சனி, 12 பிப்ரவரி, 2022

நடிகை எஸ்.வரலட்சுமி வாழ்க்கை வரலாறு

இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்’ உட்பட பல நினைவில் நிற்கும் பாடல்களை பாடி மக்களின் மனங்களில் நடிகையாகவும் வாழ்ந்த கம்பீரக் குரலழகி எஸ்.வரலட்சுமி, ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்  13 ஆம் தேதி பிறந்தவர்.

இவரது அம்மா சாவித்திரிக்கு ஐந்து பேருமே பெண் குழந்தைகள். இவர் கடைசியாக பிறந்தவர். அதனால், குழந்தை இல்லாத பெரியம்மா வீட்டுக்கு தத்து பிள்ளையாக சென்றார், வரலட்சுமி.

வரலட்சுமியின் பெரியப்பா ரங்கப்பா நாயுடு இசை அறிந்தவர். அதனால், ஆசையாக வளர்க்கும் அன்பு மகள் வரலட்சுமிக்கும் சிறுவயதிலேயே சங்கீதத்தை கொடுத்தார்.  

அந்த காலத்தில் நடிகர் நடிகைகள் ஏழு கட்டையில் பாடுவார்களே..., அதே போல ஓங்கி ஒலித்து பாடும் கம்பீர குரலை சங்கீத பயிற்சியிலேயே பெற்றவர், வரலட்சுமி. அதிகாலையில் அவரது கணீர் குரல் கேட்டுத்தான் அந்த கிராமமே கண் விழித்தது என்றால் மிகையாகாது.

அப்படி எஸ்.வரலட்சுமியின் குரலை கேட்டு வியந்தவர்களில் புதுமை இயக்குநர் கே.சுப்பிரமணியமும் ஒருவர். தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனராக வலம் வந்த கே.சுப்பிரமணியம், குடவல்லி ராமபிரம்மம் என்பவரால் கர்னூலில் வரலட்சுமியின் திறமையை கண்டு திரையுலகிற்கு அழைத்து வரப்பட்டார்.

ஏ.எல்.சீனிவாசன்

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் குழந்தைகளை மையமாக வைத்து பாலயோகினி என்கிற படத்தை தொடங்கிய போது, அதில் பேபி வரலட்சுமியாக தெலுங்கு பாலயோகினி பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டார், வரலட்சுமி. புரையோடிப் போயிருந்த பால்ய கால விதவைகளின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டிய அந்தப் படம் 1937 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

எஸ்.வரலட்சுமியின் துறுதுறு நடிப்பு மற்றும் இனிமையான குரலால் கவரப்பட்ட இயக்குநர் கே.சுப்பிரமணியம், அடுத்த படமான ‘சேவாசதனம்’ படத்திலும் வரலட்சுமியைப் பயன்படுத்திக் கொண்டார்.

பால்ய பருவத்தில் திருமணம் செய்விக்கப்படும் ஒரு குழந்தை, வயது முதிர்ந்த கணவனாலும் அவனது குடும்பத்தாராலும் கொடுமைப்படுத்தப்படும் கதை. விதவை மறுமணம் தொடர்பான கதைதான் இதுவும். இதில் அந்தப் பரிதாபத்துக்குரிய பால்ய விதவையாக எம்.எஸ். சுப்புலட்சுமி அறிமுகமானார். அவரது தங்கையாக எஸ்.வரலட்சுமி தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்தப் படமும் பெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு ‘ரைத்து பித்தா’, இல்லலு என இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்தார். இதில் ‘இல்லலு’ படத்தில் முதல் முறையாக ராஜேஸ்வர ராவ் இசையில் இரண்டு பாடல்களை பாடி பாராட்டுகளை பெற்றார், வரலட்சுமி.

அதன் பிறகு மூன்று தமிழ்ப் படங்களிலும், இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதில் நாகேஸ்வர ராவுடன் நடித்த ‘பல்நதி யுத்தம்’ படத்தில் கலிபெஞ்சலா நரசிம்ம ராவ் இசையில் மூன்று பாடல்களை பாடினர்.

சிறுவயது குமாரியாக சில படங்களில் நடித்து வந்த வரலட்சுமியை அழகிய யுவதியாக அறிமுகப்படுத்திய படமாக அடுத்து வந்த ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ படம் அமைந்தது. ஆண்களின் வாசனையே பிடிக்காத இளவரசி, அபூர்வ சிந்தாமணியாக வி.என்.ஜானகி நடிக்க, அவரின்  தோழியாக எஸ்.வரலட்சுமி நடித்தார். இதில் ஜி.ராமநாதன் இசையில் ‘காதலாகினேன்’, ‘காதல் வானத்திலே நாம்’, ‘மாதர் மனோன்மணியே’ என மூன்று பாடல்களை தனது இனிய குரலால் பாடி அசத்தி இருந்தார், வரலட்சுமி. இந்தப் படத்தின் வெற்றி இவருக்கு இன்னும் புகழைத் தேடி தந்தது.

பி.யு.சின்னப்பாவுடன் ‘துளசி ஜலந்தர்’, சித்தூர் நாகையாவுடன் ‘நவஜீவனம்’ உட்பட சில படங்களில் நடித்து வந்தவரை, தனது படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாடகரும், நடிகருமான டி.ஆர். மகாலிங்கம்.

‘மச்சரேகை’, ‘மோகனசுந்தரம்’, ‘சின்னத்துரை’, ‘வேலைக்காரன்’ என பல படங்களில் டி,.ஆர்.மகாலிங்கத்துடன் இணைந்து நடித்தார், எஸ்.வரலட்சுமி. காலம் இவர்கள் இருவரையும் இணைத்து கிசுகிசுத்தன.  

லட்சுமிகாந்தன் கொலை வழக்கிலிருந்து விடுதலையான தியாகராஜா பாகவதர் ‘சியாமளா’ படத்தில் நடித்தார். அதில் அவருக்கு இணையானார் வரலட்சுமி. அழகான, இளமையான வரலட்சுமியுடன் கம்பீரமான மீசையுடன் தோன்றி நடித்தார் பாகவதர்.

தமிழில் எப்படி தியாகராஜா பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் என முன்னணி கலைஞர்களின் படங்களில் நடித்தாரோ, அதே போல தெலுங்கு மொழியிலும் பல்வேறு பாத்திரங்களில் தொடர்ந்து என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் என முன்னணி நாயகர்களுடன் நடித்தார், வரலட்சுமி.

எம்.ஜி.ஆருடன் ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எதிர்மறை நாயகியாக நடித்தார். சிவாஜி கணேசனுடனும் ‘எதிர்பாராதது’ படத்தில் நடித்தவர், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் கட்டபொம்முவின் மனைவி ஜக்கம்மாவாக ஒரு மாவீரனின் மனைவி என்பதற்குரிய கம்பீரத்தோடு நடித்தார். இந்தப் படத்தில் இவர் பாடிய ‘சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி….’ பாடல் என்றும் நிலைத்து நிற்கும் பாடல்.

அதே காலகட்டத்தில் வெளியான ‘சிவகங்கைச் சீமை’ படத்தில் பெரிய மருதுவின் மனைவி பெரிய ராணியாக நடித்தார். இந்தப் படத்திலும் சற்றும் குறையாத கம்பீரத்துடன் நடித்தார். இதிலும் ஓர் தாலாட்டுப் பாடல், ‘தென்றல் வந்து தீண்டாதோ தெம்மாங்கு பாடாதோ’. அவர் பாடிய பாடல்கள் அந்தப் பாத்திரத்துக்குத் தனித்துவம் தந்து உயிரூட்டின.

1965ஆம் ஆண்டு வெளிவந்த கந்தன் கருணை படத்தில் “வெள்ளிமலை மன்னவா... வேதம் நீ அல்லவா” என்ற பாடலை வரலட்சுமி பாடினார்.

‘ஆதி பராசக்தி’, ‘காரைக்கால் அம்மையார்’ ஆகிய படங்களில் தேவியராக நடித்தார். ‘ராஜ ராஜ சோழன்’ படத்தில் ராஜராஜனின் அக்காள் குந்தவை பாத்திரத்தில் நடித்தார். பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்த இந்தப் படத்திலும் இவரின் குரலில் பாடல் இடம் பெற்றது. சீர்காழி கோவிந்தராஜனுடன் சேர்ந்து “ஏடு தந்தானடி தில்லையிலே” பாடலை பாடியிருந்தார்.

கே.எஸ்..கோபாலகிருஷ்ணன் ‘பணமா பாசமா’ என்கிற படத்தை எடுக்க முடிவு செய்தார். காதலை எதிர்க்கும் ஒரு மகளின் அகம்பாவம் பிடித்த தாய் கதாபாத்திரம்தான் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கதைக்காக முதலில் ஜெமினி கணேசன், சரோஜாதேவி ஜோடியை நடிக்க வைக்கத் தீர்மானித்த இயக்குநர், அந்த அகம்பாவம் பிடித்த தாய் கதாபாத்திரத்திற்கு வித்தியாசமான நடிகையை தேடிக் கொண்டிருந்தார்.

திடீரென்று அவருக்கு சாவித்திரி ஞாபகம் வந்தது. சாவித்திரியிடம் சென்று கதையைச் சொன்னார். சாவித்திரிக்கும் கதை பிடித்திருந்தது. அவர் சொன்னார். சார்.. நானும் ஜெமினியும் கணவன்-மனைவி என்பது ஊருக்கே தெரியும். இதிலே நான் போய் அவருக்கு மாமியாராக நடித்தால் யார் சார் ஒத்துக்கொள்வார்கள். நான் சொல்கிறேன்... இந்த கதாப்பாத்திரத்திற்கு நீங்க வரலட்சுமியை நடிக்க வையுங்கள்... என்று ஆலோசனையாக...

வரலட்சுமியை அழைத்து இரண்டு நாட்கள் நடிக்க வைத்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். ஆனால், அவருக்கு அவரது நடிப்பில் திருப்தி ஏற்படவில்லை. இதை அறிந்த சாவித்திரி, வரலட்சுமியின் வீட்டிற்கே சென்று அவருக்கு நடிப்பில் இருந்த தயக்கத்தைப் போக்கினார். அதன் பிறகு மீண்டும் நடித்தார், வரலட்சுமி. அவரது கதாபாத்திரத்தினாலேயே படம் சக்கை போடு போட்டது.

பணமா பாசமா சென்னை மிட்லண்ட் தியேட்டரில் வெளியானது. படத்தின் வெற்றி, அதில் வரலட்சுமியின் பங்கு, பல இயக்குனர்களை பாதித்தன. அதில் கே.பாலச்சந்தரும் ஒருவர். அவர் உடனே வரலட்சுமிக்காகவே ஒரு கதையை உருவாக்கினார். அதுதான் பூவா தலையா. படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் ஜெமினி. இன்னொருவர் ஜெய்சங்கர். ஆனால், படத்தில் அதிகமாக பேசப்பட்டவர் எஸ்.வரலட்சுமி தான்.

வயதானாலும் கட்டுக்கோப்பான தோற்றம், பிசிறில்லாத வெண்கலக் குரல் ஆகியவற்றால் ஆணவமும், அகங்காரமும் கொண்ட மாமியாராக அவர் விரும்பி தொடர்ந்து அழைக்கப்பட்டார்.

‘சவாலே சமாளி’, ‘நத்தையில் முத்து’, ‘உயிரா மானமா’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘தாய்’, ‘கவரிமான்’, ‘நீதிக்குத் தலை வணங்கு’ என பல படங்களில் நடித்தார். ‘நீதிக்குத் தலை வணங்கு’ படத்தில் பாடிய ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்’ பாடல் என்றைக்கும் கேட்கும் பாடலாய் நிலைத்து நிற்கிறது.

வரலட்சுமிக்கு தாய்மொழி தெலுங்கு என்றாலும் அட்சர சுத்தமான இவரது தமிழ் உச்சரிப்பு அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் படங்களில், அவர் எழுதிய தஞ்சை வட்டார வழக்கில் அமைந்த நீள நீள வசனங்களையும் அற்புதமாகப் பேசி நடித்தவர். அதனாலேயே அவருடைய பல படங்களிலும் வரலட்சுமிக்குத் தவறாமல் முக்கிய வேடங்கள் அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, ‘அடி, மகமாயி’ என்ற வசனமும் அழுத்தம் திருத்தமாக அதனை வரலட்சுமி உச்சரிக்கும் பாங்கும் மிக இயல்பான ஒன்று.

வரலட்சுமி நடித்த கடைசிப் படம் 1992 ஆம் ஆண்டு வெளியான ‘குணா’. மிக முதிர்ந்த தோற்றத்தில் நடித்த அந்தப் படத்தில் “உன்னை நானறிவேன்” என்ற 36 நொடிகள் மட்டுமே ஒலிக்கும் பாடலிலும் தன் தனித்துவமான குரலினிமையை அழகுற வெளிப்படுத்தியவர்.

தமிழில் 72, தெலுங்கு மொழியில் 63 என அறுபது ஆண்டுகளில் 135 படங்களில் நடித்த வரலட்சுமி, தமிழ், தெலுங்கு மொழிகளில் 120 பாடல்கள் பாடி இருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது, தமிழக அரசின் கலை வித்தகர் விருது, கவிஞர் கண்ணதாசன் விருது, சிவாஜி கணேசன் நினைவுப்பரிசு என பல விருதுகளும் பாராட்டுகளும் பெற்றவர், வரலட்சுமி.

‘திருடாதே’, ‘கந்தன் கருணை’, ‘சினிமா பைத்தியம்’ உள்பட பல படங்களின் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான கவிஞர் கண்ணதாசனின் மூத்த சகோதரர் ஏ.எல்.சீனிவாசனுக்கு இரண்டாவது மனைவியாக வாழ்ந்தார். இவருக்கு முருகன் என்கிற மகனும், நளினி என்கிற மகளும் உள்ளனர்.

நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த வரலட்சுமி, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 6 மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி தனது 82ம் வயதில் காலமானார்.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக