அதிலிருந்து விலகிட்டேன்.
இருந்தாலும் தொடர்ந்து சமூகப் பணிகளில் கவனம் செலுத்துறேன்.
வாழ்க்கையில் நான் ஆசைப்பட்டு, பல வருஷங்களுக்குப் பிறகு கிடைச்ச வரம், என் மகள் மஹி. அவ வந்த பிறகு வாழ்க்கை மிக அழகாக மாறியிருக்கு. என்று
சொல்லும் ரேவதி, டெஸ்ட் டியூப் மூலம் பெண் குழந்தை பெற்று வளர்த்து வருகிறார்.
மகிதான் ரேவதிக்கு எல்லாமுமாக இருக்கிறார்.
ஐந்தாவது படமாக இந்தியில் கஜோல் நாயகியாக
நடிக்கும் 'தி லாஸ்ட் ஹுர்ரா' திரைப்படத்தை
இயக்கும் வேலையில் பிசியாக இருக்கும் ரேவதி, இந்தப் படம், நிஜமாக நடந்த ஒரு
சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது. சுஜாதா என்கிற தாயின் போராட்டங்களை,
அவள் எப்படி புன்னகையுடன் எதிர்கொள்கிறாள் என்பதைச் சொல்லும் படமாக
இருக்கும் என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்.
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக