சனி, 12 பிப்ரவரி, 2022

கன்னடத்தின் முதல் பட இயக்குநர் ஒய்.வி.ராவ்

பிடிட்டிஷ் இந்தியாவில் ஆந்திர பிரதேச நெல்லூர் நகரில் 1903- ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி பிறந்த ஒய்.வி.ராவின் முழு பெயர், யாரகுடிபதி வரத ராவ். நெல்லூரில் படித்து வளர்ந்தவர் நாடகம், சினிமா போன்ற மக்கள் கலை மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக பள்ளி இறுதித் தேர்வுக்கு பிறகு நாடகங்களில் நடிக்க சென்றார்.

மேடை நாடகங்களில் நடிப்பு திறமையை வளார்த்துக் கொண்டவர், பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்தார்.  சென்னையில் மௌனப் படங்கள் தயாரித்து வந்த ஆர்.பிரகாஷாவை சந்தித்து அவரது குழுவில் சேர்ந்த ஒய்.வி.ராவ், ஒரு காலகட்டத்தில் ஆர்.பிரகாஷா படம் இயக்க வாய்ப்பு இல்லாமல் இருந்த போது மும்பைக்கு சென்றார்.

அங்கு "லட்சுமி பிக்சர்ஸ்" என்ற நிறுவனத்தில் நடிகராக 1925- ம் ஆண்டு சேர்ந்தார். சௌத்ரி என்பவர் தயாரித்த ஊமைப் படமான மீரா படத்தில் நடித்த ராவ், பின்பு பம்பாய் ராயல் ஆர்ட்ஸ் என்ற ஸ்டுடியோ தயாரித்த பாவத்தின் கூலி என்ற ஊமைப் படத்திற்கு கதை எழுதினர். பம்மாப்யில் நடிப்பதும், கதை எழுதுவதுமாக இருந்த ஒய்.வி.ராவ், சென்னையில் ஆர்.பிரகாசா, ஏ.நாராயணன் தயாரிப்பில் ஊமைப் படங்கள் ஊருவாகும் தகவல் அறிந்து சென்னைக்கு திரும்பினார்.

மௌனப் படங்களை இயக்கி வந்த ஆர்.பிரகாஷாவும், ஏ.நாராயணன் என்பவரும், ஒய்.வி. ராவை தங்கலுடன் சேர்த்துக் கொண்டார்கள். கதை விவாதத்திலும், படமாகும் வேலைகளிலும் அவரை பயன் படுத்திக் கொண்டவர்கள், கருட கர்வ பங்கம் என்ற மௌனப் படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்து, புகழ்பெற வைத்தனர்.

கருட கர்வ பங்கம் படத்திற்கு பிறகு தயாரிப்பில் அதிக கவனம் செலுத்திய ஏ.நாராயணன், அடுத்த படமான பாண்டவ நிர்வாஹன் படத்தை இயக்கும் வாய்ப்பை ஒய்.வி.ராவுக்கு வழங்கினார். அடுத்து ஏ.நாராயணன் தயாரிப்பில்  சாரங்கதாரா என்கிற தெலுங்கு மௌன படத்தையும் இயக்கிய ராவ், தொடர்ந்து போஜராஜன், பாண்டவ அஞ்ஞாத வாசம், நர நாராயணா, ஹரி மாயா போன்ற மௌனப் படங்களை சென்னையில் தயாரித்து வெளியிட்டார். ஹரி மாயா என்ற படத்தை தயாரித்தவர், கர்நாடக நாடக மேடையின் ஜாம்பவானாக திகழ்ந்த குப்பி வீரண்ணா.

பெங்களூரிலிருந்த "மைசூர் பிலிம் கம்பெனி" என்ற நிறுவனத்தில் நடிகராகவும், அவர்களது தயாரிப்பில் வெளியான சில படங்களின் இயக்குனராகவும் பணியாற்றினார். சதி சுலோசனா என்ற கன்னடத்தின் முதல் படத்தை இயக்கி அந்தப் படத்தில் நடிக்கவும் செய்தார், ராவ். இந்தப் படம், "கோலாப்பூர் மகாராஷ்டிர சினிடோன்" என்ற ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டது. பின்னர் கோலாப்பூர் சாம்ராட் சினிடோன் நிறுவனத்திற்காக நாகானந்த் என்ற இந்திப் படத்தை இயக்கினார்.

மீண்டும் தமிழில் 1937- ம் ஆண்டு மதுரை ராயல் டாக்கிஸாரின் சிந்தாமணி படத்தை இயக்கினார், ஒய்.வி.ராவ். எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த அந்தப் படம் சென்னையில் ஒரே தியேட்டரில் ஓராண்டுக்கு மேல் ஒடிய சாதனைப் படைத்தது.

மதுரை ராயல் டாக்கிஸாரின் மற்றொரு படம் பாமா பரிணயம் படத்தையும் இயக்கினார் ஒய்.வி.ராவ். தொடர்ந்து பக்த மீரா, சுவர்ணலதா ஆகிய படங்களை இயக்கியவர், "ஶ்ரீஜெகதீஷ்" பிலிம்ஸ் என்ற படக் கம்பெனியைத் தொடங்கி மள்ளி வெள்ளி, விசுவ மோகினி, சத்யபாமா, தாசில்தார் ஆகிய தெலுங்குப் படங்களை தயாரித்தார்.

லவங்கி என்ற தமிழ்ப் படத்தை தயாரித்த ராவ், அதனை இந்தியிலும் தயாரித்து வெளியிட்டார். இருபது படங்களை தயாரித்தும், இருபத்தி ஐந்தி படங்களை இயக்கியும் இருக்கும் ஒய்.வி.ராவ், மௌனப் படங்களின் தன்னுடன் நடித்த ராஜம் என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.

பிறகு பேசும் படம் காலத்தில் ஏ.வி.எம். தயாரிப்பில் வெளியான ஶ்ரீவள்ளி படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை குமாரி ருக்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள்தான் பிரபல நடிகை லட்சுமி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டாவது திருமணமும் திருப்திகரமானதாக அமையவில்லை.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கில ஆகிய மொழிகள் தெரிந்த, முற்போக்கு சிந்தனை கொண்ட ஒய்.வி.ராவ், ஆரம்பக்கால தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் 1973-ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ம் தேதி உடல்நிலை குன்றி காலமானார்.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக