திங்கள், 27 டிசம்பர், 2021

நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு

பிறந்த ஆறு மாதத்திலேயே தந்தையை இழந்த சாவித்திரி, அம்மாவுடன், அம்மாவின் அக்காள் வீட்டுக்கு சென்றார். விஜயவாடாவில் 'பாலராஜு' படத்தை பார்த்துவிட்டு அதில் அஞ்சலிதேவி ஆடிய நாட்டுப்புற நடன  அசைவுகள் சாவித்ரிக்கு பிடித்துப் போனது. அஞ்சலிதேவி போலவே ஆடிப் பார்த்தார். அவருடைய நடன ஆரவத்தை புரிந்து கொண்ட பெரியப்பா சவுத்திரி அவருக்கு நடனம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

பத்து வயதில் பள்ளிக்கூட நாடகத்தில் கிருஷ்ணர் வேஷம் போட்டார் சாவித்திரி. அவரது நடிப்பு திறமையையும் கண்டு அதிசயித்தார், பெரியப்பா சவுத்திரி.

காக்கிநாடாவின் கலாபரீஷத் என்கிற அமைப்பு ஆண்டுதோறும் நாட்டியப் போட்டி நடத்தி இளைய பாரதத்தை ஊக்குவித்தது. 1950ஆம் நடந்த போட்டியில் சாவித்திரி பங்கேற்றார். நாடகத்தில் வசனம் பேசும் போது சொத்தப்பியவர், நடனம் ஆட இருந்த பத்தினி சகோதரிகள் வரவில்லை என்றதும், சாவித்திரிகே நடனம் ஆட்டும் வாய்ப்பு கிடைத்தது.  தான் கற்ற நடன வித்தையை மேடையில் காட்டினார். அந்த விழாவுக்கு வந்த இந்தி நடிகர் பிருத்விராஜ்கபூர், 'இந்தப் பெண் பிற்காலத்தில் பெரிய நடிகையாக வரப்போகிறார். அதற்குத் தேவையான முகபாவங்கள் அருமையாக அமைந்திருக்கின்றன என்று பாராட்டி வாழ்த்தினார்.

அந்த வாழ்த்து சாவித்திரியின் பெரியப்பா சவுத்திரியின் மனதில் பெரும் கனவுகளை வித்தது. நடனம் ஆடுவதாலும், நாடங்களில் நடிப்பதாலும் பெரிய வருமானம் வரப்போவதில்லை. சினிமாவில் நடித்தால் பெரிய புகழும் வருமானமும் சாவித்திரிக்கு கிடைக்கும் என்று கணக்குப் போட்டார்.

அந்த நேரத்தில் சாதனா ஃபிலிம்ஸ், தெலுங்கு சம்சாரம் படத்துக்கு இரண்டாவது நாயகியைத் தேடிய தகவல் சவுத்திரிக்கு கிடைத்தது. சாவித்திரியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார் சவுத்திரி.

1950-ஆம் ஆண்டு மே மாதம் 17-ம் தேதி பாதினான்காம் தேதி சென்னைக்கு வந்தார் சாவித்திரி. 'சம்சாரம்' தெலுங்கு படத்திற்கு ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்து முடிந்ததும் “'இந்தப் பெண்ணுக்கு நடிப்பு சரியாக வரவில்லையே... இன்னும் பக்குவப்படவில்லை. டான்ஸ் ஆட வைக்கலாம். பெரிய ரோல் எதுவும் தர முடியாதே.' என்று இயக்குநர் எல்.வி. பிரசாத் கூறி இருக்கிறார்.

அடுத்து ஜெமினி ஸ்டுடியோவுக்கு சென்றார் சாவித்ரி. சாவித்ரியிடம் நடித்துக் காட்டச் சொன்னதும் நடித்துக் காட்டினார். ‘அட நீ தெலுங்கு பெண்ணா?  என்று பாராட்டிய கொத்தமங்கலம் சுப்பு, ரொம்ப சின்னப் பொண்ண இருக்கே. அடுத்தப் படத்துக்குப் பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்.

முயற்சியை கைவிடவில்லை போராடினார் சாவித்திரி. நாகிரெட்டியின் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வாய்ப்பு தேடி சென்ற போது தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவான 'பாதாள பைரவி' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

“நான் மாட்டேன்...நீயும்” என்று துவங்கும் பாடலில் நடனம் ஆடினார், சாவித்திரி. அதில் என்.டி.ராமாராவ் நாயகன்.

சாவித்திரியின் திறைமையை பார்த்த எல்.வி. பிரசாத், அடுத்து நாகிரெட்டி தயாரிப்பில் தான் இயக்கி தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவான 'கல்யாணம் பண்ணிப்பார்’ படத்தில்  சாவித்ரிக்கு சாந்தி என்கிற வில்லி வேடத்தைக் கொடுத்தார். இந்தப் படத்தில் தமிழில் பேச வேண்டும் என்பதற்காக ஓர் ஆசிரியரை வைத்துத் தமிழ் கற்றார், சாவித்திரி.

என்.டி.ராமாராவ் - ஜி.வரலட்சுமி ஜோடியாக நடித்த அந்தப் படம், பெரும் வெற்றிப் படமாக அமைந்து சாவித்திரியை கவனிக்க வைத்தது.

அதன் பிறகு சில தெலுங்கு படங்களில் நடித்து வந்த சாவித்திரியை மீண்டும் தமிழ், தெலுங்கு மொழியில் உருவான தேவதாஸ் படத்தில் நடிக்க வைத்தார், வேதாந்தம் 'வேதாந்தம் ராகவையா. இதில் நாயகனாக நாகேஸ்வர ராவ் நடித்தார். 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியான  'தேவதாஸ்' படத்தில், சாவித்ரியைக் காணோம், அதில் அந்தப் படத்தின் பார்வதிதான் இருந்தார் என்று சாவித்திரியை கொண்டாடி தீர்த்தார்கள். 

தேவதாஸ் படம் தயாரிப்பில் இருக்கும்போதே 'மனம்போல் மாங்கல்யம்' படத்தில் நடிக்க சாவித்ரியை அழைத்தார்கள். அந்தப் படத்தின் ஒத்திகையிலும் கலந்து கொண்ட சாவித்திரி, ஒத்திகையின் ஐந்தாவது நாள்தான், அந்தப் பட நாயகன் ஜெமினி கணேசனை சந்தித்தார்.

பனிரெண்டு வயதில் சினிமா சான்ஸ் கேட்டு சென்னை வந்தபோது ஜெமினி ஸ்டுடியோவில் நடிகர்களை தேர்வு செய்யும் வேலையில் இருந்த கொத்தமங்கலம் சுப்புவுக்கு உதவியாக இருந்த ஜெமினி கணேசனை சந்தித்த  சாவித்திரி, அதன் பிறகு இப்போது பாதினாறு வயதில் தெலுங்கு சினிமாவில் நடித்த பிறகு ஜெமினி கணேசனை சந்தித்தார்.

32 வயது  ஜெமினியோடு  அவர் பழக ஆரம்பித்தார். தனது 19-வது வயதிலேயே பாப்ஜி என்ற அலமேலுவை திருமணம் செய்துகொண்டு, குழந்தைகளோடு வாழ்ந்த ஜெமினி, 31-வது வயதில் புஷ்பவள்ளி என்ற நடிகையோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார்.

பாப்ஜி,  புஷ்பவள்ளி ஆகிய இருவரோடு திருப்திகொள்ளாத மனநிலையில், ஜெமினியின் மூன்றாவது தேர்வாக இருந்தார் சாவித்திரி. பழக ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் கடந்துதான்,  ஜெமினி-சாவித்திரி உறவு வெளிஉலகத்துக்கு தெரிந்தது.

எல்.வி பிரசாத் இயக்கிய மிஸ்ஸியம்மா படத்திற்கு இரண்டாம் கதாநாயகி வேடம் சாவித்திரிக்கு வழங்கப்பட்டது. முதல் இருநாட்கள் படப்பிடிப்பிலேயே இயக்குநருக்கும் முக்கிய கதாநாயகிக்கும் பிரச்சினை எழுந்தது. இதனால் படம் பாதியில் நின்றது. இயக்குநர் ஒரே முடிவாக இரண்டாவது நாயகி சாவித்திரியை முதல்நாயகி ஆக்கினார்.

காதல், குறும்பு, கோபம், தாபம் என அத்தனை பக்கங்களிலும் அற்புதமாக அசத்தியிருந்தார் சாவித்திரி. எல்.வி.பிரசாத் முதல் நடிகையிடமிருந்து எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பான நடிப்பை திரையில் தெறிக்கவிட்டிருந்தார் சாவித்திரி. மிஸ்ஸியம்மா என்ற அந்தப் படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கூட்டம். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு போனார் சாவித்திரி. 

திரையுலகை ஆட்டிப்படைத்த பிரபல கதாநாயகர்களே, 'இணையாக நடிக்க சாவித்திரியை ஒப்பந்தம் செய்யுங்கள்' என  வெட்கத்தை விட்டுத் தயாரிப்பாளரிடம் கேட்கும் அளவு சாவித்திரியின் புகழ் கொடி பறந்துகொண்டிருந்தது.

புகழின் வெளிச்சத்தில் இருந்தபோது ஒருநாள் அவரின் நெருங்கிய தோழிகள் சிலர், 'உனக்கு இருக்கும் திறமைக்கு ஏன் நீயே படத்தை தயாரித்து, இயக்கக் கூடாது' என துாபம் போட்டனர். எறும்பு ஊற கல்லும்தேயும் என்பார்களே...ஒருநாள் அந்த முடிவுக்கு உடன்பட்டார் சாவித்திரி.

தெலுங்கில் சாவித்திரியுடன் நாகேஸ்வரராவ், ஜமுனா நடித்து வெற்றி பெற்ற படம் ’மூக மனசுலு’. இதைத்தான்  சாவித்திரி தமிழில் 1969ல் படப்பிடிப்பை துவங்கி சிவாஜி, சந்திரகலாவும்  நடிக்க ’பிராப்தம்’ என்ற பெயரில் தானே கதாநாயகியாக நடித்து, தயாரித்து இயக்கினார்.

’பிராப்தம்’ படம்  இரண்டு வருடம் தயாரிப்பில் இருந்ததால் வட்டி எகிறி விட்டது. பட தோல்வியினால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

அடுத்து தமிழில் சிவாஜி பத்மினி நடித்த ’வியட்நாம் வீடு’ படத்தை லுங்கில் ’விண்ட சம்சாரம்’ என்ற பெயரில் சாவித்திரியும் ஜக்கையாவும் நடிக்க தயாரித்தார். இந்தப் படமும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இதனால், தனது சொத்துக்களை இழந்தார் சாவித்திரி. அதன் பிறகு நிறைய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியும், பொருளாதார நஷ்டமும் அவரின் வாழ்க்கை பாதையை மாற்றியது. ஆலோசனைகள், அறிவுரைகள் எதையும் கேட்கும் நிலையில் இல்லாமல் மாறிப்போனார்.

மகளை திருமணம் செய்து கொடுத்தவர், மகனுக்கு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க போராடினார். நோய் பாதிப்புக்கு மத்தியிலும் கொஞ்சம் 'நிம்மதி' தேட அதுவே உயிரையும் குடித்தது.

46 வயதுக்குள் பெரும் சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்தவர் சாவித்திரி. அவரின் அற்புதமான நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அவரது நினைவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்திக் கொண்டிருக்கின்றன.

தொகுப்பு : ஜி.பாலன் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக