திங்கள், 27 டிசம்பர், 2021

நடிகை கே.பி.சுந்தரம்பாள் வாழ்க்கை வரலாறு

நான் சினிமாவை தேடிப் போகவில்லை. சினிமாவை தான் என்னை தேடி வந்தது. விளையாட்டாக லட்ச ரூபாய் கொடுப்பீர்களா என்று கேட்டதற்கு, கொடுத்தார்கள் என்கிறார் நடிகையும், பாடகியான கே.பி.சுந்தராம்பாள். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய முதல் கதாநாயகி அவர்தான். முதல் படத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்று இன்றும் பேசப்படும் கே.பி.சுந்தராம்பாள், தங்களது குடும்ப பசியை போக்கவே நடிக்க வந்தவர்.

கே.பி.சுந்தராம்பாளுக்கு சொந்த ஊர் கொடுமுடி. கனகசபாபதி என்கிற சகோதரரையும், சுப்பம்மாள் என்கிற சகோதரியையும் வைத்துக் கொண்டு அம்மா பாலம்மாள் வீடு வேலை செய்து படிக்க வைப்பதை பார்த்து கண் கலங்கிய சுந்தராம்பாள், படிக்கவே இஷ்டம் இல்லாமல் பள்ளிக்கு சென்றார். ஆனால், பாடகி கூடிய திறமை அவருக்குள் இருந்தது. சிறுவர் சிறுமிகளுடன் சேர்ந்து விளையாடும் போது அவர் பாட ஆரம்பித்தால் அத்தனை பேரும் அமர்ந்து கேட்பார்கள்.

சுந்தராம்பாளின் பாட்டு திறமையை அறிந்த போலீஸ் அதிகாரி கிருஷ்ணசாமி, அவருக்கு ஐம்பது ரூபாய் சன்மானம் கொடுத்து ஆண்டிப்பட்டி ஜமீன்தாரிடம் அவரது திறமையை எடுத்துக் கூற, அவரும் குடும்பத்துடன் அமர்ந்து சுந்தராம்பாளின் பாடலை கேட்டு பிரமித்து போனார். ஆறு வயத்தில்  அற்புத திறமை உடைய இந்த பெண்ணுக்கு முறைப்படி சங்கீதம் கற்றுக் கொடுத்தால் பெரிய திறமைசாலியாக இருப்பாள் என்று விரும்பினார். ஆனால், சுந்தராம்பாள் தாயாரை விட்டு பிரிய மனம் இல்லை என்று பரிசு வாங்கிக் கொண்டு திரும்பிவிட்டார்.

பள்ளியிலும், கோவிலிலும் பாடிக் கொண்டிருந்த சுந்தராம்பாள் உயர் போலீஸ் அதிகாரி முன்பும், ஆண்டிப்பட்டி ஜமீன்தார் முன்பும் பாடிய செய்தி கொடுமுடிப் பகுதி முழுவதும் பரவியது.

கரூரில் உள்ள தாய் மாமன்கள் சங்கமேஸ்வரன், மலைக்கொழுந்து, நடேசன் ஆகியோர் வீட்டுக்கு செல்ல ரயிலில் மாமா மலைக்கொழுந்துவுடன் சென்று கொண்டிருந்த சுந்தராம்பாளைப் பார்த்த கொடுமுடியை சேர்ந்த ஒருவர், ''குழந்தே... நீ நல்லாப் பாட்டு பாடுவியாமே... எங்கே... ஒரு பாட்டு பாடேன்'' என்று விரும்பி கேட்க, சக பயணிகளும் ஆர்வத்துடன் வற்புறுத்த, மாமாவின் ஒப்புதலுடன் சுந்தராம்பாள், தனது கணீர் குரலில்.. ஓங்கி ஒலித்து ஒரு பாடலை பாடினார். அந்த பாடலை அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவரும் ஆர்வமாகக் கேட்டு மகிழ்ந்தனர்.

அந்த ரயில் பெட்டியில் வந்த வேலு நாயரும், அவரது மனைவி ராஜாமணியும், சுந்தராம்பாளின் பாடலை கேட்டு ரசித்ததுடன், அவரை பாராட்டி பேசியதுடன், தான் கும்பகோணத்தில் தங்கி நாடகக் கம்பெனி நடத்தி வருவதாகவும், இப்போது கரூர் நகருக்கு நாடகம் நடத்த தனது நாடகக் குழு வந்திருப்பதையும் தெரிவித்து, உங்கள் குழந்தைக்கு நல்லா பாடும் திறமை இருக்கு. விருப்பம் இருந்தால், எங்கள் குழுவில் சேர்ந்து நடிக்க அனுப்புங்க. அவரது திறமையும் வளரும். எங்களால முடிந்த உதவியும் செய்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

முதலில் தயங்கிய சுந்தராம்பாளின் மாமா, குடும்ப வறுமை இவள் மூலம் தீரட்டும் என்று... நடிக்க சம்மதித்தார். கிடைத்ததோ... குடும்ப வறுமை காரணமாக தனது குழந்தைகளையும் கிணத்தில் தள்ளி தானும் தற்கொலை செய்து கொள்ளும் நல்ல தாங்கள் நாடகத்தில், நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் என்ற வேடம்.

முதல் நாடகத்தில் ஆண் வேடத்தில் ''பசிக்குதே... வயிறு பசிக்குது' என்று  மிக அருமையாக பாடி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற  சுந்தராம்பாள்,  தொடர்ந்து நாடகங்களில் நடித்து, தனது குரல் மூலம் புகழ் பெற்றார். ஓரளவுக்கு பணம் சம்பாதித்து குடும்பச் சுமையை குறைக்க உதவினார்.

1917 -ஆம் ஆண்டு இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகம் நடைபெற்றது. அவரது குரல் வளத்தை எல்லோரும் பாராட்ட தொடங்கினார். வள்ளிதிருமணம், நந்தனார், நல்லதங்காள், கோவலன், ஞானசவுந்தரி, பவளக்கொடி என பல நாடகங்களில் நடித்து  தனது பதினைந்தாவது வயதில் ஸ்த்ரீபார்ட் நிலைக்கு உயர்ந்தார். அவருடன் நடிக்கவே பல நடிகர்கள் தயங்கினார்கள். தனது நடிப்பாலும், குரல் வளத்தாலும் தங்களது வேடத்தை சாதாரணமாகி விடுவார் என்று அஞ்சினார்கள். 

மீண்டும் 1926இல் ஒன்றரை ஆண்டு ஒப்பந்தத்தில் இலங்கைக்கு சென்றார், சுந்தராம்பாள். அவருடன் ராஜப்பாட்டை வேடத்தில் நடிக்க சென்றவர்கள் மூன்று நாட்களுக்குமேல் தாக்குபிடிக்க முடியவில்லை. சுந்தரம்பாளுடன் இணையாக நடிப்பதற்கு ஒருவருமே இல்லை என்கிற நிலை உருவானது.

ஒப்பந்தக்காரருக்கு வசூல் குறைந்து நஷ்டம் ஏற்பட்டது. அப்போதுதான் கண்ணையா கம்பெனியில் தனது குரல் வளத்தால், நடிப்பால் பலரது கவனத்தைப் பெற்று புகழுடன் இருந்த கிட்டப்பா பற்றி தெரிந்து  கொண்ட ஒப்பந்தகாரர் மிகுந்த பிரயாசைப்பட்டு அவரை இலங்கை அழைத்து வந்தார்கள்.

கிட்டப்பாவுடன் கே.பி.சுந்தராம்பாள் ஈடு கொடுத்து நடிக்க முடியுமா என்று தகவல் வெளியாகி அது கே.பி.சுந்தரம்பாள் காதுக்கும் எட்டியது.

1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள், கிட்டப்பா நடித்த வள்ளி திருமணம் அரங்கேறியது. ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு நடித்து அனைவரையும் கவர்ந்தனர். அந்த ஜோடிப் பொருத்தத்தை பலரும் புகழ்ந்து தள்ளினர். தொடர்ந்து இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து வந்தனர்.

சுந்தராம்பாள் கிட்டப்பா இருவருக்கும் இடையில் ஆத்மார்த்தமான ஈடுபாடு, மனித நேயம், காதலாக வளர்ந்தது. திறமையின் அடிப்படையில் இணைந்தவர்கள் வாழ்க்கையிலும் இணையும் நிலைக்கு காலம் கொண்டு சென்றது.

கிட்டப்பா ஏற்கனவே திருமணம் செய்தவர். பிரமாண வகுப்பைச் சேர்ந்தவர். சுந்தராம்பாள் கவுண்டர் வகுப்பைச் சேர்ந்தவர். இருவரும் இணைய எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் சுந்தராம்பாளை மணமுடிப்பது என்பதில் உறுதியாக இருந்த கிட்டப்பா 1927-ல் மாயவரம் கோயில் ஒன்றில் மாலை மாற்றித் தாலி கட்டினார்.

சுதந்திர வேட்கையும், காங்கிரஸ் ஈடுபாடும் சுந்தராம்பாள் வாழ்க்கையில் புது பாதை அமைத்தது. சுதந்திர வேட்கை மிகுந்த பாடல்களைப் பாடி சாதாரண மக்கள் மத்தியில் சுதந்திர தாகம் ஏற்பட சுந்தராம்பாள் காரணமாக இருந்தார். பல்வேறு இசைத் தட்டுகளில் சுந்தராம்பாள் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு எங்கும் ஒலிக்கத் தொடங்கின.

கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் காங்கிரஸ் காங்கிரஸில் தீவிரமாக இயங்கினர். அவர்களது  நாடகங்களில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிரான ஏராளமான பாடல்கள் இருந்தன. நாடகங்களில்லாமல் தனித்த பாடல்களாகவும் விடுதலைப் போராட்டப் பாடல்களை இவர்கள் இருவரும் பாடினர்.

இந்தப் பாடல்களில் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத் தலைவர் சத்தியமூர்த்தி நேரடியாக கொடுமுடிக்குச் சென்று காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் நடைபெறும் முக்கியமான கூட்டங்களில் பாடுவதற்கு கே.பி.சுந்தராம்பாளை அழைத்திருக்கிறார்.  

அவரது வேண்டுகோளை ஏற்று ஒரு பக்கம் கணவருடனும், தனியாகவும் மேடைகளில் சுதந்திர தாகத்தை வளர்த்தார், சுந்தராம்பாள்.

தான் இல்லாத போது வேறு நடிகை ஒருவருடன் கிட்டப்பா நெருங்கி பழகுகிறார் என்பதை கேள்விப்பட்ட சுந்தராம்பாள், ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்த்து கேள்வி எழுப்பத் தொடங்கினார். இதனால், இருவருக்குமான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியது.

இந்த நிலையில் கிட்டப்பாவின் குடும்பம் சுந்தரம்பாளிடமிருந்து பிரித்து அவரை செங்கோட்டைக்கு அழைத்து சென்றது. இதனால், பல நாட்கள் கிட்டப்பா சுந்தராம்பாளின் வீட்டுக்கு வருவதை கிட்டப்பா தவிர்த்தார். இருப்பினும் இருவரும் தனித்தனியாக நாடகங்கள் போட்டு வந்தனர். இதற்கிடையில் 1928 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி கே.பி.சுந்தராம்பாளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சேதி கேட்டும் குழந்தையைப் பார்க்க கிட்டப்ப வரவில்லை. 11 நாளில் குழந்தை அந்த குழந்தை இறந்துவிட்டது.

சுந்தராம்பாளிடம் இருந்து விலகி சுந்தராம்பாள் நினைவாக வாழ்ந்த கிட்டப்பா, சுந்தரம்பாள் இல்லாது நிறைய துன்பங்களை அனுபவித்தார். சுந்தராம்பாளை மறக்க முடியாது மதுப்பழக்கத்துக்கும் அடிமையானார்.

காலம் இருவரையும் பிரித்து வேதனைப் படுத்துகிறது என்று வருத்தப்பட்ட சுந்தராம்பாள், கிட்டப்பாவின் நினைவுகளுடன் வாழ்ந்தார்.

1933இல் கிட்டப்பாவுக்கு உடல்நிலை மோசமாகி வயிற்றுவலி பெரிதாகி மருத்துவத்தை மேற்கொள்ள வைத்தது. இதனால் ஓரளவு தேறி இருந்த கிட்டப்பா, திருவாரூரில் ஒரு நாடகத்தில் நடிக்கும்போது, மயங்கி விழுந்து மேடையில் சரிந்தார். 1933 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி தனது 27 வயதில் எல்லோரையும் விட்டு பிரிந்தார்.

6 ஆண்டு திருமண வாழ்வு - 3 ஆண்டு பிரிவு. கடைசி 3 ஆண்டு சேர்ந்து வாழ்ந்த அந்த வாழ்க்கையே போதும் என்று வெள்ளைச்சேலையிலும், விபூதியுமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த மாபெரும் கலைஞர் கே.பி.சுந்தரம்ப்பளை மீண்டும் மக்கள் முன் அழைத்து வந்தது, சினிமா.

பிரபல பத்திரிக்கையாளரும் தேசபக்தருமான ஜி.ஏ.நடேசன் மாம்பலத்தில் வசித்தார். அவருடைய பெரிய மகளுக்கு பிரசவ நேரம் என்பதால்,  அவருக்கு உதவியாக இருக்க மாம்பலத்தில் உள்ள நடேசன் வீட்டுக்கு சுந்தராம்பாள் சென்றிருந்தார்.

அப்போது தேனாம்பேட்டையில் உள்ள சுந்தரம்பாளின் வீட்டுக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியும், அவரது நண்பரும், சினிமா தயாரிப்பாளருமான அசன்தாஸும் சுந்தரம்பாளின் மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, தான் நந்தனார் என்கிற படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நந்தனாராக நடிக்க  சுந்தராம்பாளை ஒப்பந்தம் செய்து தர வேண்டும் என்றும்  சுந்தரம்பாளின் மாமாவிடம் தயாரிப்பாளர் அசன்தாஸ் கேட்டிருக்கிறார்.

அதற்கு, “என்ன லட்ச ரூபாய் கொடுப்பீர்களா?” என்று விளையாட்டாக சுந்தரம்பாளின் மாமா கேட்டிருக்கிறார்.

''லட்ச ரூபாய் வேண்டுமா? தரத் தயார். இதோ முன் பணமாக இருபத்தி ஐந்தாயிரத்துக்கு செக் பிடிங்க…” என்று ஒரு செக்கை எழுதி அவரிடம் கொடுத்திருக்கிறார், அசன்தாஸ்.

இதெல்லாம்  சுந்தராம்பாளுக்கு மறுநாள்தான் தெரிந்திருக்கிறது.

“என் கணவருக்கு பிறகு வேறு எந்த ஆண் நடிகருடனும் நான் கதாநாயகியாக நடிக்க விரும்பவில்லை. ஆனால், எனக்கு ஏற்ற வேடமாக நந்தனார் இருந்ததால் நடித்தேன். குடும்ப பொறுப்புடன் மாமா முன் பணமும் வாங்கி விட்டதால் நானும் சினிமாவில் நடிக்க சம்மதித்தேன். இதுதான் சினிமாவில் நடிக்க வந்த முதல் நிகழ்ச்சி” என்று தனது முதல் பட வாய்ப்பு பற்றி தெரிவித்திருக்க்கிறார், கே.பி.சுந்தராம்பாள்.

மானிக்லால் டாண்டன் இயக்கத்தில் மகாராஜபுரம் விசுவநாத அய்யருடன் கே.பி.சுந்தராம்பாள் நடித்த ‘பக்த நந்தனார்’ படத்தில் மொத்தம் 41 பாடல்கள் இடம்பெற்றன. இதில் 19 பாடல்களை கே.பி.சுந்தராம்பாள் பாடி இருந்தார்.

பக்த நந்தனார் படத்தில் கேபி. சுந்தராம்பாளுடன் வேதியராக நடித்தவர் விஸ்வநாத அய்யர். வேதியர் பக்த நந்தனாரிடம் மன்னிப்புக் கேட்கும் காட்யில் அவர் சுந்தராம்பாளின் காலில் விழவேண்டும். விஸ்வநாத அய்யர் எந்த மறுப்பும் இன்றி நடித்துமுடித்தார்.

படம் வெளியானபோது சிலர் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தினர். ‘விஸ்வநாத அய்யர் போன்ற கலைஞர்கள் ஒரு பெண்ணில் காலில் விழுந்து வணங்கலாமா’ என்று கேட்டனர். அதற்கு விஸ்வநாத அய்யர், "கே.பி.எஸ் என் முன்னால் ஒரு தெய்வம் போல் நின்றார், அடுத்த கணம் அவர் காலில் என்னையும் அறியாமல் விழுந்து வணங்கி விட்டேன். மேலும் கலைஞர்களான எங்களுக்குள் எந்த பேதமும் கிடையாது" என்று கூறி பதிலடி கொடுத்தார்.

பக்த நந்தனார் படம் வெளியான ஆண்டே கே.பி.சுந்தராம்பாள் ஒப்புக் கொண்ட படம், ‘மணிமேகலை’. பொம்மன் ஈராணி இயக்கிய இந்தப் படத்தில் பாபநாசம் சிவன் இசையில் பதினோரு பாடல்களை பாடி இருந்தார், கே.பி.சுந்தராம்பாள். 1938 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940 ஆம் ஆண்டு வெளியானது.

‘மணிமேகலை’ படத்திற்கு பிறகு கே.பி.சுந்தராம்பாளை சந்தித்த சுப்பையா செட்டியார் என்கிற தயாரிப்பாளர் ‘’வள்ளி திருமணம்’ என்கிற படம் எடுக்கும் திட்டம் வைத்து இருப்பதாகவும், அதில் முருகனாக நீங்களும், வள்ளியாக எம்.எஸ்.சுப்புலட்சுமியும் நடிக்க வேண்டும். அதற்கான முயற்சியில் இருக்கிறேன். உங்கள் சம்பளம் எவ்வளவு’’ என்று கேட்டிருக்கிறார். கே.பி.சுந்தராம்பாள் தனது சம்பள தொகையை தெரிவித்ததும், அது பெரிய தொகையாக இருக்கிறது என்று அந்தப் படத்தை தொடங்கவில்லையாம்.

அதன் பிறகு அரசியல், இசைக் கச்சேரி என்று பிசியாக இருந்த கே.பி.சுந்தராம்பாளை அவ்வையார் படத்திற்கு அழைத்திருக்கிறார், பிரபல தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன். மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட அவ்வையார் படத்தை கொத்தமங்கலம் சுப்பு எழுதி, இயக்கினார். இந்த படம் 1953ஆம் ஆண்டு வெளியானது.

அவ்வையார் எப்படி இருப்பார் என்பதற்கு கே.பி.சுந்தராம்பாள் உருவகப்படுத்தும் நிலை தோன்றிற்று. வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் சிவாஜி நினைவுக்கு வருவது போல், அவ்வையார் என்றால் கே.பி.சுந்தராம்பாள் நினைவுக்கு வருவார்.  அந்த அளவிற்கு அவ்வையாராக  வாழ்ந்தார், சுந்தராம்பாள். இந்தப் படத்தில் 48 பாடல்கள். இதில் முப்பது பாடல்களை கே பி சுந்தராம்பாள் பாடியிருந்தார்.

சென்னையில் 20 கிரவுண்ட் இடம் வாங்கிய கே.பி.சுந்தராம்பாள், காங்கிரஸ் தலைவர் எஸ், சத்யமூர்த்திக்கு 4 கிரவுண்ட் நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார். 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், கே.பி.சுந்தராம்பாள். 

1964-ல் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் வற்புறுத்தலில் 'பூம்புகார்' படத்தில் கவுந்தி அடிகளாக நடிக்க மீண்டும் சினிமாவுக்கு வந்தார். பதினோரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 1964ஆம் ஆண்டு கலைஞரின் பூம்புகார் படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை ஏற்று கே.பி.சுந்தராம்பாள் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.   

‘திருவிளையாடல்’ படத்திலும் அவ்வைப்பாட்டியாக நடித்தார். ‘பழம் நீயப்பா’ என்ற பாடல் ஒலிக்காத ஆலயங்களே இல்லை. இன்றைக்கும் இவரின் ‘ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ’ என்று ஒலிக்காத இடமே இல்லை. ‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ என்ற பாட்டுக்கு உருகாதவர்களே இல்லை.

மகாகவி காளிதாஸ், கந்தன் கருணை, உயிர் மேல் ஆசை, துணைவன், சக்திலீலை, காரைக்கால் அம்மையார், திருமலை தெய்வம் என்று அவர் நடித்து 12 படங்களில் வெளியாகி இருக்கின்றன. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஞாயிறு திங்கள் என்கிற ஒரு படத்திற்கு பாடி இருக்கிறார். அந்தப் படம் இன்னும் வெளியாக வில்லை. அதே போல அவரையும், அவரது காதல் கணவர் கிட்டப்பாவையும் இணைத்து ஸ்ரீவள்ளி என்கிற படம் உருவாக இருந்தது. குறைந்த சம்பளத்தில் இருவரும் நடிக்க ஒப்புக் கொண்டாலும் பல காரணங்களால் அந்தப் படம் தொடங்கவே இல்லை.

கொடுமுடி பாலாம்பாள் மகள் சுந்தராம்பாள் என்பதை தனது கணீர்க் குரல் மூலம் கே.பி.சுந்தராம்பாள் என்று உணர வைத்த கே.பி.சுந்தராம்பாள், தனது ஊரில் திரையரங்கம் ஒன்றை கட்டி 1968-ல் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை கொடுமுடிக்கு அழைத்து திறப்பு விழா செய்தார்.

12 படங்களில் மட்டுமே நடித்தவர், 260 பக்திப் பாடல்கள் பாடியவர். 1970-ல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, துணைவன் படத்திற்காக  பெற்ற கே.பி.சுந்தராம்பாள், சிறந்த தேசிய பின்னணிப் பாடகி விருது, தமிழ் இசைச் சங்கம் வழங்கிய இசைப்பேரறிஞர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற கே.பி.சுந்தராம்பாள், 1980-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி காலமானார்.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக