சனி, 12 பிப்ரவரி, 2022

நடிகை புஷ்பவல்லி வாழ்க்கை வரலாறு

புஷ்பவல்லியின் பூர்வீகம் ஆந்திராவில் பண்டாபாடு கிராமம். ராஜமகேந்திரபுரத்தில் இயக்குநர் பி. புல்லையாவுக்குச் சொந்தமானத ‘துர்கா’ சினிமா ஸ்டுடியோ இருந்தது. அங்கு படப்பிடிப்ப பார்க்கச் சென்ற சிறுவயது புஷ்பவல்லியை, புல்லையாவின் பங்குதாரருக்கு முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது. அப்புறம் விடுவாங்களா? இளம் வயது சீதையாக ‘சம்பூர்ண  ராமாயணம்' என்கிற தெலுங்கு படத்தில் 1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி பேபி புஷ்பவல்லியாக அறிமுகம் செய்தாங்க.

முதல் படத்திலேயே பாராட்டும், மரியாதையும், பணமும் கிடைத்ததால் புஷ்பவல்லியின் பெற்றோர் தாத்தாச்சாரி, ராமகோதம்மா இருவருக்கும் மகளை ரொம்ப பிடித்துப் போனது. இதனால் தொடர்ந்து இளம்வயது வேடங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுக்காமல் நடிக்க அனுப்பினார்கள்.

சிறுமியாக நடித்துக் கொண்டிருந்த புஷ்பவல்லி, குமாரி ஆன போது அவருக்கு கிடைத்த கதாநாயகி வாய்ப்பு ‘வர விக்ரயம்’. அந்தப் படத்தில் புஷ்பவல்லியின் சகோதரியாக நடித்தவர் பானுமதி. பி.பானுமதிக்கு 24 மணி நேரமும் புஷ்பவல்லியின் மலர்ந்த முகமே மனத்தில் நின்றதாம். தன் பெயரையும் கனகவல்லி என்று வைத்துக்கொள்ள முடிவு செய்தார். ஆனால், அவரது குடும்பத்தினர் அனுமதி தரவில்லையாம்.

மிஸ் மாலினி
‘வர விக்ரயம்’ படம் தெலுங்கில் 1939 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிப் படமாக அமைந்து புஷ்பவல்லிக்கு நிறைய படங்கள் கிடைக்க காரணமாக அமைந்தது.

அதில் எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் உருவான பாலநாகம்மா படமும் ஒன்று. சி.புல்லையா இயக்கத்தில் ஜெமினி நிறுவனத்தில் நடிக்க மாதம் இரண்டாயிரம் சம்பளத்துக்கு ஒப்பந்தமானவர், தனது நடிப்பு திறைமையை கட்டி ஜெமினி வாசனையே வியக்க வைத்து, நாளடைவில் போட்ட ஒப்பந்தத்தை மீறி சகல சலுகைகளும், சம்பள உயர்வும் பெற்றதுடன், ஜெமினி நிறுவனத்தின் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்.

புஷ்பவல்லி தமிழில் அறிமுகமான படம் ஜெமினியின் தாசி அபரஞ்சி. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதையை பி.என்.ராவ் இயக்க, எம்.கே.ராதாவுடன் நடித்தார் புஷ்பவல்லி. விக்ரமாதித்தன் கதையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் அவருக்கு தமிழையும் சொல்லிக் கொடுத்தது. மேலும் அவருக்காக வைக்கப்பட்ட கட் அவுட் அந்தக் காலத்தில் ரொம்ப பிரபலம். எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் புஷ்பவல்லியின்  கண்கள் பார்ப்பவர்களை உற்று நோக்குவது போன்ற உணர்வை ஏற்படுத்துவது போல் அந்த கட் அவுட் வடிவமைக்கப்பட்டிருந்ததாம். அதனால் புஷ்பவல்லிக்கு பெரும் புகழ் கூடியது.

‘தாசி அபரஞ்சி’, ‘பாலநாகம்மா’, என்று ஜெமினியின் தொடர் வெற்றிச் சித்திரங்களில் புஷ்பவல்லியின் இளமையும் எழிலும் ஆடை அலங்காரங்களும் அற்புதமான நடிப்பும் வசீகர நடனங்களும் சினிமா வணிகர்களுடைய கஜானாக்களின் எண்ணிக்கையைக் கூட்டின. இவையெல்லாம், எஸ்.எஸ்.வாசனின் இதயத்திலும் புஷ்பவல்லிக்கு நிரந்தரமாக ஓர் இடத்தைப் பெற்றுத்தந்தன. அதனால் அடுத்த பிரமாண்ட படமான சந்திரலேகா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் புஷ்பவல்லிக்கு கொடுக்க முடிவு செய்தார்.

இந்திய அளவில் பிரமாண்டமாக எடுக்கப் போகும் படம் என்பதால் இன்னும் நடனம், உடைகள் எல்லாவற்றிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவரை அழைத்து தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் கூறி இருக்கிறார். இது புஷ்பவல்லியின் கணவர் வழக்கறிஞர் ரங்காசாரிக்கு பிடிக்கவில்லை.

‘வர விக்ரயம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்ற போது 1940 இல் ரங்காச்சாரி என்ற வழக்கறிஞரை மணந்தார், புஷ்பவல்லி. அதன் பிறகு புஷ்பவல்லிக்குத் தைக்கப்பட்ட ஆடைகள் மிகவும் ஆபாசமாக இருந்ததாகக் குற்றம் சாட்டி அவ்வப்போது எதிர்ப்புகள் தெரிவித்திருக்கிறார். சந்திரலேகா படம் நடனத்திற்கு முக்கியத்துவம் இருப்பதால் அதற்கு பெரிய எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் எத்தனை சமாதானம் சொல்லியும் ரங்காச்சாரி கேட்கவே இல்லை.

இதனால், சந்திரலேகா படத்தில் இருந்து விலகிய புஷ்பவல்லி, கணவர் ரங்காச்சாரியிடம் இருந்தும் விலகினார்.

டி.ஆர்.ராஜகுமாரியை ஒப்பந்தம் செய்து சந்திரலேகா படத்தை தொடங்கிய எஸ்.எஸ்.வாசன், கொத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் உருவான மிஸ் மாலினி படத்தில் நாயகியாக நடிக்க புஷ்பவல்லிக்கு வாய்ப்பு வழங்கினார்.

ஜெமினி நிறுவனத்தில் கொத்தமங்கலம் சுப்புவுக்கு உதவியாக நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் இருந்த ஜெமினி கணேசன், முதல் முறையாக மிஸ் மாலினி படத்தில் சிறு வேடத்தில் உதவி இயக்குனராக நடித்தார். அப்போது ஜெமினி கணேசனுக்கும் புஷ்பவல்லிக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது.

கணவரை பிரிந்திருந்த புஷ்பவல்லிக்கு ஜெமினி கணேசனின் பேச்சும், பழகும் விதமும் ஆறுதலாக இருக்கவே அவரை புஷ்பவல்லி நேசிக்க செய்தார். அதன் விளைவாக இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர்.

ரேகா
நான் புஷ்பவல்லியின் காதலில் சிக்கினேன். புஷ்பவல்லி வயிற்றில் என்னால் கருவும் உருவானது. நான் கலங்கி நின்றேன். அவள் என் குழந்தையைச் சுமப்பது தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றாள். பிறக்கப்போகும் குழந்தைக்கு முழுமையான அப்பாவாக இருக்கமுடியாது என்பதை உணர்ந்தேன். எத்தனையோ எடுத்துச் சொல்லியும் புஷ்பவல்லி ஏற்றுக் கொள்ளவேயில்லை.

1954-ம் வருஷம் அக்டோபர் மாதம் 10-ம் தேதி ரேகா என்ற பெண் குழந்தை எனக்கும் புஷ்பவல்லிக்கும் பிறந்தாள். என் மீது தனக்குள்ள உரிமையை உறவை உறுதிப்படுத்திக்கொள்ள நினைத்தாள் புஷ்பவல்லி. அதற்கு அடுத்த வருஷமே ராதா என்ற பெண் குழந்தையையும் பெற்றுக் கொண்டாள்.என் பிறந்தநாள் பரிசாக ராதா பிறந்தாள்.

என்னை அடைவதிலும் ஆட்கொள்வதிலும் இருந்த அவசரம் என்னைப் பிரிவதிலும் அவளுக்கு இருந்தது. நான்கு வருஷ நட்பை என்னைப் புரிந்து கொள்ளாமல் முறித்துக்கொள்ள புஷ்பவல்லி முற்பட்டாள்” என்று புஷ்பவல்லி பிரிந்த சமயத்தில் ஜெமினி கணேசன் வருந்திக் கூறி இருந்தார்.

ரேகா
முதல் கணவருக்கு ஒரு மகன், ஜெமினி கணேசனுக்கு இரு மகள்கள் என்று தனக்கு குழந்தை செல்வங்களை பெற்றுக் கொண்டாலும், திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தவில்லை புஷ்பவல்லி.

மிஸ்மாலினி படத்திற்கு பிறகு சக்ரதாரி, சம்சாரம், பெற்ற மனம், சங்கிலித்தேவன், கை கொடுத்த தெய்வம் என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

விடுதலைக்குப் பின்னர் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற நேரம். ‘சம்சாரம்’ திரைப்படம் வெளியானது. வாக்காளர் பட்டியலை வாங்கி அனைத்து இல்லத்தரசிகளுக்கும், அதன் கதாநாயகி புஷ்பவல்லியே மடல் எழுதுவது போல் வாசன் செய்த புதுமை விளம்பரம், புஷ்பவல்லியின் அபரிதமான புகழை ரூபாய் நோட்டுகளாக மாற்றியது. உடனடியாக ‘சம்சாரம்’ இந்தியும் பேசியது.

ஒட்டுமொத்த இந்தியாவும் புஷ்பவல்லியோடு சோகக் காட்சிகளில் சேர்ந்து அழுதது.

நாகையாவும் புஷ்பவல்லியும் இணைந்து நடித்த அருமையான பக்திச் சித்திரம் ‘சக்ரதாரி’. அதில் ஜெமினி கணேசனுக்கு பாண்டுரங்கர் வேடம். ஜெமினிகணேசனும் புஷ்பவல்லியும் இடம் பெற்ற இன்னொரு படம் ‘மூன்று பிள்ளைகள்’. இந்தப் படத்துடன் ஜெமினி கணேசன் ஜெமினி நிறுவனத்தை விட்டும், புஷ்பவல்லி ஜெமினி நிறுவனத்தை விட்டும் சென்றனர். 

ராதா
1948ல் தெலுங்கில் ‘விந்தியா ராணி’ என்றொரு படம். நாகேஸ்வர ராவ்,  எஸ்.வரலட்சுமி என நட்சத்திரப் பட்டியல் நீண்டாலும் டைட்டில் ரோல் விந்தியா ராணியாக நடித்தவர் புஷ்பவல்லியே. இப்படம்  ஆங்கிலத்திலும் ‘Queen of Vindhyas’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

ஜெமினி கணேசனுடன் இணைந்து புஷ்பவல்லி நடித்த படம் ‘மூன்று பிள்ளைகள்’. இது ‘முக்குரு கொடுக்குலு’ என  தெலுங்கிலும் வெளியானது.

1964ல் ‘கை கொடுத்த தெய்வம்’ படத்தில் சிவாஜி கணேசனுக்குத் தாயாக நடித்தார். 1965ல் வெளியான ‘வாழ்க்கைப்படகு’ திரைப்படத்தில் பாலையாவின் மனைவியாக புஷ்பவல்லி நடித்திருப்பார். 1967ல் ‘தாயின் மேல் ஆணை’ என்ற படத்துக்குப் பின் அவர் திரைப்படங்களில் நடிப்பதை ஏறக்குறைய நிறுத்திக் கொண்டு விட்டார்.

எல்லா நடிகைகளையும் போலவே ‘மலேயா மாமியார்’ என்று சொந்தமாக ஒரு படம் எடுத்துக் கையைச் சுட்டுக் கொண்டார். கடன்  கழுத்துக்கு மேல் போனது. அதை அடைப்பதற்காகவே மகள் பானு ரேகாவை திரைப்படத்தில் அறிமுகப்படுத்த நினைத்தார். 1966லேயே  பேபி ரேகாவாக  ‘ரங்குல ராட்னம்’ தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி, தாயும் மகளும் இணைந்தே அந்தப் படத்தில் நடித்தார்கள்.

புஷ்பவல்லி
1970ல்  ‘வியட்நாம் வீடு’ படத்தில் சிவாஜியின் மகளாக நடிக்கப் போவதாகச் செய்திகள் வெளியான நிலையில் அந்த வாய்ப்பும் தட்டிப் போனது.  தமிழ்த் திரைப்பட உலகம் ரேகாவை நடிகையாக ஏற்கக் கொடுத்து வைக்கவில்லை. தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் எவரும் தன் மகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பதில் புஷ்பவல்லிக்கும் தீராத வருத்தம் இருந்தது. ஆனால், இந்தித் திரையுலகம் ரேகாவை  வாரியணைத்து உச்சி முகர்ந்து தங்கள் செல்லப்பெண்ணாக ஏற்றுக்கொண்டதன் மூலம் அவரும் அகில இந்திய நட்சத்திரமானார். 

ரேகாவின் தங்கை ராதாவும்  ஒருசில படங்களில் நடித்தார். ஆனால், நடிப்பைத் தொழிலாகத் தொடரவில்லை. திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில்  ஆகிவிட்டார். புஷ்பவல்லியின் மகன் பாப்ஜி சில திரைப்படங்களில் தலைகாட்டினார்.

30களில் குட்டி நட்சத்திரமாகத் தொடங்கிய புஷ்பவல்லியின் திரைப் பயணம், 50களிலேயே நாயகியாக நடிப்பது முற்றுப் பெற்றது.  அதற்குப் பின் ஒரு சில படங்களில் நடுத்தர வயதுப் பாத்திரம், பின் முற்றிலும் மறந்து போன நடிகையாகி விட்டார்.

1926 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி பிறந்த புஷ்பவல்லி, 1991 ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று நீரிழிவு நோய் காரணமாக தனது 65 வது வயதில் மறைந்தார். இவருக்கு பாப்ஜி என்கிற மகனும், ரேகா, ராதா, ரமா, தனலட்சுமி ஆகிய நான்கு மகள்களும் உள்ளனர். 

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக