சனி, 12 பிப்ரவரி, 2022

மலையாள சினிமாவின் முன்னோடி ஜே.சி.டேனியல் வாழ்க்கை வரலாறு

நடராஜ முதலியார் எப்படி மௌன படங்களை பார்த்து, வியந்து ‘’நாமும் படம் தயாரிக்க வேண்டும், இயக்க வேண்டும்’’ என்று ஆசைப்பட்டாரோ அதே போல அன்றைய திருவிதாங்கூரில் குமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம் பகுதியில் பிறந்த ஜே.சி.டேனியல் நாடார் என்பவருக்கும் ஆசை பிறந்தது.

செல்வசெழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்த ஜே.சி.டேனியலுக்கு சிறுவயதுமுதலே களரி என்கிற தற்காப்புக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார். தனது 15 வயதிலேயே களரி குறித்து ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்தளவுக்கு களரியில் நுண்ணறிவும், ஆர்வமும் கொண்டிருந்தார்.

அவருக்கிருந்த வசதி காரணமாக, சென்னையில் பிரபலமாகிக் கொண்டிருந்த பேசாத் திரைப்படங்கள் பாக்கிற வாய்ப்பு கிடைத்தது. திரைப்படங்களின் மூலம் களரியைப் உலகளவில் பெரிதாக பேசவைக்க முடியும் என்று எண்ணினார். அதனால் திரைப்படங்கள் பார்ப்பதும், அது குறித்த தகவல்களை சேகரிப்பதுமாக தன்னுடைய நேரத்தினை செலவழித்தார். அதுவே அவருக்கு சினிமாவின் மீது தீராக்காதல் கொள்ள வைத்தது.

உலக சினிமா உருவாகி 30 வருடங்களும், இந்திய சினிமா உருவாகி 15 ஆண்டுகளும் ஆனபின்பும், மலையாளத்தில் திரைப்படமெடுக்கும் முயற்சியேதும் நிகழவில்லையே என்கிற வருத்தமும் அவரது முயற்சிக்கு வித்திட்டது.

இந்த சினிமா பற்றி தெரிந்து கொள்ள சென்னைக்கு சென்றார். அங்கு சினிமா வளாகத்திற்குள் நுழைவதே அவருக்கு பெரும் கஷ்டமாக இருந்திருக்கிறது. அதனால், மும்பைக்கு சென்று சினிமாவை தெரிந்து கொள்வது என்று முடிவு செய்தார்.

தான் கேரளத்தைச் சேர்ந்த ஆசிரியர் என்றும், தன் மாணவர்களுக்கு திரைப்படம் பற்றி கற்பிக்க விரும்புவதாகவும் ஸ்டுடியோ உரிமையாளர்களிடம் கூறி உள்ளே நுழைய அனுமதி பெற்றவர், மும்பையில் திரைப்படத் தயாரிப்பிற்கு வேண்டிய அறிவையும் உபகரணங்களையும் சேகரித்தார்.

அதன் பிறகு தனது கனவை நிறைவேற்ற மீண்டும் கேரளாவுக்கு திரும்பியவர், விகதகுமாரன் என்கிற படத்தை இயக்க முடிவு செய்து கதை எழுதினர்.

விகதகுமாரன்

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பணக்காரனின் மகனான சந்திரகுமார் என்ற சிறுவனை பூதநாதன் என்பவன் இலங்கைக்கு கடத்திச் சென்றுவிடுகிறான். இலங்கைக்கு கடத்தபட்ட சந்திரகுமார் ஒரு தோட்டத் தொழிலாளியாக வளர்க்கப்படுகிறான். தோட்ட உரிமையாளரான பிரித்தானியரின் அன்பைப் பெறுகிறான். காலப்போக்கில், சந்திரகுமார் தோட்டக் கங்காணி பதவிக்கு உயர்கிறான்.

பிறகு சந்திரகுமார் எந்த சூழலில் ஊருக்கு திரும்புகிறான், குடும்பத்தினர் எப்படி தெரிந்து கொள்கிறார்கள் என்று செண்டிமெண்ட் கலந்த சமூகப் படமாக  கதையில் புதுமையான காட்சிகளுடன் திரைக்கதை அமைத்தார்.

1926-ல் நெய்யாற்றங்கரை என்கிற ஊரில், அவருக்கிருந்த பூர்வீக சொத்தை 4 லட்சம் ரூபாய்க்கு விற்றார். அந்த பணத்தில் திருவனந்தபுரத்தில் தற்போது கேரளா பப்ளிக் சர்விஸ் கமிஷன் இருக்குமிடத்தில் இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கி தி திருவிதாங்கூர் பிக்சர்ஸ் என்கிற திரைப்பட நிறுவனத்தை துவங்கினார். அதன்பின்னர் ஒரு கேமராவையும் வாங்கினார். அதனை இயக்க லாலா என்கிற ஆங்கிலேயர் ஒருவரையும் ஒப்பந்தம் செய்தார்.

இந்தப் படத்தில் கடத்தப்பட்ட சந்திரகுமாராக அவரது நண்பர் சுந்தராஜ் நடிக்க, அவருக்கு உதவும் ஜெயச்சந்திரனாக, நாயகன் வேடத்தில் டேனியல் நடித்து விகதகுமாரன் படத்தை இயக்கி படத்தொகுப்பும் செய்துள்ளார்.  அவருடன் சரோஜினியாக பி.கே.ரோசி, கடத்தல்காரன் பூதநாதனாக ஜான்சன் என பலரும் நடித்துள்ளனர்.   

படத்தின் வெளியீட்டு தேதி சரியாக தெரியவில்லை. 1928 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று என்றும், 1930 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6:30 மணிக்கு மணிக்கு திருவனந்தபுரத்தில் கேபிடல் தியேட்டரில் வெளியிடப்பட்டது என்றும் இரண்டு தேதிகள் கூறப்படுகின்றன.

திருவனந்தபுரம் நகரின் மையத்தில் உள்ள இன்றைய மாநில சட்டமன்றக் கட்டடத்திற்கு அருகில் இன்றைய ஏ.ஜி. அலுவலகத்திற்கு எதிரே திரையரங்கம் இருந்தது. படத்தின் திரையிடலை வழக்கறிஞர் மல்லூர் கோவிந்த பிள்ளை துவக்கி வைத்தார். இது ஒரு ஊமைப்படம் என்பதால், திரையரங்கில் ஒரு அறிவிப்பாளர் இருந்தார், அவர் கதையையும் கதைச் சூழலையிம் விளக்குவார்.

இந்தப் படம் கேரளத்தில் தயாரிக்கபட்ட முதல் படமாகவும், சமூக முக்கியத்துவம் கொண்ட படமாகவும் இருந்ததது என்றாலும் படத்தில் ஒரு பெண் இருந்த காரணத்தால் கேரளத்தின் சில இந்து சமய ஆச்சார குழுக்களின் எதிர்ப்பை சந்தித்தது. காரணம் அந்த காலத்தில் படங்களில் பெண்கள் நடிப்பது விபச்சாரத்திற்கு இணையான செயலாக கருதப்பட்டது. நாடகங்களில் கூட பெண் வேடங்களில் ஆண்கள் நடித்த காலம் அது.

உயர் சாதி இந்துக்களால் அரங்கிற்குள் படத்தின் நாயகி ரோசி அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஒரு தலித் பெண் படத்தில் உயர்சாதி நாயர் பெண்ணாக நடிப்பதா என்று ஆத்திரமடைந்து, ரோசியிடம் முரட்டுத்தனத்தனமாக நடந்துகொண்டனர். படம் திரையிட்ட போது, திரையில் கற்கள் வீசப்பட்டு, திரை சேதப்படுத்தப்பட்டது.

சிலர் கதாநாயகி ரோசியின் குடிசையை எரித்தனர். இதனால் அவர் தமிழ்நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். கேரளத்தின் மிக முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றான ஆலப்புழாவின் பார்வையாளர்கள் தாராள சிந்தனையாளர்களாக இருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் திரைப்படத்தைப் பார்த்தனர். திரை மங்கியபோது பார்வையாளர்கள் கூச்சலிட்டதால் ஒரு சிறிய தடுமாற்றம் ஏற்பட்டது. இதுவே முதல் மலையாள படம் என அறிவிப்பாளர் விளக்கினார், சில சிறிய பிரச்சினைகள் இருந்தன என்றாலும் பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்றனர்.

படத்தின் ஒரே ஒரு பிரதி மட்டுமே இருந்ததால், ஜே. சி. டேனியேல் தானே படப் பெட்டியுடன் ஆலப்புழாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. கொல்லம், திருச்சூர், தலச்சேரி, நாகர்கோவில் ஆகிய ஊரிகளிலும் படம் திரையிடப்பட்டது. இந்த படத்தின் வசூலானது படத்துக்கு ஆன செலவை விட குறைவாகவே இருந்தது.

படம் தோல்வியடைந்தத பிறகு, டேனியல் கடன் சுமையால் பாதிக்கப்பட்டு நிலைமையைச் சமாளிக்க, அவர் தனது உபகரணங்களை விற்று தனது ஸ்டுடியோவை மூட வேண்டியிருந்தது. பின்னடைவுகள் இருந்தபோதிலும், டேனியல் மேலும் ஒரு திரைப்படத்தை உருவாக்கினார். இது தற்காப்பு கலையான அடிதடி முறை குறித்த ஆவணப்படமாக இருந்தது. இந்தப் படம் முடிந்தபிறகு டேனியல் முற்றிலும் கடனாளி ஆனார். இதனால் அவர் வாழ்வாதாரத்தை தேடுவதற்காக திருவனந்தபுரத்தை விட்டு வெளியேறினார்.

அதன்பிறகு டேனியல் தனது வாழ்நாள் முழுவதையும் பாளையங்கோட்டை, மதுரை, காரைக்குடி ஆகிய இடங்களில் பல் மருத்துவராக தன் வாழ்வைக் கழித்தார்.

கேரள அரசு துவக்கத்தில் டேனியலுக்கு எந்த மரியாதையும் கொடுக்க மறுத்துவிட்டது, ஏனெனில் ஜே.சி.டேனியல் பிறந்த கன்னியாகுமரி மாவட்டமானது 1956 இல் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது. இதனால் டேனியல் ஏதேனும் நிதி உதவியை விரும்பினால், அவர் அதற்கு தமிழக அரசிடம்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறிவிட்டது.

1975 ஆம் ஆண்டில் டேனியல் இறந்து நீண்ட காலத்திற்குப் பிறகு, ஒரு சிந்தனை மாற்றமாக, கேரள அரசு 1992 இல் கேரள மாநில திரைப்பட விருதுகளின் ஒரு பகுதியாக ஜே.சி. டேனியல் விருதை மலையாள சினிமாவில் வாழ்நாள் சாதனைகளை கௌரவிப்பதற்காக நிறுவியது. டேனியல் இப்போது மலையாள சினிமாவின் தந்தை என்று கொண்டாடப்படுகிறார்.

ஜே. சி. டேனியலின் வாழ்க்கை மற்றும் விகதகுமாரன் தயாரிப்பை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான இலக்கிய மற்றும் சினிமா படைப்புகள் உருவாக்கபட்டுள்ளன. விகதகுமாரனின் கதாநாயகி பி. கே. ரோசியின் வாழ்க்கையை விவரிக்கும் வினு ஆபிரகாமின் புதினமான நாஷ்டா நாயிகா ஆகும். இந்த படம் 2003 இல் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

2013 ஆம் ஆண்டில், ஜே.சி.டேனியலின் வாழ்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு கமல் எழுதி இயக்கிய செல்லுலாய்ட் திரைபடம் வெளியானது. விகதகுமாரனைத் தயாரிக்கவும் திரையிடவும் டேனியல் மேற்கொண்ட போராட்டங்களையும் அவர் நிதி நெருக்கடியில் மூழ்குவதையும் அந்தப் படம் விவரித்தது. டேனியல் வேடத்தில் பிருத்விராஜ் நடிக்க, மம்தா மோகன்தாஸ் அவரது மனைவி ஜேனட்டாகவும், புதுமுகம் சாந்தினி ரோசியாகவும் நடித்தனர். அந்தப் படம் மலையாள திரையுலகில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் பல பாராட்டுக்களையும் பெற்றது.

மலையாளிகளுக்குத் தங்கள் சினிமாகுறித்து எப்போதுமே ஒரு பெருமிதம் உண்டு. அந்தப் பெருமிதத்துக்கான முதல் விதையை விதைத்தவர் ஜே.சி.டேனியல் என்றால் அது மிகையாகாது. சினிமா என்கிற அற்புதக் கலையை கேரளத்துக்கு அறிமுகம் செய்த டேனியல், காலங்கள் கடந்து இன்றைக்கு மலையாள சினிமாவின் பிதாமகன் என கொண்டாட்டப்படுகிறார் என்றால், அது உண்மை உழைப்புக்கு கிடைத்த மரியாதை.

தொகுப்பு : ஜி.பாலன்


நடிகை ரேவதி வாழ்க்கை வரலாறு

தமிழ் சினிமாவின் யதார்த்த நாயகியாகக் கொண்டாடப்பட்டவர், ரேவதி. 1980களில் பவர்ஃபுல் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்த நாயகி. அப்போதைய முன்னணி இயக்குநர்கள் அனைவரின் இயக்கத்திலும் நடித்து, அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறி மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர். இந்தி மற்றும் மலையாள சினிமாக்களிலும் புகழ்பெற்ற ரேவதி கேரளாவில் உள்ள  கொச்சியில் 1966 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் தேதி மலங்க் கெலுன்னி -  லலிதா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர். இவரது இயற்பெயர் ஆஷா குட்டி.

இவரது தந்தை ராணுவத்தில் வேலை செய்து வந்ததால் அவர் பிறந்த ஒரு மாதத்தில் வேறு ஊருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. இப்படி இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுவயதிலிருந்தே ராணுவ குடியிருப்புகளில் வாழ வேண்டிய சூழல் அவருக்கு அமைந்தது. ஏழாவது படிக்கும் போது சென்னைக்கு வந்தார். இவரையும், இவரது தங்கை பிந்துவையும் அவரது அம்மாதான் வளர்த்தார்.

படிக்கும் போது ஏதாவதொரு கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி ரேவதிக்கு நடனத்தில் ஆர்வம் இருப்பதை அறிந்து அவரை நடன வகுப்புக்கும் அனுப்பினார், அவரது அம்மா. படித்து டாக்டராக வேண்டும், நடனத்திலும் புகழ் பெற வேண்டும் என்கிற இரு கனவுகளுடன் இருந்திருக்கிறார், ரேவதி.

பிளஸ் டூ படிக்கிற போது அவருடைய புகைப்படத்தைப் பார்த்த பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ், இந்தப் பெண்ணை அண்ணனின் படத்தில் நடிக்க வைக்கலாமே என்று ரேவதியின் உறவினர் சந்தோஷ் சிவராமிடம் கூறி இருக்கிறார். ரேவதியின் உறவினர் சந்தோஷ் சிவராமும், பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜும் நெருங்கிய நண்பர்கள். சொன்னது போலவே அண்ணன் பாரதிராஜாவிடம் ரேவதியின் போட்டோவை காட்டி தனது எண்ணத்தை தெரிவித்திருக்கிறார், ஜெயராஜ்.

சரி பார்க்கலாம் என்று கூறிய பாரதிராஜா, ஒருநாள் ரேவதியை நேரில் பார்த்தவர், ‘இந்தப் பொண்ணு, போட்டோவில் பார்த்ததைவிட நேரில் எதார்த்தமா இருக்கே!’ என்று கூறியவர், தனது படத்தில் ரேவதியை நடிக்க வைப்பதாக கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் பாரதிராஜாவின் சகோதரர், ஜெயராஜ் தயாரிப்பில் பாரதிவாசு இயக்கத்தில் மெல்ல பேசுங்கள் என்கிற படத்தின் வேலைகள் தொடங்கின. அந்தப் படத்திற்கு கதாநாயகி தேவைப்பட, ரேவதியை அதில் அறிமுகப்படி=உத்திடலாம் என்று ஜெயராஜிடம் கூறி இருக்கிறார், பாரதிராஜா.

ரேவதியை நேரில் அழைத்துப் பார்த்த இயக்குநர் பாரதிவாசு, ரேவதி குள்ளமாக இருக்கிறார், என்று கூறி, பிறகு பாரதிராஜா அனுப்பிய பானுப்பிரியாவை அறிமுகப்படுத்தினார்கள்.

பாரதிராஜா மண்வாசனை படத்தை எடுக்க முடிவு செய்த போது அந்தப் படத்தில் முதலில் சிவக்குமார் நாயகனாகவும், ராதா நாயகியாவும் நடிக்க முடிவாகி இருந்தது. பாடல் பதிவு முடிந்த பிறகு படத்தில் புதுமுகங்களை நடிக்க வைத்துவிடலாம் என்று முடிவு செய்த பாரதிராஜா, அதற்காக நடிகர், நடிகைகளை தேர்வு செய்தார். கதாநாயகியாக பத்மினியின் உறவுக்கார பெண் என்று ஷோபனாவை கேரளாவுக்கு சென்று நேரில் பார்த்து அவரை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தவர்,  அதன் பிறகு தனது லவ்வர்ஸ் இந்திப் படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றுவிட்டார்.

இந்திப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து மண்வாசனை படத்தின் படப்பிடிப்புக்காக போடிநாயக்கனூர் புறப்படும் போது, நான் படப்பிடிப்புக்கு வரமுடியாது. பிளஸ் டூ பரிச்சைக்கு படிக்க வேண்டும் என்று படத்தில் இருந்து விலகிக் கொண்டார், ஷோபனா.

வேறு வழியில்லாமல் உடனே ரேவதியை படப்பிடிப்புக்கு அழைத்து சென்றிருக்கிறார், பாரதிராஜா. அவரும் அப்போது பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்தார்.

முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவரது மாமா சொன்ன போது  `நான் நடிகையா?’ன்னு மிரண்டுபோய் ‘அதெல்லாம் வேண்டாம்’னு என்று சொன்ன ரேவதி, அவரது மாமா உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தியதால், ஆர்வத்துடன் நடிக்க சென்றதுடன், ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநர் பாரதிராஜா சொல்லிக்கொடுப்பதை உன்னிப்பாக கேட்டு, கவனித்து அப்படியே நடித்து கொடுத்திருக்கிறார். 

நடிப்பதற்கு முன் மாடர்ன் டிரஸ்லயே வளர்ந்த ரேவதி, படத்துக்காக முதன்முறையா புடவை கட்டி கிராமத்து பெண் முத்துப்பேச்சியாகவே மாறிப் போனார். ஆங்கிலமும், இந்தியும் படித்து வளர்ந்த ரேவதிக்குள் தமிழை வளர்த்த பாரதிராஜா, அவரையே அவரது பாத்திரத்துக்கு பயிற்சி கொடுத்து டப்பிங் பேச வைத்தார்.

முதல் படம் `மண்வாசனை’ முடிந்ததுமே இரண்டாவதாக மலையாளத்தில் பரதன் இயக்கத்தில் `காற்றத்தே கிளிக்கூடு’ படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் இரு மொழிகளிலும் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்து அவருக்கு பாராட்டும் பட வாய்ப்புக்களுமாக குவிந்தன.

படங்களை எப்படி தேர்வு செய்வது என்று அப்போது அவருக்கு தெரியவில்லை. அதனால் பாரதிராஜாவின் உதவியை நாடி இருக்கிறார். `கதை கேளு. உனக்குப் பிடிச்சிருந்தா மட்டும் நடி’ன்னு ஆலோசனை சொல்லி இருக்கிறார். அப்படி அவர் தமிழில் மூணாவது படமாக ரஜினியுடன் மகேந்திரன் இயக்கிய `கை கொடுக்கும் கை’ படத்தில் நடித்தார். அதில் அவருக்கு கண்ணு தெரியாத பாத்திரம். படத்தில் நடிக்க சென்ற போது மேக்கப் வேண்டம் முகம் மட்டும் கழுவிக்கோ என்று நடிக்க வைத்தாராம், மகேந்திரன். 

மகேந்திரனின் ‘கை கொடுக்கும் கை’ படத்திலும், நாசரின் ‘அவதாரம்’ படத்திலும் பார்வையற்ற கதாபாத்திரம் செய்திருந்தார். ஆனால் இரண்டு படங்களுக்குமான நடிப்பில் வேறுபாடு காட்டியதுதான் ரேவதியின் தனித்துவம்.

மீண்டும் குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் `புதுமைப் பெண்’, `ஒரு கைதியின் டைரி’ படங்களில் நடித்தார். சவாலான வேடங்கள் என்றால் ரேவதிக்கு ரொம்பப் பிடிக்குமாம். உடனே ஒப்புக்கொள்வாராம்.

மணிரத்னம் ‘பகல்நிலவவு’, ‘மெளன ராகம்’, ‘அஞ்சலி’ முதலான படங்களில் ரேவதியை நாயகியாக்கினார். மூன்று படங்களுமே ரேவதியை, அடுத்தகட்டத்துக்கு உயர்த்தின. பாண்டியராஜனின் முதல் படமான ‘கன்னிராசி’யிலும் அடுத்த படமான ‘ஆண்பாவம்’ படத்திலும் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார்.

கே.ரங்கராஜின் ‘உதயகீதம்’ படத்தில் லட்சுமி, ரேவதி, மோகன் மூவரும் போட்டிபோட்டுக்கொண்டு நடித்தார்கள். தொடர்ந்து ‘உன்னை நான் சந்தித்தேன்’ முதலான படங்களில் இவரின் இயக்கத்தில் நடித்து அசத்தினார் ரேவதி.

விவாகரத்து கேட்டு இறுக்கத்துடன் இருக்கும் ‘மெளன ராகம்’ திவ்யா ஒருபக்கம் ஈர்த்தார். ஆர்.சுந்தர்ராஜனின் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில், திருமணத்தன்றே கணவனைப் பறிகொடுத்து விதவையாக வாழ்ந்துகொண்டிருக்கும் வைதேகி இன்னொரு விதமாக ஈர்த்தார். பாரதிராஜாவின் ‘ஒரு கைதியின் டைரி’யில் சுறுசுறு துறுதுறு கேரக்டர் என்றால், பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ படத்தில் அத்துடன் சேர்த்து காதல் உணர்வையும் வெளிப்படுத்தினார்.

கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டதை அறிந்து புழுங்கித் தவிக்கும், ஆத்திரத்தையும் கோபத்தையும் அடக்கியாளும், வேதனைகளையும் கவலைகளையும் பொத்திவைக்கும் பாலுமகேந்திராவின் ‘மறுபடியும்’ பட கேரக்டரை அற்புதமாகப் பண்ணியிருப்பார். ‘இவரைத் தவிர வேற யாரும் பண்ணமுடியாதுப்பா’ என்று சில நடிகர் நடிகைகளை, சில படங்களின் கதாபாத்திரங்களைக் கொண்டு சொல்லுவோம். அவரின் பல படங்கள் அப்படிச் சொல்லவைத்தன.

ரேவதி எப்போதுமே டைரக்டர்களின் ஹீரோயின். கதை பண்ணும்போதே, இந்த கனமான பாத்திரத்தை,ரேவதி செய்தால்தான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்துவிடுவார்கள் இயக்குநர்கள். ஆர்.வி.உதயகுமாரின் ‘கிழக்கு வாசல்’ தாயம்மா கேரக்டரை, ரேவதியைத் தவிர வேறு யார் செய்துவிடமுடியும்? வெயிட்டான கேரக்டர் மட்டும்தானா. பாசிலின் ‘அரங்கேற்ற வேளை’யின் மாஷா கேரக்டரை ரேவதியைத் தவிர, இவ்வளவு சிறப்புடனும் ஏக கலாட்டாவுடனும் ரேவதிதான் செய்யமுடியும். அதனால்தான், தமிழ் சினிமாவில், மறக்க முடியாத கேரக்டராக மாஷா இருந்தது.

கமல், ரஜினி மட்டுமின்றி விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், முரளி, மோகன், ராமராஜன் என்று அன்றைய ஹீரோக்கள், அன்றைய இயக்குநர்கள் என எல்லாப் படங்களிலும் எல்லாருடனும் நடித்து மிகப்பெரிய ரவுண்டு வந்தார். ‘தெய்வ வாக்கு’, ’தொட்டாச்சிணுங்கி’, ’பிரியங்கா’ , ‘இதயத்தாமரை’ மாதிரி எத்தனையோ படங்களை அவரின் நடிப்புக்கு அடுக்கிக்கொண்டே போகலாம்.

முக்கியமாக... பஞ்சவர்ணம். படம் முழுக்க அப்பாவித்தனமும் இருக்கும். புரிந்து உணர்ந்து வெளிக்காட்டாத நிலையும் இருக்கும். கொஞ்சம் பதட்டமும் இருக்கும். பெரியவீட்டுக்கு மருமகள் என்கிற பெருமையும் பொறுமையும் கூடவே இருக்கும். இப்படி எல்லா உணர்வுகளையும் முகத்திலும் குரலிலும் படரவிடுகிற சாதுர்ய நடிப்பு ரேவதி ஸ்பெஷல். அதனால்தான், ’சாவித்திரிக்குப் பிறகு’ எனும் அற்புதமான இடத்தை ரசிகர்கள் ரேவதிக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

என் முதல் ஏழு படங்களுக்குள், பாரதிராஜா, மகேந்திரன், பரதன், பாபுன்னு நாலு பெரிய இயக்குநர்களின் வெவ்வேறு ஜானர் படங்கள்ல நடிச்சதுதான், என் நடிப்புக்கான அஸ்திவாரம். 20 வயசுக்குள்ளேயே நிறைய சவாலான ரோல்களில் நடிச்சுட்டேன். சினிமாத்துறை மேல பெரிய காதலும் மதிப்பும் உண்டாகிடுச்சு. சினிமாவை என் கரியரா முடிவெடுத்தது அப்போதான். பாலசந்தர் சார் இயக்கத்துல நான் நடிக்கணும்னு எங்கப்பா ஆசைப்பட்டார். அது, `புன்னகை மன்னன்’ மூலம் நிறைவேறிச்சு. நடிப்பு, டான்ஸ்னு கமல் சாருக்குப் போட்டியா நானும் சிறப்பா பர்ஃபார்ம் பண்ண ஊக்கப்படுத்தினார் பாலசந்தர் சார்.

நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தாலும், ஒருநாளைக்கு ஒரு கால்ஷீட்தான் கொடுப்பார். அப்படி கொடுப்பதால்தான் ஈடுபாட்டுடன் நடிக்க முடிஞ்சது என்கிறார்.

கதை கேட்பது மட்டுமல்லாது, தனது காஸ்ட்யூம் எல்லாத்தையும் தானேதான் தேர்வு செய்வார். அவருக்கு செட் ஆகாது என்பதால், கிளாமர் ரோல்களைத் தவிர்த்துவிட்டார். இந்த ஹீரோவோடு நடிக்க வேண்டும் என்று நினைப்பதைவிட, கதை மற்றும் இயக்குநர் களைத்தான் முக்கியமா பார்ப்பாராம்.

இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் 150 படங்களுக்கு மேல நடித்திருக்கிறார். அதில் முக்கால்வாசி படங்களில் ஹீரோயின் ரோல். அவர் படங்களுக்கு அவரே டப்பிங் பேசியதோடு, சில இயக்குநர்கள் கேட்டுக்கொண்டதால் பிற நடிகைகளுக்கும் டப்பிங் பேசி இருக்கிறார். 

இயக்குனராக அவதாரம் எடுத்து, ஆங்கிலம், இந்தி, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் நான்கு படங்களை இயக்கியிருகிறார். கே.பாலசந்தர் சார், `நீ இயக்கின `பிர் மிலேங்கே’ படம் பார்த்தேன்’னு சொல்லி, அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியைப் பத்தியும் நீண்ட நேரம் பாராட்டிப் பேசினார். இதுதான், இயக்குநரா எனக்குக் கிடைச்ச பெரிய பெருமை என்று தனது இயக்கம் பற்றி கூறி இருக்கும் ரேவதி, தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதுகளை கிழக்கு வாசல், தலைமுறை ஆகிய படங்களுக்காக பெற்றவர், இந்திய அரசின் தேசிய விருதுகளை தேவர்மகன் படத்தில் நடிப்புக்காகவும், Mitr, My Friend படத்திற்கு இயக்கத்திற்காகவும் பெற்றிருக்கிறார்.

என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம். அப்போது கொஞ்சம் நிதானமா முடிவெடுத்திருந்தால், என் சினிமா ட்ராக் வேறு மாதிரி மாறியிருக்கும். இன்னும்கூட நிறைய நல்ல படங்கள்ல நடித்திருப்பேன் என்று சொல்லும் நடிகை ரேவதி இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சுரேஷ் சந்திர மேனனை 1986 ஆம் ஆண்டு திருமணம் திருமணம் செய்து கொண்டார். பிறகு 2003 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். நடிப்பில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டவர், விவகாரத்துக்கு பின் மீண்டும் நடித்து வருகிறார்.

விவரம் புரிஞ்ச காலத்துல இருந்து, சமூகத்துக்கு என்னாலான பங்களிப்பைக் கொடுக்கணும்னு நினைப்பேன்.அதனாலதான் ஆறு ஆண்டுகள் அரசியலிலும் ஈடுபட்டேன். ஆனால், அது எனக்குப் பொருத்தமான களம் கிடையாது என்பதால் அதிலிருந்து விலகிட்டேன். இருந்தாலும் தொடர்ந்து சமூகப் பணிகளில் கவனம் செலுத்துறேன்.

வாழ்க்கையில் நான் ஆசைப்பட்டு, பல வருஷங்களுக்குப் பிறகு கிடைச்ச வரம், என் மகள் மஹி. அவ வந்த பிறகு வாழ்க்கை மிக அழகாக மாறியிருக்கு. என்று சொல்லும் ரேவதி, டெஸ்ட் டியூப் மூலம் பெண் குழந்தை பெற்று வளர்த்து வருகிறார். மகிதான் ரேவதிக்கு எல்லாமுமாக இருக்கிறார்.

ஐந்தாவது படமாக இந்தியில் கஜோல் நாயகியாக நடிக்கும் 'தி லாஸ்ட் ஹுர்ரா' திரைப்படத்தை இயக்கும் வேலையில் பிசியாக இருக்கும் ரேவதி, இந்தப் படம், நிஜமாக நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது. சுஜாதா என்கிற தாயின் போராட்டங்களை, அவள் எப்படி புன்னகையுடன் எதிர்கொள்கிறாள் என்பதைச் சொல்லும் படமாக இருக்கும் என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்.

தொகுப்பு : ஜி.பாலன்


சிவகங்கை ஏ.நாராயணன் வாழ்க்கை வரலாறு

சிவகங்கை ஏ.நாராயணன்

சிவகங்கையில் 1900 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நடுத்தரமான குடும்பத்தில் பிறந்தவர், ஏ.நாராயணன். சென்னை கல்லூரியில் பி. ஏ. படித்து பட்டம் பெற்று ஆயுள் காப்பீட்டு முகவராக பம்பாயில் பணியில் சேர்ந்தார். அங்கே ஹாலிவுட்டிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் வரும் அந்நிய மவுனப் படங்களை வாங்கி இந்தியா முழுவதும் விநியோகித்துவந்த கே.டி.பிரதர்ஸ் & கோவுடன் நாராயணனுக்கு நட்பு ஏற்பட்டது. அந்த நட்பைப் பயன்படுத்திப் பல மவுனப் படங்களை வாங்கி கல்கத்தாவில் விநியோகிக்கத் தொடங்கினார்.

பிறகு கல்கத்தாவின் பிரபலமான திரையரங்காக விளங்கிய ‘க்வின்ஸ் சினிமா’வைக் குத்தகைக்கு எடுத்து நடத்தினார். பின்னர் மதராஸ் திரும்பி ‘எக்ஸிபிடர்ஸ் பிலிம் சர்வீஸ்’ என்ற தென்னிந்தியாவின் முதல் பட விநியோக நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் மவுனப் படங்களை வாங்கித் தென்னகமெங்கும் திரையரங்குகளுக்கு விநியோகித்தார்.பின்னர் திருவல்லிக்கேணியில் பாப்புலர் திரையரங்கை நடத்தினார். அதுவே பின்னாளில் ஸ்டார் டாக்கீஸ் திரையரங்காக மாறியது.

பட விநியோகம் லாபம் தந்தாலும் படங்களைத் தயாரிக்க வேண்டும், அவற்றை இயக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் சுழலத் தொடங்கியது.

1928-ம் ஆண்டு ஹாலிவுட் சென்ற நாராயணன் அங்கே ஓராண்டு காலம் தங்கி சினிமா தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பங்களைத் திறம்படக் கற்றுக்கொண்டார்.

ஹாலிவுட்டிலிருந்து திரும்பி வந்த கையோடு 1929-ம் ஆண்டு சென்னை தண்டையார்பேட்டையில், ‘ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரில் பிரமாண்டமான சினிமா ஸ்டுடியோவை தொடங்கினார்.

அப்போது தமிழ்நாட்டில் நடராஜ முதலியாரும், ரகுபதி வெங்கைய்யா நாயுடுவும் படத்தயாரிப்பில் நஷ்டம் ஏற்பட்டு கஷ்டத்தில் இருந்தனர். இருவருமே தங்களது ஸ்டுடியோவை கடனில் இழந்து படத் தயாரிப்பைவிட்டே விலகி இருந்தனர்.

இதனால், 1924 முதல் 1929 வரை வேறு எந்த மௌனப் பட தயாரிப்பு நிறுவனமும் சென்னையில் தோன்றவில்லை. மௌனப் படத் தொழிலே இங்கிருந்து மறைந்து போய் விடக்கூடிய நிலை உருவானது.

1927-ல் சென்னையில் நிரந்தர சினிமா கொட்டகைகள் 9, சென்னை மாகாணம் முழுவதும் 34, டூரிங் சினிமாக்கள் 26ம் என இயங்கிக் கொண்டிருந்தன.

சென்னையிலும், பம்பாயிலும் மௌன படங்கள் தயாரிக்கப்பட்டாலும் அமெரிக்க ஆங்கில படங்கள்தான் பெருவாரியாக இங்கிருந்த தியேட்டர்களில் திரையிடப்பட்டன.

அமெரிக்க படங்களின் ஆக்கிரமிப்பால் நம்மூர் சினிமா நலிவுற்றது. ஏராளமான பிரதிகள் எடுத்து உலகமெங்கும் பெறப்பட்டதால் அமெரிக்க படங்களின் வாடகை குறைந்ததாக இருந்தது. இதனால், தியேட்டர் முதலாளிகள் அந்த படங்களையே நாடினார்கள்.

மேலும் ஸ்டண்ட் காட்சிகளில் அந்த படங்களின் தரம் உயர்ந்து இருந்தது. அவற்றுடன் போட்டிபோட முடியாமல் நமது தயாரிப்பாளர்கள் போராடினார்கள். தென்னிந்திய சினிமா நலிவடைவதை பிரிட்டிஷ் அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக நலிவுற்றிருந்த தென்னிந்திய சினிமா உலகை தூக்கி நிறுத்தி ஓரளவு தலை நிமிரச் செய்த மாமனிதராக வந்தார், சிவகங்கை ஏ.நாராயணன்.

தனது 'ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்' என்ற பெயரில் ஒரு சினிமா ஸ்டுடியோவை தொடங்கி தர்மபத்தினி என்கிற படத்தை தயாரித்து, இயக்கிய ஏ.நாராயணன், தொடர்ந்து ஞானசௌந்தரி, கோவலன், கருட கர்வபங்கம் ஆகிய படங்களை இயக்கியவர், ஆர்.பிரகாஷா இயக்கத்தில் லங்கா தகனம், கஜேந்திர மோட்சம், காந்தாரி வதம், ராஜஸ்தான் ரோஜா, நரநாராயணன், பவழராணி, பீஷ்மர் பிரதிக்ஞை, மிங்கிரேல்லியத்தாரகை அல்லது லைலா, மச்சாவதாரம் ஆகிய படங்களை தயாரித்தார்.

மேலும் ஆர்.பிரகாஷாவின் உதவியாளர் ஒய்.வி.ராவ் இயக்கத்தில் பாண்டவ நிர்வாகன், சாரங்கதாரா, போஜராஜன், பாண்டவ அஞ்ஞான வாசம், தனது உதவியாளர் ஜித்தன் பானர்ஜி இயக்கத்தில் விசவாமித்ரா, மாயா மதுசூதனன், எஸ்.கோபாலன் இயக்கத்தில் பிரமீளா அர்ஜூனன் என இருபதுக்கும் மேற்பட்ட மௌனப் படங்களை நான்கு ஆண்டுகளில் தயாரித்தார். இதனால்தான் அவரை தென்னிந்திய சினிமா தொழிலின் தந்தை என்று அழைகிறார்கள்.

சிவகங்கை ஏ.நாராயணன் தமது படங்களை, தம் சொந்தக் கம்பெனியான எக்ஸிபிடர்ஸ் பிலிம் சர்வீஸ் மூலமாகவும், அதன் பம்பாய், டில்லி, ரங்கூன், சிங்கப்பூர் கிளைகள் மூலமாகவும் விநியோகம் செய்தார். கல்கத்தாவில் அரோரா பிலிம் கார்ப்பரேஷன், வங்காள விநியோகத்தை மேற்கொண்டது.

மௌனப் படங்கள் தயாரிக்கப்பட்டு வந்த அக்காலத்தில், ஒரு முழு நீள மௌன படத்தை தயாரிப்பதற்கான அன்றைய செலவு, அதிகபட்சம் ரூ.5000 முதல் 6000/- வரை. ஆனால் திரைப்படங்களின் மீது காதல் கொண்ட ஏ.நாராயணன், 'ஜி.டபிள்யூ.எம்.ரேனால்டு எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட மிங்கிரேலியத் தாரகை அல்லது லைலா என்ற 20 ரீல்கள் கொண்ட திரைப்படம் தயாரிக்க ரூ.75,000/- செலவழித்தார்.

இந்தியாவில் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட மௌனப் படம், மிங்கிரேலியத் தாரகை அல்லது லைலா. இந்தப் படம் ஒரே நேரத்தில் சென்னை வெலிங்டன் தியேட்டரிலும், பம்பாய் சூப்பர் சினிமாவிலும், ரங்கூன் சினிமா டி-பாரிஸ் தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு 6 வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்த வெற்றி படமாகும்.நேர்த்தியான இதன் தயாரிப்பிற்காக நாராயணன், பத்திரிக்கைகளால் அந்நாளில் பெரிதும் பாராட்டப்பட்டார்.

1929-ல் நாராயணன் கோவலனும் காற்சிலம்பும் என்ற ஒரு மௌனப் படத்தை இயக்கினார். இப்படத்திற்கான வெளிப்புறக் காட்சிகள் சென்னை துறைமுகத்தில் படமாக்கப்பட்டன.

விவசாய உணர்வு என்ற 8000 அடி துண்டு படத்தை, இம்பீரியல் கெமிக்கல் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டிற்காக இவர் தயாரித்தார். பிரசவமும குழந்தை நலனும், மேக நோய் (பால்வினை நோய்) ஆகிய டாக்குமென்ட்ரி படங்களை சென்னை பொது சுகாதார இலாகாவிற்காக தயாரித்து கொடுத்தார்.

1929-ல் சென்னையில் செயல்பட்டுவந்த வர்மா எண்ணெய் கம்பெனிக் கிடங்கு தீப்பற்றி பலமணிநேரம் எரிந்தது. இதை டாகுமெண்டரி படமாக எடுத்து வெளியிட்டார் ஏ.நாராயணன்.

1930களில் தென்னிந்தியர்கள் தங்கள் திரைப்படங்களைத் தயாரிக்க பம்பாய்க்கும், கோலாப்பூருக்கும், கல்கத்தாவுக்கும், நடிக நடிகையர்கள், பாடகர்கள் உள்ளிட்ட அத்தனை கலைஞர்களோடும், பல மாதங்கள் தங்கி படத்தை முடித்துக் கொண்டு வரத் தேவையான மூட்டை முடிச்சுகளோடு போய்க் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையைப் போக்க எண்ணிய நாராயணன், ஹாலிவுட் சென்று சினிமா சவுன்ட் தொழில் நுட்பங்களை தெரிந்துகொண்டு திரும்பியவர், 'சீனிவாஸ் ஸினிடோன்' என்ற தென்னகத்தின் முதல்பேசும் பட ஸ்டுடியோவை 1934-ல் சென்னையில் உருவாக்கினார். சென்னை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் நிறுவப்பட்ட அந்த ஸ்டுடியோவுக்கு 'சப்த நகரம்', சவுண்ட் சிட்டி என்கிற பெயர்களும் கூட உண்டு.

நாராயணன் துணிச்சலுடன் பாதை அமைத்ததைக் கண்ட தென்னகப் பட முதலாளிகள், அடுத்த இரண்டே ஆண்டுகளில் மதராஸிலும் தமிழகத்தின் வேறுபல ஊர்களிலும் பல ஸ்டுடியோக்களைத் திறந்தனர். அவற்றில் மதராஸில் அமைக்கப்பட்ட வேல் பிக்ஸர்ஸ், நேஷனல் மூவி ஸ்டோன், மீனாட்சி மூவிடோன், நேஷனல் மூவிடோன், மெட்ராஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் ஆகியவையும், மதராஸுக்கு வெளியே அமைக்கப்பட்ட முதல் ஸ்டுடியோ என்ற பெருமைபெற்ற வேலூர் சத்துவாச்சாரி சுந்தரபாரதி ஸ்டுடியோவும், சேலத்தின் மார்டன் தியேட்டரும், கோம்புத்தூரில் சென்ட்ரல் ஸ்டுடியோவும் முக்கியமானவை.

இப்படி தென்னிந்திய சினிமா உலகம் மதராஸைத் தலைமையிடமாகக் கொண்டதுடன், லாபம் கொழிக்கும் பொழுதுபோக்கு வர்த்தகத் தொழிலாகத் திரைப்படத் தயாரிப்பு ஏற்றம்பெற்றது. இதற்கு சீனிவாஸ் சினிடோன் மூலம் சிவகங்கை ஏ. நாராயணன் வழிவகுத்த தன்னம்பிக்கை மிகுந்த தற்சார்பு நிலையே காரணம்.

வெறும் திரைப்படத் தயாரிப்பாளர் இயக்குனர் என்ற அளவில் தன் சினிமா ஆர்வத்தை நிறுத்திக்கொள்ளாத ஏ. நாராயணன், 'ஹிந்து' நாளேட்டில் சினிமாவைப் பற்றிய கட்டுரைகள் பல எழுதி வெளியிட்டு, மக்கள் மத்தியில் மௌனப் படத்தின் கலை நுணுக்கங்களை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியவர்.

முதன்முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு படத்தை வெளிநாட்டில் திரையிட்ட பெருமையும் ஏ.நாராயணனையே சாரும். அனார்கலி என்ற மௌனப் படத்தை எடுத்து சென்று அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் அமெரிக்கர்களுக்கு திரையிட்டு காட்டினார்.

1931-க்கு பின் பேசும் படங்கள் சென்னையில் வெளிவர ஆரம்பித்தன. இவரால் ஆரம்பிக்கப்பட்ட 'சவுண்ட் சிட்டி ஸ்டுடியோ' வில் சென்னையில் தயாரிக்கப்பட்ட தமிழின் முதல் பேசும் படமான சீனிவாச கல்யாணம் 1934 ஆம் ஆண்டு வெளியானது.

இப்படத்தை தொடர்ந்து "தூக்கு தூக்கி", "தாராசசாங்கம்", "ஞானசுந்தரி", "துளசிபிருந்தா", "விக்கிரமாதித்தன்", "ராஜாம்பாள்", "விசுவாமித்ரா", "சிப்பாய் மனைவி", "விப்ரநாராயணா", "கிருஷ்ண துலாபாரம்", "ராமானுஜர்", ஆகிய படங்களை தயாரித்தார். மட சாம்பிராணி என்ற பெயரில் ஒரு நகைச்சுவை துண்டுப் படமும் இவரால் தயாரிக்கப்பட்டது.

சினிமா ஆர்வம் கொண்ட தன் மனைவி மீனாம்பாளின் திறமையைக் கண்டு அவரையும் திரைப்படத் துறையில் ஈடுபடச் செய்தார். நாராயணன் இயக்கித் தயாரித்த ‘சீனிவாச கல்யாணம்’ உட்பட ஐந்து பேசும் படங்களுக்கு மீனாம்பாள் ஒலிப்பதிவு செய்தார். திரைப்படங்களுக்கு ஒலிப்பதிவு செய்த முதல் இந்தியப் பெண் ஆடியோகிராபிஸ்ட் என்ற பெருமை மீனாம்பாளுக்குக் கிடைத்தது.

சிறந்த இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கிய ஏ.நாராயணனிடம் பயிற்சி பெற்று பின்னாளில் பிரபல இயக்குனர்களாக உருவெடுத்தவர்கள் பலர். அவர்களில் ஆர்.பிரகாஷ், ஜித்தன் பானர்ஜி, பி.சி.புல்லையா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

தேர்ந்த பட விநியோகஸ்தர், திரையரங்க நிர்வாகி, இயக்குநர், தயாரிப்பாளர், சினிமாவை ஒரு தொழில்துறையாக உயர்த்த வழிகாட்டியாக விளங்கியவர் என்று பல சாதனைகளைச் செய்த சிவகங்கை ஏ.நாராயணன், 1939-ம் ஆண்டு, பிப்ரவரி 1-ல் மறைந்தார். ஆனால் அவர் பதித்துச்சென்ற அடிக்கற்கள் தமிழ் சினிமா வரலாற்றில் என்றும் மறையாதவை.

தொகுப்பு : ஜி.பாலன்