திங்கள், 27 டிசம்பர், 2021

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறு

நடிப்பாற்றலின் திறனால், உலகமெங்கும் வியாபித்திருக்கும் தமிழரின் மனங்களில் வாழும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக விழுப்புரத்தில் 1927 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி பிறந்தார். அவரது இயற்பெயர் கணேசமூர்த்தி.

சிவாஜி கணேசனின் அப்பா சின்னய்யா மன்றாயருக்கு பூர்வீகம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம். சிவாஜியின் அம்மா ராஜாமணியின் ஊர் விழுப்புரம்.

சிவாஜியின் அப்பா சுதந்திர போராட்டத்தில் வெள்ளையர் ராணுவம் சென்ற ரயிலுக்கு வெடிகுண்டு வைத்து கைதான அன்று சிவாஜி கணேசன் பிறந்தார். சிவாஜியின் அப்பாவுக்கு ஏழு ஆண்டுகள் வெள்ளையர் அரசு ஜெயில் தண்டனை வழங்கியது.

கணவர் சிறைக்கு சென்றதும், அவரை நினைத்து கவலைப்பட்டு இறந்த அப்பாவின் மரணமும், ராஜாமணி அம்மாளுக்கு வேதனையை அதிகரித்தது. இதனால், விழுபுரத்தில் இருந்து திருச்சி அருகே, பொன்மலைக்குப் பக்கத்தில் உள்ள சங்கிலியாண்டபுரத்தில் இருந்த வீட்டுக்கு மகன்கள் திருஞான சம்பந்த மூர்த்தி, கனக சபாநாதன், தங்கவேலன், கைக்குழந்தை சிவாஜி கணேசன் ஆகியாரை அழைத்துக் கொண்டு சென்றார்.

அங்கு கறவை மாடு வாங்கி, பால் விற்று பிள்ளைகளை வளர்த்தார், ராஜாமணி அம்மாள். வீட்டுக்கு அருகே கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அங்கு பிள்ளைகளை சேர்த்து படிக்க வைத்தார். சிவாஜிக்கு நான்கு வயது இருக்கும் போது அவரையும் பள்ளியில் சேர்த்துவிட்டார்.

சிவாஜியின் அப்பா சின்னய்யா மன்றாயரின் நன்னடத்தை காரணமாக, ஏழு ஆண்டு தண்டனை நான்கு ஆண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.

விடுத்தலை ஆனதும் மகன் சிவாஜியை பார்க்க ஓட்டோடி வந்தார். வீட்டில் மகன் இல்லை என்று தெரிந்ததும் அவர் விளையாடும் உடையார் தெருவுக்கு சென்று அவரை அடையாளம் கண்டு தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.

பள்ளியில் படிக்கும் போது பாடுவதிலும் நடிப்பதிலும் சிவாஜிக்கு ஆர்வம் இருந்துள்ளது. நாடகங்களை பார்த்துவிட்டு அதே போல நடித்துக் காட்டுவார். ஒருமுறை, “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடகத்தைப் பார்க்க அப்பாவுடன் சென்றார். அக்காலத்தில், சின்ன வேடங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டால், நாடகத்துக்கு வரும் சிறுவர்களில் சிலரை அழைத்துப் போய், மேடையில் ஏற்றி விடுவார்கள்.

``கட்டபொம்மன்" நாடகத்தில், வெள்ளைக்கார சிப்பாய் வேடத்தில் நடிக்க சிலர் தேவைப்பட்டதால், சிவாஜியை நாடகக்காரர்கள் அழைத்துச் சென்றுவிட்டார்கள். வெள்ளைக்கார சிப்பாய்கள் அணிவகுத்து வரும் காட்சியில், அந்த சிப்பாய்களில் ஒருவராக சிவாஜியும் நடந்து வந்தார். அதுதான் சிவாஜி முதல் முறையாக நடித்த நாடகம்.

அந்த நாடகத்தில் நடித்தது முதல் ``நாமும் நடிகனாக வேண்டும். கட்டபொம்மனாக நடிக்க வேண்டும்" என்ற எண்ணம், சிவாஜியின் மனதில் ஆழமாகப் பதிந்தது.

இந்த நேரத்தில், யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் ``மதுரை ஸ்ரீபாலகான சபா" என்ற நாடகக் கம்பெனி திருச்சியில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தி வந்தது. இந்த நாடகக் குழுவில் சேர்ந்து விடவேண்டும் என்று சிவாஜி விரும்பினார்.

நாடகக் குழுவினர், திருச்சியில் நாடகங்கள் நடத்தி முடித்துவிட்டு, வெளியூருக்கு செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். நாடகக் கம்பெனிக்கு சென்ற சிவாஜி, ``எனக்கு பாடத்தெரியும். ஆடத்தெரியும். நான் அப்பா- அம்மா இல்லாத அனாதை. நாடகத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறி இருக்கிறார்.

சிவாஜியை ஒரு பாட்டு பாடச் சொன்னார்கள். ``பழனிவேல் இது தஞ்சம்" என்ற பாடலை சிவாஜி பாடினார். அந்த பாடல் நாடகக் கம்பெனிக்காரர்களுக்குப் பிடித்துவிட்டது. உடனே சிவாஜியை கம்பெனியில் சேர்த்துக் கொண்டார்கள்.

அப்போது, அந்தக் கம்பெனியில் திருச்சி சங்கிலியாண்டபுரம் காக்கா ராதாகிருஷ்ணனும் நடிகராக இருந்தார். அவர் சிவாஜியின் பக்கத்து வீட்டுக்காரர். நாடகக் கம்பெனி, திருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்று முகாமிட்டது.

அந்த நாடகக் கம்பெனியில், புது நடிகர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாத்தியாராக சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் இருந்தார். இவர்தான், சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தவர்.

அங்கு ``ராமாயணம்" நாடகத்தில் சீதை வேஷம் போட்ட சிவாஜி, ``யாரென இந்தப் புருஷனை அறிகிலேன்" என்ற பாட்டைப்பாடி, அதற்கு ஏற்ற மாதிரி ஆட்டம் ஆடி நடித்தார். முதல் நாளே சிறப்பாக நடித்தார், சிவாஜி. வேஷத்தை கலைத்து உள்ளே சென்றபோது, வாத்தியார் பொன்னுசாமி அவர் முதுகில் தட்டிக்கொடுத்து, ``மிகவும் நன்றாக நடித்தாய்" என்று பாராட்டினார்.

நாட்கள் ஆக ஆக, புதுப்புது வேடங்களை ஏற்று நடித்தார், சிவாஜி. சீதை வேஷம் போட்ட அவர், பிறகு பரதன் வேடம் போட்டார். சூர்ப்பனகை அழகியாக மாறி ராமனை மயக்கும் கட்டத்தில், அந்த அழகு சூர்ப்பனகையாக நடித்தார்.

ராவணனின் மகன் இந்திரஜித் வேடமும் அவருக்கு கிடைத்தது. இப்படி, சிறுவனாக நாடகங்களில் நடித்த போதே, மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ஆற்றலைப் பெற்றார்.

பல்வேறு நாடக வசனங்கள் அவருக்கு மனப்பாடம். எனவே, திடீரென்று எந்த வேடத்தையும் கொடுத்து நடிக்கச் சொன்னாலும், அவர் ஏற்று நடித்தார். அந்தக் காலத்தில், நாடகத்தில் நடிக்கும் சிறுவர்கள் வெளியே எங்கேயும் போக முடியாது. கம்பெனியின் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும்.

``ஊருக்கு வா"என்று பெற்றோர் கடிதம் எழுதினால், அதை பையன்களிடம் கொடுக்கமாட்டார்கள். கடிதங்களைப் பிரித்து படித்துப் பார்த்துவிட்டு, கொடுக்கக் கூடியதாக இருந்தால் மட்டும் கொடுப்பார்கள்.

ஒரு முறை காக்கா ராதாகிருஷ்ணன் கெஞ்சிக் கூத்தாடி, எப்படியோ அனுமதி பெற்று ஊருக்கு போய்விட்டு வந்தார். ``என்ன ராதாகிருஷ்ணா! என் வீட்டுக்குப் போனாயா? எல்லோரும் சவுக்கியமா?" என்று சிவாஜி விசாரித்தார். உன் அண்ணன் திருஞான சம்பந்தமூர்த்தி இறந்துவிட்டார்" என்று கூறினார், காக்கா ராதாகிருஷ்ணன்.

ஊருக்குப் போய்வர கம்பெனி நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டார். அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்களே தவிர, அனுமதி தரவில்லை. சில காலத்துக்குப் பிறகு, சிவாஜியின் இன்னொரு அண்ணன் கனகசபாநாதனும் இறந்துபோனார். அப்போதும் சிவாஜி தன் வீட்டுக்குப் போக முடியவில்லை. முக்கிய வேடங்களில் அவர் நடித்து வந்ததால், ஒரு நாள் கூட விடுமுறை கொடுக்க நாடகக் கம்பெனி நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.

5 ஆண்டுகளுக்குப்பின் பெற்றோரை சந்தித்த சிவாஜி, அதன்பிறகு, எம்.ஆர்.ராதாவுடன் ``பதி பக்தி" நாடகத்தில் சரஸ்வதி என்ற பெண் வேடத்தில் நடித்தார்.

நாடகக் குழுவினர் கோவைக்கு சென்ற போது, அங்கே உள்ள ஸ்டூடியோவில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ``சந்திரஹரி" என்ற நகைச்சுவை திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அதில் என்.எஸ்.கே.யின் மகனாக காமெடி வேடத்தில் நடிப்பதற்கு ஒரு பையன் தேவைப்பட்டான். படக்கம்பெனியைப் சேர்ந்தவர்கள், சிவாஜியையும், காக்கா ராதாகிருஷ்ணனையும் அழைத்துச் சென்றனர். இந்த இருவரில் அவர்கள் தேர்வு செய்தது, காக்கா ராதாகிருஷ்ணனைத்தான்.

சிவாஜிக்கு 12 வயதான போது, நாடகக் குழுவினர் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று முகாமிட்டனர். சிவாஜிக்கு பெற்றோரை பார்க்கவேண்டும் என்று ஆவல் அதிகரித்தது. தீபாவளிக்காவது என்னை ஊருக்கு அனுப்பி வையுங்கள்" என்று கம்பெனி நிர்வாகிகளிடம் கெஞ்சினார். அவர்கள் மனம் இரங்கி, சிவாஜியை அனுப்பி வைத்தனர். வீட்டுக்குப் போனதும், சிவாஜி முதலில் பார்த்தது தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும்தான்.

சிவாஜிகணேசன் குடும்பத்தைப் பிரிந்து நாடகக் கம்பெனியில் சேர்ந்தபோது, 3 அண்ணன்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் 2 பேர் இறந்து போய்விட்டார்கள். தான் நாடகக்கம்பெனில் சேர்ந்த பிறகு பிறந்த தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும் அப்போதுதான் முதன் முதலாக சிவாஜி பார்த்தார். அந்த தீபாவளியை பெற்றோருடனும், அண்ணன், தம்பி, தங்கையுடனும் கொண்டாடி மகிழ்ந்தார், சிவாஜி.

எம்.ஆர்.ராதா``சரஸ்வதி கான சபா" என்ற பெயரில் நாடகக் கம்பெனியைத் தொடங்கி ``லட்சுமி காந்தன்", ``விமலா அல்லது விதவையின் கண்ணீர்" ஆகிய நாடகங்களை நடத்தினார். திராவிட கழகத்தலைவர் ஈ.வெ.ரா. பெரியாரின் வீட்டுக்குப் பக்கத்தில்தான் ராதாவின் நாடகக் கம்பெனி இருந்தது. பெரியார் வீட்டுக்கு பேரறிஞர் அண்ணா, ஈ.வெ.கி.சம்பத் ஆகியோர் அடிக்கடி வருவார்கள். அவர்களுடன் சிவாஜிக்கு அறிமுகம் ஏற்பட்டது. பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார்.

சிவாஜிகணேசன் நடித்துக் கொண்டிருந்த ``சரஸ்வதிகான சபா" கொல்லங்கோட்டில் முகாமிட்டிருந்தபோது, குடும்பத்தை நடத்துவதற்கு பெற்றோர் படும் கஷ்டத்தை கேள்விப்பட்ட சிவாஜி, ஏதாவது வேலைக்குப் போனால், அம்மாவுக்கு உதவியாக இருக்குமே என்று நினைத்தார்.

``திருச்சி ஸ்ரீரங்கம் டிரான்ஸ்போர்ட்" என்ற பஸ் கம்பெனியில் மெக்கானிக் வேலைக்கு சேர்ந்தார். ஆனாலும், மனம் நாடகத்தைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அப்போது லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கிருஷ்ணன் சிறை சென்றிருந்தார். என்.எஸ்.கிருஷ்ணனின் நாடகக் குழுவில் இருந்து வெளியே வந்து நாடகம் நடத்திய கே.ஆர்.ராமசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்தார் சிவாஜி கணேசன்

பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் கே.ஆர்.ராமசாமி. அவர் அண்ணாவை சந்திப்பதற்காக காஞ்சீபுரம் சென்றார். போகும்போது, சிவாஜிகணேசனையும், தன் ஆதரவாளர்களையும் அழைத்துச்சென்றார். அண்ணா அப்போது ``திராவிட நாடு" என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அந்த பத்திரிகை அலுவலகத்தில், சிவாஜியும், மற்றவர்களும் தங்கினார்கள்.

சென்னையில் ஏழாவது சுய மரியாதை மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில், பெரியாரும், அண்ணாவும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். மாநாட்டில் நடிப்பதற்காக ``சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற பெயரில் ஒரு நாடகத்தை அண்ணா எழுதியிருந்தார். இந்த நாடகத்தில், சிவாஜியாக எம்.ஜி.ஆரும், காகப்பட்டர் வேடத்தில் அண்ணாவும், மற்றொரு முக்கிய வேடத்தில் டி.வி.நாராயணசாமியும் நடிப்பது என்று முடிவாகியது.

ஆனால், எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில் நடிக்க விரும்பவில்லை. நாடகத்துக்குப் பொறுப்பாளராக இருந்த நடிகர் டி.வி.நாராயணசாமி மூலமாக அண்ணாவிடம் தெரிவித்தார், எம்.ஜி.ஆர்.

இதனால், ``திராவிட நாடு" அலுவலகத்தில் தங்கியிருந்த சிவாஜியை அழைத்து, ``கணேசா! என் நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்காணும் என்று கூறிய அண்ணா, ``சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" நாடகத்தில் சிவாஜியாக நடிக்க வைத்தார்.

3 மணி நேரம் நடந்த நாடகத்தை, கடைசி வரை இருந்து பார்த்தார், பெரியார். ``நான் 10 மாநாடுகளில் சொல்லக்கூடிய கருத்துக்களை இந்த ஒரே நாடகத்தில் சொல்லிவிட்டார், அண்ணா" என்று பாராட்டினார். அத்துடன், ``யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக நடித்தானே, அவன் யார்?" என்று கேட்டார். சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, ``இந்தப் பையன்தான். பெயர் கணேசன்" என்று அறிமுகம் செய்து வைத்தனர்.

``சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!" என்று பெரியார் வாழ்த்தினார். பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை ``வி.சி.கணேசன்" என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் ``சிவாஜி கணேசன்" ஆனார்.

பிறகு கே.ஆர்.ராமசாமி நாடகக் குழுவில் மனோகரா மனோகரனின் தாயார் பத்மாவதியாக நடித்த சிவாஜி, அண்ணாவின் உதவியால் சக்தி நாடக சபாவுக்கு சென்று ``நூர்ஜஹான்" என்ற நாடகத்தில், நூர்ஜஹானாக நடித்தார்.

வேலூரில் நாடக் குழு முகாமிட்ட போது ``நேஷனல் பிக்சர்ஸ்" பி.ஏ.பெருமாள், நூர்ஜகான நாடகத்தைப் பார்த்தார். சிவாஜியின் நடிப்பு அவரை வெகுவாகக் கவர்ந்தது.

இந்த சமயத்தில், தேவி நாடக சபையினர் ``பராசக்தி" என்ற நாடகத்தை நடத்தி வந்தனர். அந்த நாடகத்தை பெருமாள் முதலியார் பார்த்தார். அந்த நாடகத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

``பராசக்தி கதையை படமாகத் தயாரிக்க வேண்டும். அதில் சிவாஜி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும்" என்று விரும்பினார். ஏவி.எம். நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்களை விநியோகம் செய்த பி.ஏ.பெருமாள், ஏவி.மெய்யப்ப செட்டியாரோடு இணைந்து அந்த படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். ஆனால் மெய்யப்ப செட்டியாரோ கே.ஆர்.ராமசாமியை  கதாநாயகனாகப் போட்டு அந்தப் படத்தை எடுக்கலாமே என்றார்.

“டிராமாவில் நடிப்பது என்பது வேறு. சினிமாவில் நடிப்பது என்பது வேறு. இதுவரை கணேசன் எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை. அப்படியிருக்கும்போது முதன் முறையாக மெயின் ரோலில் அந்தப் பையனை நடிக்க வைத்துவிட்டு அந்தப் படம் ஓடவில்லை என்றால் என்ன செய்வது? இந்தப் படம் நீங்கள் என்னோடு சேர்ந்து எடுக்கின்ற முதல் படம். ஆகவே  ரிஸ்க் எடுக்க வேண்டாம்…” என்றார் ஏவி.எம்.

ஆனால், சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார், பெருமாள் முதலியார்.  அரை மனதுடன் ஒப்புக் கொண்ட ஏவி எம் மெய்யப்ப செட்டியார், பட வேலைகளை தொடங்கினார்.

‘பராசக்தி’  படத்திற்கு வசனம் எழுத அந்த நாடகத்தை எழுதிய பாலசுந்தரம்தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  பிறகு அவரை மாற்றி விட்டு திருவாரூர் தங்கராஜை ஒப்பந்தம் செய்தனர். பின்னர் சில காரணங்களால் அவரும்  மாற்றப்பட… அதற்குப் பிறகு அந்த இடத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி வந்தார்.

மேக்கப் டெஸ்டுக்காகத் திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் சிவாஜியை அழைத்து வந்து திரைப்படத்தில் வரும் ‘சக்ஸஸ்!’ என்ற வசனத்தைப் பேச சொல்லி பார்த்தனர்.

‘சக்ஸஸ்’ என்பது ‘சத்தத்’ என்று கேட்பதாகப் பலரும் குறை சொன்னார்கள். அடுத்து இன்னொரு காட்சியையும் அவரை வைத்துப் படமாக்கினார்கள். அந்த காட்சியை போட்டுப் பார்த்தபோது அப்போது ஏவி. எம்.மில் சவுண்ட் இஞ்சினியராக இருந்த ஜீவா என்பவர் சிவாஜியை தொடர்ந்து நடிக்க வைக்க தனது முழு எதிர்ப்பையும் தெரிவித்தார். 

சிவாஜி ஒல்லியாக இருப்பதும் அவரது பல்வரிசை சரியாக இல்லாததும் சிறு குறைகளாகத் தென்பட்டாலும், அவருடைய நடிப்புத் திறனுக்கு முன்னால் இதெல்லாம் மிகச் சிறிய குறைகள் என்றே  கிருஷ்ணன் – பஞ்சு ஆகிய இருவரும் எண்ணினார்கள்.

பெருமாள் முதலியாருக்கோ  சிவாஜியின் நடிப்பு பூரண திருப்தியைத் தந்தது. டைரக்டர், தயாரிப்பாளர் ஆகிய இருவரும் சிவாஜிக்கு முழு  ஆதரவாக இருப்பதைத் தெரிந்து கொண்ட ஏவி. மெய்யப்ப செட்டியார் “முதலில் ஒரு ஐயாயிரம் அடி எடுத்துப் பார்ப்போம். அதற்குப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம்…” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து ‘பராசக்தி’ படத்தின்  படப்பிடிப்பு தொடங்கியது. முதல் கட்டமாக ஆயிரம் அடிவரை  எடுத்து படத்தைப் போட்டுப் பார்த்தபோது படத் தயாரிப்பாளரான பெருமாள் முதலியாரின் மாமனாரே, “சிவாஜி கணேசனை மாற்றிவிட்டு வேறு ஒரு நடிகரைப் போட்டு எடுத்தால்தான் படம் படமாக இருக்கும். என்றார்.

இப்படி பல எதிர்ப்புகள் தொடர்ந்த நிலையில் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு நிற்கவில்லை. படம் எட்டாயிரம் அடி வளர்ந்த போது அதை மீண்டும் எல்லோரும் போட்டுப் பார்த்தார்கள்.

“இந்தப் படத்தில் கண்ணை மூடிக் கொண்டு வசனங்களைக் கேட்டு ரசிக்கலாம். ஆனால் படத்தையோ, இந்த புதுமுகங்களையோ கண்ணால் பார்க்க முடியவில்லை” என்றார் , ஏவி. மெய்யப்ப செட்டியார்.

அப்போது ஏவி.எம்.மில் பணியாற்றியவர்களில் சிவாஜியை மாற்றிவிட்டு வேறு கதாநாயகனைப் போட்டு எடுத்தால்தான் ‘பராசக்தி’ படம் மக்கள் மத்தியில் எடுபடும்  என்று யோசனை சொல்லாதவர்கள் மிகச் சிலரே. ஆனால், அத்தனை எதிர்ப்புகள் வந்த போதிலும் பெருமாள் முதலியார் மட்டும் அசையாமல் சிவாஜி கணேசன்தான் ‘பராசக்தி’ படத்தின் நாயகன் என்று துணிந்து நின்றார்.

பலரது எதிர்ப்புகளையும் மீறி பத்தாயிரம் அடி வரை எடுத்து விட்டு படத்தைப் போட்டு பார்த்தபோது மெய்யப்பச் செட்டியாருக்கு சிவாஜி மீது முதல்முறையாக நம்பிக்கை ஏற்பட்டது. சிவாஜியின் நடிப்பில் முன்னேற்றம் இருப்பது தெரிந்ததும், ஆரம்பத்தில் எந்தெந்த காட்சிகளில் சிவாஜி சுமாராக நடித்திருந்தாரோ அந்தக் காட்சிகளை எல்லாம் மீண்டும் படமாக்கச் சொன்னார்

ஏவி.எம். ஸ்டுடியோவின் எல்லா அரங்குகளிலும் ‘பராசக்தி’ படத்துக்காக போடப்பட்ட செட்டுகளை எல்லாம் திரும்பவும் போட்டு பதினைந்து நாட்கள் தொடர்ந்து சிவாஜி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினார்கள். அதைத் தொடர்ந்து 1952 தீபாவளியன்று வெளியான ‘பராசக்தி’ வசூலில் புதியதொரு சாதனையைப் படைத்தது என்றால்.., அதிலே நாயகனாக நடித்த சிவாஜி  உலகம் போற்றுகின்ற ஒரு நடிகராக உயர்ந்தார்.

பராசக்தி படத்தை பார்த்த என்.எஸ்.கிருஷ்ணன், சிவாஜி கணேசனை மனதார பாராட்டியதுடன், அடுத்து தனது பணம் படத்தில் சிவாஜியை நாயகன் ஆக்கி அவருக்கு ஜோடியாக பதிமினியை நடிக்க வைத்தார்.

``பணம்" படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே, அக்காள் மகள் கமலாவை 1952 ஆம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி மணந்து கொண்டார், சிவாஜி. சுவாமிமலையில் நடைபெற்ற அந்த திருமண விழாவில் பெருமாள் முதலியார், கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., கவிஞர் கண்ணதாசன், ராம.அரங்கண்ணல், டி.ஏ.மதுரம், எஸ்.வி.சகஸ்ரநாமம், டைரக்டர்கள் கிருஷ்ணன் பஞ்சு உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். அவரின் கல்யாணச் செலவு அன்று 500 ரூபாயாம். இந்த தகவலை சிவாஜியே கூறி இருக்கிறார்.

புராண படங்கள், மன்னர் கால படங்கள், சமூக படங்கள், விடுதலை வீர்களின் படங்கள் என எல்லாவிதமான கதாப்பத்திரங்களிலும் நடித்து அந்த பாத்திரமாகவே தெரிந்தவர் சிவாஜி கணேசன்.

'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை.

சிவாஜி புரொடக் ஷன்ஸ் பட நிறுவனத்தை தொடங்கி படங்கள் தயாரித்தவர், 1961- ம் ஆண்டு, சென்னை அண்ணாசாலையில் தனது ஆசைப்படியே  ஒரு தியேட்டரை வாங்கி 'சாந்தி' என பெயர் சூட்டி அப்போதைய முதல்வர் காமராஜ் கையால் திறக்க வைத்தார்.

தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக அளித்தார்

கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட இடத்தை வாங்கி தனது சொந்த செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்தார். தேசத்தந்தை காந்திக்கு சிலை, நேருவுக்கு சிலை, இந்திரா காந்திக்கு சிலை, பெரியாருக்கு சிலை, அம்பேத்காருக்கு சிலை, முத்துராமலிங்க தேவருக்கு நேசமணிக்கு சிலை, காமராஜருக்கு சிலை என நாட்டுக்காக உழைத்தவர்களுக்கு சிலை வைத்து அழகு பார்த்தார் சிவாஜி.

தமிழில் 270, தெலுங்கில் 9, ஹிந்தியில் 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள் என சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301.

சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி. தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில், இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 1962-ல் இரண்டு மாத சுற்றுப் பயணம் மேற்கொண்டார் சிவாஜி. அப்போது நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கௌரவிக்கப்பட்டார்.

பிரஞ்சு அரசியின் உயரிய விருதான செவாலியே விருது, ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சிவாஜி, இந்திய அரசியின் தாதா சாகிப் பால்கே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் பெற்றுள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது, தமிழக அரசின் எம்.ஜி.ஆர். விருது, ஆந்திர அரசின் என்.டி.ஆர். விருது பெற்றுள்ள அவர், தேவர்மகன், வியட்நாம் வீடு ஆகிய படங்களுக்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றிருக்கிறார்.

சிவாஜியின் தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி, 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு 'தமிழக முன்னேற்ற முண்ணனி' என்ற புதிய கட்சியை ஆரம்பித்து, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகிஅம்மாளின் தலைமையிலான அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார்.

அதன் பிறகு முன்னாள் பிரதமர் வி.பி.சிங், தனது ஜனதா தளம் கட்சியின் தலைவராகப் பணியாற்றும்படி கேட்டுக் கொண்டதால், கொஞ்ச நாள் ஜனதா தளத்தில் இருந்தவர், பிறகு, அந்தக் கட்சியை விட்டு விலகி, அரசியலில் தனக்கு ஏற்பட்ட பிரச்னைகளை, அனுபவங்களாகக் கற்றுக் கொண்ட பாடங்களை தனது கலையுலக நண்பர்களுக்குத் தெரிவித்தார்.

தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்த சிவாஜி கணேசன், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதி தனது 74வது வயதில் காலமானார்.

தொகுப்பு : ஜி.பாலன்


நடிகை சரோஜாதேவியின் வாழ்க்கை வரலாறு

கடற்கரைய சுத்திப் பாக்க வந்த நடிகைக்கு காத்து வாங்க வந்த ஒரு பிரபலத்தால் ஒரு பட வாய்ப்பு கிடைச்சுதுன்னா... பாருங்களேன்.. அது யார் தெரியுமா?

அபிநய சரஸ்வதி என்றும், கன்னடத்து பைங்கிளி என்றும் ரசிகர்களால் இன்றுவரை செல்லமாக அழைக்கப்படும் நடிகை சரோஜாதேவிதான்.

பெங்களூரை சேர்ந்த சரோஜாதேவி, சென்னை கடற்கரைக்கு எப்போ காத்து வணக்க வந்தாங்க... அவரை பார்த்த பிரபலம் யார்? அவர் மூலமா எந்த தமிழ்ப் படத்துல அறிமுகமானார்னு சரோஜாதேவியின் திரையுலக வாழ்க்கை வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

படபடக்கும் அழகிய கண்கள், குறும்பு கொப்பளிக்கும் முகமும், கலகலவென்ற சிரித்து பார்த்து அனைவரையும் கொள்ளை கொண்டு விடும் அழகுக்கு சொந்தக்காரர்.... அந்த காலத்து இளைஞர்களை எப்போதும் கனவினில் மிதக்கவும் சஞ்சரிக்கவும் வைத்த கனவுக் கன்னி...  இளம் பெண்களையும் அவர் அணிந்து நடித்த உடைகள், அணிமணிகள் வாயிலாகக் கவர்ந்து இழுத்தவர்....

அவர் கொஞ்சிப் பேசும் அழகுக்கே மீண்டும் மீண்டும் அவரது படங்களை தேடிச் சென்று பார்த்து ரசித்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.... அவரது நடை அழகு சொல்லில் வடிக்க இயலாதது.... ஐம்பதுகளில் நடிக்க ஆரம்பித்து மணி விழா கண்ட... அந்த அழகு தேவதை....

தமிழ்த் திரையில் 25 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த பி. சரோஜாதேவி சினிமாவில் நுழைந்ததே ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். சரோஜாதேவியின் தந்தை பைரவப்பா ஒரு காவல்துறை அதிகாரி. தாய் ருத்ரம்மா ஒரு குடும்பத் தலைவி. இவர்களுக்கு மூன்றாவது மகளாகப் பிறந்தவர்  சரோஜாதேவி.

பெங்களூரின் செயிண்ட் தெரசா கான்வென்டில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டார், சரோஜாதேவி. எல்லாரும் கன்னடக் கீர்த்தனைகள், கன்னட சினிமா பாடல்கள் என்று பாட, யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ‘ஏ ஜிந்தகி' என்ற இந்திப் படப் பாடலைப் பாடினார், சரோஜாதேவி. இந்தப் பாடல் அனைவரையும் கவர்ந்தது.

அங்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, நடிகரும் தயாரிப்பாளருமான ஹொன்னப்ப பாகவதருக்குப் சரோஜாதேவியின் திறமையும், ஆர்வமும்,  குரலும் பிடித்துவிட்டது.

நிகழ்ச்சி முடிந்த பிறகு சரோஜாதேவியின் தாயாரிடம், ‘உங்க பொண்ணு நல்லா பாடுறா, சினிமாவில் பாட வைக்கலாம் என்று சொன்ன ஹொன்னப்ப பாகவதர், நாளை ஸ்டுடியோவுக்கு அழைத்து வாருங்கள்’ என்று சொல்லி விட்டுப் போக அம்மா ருத்ரம்மா ஆனந்தத்தின் எல்லைக்கே போய் விட்டார்.

மறுநாள் மகளை அழைத்துக்கொண்டு போகவே, பள்ளி மாணவியாக சீருடையில் பார்த்த பெண்ணா இது என்று அசந்து போய் விட்டார் பாகவதர். சரோஜாதேவி அப்படி சீவி சிங்காரித்து புதிய உடையில் காட்சி அளித்தார். சௌந்தர்யமான அழகு பாடுவதை விட அவரை நடிக்கவே வைக்கலாம் என்று அவருக்குத் தோன்றி விட்டது.

ருத்ரம்மாவிடம் பேசி சம்மதம் பெற்று உடனே மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்தார். சரோஜாதேவியின் தோற்றம் ஹொன்னப்ப பாகவதருக்கும் படக் குழுவிருக்கும் பிடித்துவிடவே சரோஜாதேவியை தனது 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். 1955 –ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம், வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமின்றி  அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இப்படித்தான் திரையுலக வாய்ப்பு சரோஜாதேவியை வந்தடைந்தது. ராதாதேவியாக இருந்தவர் சினிமாவுக்காக சரோஜாதேவி ஆனார்.

அதன் பிறகு தொடர்ந்து ஹொன்ன பாகவதருடன் இரண்டு படங்கள், நடிகரும் இயக்குனருமான கே.எஸ்.அஸ்வத் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்து வந்த சரோஜாதேவியை, தமிழுக்கு கொண்டு வந்தார். ஏ.பீம்சிங். ஜெமினிகணேசன் நடிப்பில் அவர் இயக்கிய திருமணம் என்கிற படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடித்தார், சரோஜாதேவி. 

நாட்டிய உலகில் பல்வேறு விதமான நடனங்களால் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த கோபி கிருஷ்ணா, பிஞ்சு வயதிலிருந்து பரதத்தில் சிறந்த குமாரி கமலா என இருவரும் அப்படத்தில் நடனமாடியிருக்கிறார்கள். சரோஜா தேவியும் அப்படத்தில் ஒரு நடனத் தாரகை என்றால் நம்ப முடிகிறதா? வெறும் அதிர்ஷ்டம் மட்டுமல்லாமல், அபாரமான திறமையும் ஒளிந்திருந்ததாலேயே அவரால் துணிச்சலுடன் நடனமாடவும் முடிந்தது. பூலோக ரம்பை, திருமணம் இரு படங்களிலும் நடனம் மட்டுமே அவரது பங்களிப்பு.

திருமணம் படத்தில் சரோஜாதேவியின் நடனத்தைப் பார்த்தி ரசித்தார், இயக்குநர் கே.சுப்பிரமணியம். விளைவு, அவர் கன்னடத்தில் இயக்க இருந்த ‘கச்ச தேவயானி’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தன் படத்துக்கு ஒப்பந்தம் செய்த கே.சுப்பிரமணியம், சென்னை வந்தால் நிறையப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று பெங்களூரிலிருந்து சென்னை வருவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

கே.சுப்பிரமணியம் மீதும் அவருடைய பேச்சின் மீதும் நம்பிக்கை இருந்ததால், சரோஜாதேவியின் தாயார் ருத்ரம்மா, தன் மகளை அழைத்துக்கொண்டு சென்னை வந்தார். ‘கச்ச தேவயானி’ கன்னடப் பதிப்பு படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. 

சென்னையில் கச்ச தேவயாணி கன்னட படத்தின் படப்பிடிபில் கலந்து கொண்டு நடித்த நடிகை சரோஜாதேவி, நேரம் கிடைக்கும் போது மெட்ராசை சுத்திப் பார்க்க ஆசைப்பட்டார். அவருக்கு தோழியாக கிடைத்தவர், இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மகள்  பத்மா சுப்பிரமணியம்.

பாரத நாட்டிய கலைஞரான பத்மா சுப்பிரமணியம் ஒருமுறை மெரீனா கடற்கரையை சுற்றிக் காட்ட சரோஜாதேவியை அழைத்து சென்ற போது கடற்கரையில் காற்று வாங்க வந்திருந்த சினிமா கதாசிரியர் சின்ன அண்ணாமலையை சந்திக்க நேர்ந்ததது. அவர் பத்மாவை பார்த்ததுமே நலம் விசாரித்தார்.

பிறகு அருகில் நின்ற சரோஜாதேவியைப் பார்த்திருக்கிறார்.

இவுங்க என்னுடைய தோழி ரமாதேவி. பெங்களூர். அப்பா எடுக்கிற கன்னடப் படத்தில் நடிக்கிறார் என்று அவரிடம் சரோஜாதேவியை அறிமுகப்படுத்திய பத்மா, தமிழ்ப் படத்தில் வாய்ப்பு கிடைத்தாலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்றும் கூறி இருக்கிறார்.

அந்த ஒத்தை வார்த்தைதாங்க... கடற்கரையில் கத்துவாங்க வந்த சின்ன அண்ணாமலையின் மனசுக்குள் உட்கார்ந்தது. அப்புறம் ரமாதேவி என்கிற பெண் சரோஜாதேவியாக மாறி தமிழ் ரசிகர்கள் கொண்டாடுற கனவுக் கன்னியாக எவ்வளவு படங்கள்ல நடிச்சிருக்காங்க தெரியுமா?

எல்லாம் இந்த மெரீனா கடற்கரை ஏற்படித்தி தந்த வாய்ப்புங்க...

பத்மா சுப்ரமணித்திடமும், சரோஜாதேவியிடமும் விடைபெற்று சென்ற சின்ன அண்ணாமலை, அப்போது தான் கதை எழுதிய தங்கமலை ரகசியம் படத்தின் இயக்குநர் பி.ஆர்.பந்துலுவிடம் சரோஜாதேவி பற்றி தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் கே.சுப்பிரமணியத்தைத் தொடர்புகொண்டு சரோஜாதேவி பற்றி மேலும் விசாரித்துத் தகவல் அறிந்த இயக்குநர் பி.ஆர். பந்துலு, ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் நடனத்துடன் வசனமும் பேசக்கூடிய ஒரு சிறு வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.

அழகு, இளமை இரண்டுக்கும் தேவதைகளான மோகினிகள் இருவர், அழகு பெரிதா, இளமை பெரிதா என ஆடிப் பாடுவதாக அந்தப் பாடல் காட்சி அமைந்தது.  ‘அழகினிலே… யௌவனமே’ என்ற அந்தப் பாடலும் பிரபலமானது.

சரோஜாதேவிக்கு அது சிறு வேடம்தான் என்றாலும், படத்தின் நாயகனான சிவாஜிக்கும், படத்தின் கதையிலும் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக அமைந்தது. சரோஜாதேவிக்கும் இப்படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைத்தது. தமிழ்ப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு சின்ன அண்ணாமலை மூலம் அவருக்குக் கிடைத்தது. இதே படம் கன்னடத்திலும் ‘ரத்னகிரி ரஹஸ்யா’ என்ற பெயரில் வெளியானது. அதிலும் சரோஜாதேவியே இந்த வேடத்தைச் செய்தார்.

விஜயா - வாஹினி படப்பிடிப்புத் தளத்தில் ‘கச்ச தேவயானி’ படப்பிடிப்பு நடந்த போது ஒரு நாள் உணவு இடைவேளையில் பக்கத்து செட்டில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., இயக்குநர் கே.சுப்பிரமணியத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். படக்குழுவினர் எம்.ஜி.ஆருக்கு கொடுத்த மரியாதையையும், வரவேற்பையும் கண்டு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சரோஜாதேவி, எம்.ஜி.ஆர். சென்ற பிறகு, இயக்குநர் கே.சுப்பிரமணியத்திடம் அவர் யார் என்று விசாரித்திருக்கிறார். .

அவர் எம்.ஜி.ஆர். என்று தெரிவித்ததும் சரோஜாதேவிக்கு தூக்கி வாரிப் போட வைத்தது. அப்போது அவருடைய ‘நாடோடி மன்னன்’ படத்தின் படப்பிடிப்புதான் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கி நடித்த நாடோடி மன்னன் படத்தில் கதாநாயகியாக பானுமதி நடித்து வந்தார், படத்தில் பாடுவது, வசனம் பேசுவது என எல்லாவற்றிலும் பானுமதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் பிரச்சினை இருந்தது. இதனால், பானுமதியின் ஒத்துழைப்பு சரியாக அமையவில்லை.

ஒரு பாடலுக்கும், சில காட்சிகளுக்கும் மட்டும் சரோஜாதேவியை தேர்வு செய்து எடுத்து முடித்தார், எம்.ஜி.ஆர்.

ஒரு கட்டத்தில் பானுமதியை வைத்து தொடர்ந்து எடுக்க முடியாது என்பதை உணர்ந்து அவரது கதாபாத்திரம் ஏற்கனவே எடுக்கப்பட்டக் காட்சிகளோடு நிறுத்தி விட்டார் எம்.ஜி்.ஆர். பானுமதியின் கதாபாத்திரத்தை இறந்து விட்டது போல் எடுத்து அந்தக் கதாபாத்திரத்துக்கு முற்றுப்புள்ளியும் வைத்தார் எம்.ஜி்ஆர். 

மேற்கொண்டு இரண்டாம் கதாநாயகியாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற யோசனையில் இருந்த எம்.ஜி.ஆருக்கு எழுத்த்ஹளர் ரவீந்தர், சரோஜாதேவியை அழக்காக இருக்கிறார். அவரையே கதாநாயகியாக நடிக்க வைத்துவிடலாம். அவரது பாத்திரத்துக்கு வேறு யாரையாவது நடிக்க வைத்துவிடலாம் என்று கூறி இருக்கிறார். அவர் கூறுவது சரி என்று உணர்ந்த எம்.ஜி.ஆர்., சரோஜாதேவியை கதாநாயகியாக அறிமுகப்ப டுத்தினார். சரோஜாதேவி நடித்த காட்சிகளை வேறு நடிகையை வைத்து மீண்டும் எடுத்தார்.  

நாடோடி மன்னன் படம் சரோஜாதேவிக்கு வெற்றிப் படமாக அமைந்தாலும் அதற்கு பிறகு நிறைய படங்களில் அவர் நடித்தாலும் அவருக்கு  நட்சத்திர அந்தஸ்த்தை பெற்று தந்த படமாக ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு' படம் அமைந்தது.

படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜாதேவி அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் நடித்துள்ள இவர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன், காதல் மன்னன் ஜெமினிகணேசன், தெலுங்கு மொழியில் நாகேஸ்வர ராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் பல வெற்றிப் படங்களில் நடித்து, தென்னிந்திய சினிமாவில் மாபெரும் நட்ச்சத்திரமாக உயர்ந்தார். இந்தியிலும் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் இவர்.

சுமார் 200–க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்துள்ளா சரோஜாதேவி 1967 ஆம் ஆண்டு என்ஜினியர் ஆன ஸ்ரீஹர்ஷாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு புவனேஸ்வரி, இந்திரா என இரு மகள்களும், ராமச்சந்திரன், கவுதம் என இரு மகன்களும் உள்ளனர்.

நடிகைகள் திருமணம் செய்து கொண்டால், பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்கிற கருத்தைப் போக்கியவர் இவர். திருமணத்துக்கு பிறகு இவர் நடித்தப் பல படங்கள் பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. 

1986 ஆம் ஆண்டு அவரது கணவர் ஸ்ரீஹர்ஷா காலமானார். அதன் பிறகு எட்டு ஆண்டுகள் நடிப்பை தவிர்த்த இவர், அதற்கு பிறகு தன் முடிவை மாற்றிக் கொண்டு, பூவுக்குள் பூகம்பம், அடிமை விலங்கு, பரம்பரை, தாய்மேல் ஆணை, பொன்ன்மனச் செல்வன், ஒரே தாய் ஒரே குலம், ஒன்ஸ்மோர் போன்ற படங்களில் நடித்தார்.

இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’, மற்றும் ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இவர், தமிழக அரசின் ‘எம்.ஜி.ஆர் விருது’,  ஆந்திர அரசின் ‘என்.டி.ஆர் தேசிய விருது’, பெங்களூர் பல்கலைக்கழகம் சார்பில் ‘கௌரவ டாக்டர் பட்டமும்’, 2008-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான இந்திய அரசின் ‘தேசிய விருது’, பிலிம்பேர், சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் விருது எனப் பல விருதுகளை பெற்று சாதனைப் படைத்தவர் இவர்.

பல ஆண்டுகளாக திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்துடன் நிலைத்து நிற்பது சரோஜாதேவியின் தனிப்பட்ட சாதனைதான். அவரது சாதனையை இனி யாரும் முறியடிக்க முடியாது,

தொகுப்பு : ஜி.பாலன்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு

திறமையை மட்டுமே வழிச்செலவிற்கு வைத்துக்கொண்டு உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் கலைத்துறையில் வெற்றிபெற்ற நடிகர் ரஜினிகாந்த்தின் இயற்பெயர் சிவாஜி ராவ். குழந்தையாக இருக்கும்போதே ரஜினி துறுதுறுப்பும், புத்திசாலித்தனமும் மிகுந்தவராக விளங்கி இருக்கிறார். ஐந்தாவது வயதில், பசவன்குடியில் உள்ள பிரிமியர் மாடல் ஸ்கூல் என்ற பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரராக விளங்கிய ரஜினி, ஒன்பது வயதில் தனது தாயாரை இழந்தார்.

பெங்களூர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்த ரஜினியை கல்லூரியில் "பி.யு.சி'' வகுப்பில் சேர்த்துவிட்டார், தந்தை. ஆனால், மனம் என்னவோ படிக்க விருப்பம் இல்லாமல் வேறு எதையோ தேட வைத்தது. அது எது என்று புரிந்து கொள்ள முடியாமல், சென்னைக்கு வந்தார், ரஜினி. கையில் இருந்த பணம் முடியும்வரை சென்னையை சுற்றிப் பார்த்தார். திரைப்படங்கள் பார்த்தார். எல்லாம் புதிதாக பரவசமாக இருந்தது.

பிறகு பல இடங்களில் வேலை தேடினார். கடைசியில் ஒரு தச்சுப் பட்டறையில் வேலை கிடைத்தது. ஆனால், அதில் வேலை செய்ய விருப்பமில்லை. அதனால், பெங்களூருக்குத் திரும்பிச் சென்றார்.

பெங்களூரில் ஒரு மளிகைக் கடையில் சில நாட்கள் வேலை செய்தார். பிறகு அந்த வேலையும் பிடிக்காமல் மீண்டும் சென்னைக்கு வந்தார். சென்னையில் வேலை தேடி அலைந்து கலைத்து போன போது மிட்லண்ட் தியேட்டரில் கே.பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடித்த "எதிர்நீச்சல்'' படத்தைப் பார்த்து மகிழ்ந்தார்.

பிறகு கட்டிட காண்டிராக்டரிடம் சித்தாள் வேலை பார்த்தவர், கிடைக்கும் சம்பளத்தில் நிறைய திரைப்படங்கள் பார்த்தார். சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் அவரை வெகுவாகக் கவர்ந்தன.

படம் பார்க்க செல்வதால் சில நேரங்களில் வேலையை இழந்திருக்கிறார். ஒர்க்ஷாப், மூட்டை சுமப்பது என்று சில வேலைகளைப் பார்த்தவர், மறுபடியும் பெங்களூர் சென்றார். .குடும்ப நண்பர் ஒருவர் மூலமாக கர்நாடகா போக்குவரத்து நிறுவனத்தில், பஸ் கண்டக்டர் வேலை கிடைத்தது.

சிவாஜி நகர் - சாம்ராஜ்பேட்டை ரூட்டில், 134-ம் நெம்பர் பஸ்சில்தான் கண்டக்டராக வேலை. பஸ்சில் அவரை பார்ப்பவர்கள் கண்டக்டர் என்றே நம்பமாட்டார்கள். அந்த அளவுக்கு `டிப்டாப்' ஆக உடை அணிவார். பயணிகளுக்கு `டிக்கெட்' கிழித்துக் கொடுப்பதும், "ரைட்... ரைட்'' என்று கூறுவதும் தனி ஸ்டைலாக இருக்கும்.

ஒரு முறை நாடக நண்பரின் தொடர்பு கிடைக்க அவர் மூலமாக நாடகத்திற்கு சென்றிருக்கிறார். பிறகு அவருடன் இணைந்து நாடகங்கள் போட்டிருக்கிறார். அவர் நடிப்புக்கு ஏக வரவேற்பு.

ஒருமுறை நாடகம் முடிந்ததும், முன்னிலை வகித்த கர்நாடகா போக்கு வரத்து அதிகாரி, "நம்முடைய சிவாஜிராவ் பிரமாதமாக நடித்தார். விரைவில் அவர் சினிமாவில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு அவர் நடிப்பு பிரமாதம்!'' என்று புகழ்ந்தார்.

அன்று முதல் தொடர்ந்து சக ஊழியர்கள் சினிமாவுக்கு எப்போது போகப் போகிறாய் என்று கேட்கத் தொடங்கினார்கள். அந்த ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களிடம் பேச ஆரம்பித்தார் ரஜினி.

ரஜினியின் அப்பாவுக்கு ரஜினி, நாடகத்தில் நடிப்பது பிடிக்கவில்லை. "மாலை நேர கல்லூரியில் சேர்ந்து படி. போலீசில் சேர்ந்து பெரிய அதிகாரியாகலாம்!'' என்று கூறிக் கொண்டிருந்தார்

புட்ராஜ் என்கிற நண்பர், "சினிமாவில் நடித்தால் நீ நிச்சயம் பெரிய நடிகனாக வருவாய். உன் ஸ்டைல் உனக்கு ரொம்ப உதவும்'' என்று உசுப்பேத்த, சினிமா வாய்ப்பை எப்படி பெறுவது என்று சதா யோசித்தபடி இருந்தார், ரஜினி.

சென்னையில் உள்ள பிலிம்சேம்பர் வளாகத்தில் நடிப்பு, டைரக்ஷன், எடிட்டிங், ஒளிப்பதிவு முதலியவற்றில் பயிற்சி பெற, விண்ணப்பம் அனுப்பலாம் என்று பத்திரிகையில் விளம்பரம் வந்ததைக் கண்டு, அதற்கு விண்ணப்பித்தார்.

நேர்காணலில் தேர்வு செய்யும் அதிகாரிகளைக் கவர்ந்த ரஜினி, நடிப்பு பயிற்சி பெறும் வாய்ப்பை பெற்றார். கண்டக்டர் வேலைக்கு நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு நடிப்பி பயிற்சி பெற்றார்.

அமிஞ்சிகரையில் தங்கி தினமும் அண்ணாசாலையில் உள்ள பயிற்சி நிலையத்திற்கு பஸ்ஸில் செல்லும் ரஜினி, சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும், எப்படி வசனம் பேசவேண்டும் என்றெல்லாம் அங்கு பயிற்சி பெற்றார். அவருடன் 36 மாணவர்கள் பயிற்சிபெற்றனர்.

அங்கு, உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களை பார்க்கிற வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. சினிமா உலகைச் சேர்ந்த நடிகர் - நடிகைகள், டைரக்டர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அடிக்கடி பயிற்சி நிலையத்திற்கு வந்து கலந்துரையாடுவார்கள். இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்கள்.

அப்படி ஒருமுறை இயக்குநர் கே.பாலசந்தர் வருகை தந்து, மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரஜினியும் அவரிடம் கேள்வி எழுப்பினார். "ஒரு நடிகனிடம் அவன் நடிப்பைத் தவிர வேறு எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று ஆங்கிலத்தில்  வேகமாகக் கேட்டதால், கே.பாலசந்தருக்கு புரியவில்லை.

பிறகு நிறுத்தி - நிதானமாக மீண்டும் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

பாலசந்தர் சிரித்துக்கொண்டே, "நடிகன் வெளியே நடிக்கக்கூடாது'' என்று கூறியாவர், உன் பெயர் என்ன என்று கேட்டிருக்கிறார்.  "சிவாஜிராவ்'' என்று பதில் சொல்லி இருக்கிறார், ரஜினி.

நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட பாலசந்தர், ரஜினியை நோக்கி கையை நீட்டினார். ரஜினியும் கை நீட்ட, கை குலுக்கி இருக்கிறார்.

பயிற்சி ஆசிரியர் அருகே வந்து யங்களை இவனுக்கு ரொம்பப் பிடிக்கும் "சார்! உங்கப்படம் என்றால் இவனுக்கு உயிர். அவள் ஒரு தொடர்கதையை 6 தடவை பார்த்திருக்கிறான்!'' என்று பாலசந்தரிடம் கூறி இருக்கிறார்.

பாலசந்தர் சிரித்தபடி, "உனக்கு தமிழ் தெரியுமா?'' என்று ரஜினியிடம் கேட்க, "கொஞ்சம் கொஞ்சம் தெரியும்'' என்று சொல்லி இருக்கிறார்.

"உனக்குத் தமிழ் தெரியாது என்பது உன் பேச்சில் இருந்தே தெரிகிறது!'' என்று சொன்ன பாலசந்தர், பிறகு, "நான் வருகிறேன்'' என்று விடைபெற்றுக்கொண்டு ஆசிரியருடன் கார் வரை பேசிக் கொண்டே சென்றார்.

கே.பாலசந்தர் சென்ற பிறகு, திரும்பி வந்த ஆசிரியர், "பாலசந்தர் சார் உன்னை பார்க்க விரும்புகிறார். நீ போய் அவரை ஒரு நாள் அவருடைய ஆபிசில் பாரு என்று கூறி இருக்கிறார்.

ரஜினிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பாலசந்தர் சார் நம்மை பார்க்க விரும்புகிறார்? பட சான்ஸ் தேடி வருகிறது என்று நெகிழ்ந்து போனார்.

ஆனால், ஊரில் இருந்து ரஜினிக்கு ஒரு கடிதம் வந்தது. "உடனே புறப்பட்டு வா!'' என்று அதில் அவர் அண்ணன் எழுதியிருந்தார்.

இரண்டு வருடங்களுக்கு மேலாக விடுமுறையில் இருந்ததால், மேற்கொண்டு அனுமதிக்க முடியாது என்று உன்னை கண்டக்டர் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்து விட்டார்கள் என்கிற தகவல் கிடைத்தது.

பஸ் டெப்போவுக்கு சென்ற போது, அங்கிருந்தவர்கள் ரஜினியை பரிதாபமாகப் பார்த்தார்கள். "கவலைப்படாதே. நீ பெற்ற நடிப்பு பயிற்சி, உன்னை கைவிட்டு விடாது'' என்று நண்பர் புட்ராஜ் ஆறுதல் கூறினார்,

முன்பு ரஜினியை புகழ்ந்து பேசியவர்கள் இப்போது, "நடிகனாக வேண்டும் என்று மெட்ராஸ் போனான். இவன் மூஞ்சிக்கு நடிகனாக முடியுமா? யார் - யார் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்கணும்!'' என்று ரஜினியின் காதுபடவே பேசினார்கள்.

ரஜினி அப்போது ஒரு உறுதியான முடிவை எடுத்தார். நடிகனாகாமல் இனி பெங்களூருக்குத் திரும்பக்கூடாது!' என்று. அன்று இரவே சென்னைக்கு ரெயில் ஏறினார்.

திரைப்பட பயிற்சி பெற்றால் தேடி வந்து வாய்ப்பு தரமாட்டார்கள். நாம் தான் சினிமா உலகை தேடிப் போக வேண்டும் என்று படக் கம்பெனிகளுக்கு செல்ல முடிவு செய்தார்.  ஒரு நாள் மாலை ஐந்து மணி அளவில் நண்பன் சதீஸ் ஒடி வந்து, "சிவாஜி! பாலசந்தர் சார் ஆபீசில் இருந்து, அசோசியேட் டைரக்டர் சர்மா வந்திருக்கிறார். பாலசந்தர் சார், உன்னை உடனே அழைத்து வரச் சொன்னாராம்!'' என்று கூறி இருக்கிறார்.

கே.பாலசந்தரின் அலுவலகத்தில் அவரை சந்தித்த ரஜினி, அவர் முன் அமர தயங்கி இருக்கிறார்.

என்ன படிச்சிருக்கீங்க?' என்று பாலசந்தர் கேட்டிருக்கிறார். `எஸ்.எஸ்.எல்.சி. பாஸ்!'' என்றதும், `நான் இதுவரை உங்கள் நடிப்பைப் பார்த்ததில்லை. ஏதாவது நடித்துக் காட்டுங்கள்!' என்று கூறி இருக்கிறார்.

`எனக்குத் தமிழ் தெரியாதே!' என்று ரஜினி சொன்னதும், பரவாயில்லை. கன்னடத்தில் பண்ணுங்க!' என்று பாலசந்தர் கூறி இருக்கிறார்.

கிரீஷ்கர்னாட் எழுதிய "துக்ளக்'' நாடகத்தில் இருந்து ஒரு காட்சியை நடித்துக் காட்டி இருக்கிறார், ரஜினி. பாலசந்தருக்கு பிடித்திருந்தது. `ரொம்ப நல்லா இருக்கு' என்று பாராட்டி இருக்கிறார்.

`இப்போது, அபூர்வ ராகங்கள்' என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு ரோல். அது சின்ன ரோல் என்றாலும், ரொம்ப பவர்புல் ரோல். அந்த ரோலில் உங்களை அறிமுகம் செய்யப்போகிறேன். அடுத்து, `அவள் ஒரு தொடர்கதை' படத்தை தெலுங்கில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் ஜெய்கணேஷ் நடித்த ரோல் உங்களுக்கு!'' என்று சொன்ன பாலசந்தர், "உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?'' என்று கேட்டிருக்கிறார்.

தெலுங்கில் சில வார்த்தைகள்தான் தெரியும் என்றதும், "மூன்றாவது ஒரு கதை இருக்கு. அதில் ஆண்டி ஹீரோ ரோலை உங்களுக்குக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்'' என்று கூறிவிட்டு, "நீங்கள் மட்டும் தமிழை நன்றாகக் கற்றுக் கொண்டால், உங்களை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடுவேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.

3 படங்களில் நடிக்க வைக்கப் போவதாக இயக்குநர் கே.பாலசந்தர் கூறியதால் மகிழ்ச்சியின் உச்சிக்குச் சென்ற ரஜினிகாந்த், நேராக டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் ஓட்டலுக்குச் சென்று நண்பர்களை அழைத்து சுவிட், மசாலா தோசை, காபி வாங்கிக் கொடுத்து கொண்டதை இருக்கிறார்.

"அபூர்வ ராகங்கள் படத்தின் ஷூட்டிங் நாளைக்கு நடக்கிறது. உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை பாலசந்தர் எடுக்கப்போகிறார். ஸ்டூடியோவுக்கு வந்துவிடுங்கள்'' என்று கூறினார்கள்.

அவர்கள் சொன்னபடியே ரஜினி ஸ்டூடியோவுக்கு சென்றார். ஆனால், அன்று அவரது காட்சிகள் எடுக்கப்படவில்லை. மறுநாளும் போனார். அன்றும், அதற்கு அடுத்த நாளும் கூட அவருக்கு படப்பிடிப்பு இல்லை. நான்காவது நாள் அவருக்கான காட்சிகளை படமாக்கினார் பாலசந்தர்.

ஒரு பெரிய பங்களா. அதற்கு ஒரு பெரிய கதவு. அதைத் திறந்துகொண்டு, தாடி-மீசையுடன் உள்ளே நுழைகிறார், ரஜினி.

"பைரவி வீடு இதுதானா? நான் பைரவியோட புருஷன்!'' என்று கமலஹாசனிடம் கூறுகிறார். ரஜினி பேசிய முதல் வசனம் இதுதான்.

படப்பிடிப்புக்கு முன், இந்த வசனத்தை பல தடவை பேசிப் பேசி ஒத்திகை பார்த்திருந்தார், ரஜினி.

"கிளாப்!'' என்று இயக்குநர் கூறியதும், பதற்றத்தில் வசனத்தை உளறி இருக்கிறார், ரஜினி. தான் அவ்வளவு சரியா செய்யவில்லை என்பதை, பாலசந்தர் முகத்திலிருந்து தெரிந்து கொண்ட ரஜினி, அடுத்த காட்சியில் பாராட்டும் படி நடித்திருக்கிறார்.

அபூர்வராகங்கள் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தனது காட்சிகளுக்கு டப்பிங் பேச சென்ற ரஜினி,  ஜெமினி ஸ்டூடியோவில் அப்போது கமலஹாசனும், ஸ்ரீவித்யாவும் `டப்பிங்' பேசிக்கொண்டிருபாதை கண்டு, தன்னுடைய என்னுடைய காட்சி எப்போது வரும் என்று காத்திருந்தார்.

திடீரென்று திரையில் ஒரு காட்சி. கோட்டு போட்ட ஒரு தாடி ஆசாமி, கதவைத் திறந்து கொண்டு வருகிறான். ஏதோ பேசுகிறான். ரஜினியால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது - அது தான்தான் என்று! தன்னை மறந்து, அந்தக் காட்சியைப் பார்த்திருக்கிறார்.

தன் உருவத்தை திரையில் பார்த்தபோது உடம்பெல்லாம் சிலிர்த்துப் போக நின்று கொண்டிருந்த ரஜினியை கவனித்த கே.பாலசந்தர், "என்ன! சிவாஜி டப்பிங் போகலாமா என்று கேட்டிருக்கிறார்.

ரஜினிக்கு தமிழ் சரிவரத் தெரியாததால், வேறு யாரையாவது அவருக்கு குரல் கொடுக்கச் சொல்லலாம் என்று சிலர் கூறினார்கள். பாலசந்தர் அதை ஏற்கவில்லை. `கூடவே கூடாது. ஒரிஜினல் வாய்ஸ்தான் வேண்டும்' என்று கூறி ரஜினிய பேச அழைத்திருந்தார். ரஜினி முதல் முறையாக டப்பிங் பேசினார். எப்படி உச்சரிக்க வேண்டும் என்று பாலசந்தர், சொல்லிக் கொடுத்தார். அதை அப்படியே வாங்கி பேசினார் ரஜினி.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் என்கிற புகழ் பெற்ற நடிகர் இருப்பதால், சிவாஜி என்ற பெயர் உனக்கு வேண்டாம். `ராவ்' என்கிற பெயரும், தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது. `டைட்டிலில் எப்படி பெயர் போட வேண்டும் என்று பாலசந்தர் கேட்ட போது, நண்பர்களை கலந்து கொண்டு, `சரத்', `ஆர்.எஸ்.கெய்க்வாட்' என்ற இரண்டு பெயர்களை தெரிவித்திருக்கிறார். நண்பர்களுக்கு அந்த பெயர்கள் பிடிக்கவில்லை. அதனால், "நீங்களே ஆசீர்வாதம் செய்து, ஒரு பெயர் வையுங்க!'' என்று ராஜி கூறி இருக்கிறார்.

"என்னுடைய மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில், சந்திரகாந்துக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் ஸ்ரீகாந்த், மற்றவன் ரஜினிகாந்த். ஸ்ரீகாந்த் என்ற பெயரை ஏற்கனவே ஒருவருக்கு வைத்தாகிவிட்டது. ரஜினிகாந்த் என்ற பெயரை யாருக்கு வைக்கலாம் என்று ரொம்ப நாளா நினைத்துக் கொண்டிருந்தேன். அதை உனக்கு வைக்கிறேன். என்று கூறியவர், ரஜினிகாந்த் என்று கூறியதும், ரஜினி, பாலசந்தரின் காலைத் தொட்டுக் கும்பிட, நல்ல வரணும் என்று வாழ்த்தி இருக்கிறார்.

1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி அபூர்வராகங்கள் படம் வெளியானது. தான் நடித்த அந்த முதல் படத்தைப் பார்க்க ரஜினி தி நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டருக்கு சென்றார். டிக்கெட் கிடைக்கவில்லை.

தியேட்டர் மானேஜரை சந்தித்து, தான் இந்தப் படத்தில் நடித்திருப்பதை தெரிவித்து அவரிடம் டிக்கெட் பெற்று அபூரவராகங்கள் படத்தைப் பார்த்திருக்கிறார், ரஜினி.

படம் மிகச் சிறப்பாக அமைந்திருந்ததால், நூறு நாட்களைக் கடந்து அபூர்வ ராகங்கள் படம் ஓடியது. முதல் படமே நூறு நாள் படமாக அமைந்தது ரஜினிக்கு பெருமையாக இருந்தது.

அதன் பிறகு ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுத்து "மூன்று முடிச்சு'' படத்தை இயக்க முடிவு செய்தார், கே.பாலசந்தர். இந்தப் படத்தில் கமலஹாசன் இடம் பெற்றார் என்றாலும், அது கவுரவ வேடம் போன்றதுதான். படத்தின் தொடக்கத்திலேயே அவர் இறந்து விடுவார். படத்தின் கதாநாயகி ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்த அவர், கதாநாயகியாக நடித்த முதல் படம் இதுதான்.

சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு, வாய்க்கு கொண்டு வரும் ஸ்டைலை இந்தப் படத்தில்தான் ரஜினி அறிமுகம் செய்தார்.

இந்தக் காலக்கட்டத்தில், "கதா சங்கமா'' என்ற கன்னடப் படத்திலும், "அந்துலேனி கதா'' என்ற தெலுங்குப் படத்திலும் ரஜினி நடித்தார். "அவள் ஒரு தொடர்கதை'' படத்தின் தெலுங்குப் பதிப்புதான் "அந்துலேனி கதா.''

"கதாசங்கமா'' படத்தை புட்டண்ணாவும், "அந்துலேனி கதா'' படத்தை கே.பாலசந்தரும் இயக்கி இருந்தனர்.

1977-ம் ஆண்டில் மொத்தம் 15 படங்களில் ரஜினிகாந்த் நடித்தார். அவற்றில், "புவனா ஒரு கேள்விக்குறி'' பெரும் திருப்பம் ஏற்படுத்திய படமாகும்.

புவனா ஒரு கேள்விக்குறி'யைத் தொடர்ந்து, ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படம் "16 வயதினிலே.'' இது, பாரதிராஜா டைரக்ட் செய்த முதல் படம்.

"புவனா ஒரு கேள்விக்குறி'' வெளிவந்து 2 வாரம் கழித்து வெளிவந்த இப்படம், ரஜினியின் புகழை மேலும் உயர்த்தியது.

ரஜினியின் கலைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படம் "பைரவி''. அதுவரை பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் ரஜினி நடித்திருந்தாலும், தனி ஹீரோவாக நடித்த முதல் படம் "பைரவி''.

ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று, "நான் முதன் முறையாக தயாரிக்க இருக்கும் படத்தில், நீங்கள்தான் ஹீரோவாக நடிக்க வேண்டும்'' என்று கதாசிரியர் கலைஞானம் கூற, மகிழ்ச்சி அடைந்த ரஜினி, `கதை என்ன?' என்று கேட்டிருக்கிறார். கதையை சொன்னதும் உடனே ஒத்துக் கொண்டார்.

எம்.பாஸ்கர் இயக்கிய இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைக்க, பாடல்களை கண்ணதாசனும், சிதம்பரநாதனும் எழுதினர். ரஜினியுடன் ஸ்ரீபிரியா, ஸ்ரீகாந்த், சுருளிராஜன், மனோரமா, ஒய்.விஜயா நடித்தனர்.

1978 ஜனவரி 14-ந்தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகி, 1978 ஜுன் 2-ந்தேதி வெளியானது. "பைரவி'' படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை கலைப்புலி எஸ்.தாணு வாங்கி இருந்தர்.

அண்ணா சாலையில் "பைரவி'' படம் திரையிடப்பட்ட பிளாசா திரையரங்கில், ரஜினியின் 35 அடி உயர `கட் அவுட்' வைத்தார். தியேட்டர் உயரத்துக்கு மேலே, அந்த `கட் அவுட்' நிமிர்ந்து நின்றது. இத்துடன் 3 விதமான போஸ்டர்களை அச்சடித்து, சென்னை நகரம் முழுவதும் ஒட்டினார். அதில், படமெடுத்தாடும் நல்ல பாம்பை கையில் பிடித்தபடி ரஜினி தோன்றும் போஸ்டர், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

போஸ்டர்களில் ரஜினிகாந்தை `சூப்பர் ஸ்டார்' என்று குறிப்பிட்டிருந்தார். ரஜினிகாந்த் முதன் முதலாக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டது அப்போதுதான்.

சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்'' என்று ரஜினிகாந்த் கூறினார். ஆனால் ரசிகர்கள் விடாப்பிடியாக `சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கவே, அவர் பெயருடன் அந்தப் பட்டம் இரண்டறக் கலந்து விட்டது.

ரஜினியின் முத்து படம் இந்தியாவைத் தாண்டி ஜப்பானிலும் அமோக வெற்றி. இந்திய மொழிப் படம் முதன் முறையாக ஜப்பானிய மொழிமாற்றம் செய்யப்பட்டு ஹிட் அடித்தது என்றால் அது முத்து தான்.

சந்திரமுகி படம் 820 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இந்தியாவைத் தாண்டி டர்கிஷ் மொழியிலும், ஜெர்மன் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டும் ஹிட் அடித்தது.

மத்திய அரசின் பத்பூசன், பத்மவிபூஷன், தாதா சாகேப் பால்கே விருதுகள் பெற்றுள்ள ரஜினி, தமிழக அரசின் கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர். சிவாஜி விருது, ஆந்திர அரசின் என்.டி.ஆர்.விருது, மகாராஷ்டிரா அரசின் ராஜ்கபூர் விருது உட்பட ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். 

பெங்களூரில் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி, ராமோஜி ராவ் – ராமாபாய் தம்பதிக்கு நான்காவது மகனாக பிறந்தவர் ரஜினி இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுமார் 175 படங்களில் நடித்துள்ளார்.

தொகுப்பு : ஜி.பாலன்