காந்திமதியின் அம்மா ஊரு மானாமதுரை.
அப்பா ஊரு போடிநாயக்கனூர். அப்பா கலெக்டர்
அலுவலகத்தில் வேலை பார்த்தார். குடும்பத்தில் கொஞ்சம் கஷ்டம் வந்த போது ஆறாவதுக்கு
மேல் படிக்க வாய்ப்பு இல்லாமல் போனது.
சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீதும் கூத்தின்
மீது அப்படியொரு ஈடுபாடு காந்திமதிக்கு. மானாமதுரையில் கோயில் திருவிழா, ஊரில் ஒரு விழா என்றால் குதூகலமாகிவிடுவார் காந்திமதி. வள்ளி
திருமணம், பவளக்கொடி, அரிச்சந்திரா மயானகாண்டம் போன்ற நாடகங்கள், விடிய விடிய போடுவார்கள். அந்த நாடகங்களை கண்கொட்டாமல், விடிய விடிய பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, வீட்டில்,
அக்கம்பக்கத்தில் நடித்துக்காட்டுவார். ராஜபார்ட், ஸ்த்ரீ பார்ட், கள்ளபார்ட் என நாடகத்தின் அத்தனை
கதாபாத்திரமாகவும் மாறிப் பேசுவார். ஒரு வசனம் விடாமல் பேசுவார்.
திறமையான பெண்ணாக
இருக்கிறது. சினிமாவில் நடித்தால் பெரும் புகழும் பணமும் கிடைக்கும் என்று
எல்லோரும் உசுப்பிவிட்டார்கள். காந்திமதி அதே நினைவாக இருந்தார். தனது திறமையை
நிருபிக்க வாய்ப்பு வேண்டும். அற்ற்ஹற்கு சென்னைக்கு செல்ல வேண்டும் என்று அடம்
பிடித்தார். முதலில் அம்மா ஒத்துக்கொண்டார். பிறகு அப்பாவை சம்மத்திக்க்
அவிப்பதற்குள் அவருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
அப்பாவின் அரை
மனதுடன் சென்னைக்கு ரயிலேறினார். சென்னையில் பெரியப்பா டிரைவராக வேலைப் பார்த்துக்
கொண்டிருந்தார். அவர் வீட்டில் தங்கிக் கொண்டு நடிக்க முயற்சி செய்தார். அதற்காக
நடனம் ஆட கற்றுக் கொண்டார்.
இவரது திறமையை அறிந்த எஸ்.வி.சகஸ்ரநாமம் தனது
நாடக் குழுவில் சேர்த்துக் கொண்டார். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் நாடகக் குழு, அந்தக் காலத்தில் வெகு பிரபலம். இந்தக் குழுவில் சேர்ந்து
நடிக்கத் தொடங்கிய போது இவரின் நடிப்பும் வசனமும் குறிப்பாக வசன உச்சரிப்பும்
தனித்து இவரை அடையாளம் காட்டியது.
ஜோசப் தளியத் இயக்கத்தில் வந்த ‘இரவும் பகலும்’
தான் ஜெய்சங்கரின் முதல் படம். ஜெய்சங்கருக்கு மட்டுமல்ல... காந்திமதிக்கும் இதுவே
முதல்படம். பிறகு, காந்திமதியே மறந்துவிட்ட
அளவுக்கு எத்தனையோ படங்கள். ஒரு காட்சி, கூட்டத்தில் ஒருவர்,
ஒரேயொரு வசனம்... என்றெல்லாம் நடித்து வந்தார்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான யாருக்காக
அழுதான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில்தான் இவரின் முகம்
ரசிகர்களுக்கு பரிச்சயமானது.
எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களின் கருப்பு
வெள்ளை, கலர் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
எம்ஜிஆருக்கு அம்மா, சிவாஜிக்கு அம்மா என்றெல்லாம்
நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கதவு திறந்த படம், மிகப்பெரிய பாதையையே உருவாக்கித் தந்த படம் என்றெல்லாம் போற்றப்பட்டு,
மொத்த திரையுலகையும் தமிழ் உலகையும் வியக்க வைத்தது பாரதிராஜாவின்
‘16 வயதினிலே’.
இந்தப் படத்தில் சப்பாணி, மயிலு, பரட்டையன், டாக்டர் எல்லோரும் நம் நினைவில் நிற்கிறார்கள். அதேபோல் இன்றைக்கும் நம்
மனதில் நிற்கிற குருவம்மா கேரக்டரை அவ்வளவு சுலபமாக எவரும் மறந்துவிடமுடியாது.
மயிலின் அம்மா குருவம்மா... அச்சு அசலான
கிராமத்து அம்மா. வந்த வம்படியை விடாமல், நீயா நானா என்று
பார்த்துவிடுகிற ஆவேச அம்மா. மானம் போய்விட்டதை அறிந்து துடித்துக் கதறி, உயிர்விடுகிற யதார்த்த எளிமையான மாந்தராக, அம்மாவாக,
குருவம்மாவாக அப்படியொரு அவதாரம் எடுத்தார் காந்திமதி.
(16 வயதினிலே)
அடுத்து கவுண்டமணிக்கு ஜோடியாக, பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் மிகச்சிறந்த
நடிப்பை வழங்கியிருந்தார். இந்த இரண்டு படங்களும் காந்திமதி எனும் நடிகை, சாதாரணரில்லை என்பதை தெளிப்படுத்தின.
(கிழக்கே போகும் ரயில்)
கே.பாக்யராஜ் முதன் முதலாக இயக்கிய ‘சுவரில்லாத
சித்திரங்கள்’ படத்தில் கல்லாபெட்டி சிங்காரத்தின் மனைவியாக, பாக்யராஜின் அம்மாவாக இவர் கொடுத்த அலப்பறை செம காமெடி.
‘இன்று போய் நாளை வா’ உட்பட பல படங்களில் இவரும்
தனித்துத் தெரிந்தார். இவர் நடிப்பும் புதுபாணி என்று பேரெடுத்தது. மளமளவென
படங்கள் குவிந்தன.
முன்னதாக, ‘சட்டம் என் கையில்’ படத்தில்
கமலுக்கு அம்மாவாக, அசோகனுக்கு மனைவியாக, குடிசை வாழ் பெண்மணியாக வெளுத்து வாங்கியிருப்பார். இந்த சமயத்தில்தான்
எம்.ஏ.காஜாவின் ‘மாந்தோப்பு கிளியே’ படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தமிழகத்தின் பட்டிதொட்டிகளில், வீடுகளில் நடைபெறும் விசேஷங்களில், லவுட்
ஸ்பீக்கரில், ‘மாந்தோப்பு கிளியே’ காமெடியும் ‘16 வயதினிலே’
ஒலிச்சித்திரமும் ஓடின. ஊரே அமைதியாகக் கேட்டு ரசித்தது. கஞ்சக் காமெடியைக் கேட்டு
வெடித்துச் சிரித்தது. சுருளிராஜன் - காந்திமதி இல்லையென்றால், ‘மாந்தோப்புக் கிளியே’ வெற்றிப்படமாக அமைந்திருக்காது. இன்றைக்கும்
மனங்களில் நின்றிருக்காது.
{மாந்தோப்பு கிளியே}
மணிவண்ணனின் ‘சின்னதம்பி பெரியதம்பி’ படத்தில் பிரபு, சத்யராஜ் அம்மாவாக அட்டகாசமான நடிப்பை வழங்கியிருப்பார்.
‘அக்கா...’ என்று ‘கரகாட்டக்காரன்’ படத்தில் சண்முகசுந்தரம் பேசுகிற வசனம்
பிரபலம். அந்த அக்காவாக, ராமராஜனின் அம்மாவாக சிறந்த நடிப்பை
வழங்கியிருப்பார் காந்திமதி.
அக்காவாக நடிப்பார். உருகுவார். அம்மாவாக
நடிப்பார். பாசம் பொழிவார். மாமியாராக நடிப்பார். மிரட்டியெடுப்பார். ‘கால்கேர்ள்’
வைத்து வியாபாரம் செய்வார். கொஞ்சிக்குழைவார். எந்தக் கதாபாத்திரம் என்றில்லாமல்
அசத்துவார். நல்ல கதாபாத்திரமோ நெகட்டீவ் கதாபாத்திரமோ... அதில் தன் முத்திரையைப்
பதித்துவிடுவார்.
செட்டிநாட்டு பாஷை, மதுரை பாஷை, கோவை பாஷை, சென்னை பாஷை என்பதெல்லாம் காந்திமதிக்கு சரள பாஷை. சகஜ பாஷை. ஆனால் எந்த
பாஷையில், எந்தக் கேரக்டராக இருந்தாலும், கொஞ்சம் இழுத்துப் பேசுகிற காந்திமதி ஸ்டைல்தான்... டாப்டக்கர்.
திரையுலகில் எல்லோருக்கும்... கமல் உட்பட
சகலருக்கும் காந்திமதி அக்காதான். ‘அக்கா அக்கா’ என்று அன்புடன் பழகுவார்கள். கமல், தன் படங்களில் ஏதேனும் ஒரு கேரக்டர் கொடுத்துவிடுவார்.
‘அபூர்வ சகோதரர்கள்’ முதலில் எடுக்கப்பட்டு 20 நாளுடன் நின்றுவிட்டது. அப்போது
மெக்கானிக் கமலுக்கு அம்மாவாக காந்திமதிதான் நடித்தார். பிறகுதான் மனோரமா. ‘உங்க
அம்மாவோட காலைத்தொட்டு கும்பிடணும்டோய்’ என்ற பாடல், படத்தின்
75வது நாளில் இருந்து இடைவேளையில் திரையிடப்பட்டது. அப்போது கமலும் காந்திமதியும்
ஆடிய பாடலைப் பார்ப்பதற்காகவே அடுத்தடுத்து வந்தார்கள் ரசிகர்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, காந்திமதியை ‘குருவம்மா’வாக்கிய பாரதிராஜா, ‘மண்வாசனை’ படத்தில், ‘ஒச்சாயி’ கிழவியாக
ஆக்கியிருந்தார். கையில் கோல், காதில் தண்டட்டி, சுருக்கம் விழுந்த பார்வை, கூன் விழுந்த முதுகு...
வார்த்தைக்கு வார்த்தை பழமொழிகள்... என ’மண்வாசனை’யில் ஒச்சாயிக் கிழவி
எடுத்ததெல்லாம் விஸ்வரூபம்.
{மண்வாசனை}
மண்வாசனை படத்தைப்
பார்த்த கமலஹாசன், மறுநாள் தனது வீட்டுக்கு காந்திமதியை வரவழைத்து விலை உயர்ந்த
பட்டுப்புடவையை பரிசளித்து கௌரவித்தார்.
'விருமாண்டி’யில் விருமாண்டியையும்
அன்னலட்சுமியையும் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றுவார் காந்திமதி.
இரண்டு மூன்று காட்சிகள்தான். ஆனாலும் மனதில் நின்றுவிடுவார் காந்திமதி. இரண்டரை
மணி நேர ‘தேவர் மகன்’ படத்தில், க்ளைமாக்ஸ் காட்சியில்,
தேரோட்டம் நடைபெறும் காட்சியில், ஒரேயொரு
காட்சியில் வருவார் காந்திமதி. அந்த க்ளைமாக்ஸ், தேர்
வெடிக்கும் காட்சி, காந்திமதிக்கான காட்சி. அவர்
நடிப்புக்கான சாட்சி.
மக்கள் திலகம்
எம்.ஜி.ஆருடன் ஒளிவிளக்கு உட்பட பத்து படங்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன்
சவாலே சமாளி உட்பட இருபத்தி ஐந்து படங்கள், கலைஞானி கமலஹாசனுடன் பதினாறு வயதினிலே,
சட்டம் என் கையில், மூன்றாம் பிறை உட்பட ஏராளமான படங்கள், முத்து உட்பட பல படங்கள்
என நாகேஷ், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் பல நடிகர்களுடன் நடித்து எவர் சாயலுமில்லாத நடிகையாக திகழ்ந்தார், காந்திமதி.
முன்னூருக்கும்
மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் காந்திமதிக்கு ஜெயகாந்தனின் உன்னைப் போல ஒருவன் படத்துக்காக இந்திய அரசு விருது வழங்கி கௌரவித்த போது அதிகம்
மகிழ்ந்தார். காரணம் அதில் அவரது நடிப்பு அப்படி பேசப்பட்டது. தமிழக அரசின்
கலைமானை விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ள காந்திமதி சினிமாவை அதிகமாக
நேசித்தார். திருமணம் செய்துகொள்ளவில்லை. சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது இறக்க வேண்டும்
என்று கூறி வந்தார்.
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி பிறந்த
காந்திமதி, புற்று நோய் பாதிப்[பால் மூன்று மாதம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர்
2011ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தனது 66 வது வயதில் காலமானார்.
மகத்தான நடிகை காந்திமதி
காலமாகி பத்து ஆண்டுகளாகின்றன. அவர் நடித்துக் கொண்டிருந்தபோதும் சரி...
காலமாகிவிட்ட இந்த பத்து ஆண்டுகளும் சரி... இனி வரப்போகும் காலங்களும் சரி...
காந்திமதியின் நடிப்புக்கு நிகரான நடிகை இன்னும் வரவில்லை.
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக