தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், தொகுப்பாளர்
என பன்முகத்திறன் கொண்டவர் விசு. மேடை நாடகம், தொலைக்காட்சி
தொடர்களிலும் நடித்துள்ள விசு, சினிமா வாயிலாக குடும்பங்களின் மகத்துவத்தை
எளிமையாக எடுத்துரைத்தவர். இன்று அவர் நம்மோடு இல்லை. ஆனால் அவரின் படைப்புகள்
காலத்திற்கும் பேசப்படும். விஸ்வநாதன் என்கிற விசு சினிமாவில் கடந்த வந்த பாதையை
சற்றே ரீ-வைண்ட் செய்து பார்ப்போம்...
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த
விசுவுக்கு நாடகம் என்றால் கொல்லை ஆசை. அவரது சகோதரர் எம்.ஆர். ராஜாமணி தொடர்ந்து
அவரது எம்.ஆர்.ஆர். நாடக் குழு மூலமாக நாடகம் நடத்தி வந்தார். அவரது நாடக்
குழுவுக்கு அவ்வப்போது கதை வசனம் எழுதும் விசு, சில சமயம் அவரது நாடகங்களை
இயக்கவும் செய்திருக்கிறார்.
பிறகு தனக்கு ஒரு நாடக்குழுவை உருவாக்கி
நாடகங்களை இயக்கவும் செய்த விசு, அண்ணனின் கீழ்வானம் சிவக்கும் உட்பட பல நாடகங்களை
இயக்கி இருக்கிறார்.
எழுபதுகளின் பிற்பகுதிகளில் இவரது நாடகங்கள்
சிலவற்றைப் பார்த்த போது விசு என்ற பிரமாண்ட கலைஞன் அதில் ஒளிந்து இருப்பது இயக்குநர்
சிகரம் கே.பாலசந்தருக்கு தெரிய வந்தது. பட்டைத்
தீட்டப்பட வேண்டியவன் இவன். நன்றாக ஜொலிபான் என்று கணித்ததொடு, விசுவின்
நாடகத்தினைப் பட்டிணப் பிரவேசம் படமாக்கினார், கே.பாலசந்தர். அதில் விசுவின்
சினிமா பிரவேசம் வசன கர்த்தாவாக தொடங்கியது.
அடுத்து அவரது கதையை ரஜினி நடிப்பில் சதுரங்கம்
என்கிற படமாக இயக்கினார், இயக்குநர் துரை. அடுத்து முக்தா சீனிவாசன் இயக்கத்தில்
அவன் அவள் அது படத்திற்கும் அவர்தான் கதை. அடுத்து லட்சுமி இயக்கிய மழலைப்
பட்டாளம் படத்திற்கு திரைக்கதை எழுதிய விசு, கே.பாலசந்தர் இயக்கிய தில்லு முல்லு
படத்திற்கு வசனம் எழுதி உதவி இயக்குனராகவும் தந்தி திரைப் பயணத்தை தொடங்கினார்.
கே.பாலசந்தரின் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன்
இயக்கிய நெற்றிக்கண் படத்திற்கு கதை எழுதிய விசு, மீண்டும் முக்தா சீனிவாசன் இயக்கிய
கீழ்வானம் சிவக்கும் படத்திற்கு திரைக்கதை எழுதினார்.
மீண்டும் எஸ்.பி.முத்துராமனுடன் ‘குடும்பம் ஒரு
கதம்பம்’ படத்தில் இனைனைய வாய்ப்பு அமைந்தது. இந்தப் படத்திற்கு கதை வசனம்
எழுதியவர், ஸ்ரீனிவாச ராகவன் என்கிற பாத்திரத்திலும் நடித்திருந்தார்.
பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கும்
பைத்தியகார டாக்டருக்கு பைத்தியம் பிடிச்சா.... அவர் எந்த ஆஸ்பத்திரியில்
பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியக்கார டாக்டர் கிட்ட தன்
பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பான் என்ற வசனம் பேசி நடித்து அனைவரையும் கவனிக்க
வைத்தார்.
யாராவது ஏடாகூடமாகப் பேசினாலோ தெளிவில்லாமல்
பேசினாலோ தேவை இல்லாமல் குழப்பினாலோ விசு மாதிரி பேசாதே என்று சொல்லும்படி ஒரு அப்போது
டிரெண்ட் ஆனது.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்தப் படம்
100 நாட்கள் ஓடியது. அந்தப் படத்தை தொடர்ந்து கண்மணி பூங்கா என்கிற படத்தை எழுதி
இயக்கிய விசு, அந்தப் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்தார். ஆனந்தி பிலிம்ஸ்
தயாரித்த அந்தப் படம் எதிரப்பார்த்த
வரவேற்பை பெறவில்லை.
விசுவின் குருவிற்கு எப்படி இருகோடுகளுக்குப்
பின்னர் ஒரு சறுக்கல் பத்தாம் பசலியில் வந்ததோ அப்படியே இவருடய அடுத்த படமான
கண்மணிப் பூங்கா தோல்வியடைந்தது. ஆனால் விசு கலங்கவில்ல. அவர் சுதாரித்துக் கொள்ள
சில மாதங்கள் தேவைப்பட மீண்டும் முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கமல் நடிப்பில் சிம்லா
ஸ்பெஷல் படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தது.
விசுவின் திறமையை நன்கு அறிந்த இயக்குநர் சிகரம்
பாலசந்தர், தனது கவிதாலயா நிறுவனம் தயாரிப்பில் மணல் கயிறு என்கிற படத்தை இயக்க
வைத்தார். அவர் நினைத்தது போலவே விசுவின் அத்தனைத் திறமைகளையும் வெளிக்கொண்டு வந்தது,
மணல் கயிறு படம்.
ராஜாமணி, சூர்யகோஷ், கிஷ்மு இவர்கள் பக்க வாத்தியத்துடன் விசுவின் சினிமா கச்சேரி களைகட்டத்
தொடங்கியது. அடுத்து விஜயகாந்துடன் இணைந்து டவுரி கல்யாணம் படத்தை எழுதி இயக்கி
நடித்த விசு, அதன் பிறகு கவிதாலயா தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய
புதுக்கவிதை படத்திற்கு திரைக்கதை எழுதினார். அந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி
நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய நல்லவனுக்கு நல்லவன் படத்திற்கும் கதை, திரைக்கதை,
வசனம் எழுதினர்.
‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் சிறந்த முறையில்
கதை, திரைக்கதை, வசனம்
எழுதியதற்காக விசு அவர்களுக்கு பேசிய சம்பளத்தைவிட அதிகமாக பணம் கொடுத்தார்,
தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன். அந்தப் தொகையை மகிழ்ச்சியோடு
பெற்றுக்கொண்ட விசு, ‘‘ஏவி.எம் நிறுவனத்தில் ஒரு படம் இயக்க
எனக்கு வாய்ப்புக் கொடுத்தால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்’’ என்று ஒரு கோரிக்கையை
வைத்தார்.
அதற்கு ஏவிஎம் சரவணன், ‘‘நீங்க இப்போது ஒரே நேரத்தில் மூன்று, நான்கு படங்கள் இயக்குறீங்க.
ஏவிஎம் நிறுவனத்தின் படத்தில் மட்டும் கவனம் செலுத்தும் சூழல் அமையும்போது
சொல்லுங்கள். படம் தயாரிக்கலாம் என்றார்.
அதேபோல கையில் இருந்த புயல் கடந்த பூமி,
ராஜதந்திரம், வாய் சொல்லில் வீரனடி, நாணயம் இல்லாத நாணயம், புதிய சகாப்தம், அவள்
சுமங்கலிதான் கெட்டி மேளம், சிதம்பர ரகசியம் ஆகிய எட்டுப் படங்களை முடித்துவிட்டு ஏவி.எம்.
நிறுவனத்துக்கு சென்று ஏவிஎம்.சரவணன் அவர்களிடம், ‘‘இப்போது தயாராக
இருக்கிறேன். கதையும் இருக்கிறது’’ என்றார்.
உறவுக்கு கை கொடுப்போம் என்ற நாடகத்தை ஒய்.ஜி
.மகேந்திரன் நடிப்பில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கி பெரும் தோல்வியை அடைந்த படத்தின்
கதையை எடுத்துக் கொண்டு புதிதாக திரைக்கதை அமைத்து, அந்த கதையை ஏவிஎம். சரவணனிடம்
சொன்னார் விசு.
கதையை கேட்ட ஏவிஎம்.சரவணன், கதை எனக்கு
பிடித்திருக்கிறது. இந்தக் கதையில் செண்டிமெண்ட் உட்பட எல்லாம் இருக்கிறது.
நகைச்சுவை மட்டும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.
‘‘இல்லை சார்... எல்லா காட்சிகளையும் எழுதி முடித்துவிட்டேன்...
இனிமே சேர்க்கிறது கஷ்டம்’’ என்று விசு கூறியதும், அதற்கு ஏவிஎம்.சரவணன், ‘‘ஒரு வாரம் டைம் எடுத்துக்கொள்ளுங்கள். காமெடி டிராக்கை
சேர்த்துட்டு வந்து சொல்லுங்க’’ என்றார்.
வீட்டு வேலைகாரி பாத்திரத்தை உருவாக்கி அதில்
மனோரமா நடிக்க தேவையான நகைச்சுவை காட்சிகளும் வசனமும் எழுதி முடித்து, அந்தப்
படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற விசு, அந்தப் படத்தில் அம்மையப்பனாக நடித்து பாராட்டும்
பெற்றார். சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்ட சம்சாரம் அது மின்சாரம் படம் மிகப்பெரிய
வசூலை பெற்றதுடன், சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான தேசிய விருதினையும்
பெற்றது.
அதன் பிறகு ஊமைவிழிகள், மெல்ல திறந்தது கதவு,
தாய்க்கு ஒரு தாலாட்டு, ஆனந்தக் கண்ணீர், வீடு மனைவி மக்கள் போன்ற படங்களில்
பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர், கவிதாலயாவின் தயாரிப்பில் திருமதி ஒரு வெகுமதி,
பெண்மணி அவள் கண்மணி, வரவு நல்ல உறவு, கே.ஆர்.ஜியின் தயாரிப்பில் காவலன் அவன்
கோவலன், சகலகலா சம்மந்தி என்று படங்கள் இயக்கவும் தொடர்ந்தார். தமிழக அரசின்
தயாரிப்பில் சமூக பிரச்சனைகள் நிறைந்த சிறந்த திரைப்படமாக நீங்க நல்லா இருக்கணும்
என்ற்கிற படத்தை இயக்கியவர், அதற்கு மத்திய அரசின் விருதினை பெற காரணமாக
இருந்தார்.
மேடை நாடகங்கள் பாணியை, அழகாக ஒரு குடும்பத்துக்குள் புகுத்தி, தனது
வித்தியாசமான வசனங்களால் வெற்றி பெற்றார் விசு. வசனம் தான் எப்போதுமே விசுவின்
பலமாக இருந்துள்ளது. மிகப்பெரிய காட்சியை கூட சின்ன வசனத்தால் மக்களுக்கு
புரியும்படி சொல்லிவிடுவார் அவர்.
சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவுக்கும்
ரகுவரனுக்கும் நிகழும் அந்த வாக்குவாத காட்சி, தமிழ்சினிமாவில்
காலத்தால் அழியாத காட்சியாக நிலைத்து நிற்கிறது. காரணம் விசுவின் வசனங்களில் ஒரு
நாடகத்தன்மை இருக்கும். ஆனால் அது யதார்த்தத்திற்கு உட்பட்டு இருக்கும். அப்படியான
வித்தைகளை தன் பேனா மூலம் செய்தவர்தான் விசு.
அதே போல விசுவிடம் இருக்கும் மற்றொரு
ஸ்பெஷாலிட்டியே, அவரது கதாபாத்திர வடிவமைப்பு. 10-க்கும்
மேற்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும், அனைத்திற்கும்
முக்கியத்துவம் கொடுத்து, திரைக்கதையை எழுதிருப்பார்.
அவரின் படங்களில், ஏற்கனவே
பயன்படுத்திய நடிகர்களையே நடிக்க வைப்பதுதான் விசுவின் வழக்கம். மனோரமா, தனது சகோதரர் கிஷ்மு, எஸ்.வி.சேகர், டெல்லி கனேஷ், திலிப், கமலா
காமேஷ் இப்படி விசுவின் படங்களில் இவர்களை எப்போதுமே பார்க்கலாம். அதே போல உமா
என்ற பெயரை தனது கதாபாத்திரத்துக்கு வைப்பதும் விசுவின் ட்ரேட்மார்க்.
நான் முதல் முதலா ஒரு கதை எழுதினேன். அந்தக்
கதையைப் படிச்சுப் பார்த்துட்டு, `நீ நல்லா வருவடா விசு!’னு
என்னை வாயார வாழ்த்தின என் மதிப்புக்குரிய ஒரு பெண்மணியோட பேருதான், உமா. அவங்களுக்கு மரியாதை செய்ற விதமாதான் என்னோட கதை, திரைப்படங்கள் எல்லாத்துலயும் நாயகிக்கு `உமா’னு
பேர் வெச்சேன் என்று சொல்லி இருக்கிறார், விசு.
ஒரு படைப்பாளிக்கு அவன் சொல்ல வரும் விஷயத்தை
மிகக் குறைந்த செலவில் சொல்ல வேண்டும் எனும் நெருக்கடி ஏற்படும் போதே, அவன் கற்பனை திறன் மேலோங்கும் என சொல்வார்கள். அதுதான்
விசுவின் படங்களிலும் நடந்தது. மிகப்பெரிய உணர்வை கூட ஒரு சிறிய ஷாட்டில்
சொல்லிவிடும் அளவுக்கு அவரது கற்பனை திறன் வியக்கவைப்பது.
வெள்ளித்திரையில் வெற்றிகளை குவித்துக்
கொண்டிருக்கும் போதே சின்னத்திரையிலும் கால் பதித்தார். தமிழர்களை மனங்களை
மேடையில் ஏற்றி அவர்களின் எண்ணங்களை, திறமையை, கோபத்தை, கனவுகளை வெளிச்சத்துக்கு கொண்டு
வந்தார்.
திரைப்பட இயக்குநர் சங்கம், எழுத்தாளர் சங்கம்
ஆகியவற்றில் முக்கிய பொறுப்பில் பல ஆண்டுகள் இருந்துள்ள விசு, பல இயக்குநர்கள்,
எழுத்தாளர்கள் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்து வைத்து அவர்களுக்கு உதவி
இருக்கிறார்.
நாடகம், சினிமா, சின்னத்திரை
என அனைத்திலும் தனக்கென ஒரு தனி பாணியுடன் முத்திரை பதித்த விசு 25 படங்கள்
இயக்கியுள்ளார். 35 படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். தான் இயக்கிய
படங்கள் மட்டுமின்றி பிற இயக்குநர்களின் இயக்கத்திலும் ஏராளமான படங்களில்
குணச்சித்திர வேடத்திலும், துணை கதாபாத்திரம் ஏற்றும்
நடித்திருக்கும் விசு, தமிழக அரசின் கலைமாமணி விருது, தமிழக அரசின் சிறந்த கதை வசனககர்த்தாவுக்கான
விருதும் பெற்றுள்ளார்.
சுந்தரி என்பவரை 1975 ஆம் ஆண்டு திருமணம் செய்து
கொண்டார் விசு. இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா, கல்பானா ஆகிய மூன்று மகள்கள்.
மூவரும் படித்து திருமணமாகி அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.
சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் இரண்டாம் பாகம் கதை தயார் செய்து அந்தப் படத்தை
ஜோதிகா நடிப்பில் இயக்க ஆர்வமாக இருந்தார் விசு. ஆனால், சிறு நீரக கோளாறுடன் கேன்சர் என வருடங்கள் ஓடியது. தன் மணல்கயிறு படத்தின் தொடர்ச்சியாக
மணல் கயிறு இரண்டாம் பாகம் படத்தினை எஸ்.வி. சேகருக்காக எழுதினார். அந்தப் படமே
அவரது கடைசி படமாக அமைந்தது.
1945 ஆம் ஆண்டு சூலை மாதம்
ஒன்றாம் தேதி பிறந்த விசு, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி தனது 74 வது
வயதில் காலமானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக