தஞ்சாவூர் மாவட்டம்
பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச்சாலையில் 1943 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம்
தேதி எம்.என்.ரெங்கசாமி - சின்னம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் விஜயகுமார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் பஞ்சாட்சரம்.
மகன் படித்து டாகடராக
வேண்டும் என்கிற ஆசை அவரது அப்பாவுக்கு. ஆனால், கும்பகோணத்தில் சிவாஜி நடித்த
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தை பார்த்த பிறகு, தானும் நடித்து
மக்களை கவர வேண்டும் என்று மனதிற்குள் ஆசையை வளர்த்துக் கொண்டார் விஜயகுமார்.
பதினைந்து வயதை நெருங்கிய
போது நடிப்பு ஆசை விரட்டத் தொடங்கியது. சினிமா இருக்கும் நகரமான சென்னைக்கு புறப்பட வேண்டும்
என்று முடிவு செய்து தந்தையிடம் சென்று முறையிட்டார்.
மகன் ஆர்வத்தில்
வந்து நிற்கிறான். போய் அனுபவத்துடன் வரட்டுமே என்று அனுப்பி இருக்கிறார், அப்பா ரெங்கசாமி.
சென்னையில் மூத்த
அண்ணன் ராமச்சந்திரன் பெட்டிக்கடை வைத்திருந்தார். அவரிடம் சினிமாவுக்காக வந்திருக்கிறேன்
என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று சென்னையை சுற்றி பார்க்க வந்ததாக கூறி
இருக்கிறார். ஒரு வாரம் தங்கி சினிமாவுக்கு முயற்சி செய்வதற்குள் சென்னையை சுற்றி பார்த்தது
போதும் ஊருக்கு கிளம்பு என்று அவர் புதிய உடை வாங்கி கொடுத்து ரயிலேற்றிவிட்டார்.
ஊருக்கு சென்று மீண்டும்
அப்பாவிடம் பேசி மீண்டும் அண்ணனிடம் போக மாட்டேன் என்று தெரிவித்துவிட்டு வேறு இடத்தில்
அறை எடுத்து தங்கி முயற்சி செய்வதாக கூறி மாதம் தோறும் செலவுக்கு பணம் வேண்டும் என்று
கோரிக்கை வைத்தார்.
இளம் வயது வேகமும்
பிடிவாதமும் அதில் விஜயகுமார் காட்டிய உறுதியும் அவரது அப்பாவுக்கு பிடித்திருந்தது.
மகனின் நம்பிக்கைக்கு இன்னொரு சான்ஸ் கொடுத்தார். மாதம் முன்னூறு
ரூபாய் பணம் அனுப்பவும் ஒப்புக் கொண்டார்.
அண்ணனின் கடையில்
வேலை பார்த்த சுப்பாராவ் தங்கியிருந்த மைலாப்பூர் அப்பு முதலி தெருவில் உள்ள அறையில்
தங்கிக் கொண்டு முயற்சி செய்தார். சுப்பாராவின் உதவியால் சரோஜா நாடக மன்றம் நடத்திய ராமபக்தி
நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் நாடகத்திலேயே தொடக்கத்தில் பிள்ளையார் வேடம்;
முடிவில் மகாவிஷ்ணு வேடம் என இரண்டு வேடங்களில் நடித்தார், விஜயகுமார்.
நாடகங்களில் நடித்துக்
கொண்டிருந்த விஜயகுமாருக்கு, கும்பகோணம் வையாபுரி ஜோதிடர் அறிமுகம் கிடைக்க, அவர் மூலமாக டி.ஆர்.ராமண்ணாவின்
ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் சின்னவயது பாலமுருகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தப் படத்தில் பெரிய வயது முருகனாக சிவாஜி நடித்திருந்தார்.
1961 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீவள்ளி படம் விஜயகுமாரின் முதல் வாய்ப்பாக அமைந்தது. பதினெட்டு வயதில் நடிகராக சிறிய வேடத்தில் அறிமுகமான விஜயகுமார், அதன் பிறகும் திரைப்படங்களில் நடிக்க போராட வேண்டிய நிலையில்தான் இருந்தார்.
ரஷியக் கதை ஒன்றைத்
தழுவி கவிஞர் கண்ணதாசன் எடுத்த தாயே உனக்காக படத்தை பி.புல்லையா இயக்கினார்.
சிவக்குமார் முக்கிய வேடத்தில் நடித்த இந்தப் படத்தில் சிவாஜி, பத்மினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, முத்துராமன், தேவிகா,
மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், மனோரமா, வி.கே.ராமசாமி என பலர் கவுரவ வேடத்தில் நடித்தனர்.
இந்தப் படத்தில் சிவக்குமாரின் நண்பராக ஒரு சிறு வேடத்தில் விஜயகுமார் நடித்தார்.
கந்தன் கருணை படத்தில்
முருகன் வேடத்தில் நடிக்க, முக அழகு கொண்ட ஒரு இளைஞரைத் தேடினார், இயக்குநர் ஏ.பி.நாகராஜன். இதை அறிந்த விஜயகுமார் தன்னுடன் நாடகத்தில் நடித்த
ஈ.ஆர்.சகாதேவன் என்பவரை அணுகி ஏ.பி.நாகராஜனிடம்
சிபாரிசு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
ஈ.ஆர்.சகாதேவனின்
நெருங்கிய நண்பர் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். அதனால், அவர் அவரிடம் பேசி விஜயகுமாருக்கு
சிபாரிசு செய்தார். மறுநாள் சாரதா ஸ்டுடியோவுக்கு மேக்கப் டெஸ்ட்க்கு
சென்றார், விஜயகுமார். அங்கு அவருக்கு முன்பு, ஏவி.எம்.நிறுவனத்தின் சிபாரிசுடன்
வந்திருந்த சிவக்குமாருக்கு மேக்கப் டெஸ்ட் நடந்தது. அதன் பிறகு
விஜயகுமாருக்கும் மேக்கப் டெஸ்ட் நடந்தது. முப்பதுக்கும் மேற்பட்டவர்களை
மேக்கப் டெஸ்ட் எடுத்து முடிவில் சிவக்குமாரை முருகன் வேடத்திற்கு தேர்வு செய்திருந்தார்
ஏ.பி.நாகராஜன்.
முருகன் வேடம் கிடைக்காததால், விஜயகுமார் ஊருக்கு திரும்பி சென்றார். இதுவரை உன் இஷடத்துக்கு
உன்னை விட்டேன். ஆறு வருஷம் சினிமாவுக்காக செலவு பண்ணிவிட்டாய். ஆசைப் பட்டத்துக்காக ரெண்டு படம் நடித்துவிட்டடே.. அது
போதும். உனக்கு திருமணம் செய்ய வேண்டும். விவசாயம் அல்லது ரைஸ்மில் ஏதாவது ஒன்றை பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டார்
, அப்பா ரெங்கசாமி.
அப்பா சொன்னபடி விவசாயத்தை கவனித்தார்,
விஜயகுமார். 1969-ம் ஆண்டில் முத்துக்கண்ணுவுடன் விஜயகுமாருக்கு
திருமணம் நடந்தது. மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்தாலும்
நடிப்பில் புகழ்பெற வில்லையே? சினிமாவில் வெற்றிபெற முடியவில்லையே? என்று பெரும் குறை மனதின் அடி ஆழத்தில் இருந்து கொண்டு விஜயகுமாரை தூங்கவிடவில்லை.
சென்னையில் சினிமா
வாய்ப்புக்காக முயன்ற நாட்களில் விஜயகுமாருக்கு மு.க.முத்து நண்பராகியிருந்தார். அவர்
நடித்த "பிள்ளையோ பிள்ளை'' படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த போது அந்தப்
படத்தைப் பார்த்த விஜயகுமாருக்கு, தனது நண்பர்களில் ஒருவர் நடிகராகி
விட்ட சந்தோஷம் ஒருபக்கம், நாமும் சென்னைக்குப் போய்,
இன்னும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாமே என்கிற எண்ணம் இன்னொரு
பக்கம் எழுந்தது.
உடனே அப்பாவிடம்
சென்று சொல்லி இருக்கிறார். சினிமாவுக்கு முழுக்கு போட்டு இனி ஊரோடு செட்டிலாகி விடுவான்.
தொழிலில் நமக்கு உறுதுணையாக இருப்பான் என்று நம்பிய அப்பா அதிர்ச்சியுடன் பார்த்திருக்கிறார்.
ஒரு வருஷம் மட்டும்
கடைசியாக முயற்சி செய்து பார்க்கிறேன். வாய்ப்பு கிடைக்காமல் போனால், மறுநாள் ஊரில் இருப்பேன். அதன் பிறகு `சினிமா'
என்கிற வார்த்தையை கூட உங்களிடம் பேசமாட்டேன் என்று கூறி இருக்கிறார்.
முதலில் தயங்கிய
அப்பா ரங்கசாமி, பிறகு ஒரு வருஷம் என்கிற கண்டிஷனுடன், செலவுக்கு பணம்
கொடுத்து அனுப்பி இருக்கிறார்.
மூன்றாவது முறையாக
ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார் தனியாக ஒரு அறை எடுத்து தங்கினார்.
நடிகை சந்திரகாந்தாவின் நாடகக் குழுவில் சேர்ந்து நடித்தார். நாடகம் இல்லாத நாட்களில்
சினிமா வாய்ப்பு தேடினார்.
ஒரு நாள் சாந்தி
தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் விஜயகுமாரை சந்தித்த கதாசிரியர் பாலமுருகன்,
இயக்குநர் பி.மாதவன் புதுமுகங்கள் நடிப்பில் ஒரு படம் இயக்க இருக்கிறார். நீங்கள் அவரை சென்று பாருங்கள் என்று கூறியதுடன் முகவரியும் கொடுத்து உதவி
இருக்கிறார்.
மறுநாள் அந்த முகவரிக்கு
விஜயகுமார் சென்ற போது அங்கு கதாசிரியர் பாலமுருகனும் இருந்துள்ளார்.
அவரே இயக்குநர் பி.மாதவனிடம் விஜயகுமாரை அறிமுகப்படுத்த, அவர்
விஜயகுமாரை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்தார். பிறகு கேமராமேன் பி.என்.சுந்தரத்தை
அழைத்து டெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கிறார்.
மறுநாள் ஏவி.எம்.
ஸ்டுடியோவில் உடை கொடுத்து மேக்கப் போட்டு வசனம் கொடுத்து நடிக்க சொல்லி டெஸ்ட் எடுத்தார்கள்.
எதிர்ப்பார்த்த மாதிரி திரையில் இருந்ததால் விஜயகுமாருக்கு அவர்கள் எடுத்த பொண்ணுக்கு
தங்க மனசு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
"கந்தன் கருணை'' படத்தில் முருகன் வேடத்துக்காக எந்த சிவகுமாருடன் போட்டி ஏற்பட்டதோ,
அதே சிவகுமாருடன் "பொண்ணுக்கு தங்க மனசு.''படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்தார், விஜயகுமார். அதுவரை பட்டுக்கோட்டை சிவக்குமாராக இருந்த விஜயக்குமார், ஒரே படத்தில் இரண்டு சிவக்குமார்
இருந்தால் நன்றாக இருக்காது என்று கூறி பொண்ணுக்கு தங்க மனசு படத்தின் மூலம் விஜயகுமார்
என்று அவருக்கு பெயர் வைத்தார், இயக்குநர் பி.மாதவன்.
பஞ்சாட்சரம் சினிமாவுக்காக
சிவகுமாராகி பிறகு விஜயகுமாராக மாறியது இப்படித்தான்.
"பொண்ணுக்கு
தங்க மனசு'' படம் 1973ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் தேதி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமாக ஓடியது. இதனால் பட அதிபர்களின் பார்வை புது நாயகன் விஜயகுமார்
மீது திரும்பியது.
1974-ல் கே.பாலசந்தர்
இயக்கத்தில் வெளியான 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் நாயகியைக்
காதலித்து பிறகு அவருடைய தங்கையை மணந்துகொள்பவராக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில்
நடித்தார். மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அந்தப் படம் விஜயகுமாரின் திரைவாழ்வில் முக்கியத்
திருப்புமுனையாக அமைந்தது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன்,
சிவகுமார் ஆகியோர் கதாநாயகனாக நடித்த பல படங்களில் முக்கியத் துணைக்
கதாபாத்திரங்களில் நடித்தார். ரஜினிகாந்துடன் 'சங்கர் சலீம் சைமன்',
போன்ற படங்களிலும் கமல் ஹாசனுடன் 'நீயா'
உள்ளிட்ட படங்களிலும் இணை நாயகனாக நடித்தார். 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்', 'பகலில் ஓர் இரவு'
உள்ளிட்ட படங்களில் முதன்மைக் கதாநாயகனாக நடித்தார். அப்போது முன்னணி
நாயக நடிகராக நட்சத்திரமாக வளர்ந்துவந்த அனைவருடைய படங்களிலும் துணைக் கதாபாத்திரங்களிலும்
வில்லனாகவும் நடித்தார்.
1988-ல் மணிரத்னம்
இயக்கத்தில் வெளியான 'அக்னி நட்சத்திரம்; விஜயகுமாரின்
திரைவாழ்வில் அடுத்த முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்தப் படத்தில் பிரபு,
கார்த்திக் இருவரும் நாயகர்களாக நடித்திருந்தாலும் கதையின் மையக் கதாபாத்திரம்
அவர்கள் இருவரின் தந்தையாக நடித்த விஜயகுமாருடையதுதான். இரண்டு பெண்களைத் திருமணம்
செய்துகொண்டு இரண்டு குடும்பங்களையும் விட்டுக்கொடுக்க முடியாமல் அதே நேரம் அவர்களுக்கிடையிலான
இணக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் தவிக்கும் நடுத்தர வயது மனிதராக மிக இயல்பாகப் பொருந்தினார்.
அந்தக் கதாபாத்திரத்துக்குத் தேவையான குற்ற உணர்வு, பாசம்,
வயதுக்குரிய கண்ணியம் ஆகியவற்றை மிகையின்றி வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும்
பெற்றார்.
'அக்னி
நட்சத்திரம்' படத்தின் வெற்றி, சற்று முதிய
வயதுடைய அதே நேரம் மரியாதைக்குரிய துணைக் கதாபாத்திரங்களிலும் பெரும்பாலும் நாயகன்
அல்லது நாயகியின் தந்தையாக பல படங்களில் விஜயகுமார் நடிப்பதற்கான தொடக்கமாக அமைந்தது.
1989-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கீதாஞ்சலி' தெலுங்குப் படத்தில் (தமிழில் 'இதயத்தைத் திருடாதே')
நாயகியின் தந்தையாகவும் 1990-ல் வெளியான 'பணக்காரன்'
படத்தில் நாயகனான ரஜினிகாந்தின் தந்தையாகவும் நடித்தார். 1990-களிலும்
பல படங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்தார். அதே நேரம் தந்தை கதாபாத்திரத்துக்குள்
முடங்கிவிடாமல் அவ்வப்போது சில மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து முத்திரை பதித்தார்.
மணிரத்னம் கதை -
திரைக்கதை எழுதி தயாரித்த 'சத்ரியன்' படத்தில் நாயகன் விஜயகாந்தின்
வளர்ப்புத் தந்தை மற்றும் வழிகாட்டியாக காவல்துறை உயரதிகாரியாக அனைவரையும் ஈர்த்தார்.
பாரதிராஜா இயக்கத்தில் 1993-ல் வெளியான 'கிழக்குச் சீமையிலே'
படத்தில் தங்கை மீது உயிரையே வைத்திருக்கும் பாசக்கார அண்ணனாக முதன்மைக்
கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார். 'பாசமலர்'
சிவாஜி கணேசனுக்குப் பிறகு தமிழ் சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த அண்ணன்
கதாபாத்திரம் 'கிழக்குச் சீமையிலே' விஜயகுமார்
என்று சொன்னால் மிகையாகாது. அந்தப் படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறப்பு விருதைப்
பெற்றார்.
1994-ல் கே.எஸ்.ரவிகுமார்
இயக்கத்தில் வெளியான 'நாட்டாமை' படத்தில் நீதியையும் நியாயத்தையும்
உயிருக்கு இணையாக மதிக்கும் நாட்டாமையாக நாயகன் சரத்குமாரின் தந்தையாக விஜயகுமார் நடித்திருந்தார்.
அவருக்கான அந்த அரை மணி நேரக் காட்சிகளே படத்தின் ஆகச் சிறந்த பகுதி என்று கூறும் அளவுக்கு
அந்தக் கதாபாத்திரமும் அதில் விஜயகுமாரின் பொருத்தமான நடிப்பும் அமைந்திருந்தன.
1996-ல் பாரதிராஜா
இயக்கத்தில் வெளியான 'அந்திமந்தாரை' படத்தில் நடித்ததற்காக
இரண்டாம் முறையாக தமிழக அரசின் சிறப்பு விருதை வென்றார். அதேபோல் 1998-ல் அதே ரவிகுமார்-சரத்குமார்
கூட்டணியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்ற 'நட்புக்காக'
படத்திலும் நாயகனுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில்
சிறப்பாக நடித்திருந்தார்.
1990-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார்,
சத்யராஜ், பிரபு, கார்த்திக்
என முன்னணிக் கதாநாயகர்கள் பலருடன் பல படங்களில் அண்ணனாக, அப்பாவாக,
மாமனாராக உயரதிகாரியாக நடித்தார் விஜயகுமார். இவற்றுக்கிடையில் சுரேஷ்
கிருஷ்ணாவின் 'சங்கமம்' படத்தில் அகங்காரம்
பிடித்த பரதநாட்டிய ஆசான், 'ஜோடி' திரைப்படத்தில்
கறாரான கர்நாடக சங்கீத விமர்சகர் போன்ற மாறுபட்ட துணைக் கதாபாத்திரங்களிலும் சிறப்பாக
நடித்திருந்தார்.
இரண்டாயிரம் ஆண்டில்
'குஷி'
படத்தில் நாயகி ஜோதிகாவின் தந்தையாக நெல்லைப் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவராக
மாறுபட்ட நடிப்பைத் தந்திருந்தார் விஜயகுமார். 'ஆனந்தம்'
படத்தில் சினேகாவின் தந்தையாக சற்று எதிர்மறை குணாம்சங்கள் கொண்ட கதாபாத்திரத்தில்
நடித்திருந்தார். இப்படியாக நாயகன்/நாயகியின் தந்தை என்னும் சட்டகத்துக்குள் பல வகையான
வண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இரண்டாயிரம் ஆண்டின்
பிறபகுதியில் தந்தை வேடங்களுடன் தாத்தா வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார்., முதலமைச்சர்/அமைச்சர், சமூகத்தில் மரியாதைக்குரிய அந்தஸ்தில்
இருக்கும் பிரமுகர் போன்ற கண்ணியமான வேடங்களில் அதிகமாக நடிக்கத் தொடங்கினார். இப்போதுவரை
இதுபோன்ற துணைக் கதாபாத்திரங்களில் நடித்தபடி தன் நீண்ட பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து
கொண்டிருக்கிறார்.
விஜயகுமாரின் நடிப்பை
பல படங்களில் பார்த்த எம்.ஜி.ஆர்., இயக்குநர்
கே.சங்கர் இயக்கத்தில் இன்று போல் என்றும் வாழ்க படத்தில் நடித்த
போது, அந்தப் படத்தில் தனது தங்கை கணவர் வேடத்தில் நடிக்கும் வேடத்தில் விஜயகுமாரை
நடிக்க வைக்குமாறு கூறி இருக்கிறார். அந்தப் படம் மூலம் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்த விஜயகுமார், அதன் பிறகு எம்.ஜி.ஆரின் தொண்டனாக
மாறிப்போனார்.
சிவாஜி நடித்த தீபம்
உட்பட பல படங்களில் அவருடன் நடித்த விஜயகுமார், 1980-ஆம் ஆண்டில் பட வாய்ப்புகள்
குறைவாக இருந்த போது சிவாஜி நடிப்பில் நெஞ்சங்கள் என்கிற படத்தை தயாரித்தார். சிவாஜி நடித்த "கல்தூண்'', "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு'' போன்ற படங்களை இயக்கிய நடிகர்
மேஜர் சுந்தர்ராஜன் அந்தப் படத்தை இயக்கினார். அந்தப் படத்தின்
படப்பிடிப்பு நிதி பிரச்சினையால் நின்ற போது, அதை அறிந்த அன்றைய
முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்., விஜயகுமாரை அழைத்து பேசி, அவருக்கு உதவினார்.
அடுத்து ரஜினி நடிப்பில்
மகேந்திரன் இயக்கத்தில் கை கொடுக்கும் கை என்கிற படத்தையும் தயாரித்தார்.
இந்தப் படமும் தோல்வியை சந்தித்தது. இதனால் பட தயாரிப்பை
மட்டுமல்ல நடிப்பையும் நிறுத்திவிட்டு இரு குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு அமெரிக்கா
சென்றார். அங்கு ரெஸ்டாரெண்ட் நடத்தினார். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னை வந்து
நடிப்பை தொடர்ந்தார்.
தமிழில் மட்டுமல்லாமல்
தெலுங்கு, மலையாள மொழிகளிலும் பல படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்
விஜயகுமார், தங்கம், வம்சம், நந்தினி, ராசாத்தி போன்ற சில சின்னித்திரை தொடர்களிலும்
நடித்திருக்கிறார்.
700 - க்கும் மேற்பட்ட
படங்கள். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான திரைத்துறை பயணம் என்று சாதனை படைத்திருக்கும்
விஜயகுமாரைப் பாராட்டி எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அவருக்கு ‘டாக்டர்’ பட்டம்
அளித்துக் கவுரவித்துள்ளது.
விஜகுமாருடன் நடித்த நடிகர், நடிகைகள் பலர் இவரை நடிகர் சங்கத்தில்
பொறுப்புக்கு வருமாறு உசுப்பிவிடவே பல வருடங்கள் தமைமையில் இருந்த ராதாரவியை எதிர்த்து
நடிகர் சங்கத்தில் போர்குரல் எழுப்பினார், விஜயகுமார். ராதாரவி குழு, விஜயகுமார் குழு என்று இருவேறு குழுவாக
இருந்த நடிகர்கள் குழுவை நடிகர் விஜயகாந்த் தலையிட்டு சமாதானப் படுத்தினார். பிறகு, விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்வான
போது விஜயகுமார் சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்புக்கு வந்தார்.
சினிமாவில் பிசியாக
நடிக்க தொடங்கிய பிறகு சொந்த ஊரில் இருந்து மனைவி முத்துக்கண்ணுவை அழைத்து வந்து விட்டார், விஜயகுமார். ஊரில் இருக்கும் போதே 1970-ல் மகள் கவிதா,
1973-ல் அடுத்த மகள் அனிதா பிறந்தார். சென்னை வந்த பிறகு 1976-ல் மகன் அருண்குமார் பிறந்தார்.
மகன் பிறந்த ஆண்டில்
ஏ.பீம்சிங் இயக்கத்தில் உன்னிடம் மயங்குகிறேன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார், விஜயகுமார்.
அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு தமிழ்,
தெலுங்கு இரு மொழிகளிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை மஞ்சுளாவிடமும் மயங்கினார், விஜயகுமார்.
மஞ்சுளாவின் கொள்ளுத்தாத்தா
சர் டி.பி.முத்துசாமி அய்யர் சென்னை ஐகோர்ட்டின் முதல் நீதிபதியாக பணியாற்றியவர். அதை
நினைவுபடுத்தும் வகையில் சென்னை ஐகோர்ட்டில் அவருக்கு மார்பளவு சிலை வைத்து மரியாதை
செய்திருக்கிறார்கள்.
மஞ்சுளாவின் தாத்தா
சர்.டி.ஏகாம்பரம் அய்யர், தமிழ்நாட்டின் முதல் வருமான வரி ஆணையராக இருந்தவர். அப்பா
பானிராவ் ரெயில்வேயில் ஐ.ஜி.யாக இருந்தவர்.
குடும்பத்தினர் சம்மதம்
தெரிவித்த பிறகு விஜயகுமாரை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்ட மஞ்சுளா,
திருமணத்திற்கு பிறகு படிப்படியாக நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
விஜயகுமார் -மஞ்சுளா
தம்பதிகளுக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என்று 3 மகள்கள்.
விஜயகுமாரின் மூத்த
மகள் கவிதா பி.வாசு இயக்கிய கூலி படத்தில் சரத்குமாருக்கு தங்கையாக நடித்திருக்கிறார். அதன் பிறகு கருத்தம்மா படத்தில் மகேஸ்வரி நடித்த வேடத்தில் நடிக்க கவிதாவையும், ராஜஸ்ரீ வேடத்தில் இரண்டாவது மகள் அனிதாவையும் அழைத்திருக்கிறார், இயக்குநர் பாரதிராஜா. ஆனால், தாத்தா
ரங்கசாமி டாக்டருக்கு படிக்க வேண்டும். நடிக்க வேண்டாம் என்று
உறுதியாக இருந்ததால் அனிதா டாகடருக்கு படிக்க நடிப்பை மறுத்துவிட்டார். இதனால் கவிதாவும் நடிக்கவில்லை.
மூத்த மகள் கவிதா
திருமணமாகி கணவர் ரவிசங்கருடன் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் இருக்கிறார். இரண்டாவது மகள் டாக்டர் அனிதாவின் கணவர் கோகுலகிருஷ்ணாவுடன்
துபாயில் இருக்கிறார்.
லயோலா கல்லூரியில்
பி.காம் இரண்டாம் ஆண்டு படித்த போது அன்பாலயா பிரபாகரன் தயாரிப்பில் சுந்தர் சி. இயக்கத்தில்
'முறை
மாப்பிள்ளை' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு மகன்
அருண்குமாருக்கு வந்தது. அந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில்
நடித்தவர் டாக்டர் என்.எஸ்.மோகன் என்பவரின் மகள் ஆரத்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூர்வி, அர்நாவ் விஜய் என்ற இரு மகன்கள்
உள்ளனர். இதில் அர்நாவ்
விஜய், சூர்யா தயாரிப்பில் சரோவ் ஷண்முகம் இயக்கும் படத்தில்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். இவர்
மூலம் விஜயகுமாரின் குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறையும் கலையுலகிற்குள் நிறைந்துள்ளது.
1980 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி பிறந்த மூன்றாவது மகள் வனிதா, 1995 ஆம் ஆண்டு
விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு மாணிக்கம்
உட்பட பல படங்களில் நடித்தவர், சின்னத்திரை பிக் பாஸ் நிகழ்ச்சியிலும்
போட்டியாளராக பங்குபெற்றார். இவர் நடிகர் ஆகாஷ் என்பவரை இரண்டாயிரம்
ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய்ஸ்ரீ ஹாரி, ஜோவிகா என்கிற மகள் உள்ளனர். இரண்டாவதாக ராஜன் ஆனந்த்
என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயந்திகா என்கிற
ஒரு மகள் உள்ளார். அதன் பிறகு பீட்டர் பவுல் என்பவரை தேர்வு செய்தவர், அவரையும் பிரிந்துவிட்டார்.
1983ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பிறந்த நான்காவது மகள் ப்ரீத்தா, சூர்யா நடித்த சந்திப்போமா
படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பொண்ணுவீட்டுக்காரன், படையப்பா, புன்னகை தேசம் உட்பட பல படங்களில் நடித்தவர் இயக்குநர் ஹரியை திருமணம் செய்து
கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீராம் என்கிற மகன் இருக்கிறார்.
1986 ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி பிறந்தவர் ஐந்தாவது மகள் ஸ்ரீதேவி. இவர் குழந்தை நட்சத்திரமாக
1992ல் "ரிக்சா மாமா" திரைப்படத்தில் அறிமுகமானவர். அதன் பிறகு ஐந்துக்கும்
மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், கதிர் இயக்கிய
காதல் வைரஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு
பிரியமான தோழி, தித்திக்கிதே, தேவதையை கண்டேன்
என பல தமிழ்ப் படங்களிலும் தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களிலும் நடித்தவர், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18அம தேதி ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
தந்தையைப் போல மகன்
அருண்குமார் நடிப்பு தொழிலை தேர்வு செய்து நடிக்க வந்தார்.
அவர் தொழில் அதிபரின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார்
விஜயகுமாரின் தந்தை
ரெங்கசாமி 95 வயதிலும், அம்மா 90 வயதிலும் காலமானார்கள். அப்பாவுக்கு அவரது ஊரில் அவர் ரைஸ் மில் நடத்திய இடத்தில் சிலை எழுப்பி இருக்கிறார்.
இரண்டு மனைவிகளுடன்
ஒருமித்த கருத்துடன் ஐந்து மகள்கள் ஒரு மகன் என மகிழ்ஹ்ச்சியாக வாழ்ந்த விஜயகுமார்,
படங்களின் தோல்விக்கு பிறகு அமெரிக்காவுக்கு சென்றார்.
விஜயகுமாருக்கு இப்போது
14 பேரக் குழந்தைகள், ஒரு கொள்ளுப் பேத்தி.
மூத்த மகள் கவிதாவின்
மகளை அருண் விஜய்யின் மைத்துனருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக