திங்கள், 27 டிசம்பர், 2021

நடிகை பசுப்பலேட்டி கண்ணாம்பா வரலாறு

நெடு நெடு உயரம், கம்பீரமான குரல், கனிவான கண்கள், எந்தப் பாத்திரமானாலும் அதற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் ஆளுமைத் திறன் கொண்ட நடிகை பசுப்பலேட்டி கண்ணாம்பா.

ஆந்திராவில் உள்ள கடப்பாவில், எம்.வெங்க நரசய்யா - லோகாம்பா தம்பதிக்கு 1911ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி பிறந்தவர், கண்ணாம்பா. அவரது குடும்பப் பெயர், பசுப்பலேட்டி. அப்பா அரசு ஒப்பந்ததாரராக இருந்தார். குடும்பத்தில் ஒரே பெண் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டார். ஆனாலும், குடும்பச் சூழல்கள் காரணமாக அவரது குழந்தைப் பருவம் ஏலூருவில் உள்ள அவரது தாய்வழிப் பாட்டனாரான நாதமுனி நாயுடு வீட்டில் கழிந்தது.

கண்ணாம்பாவுக்கு சிறு வயதிலேயே இயல்பாகவே இசையில் நாட்டம் இருந்தது. அதனால் கர்நாடக சங்கீதம் கற்றுத் தரப்பட்டது. அவரது தாய்வழிப் பாட்டனாருக்கும் இலக்கியம் மற்றும் கலை, இசையில் ஆர்வமிருந்ததால் பாட்டனாரின் மேற்பார்வையில் கண்ணாம்பா ஊக்கப்படுத்தப்பட்டார். வழக்கம்போல அவரது இசையும், கலை ஆர்வமும் அவரை நாடக மேடையை நோக்கி நகர்த்தியது. அவரது நாடக மேடையேற்றமும் அவரை வளர்த்த ஏலூரிலேயே நிகழ்ந்தது.

1927ஆம் ஆண்டு அதாவது அவரது 16வது வயதில் ‘நாரல நாடக சமாஜம்’ சார்பில் ‘ஹரிச்சந்திரா’ நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தில் சந்திரமதியாக நடித்த நடிகர், மகன் லோகிதாசன் மரணமடைந்த மிக முக்கியமான கட்டத்தில் கதறி அழ நேரும்போது, அவர் அழுவதைப் பார்த்த ரசிகர்கள் சிரித்துக் கலாட்டா செய்து நாடகத்தை நிறுத்தி விட்டார்களாம். அவ்வளவு மோசமாக இருந்திருக்கிறது அந்த நடிகரின் நடிப்பு. இதைப் பார்த்துக் கோபமடைந்த கண்ணாம்பா, அந்த நடிகரை கடிந்து கொண்டாராம்.

உடனே, ‘நடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை அம்மா, அதுவும் சோகக் காட்சியில் நடிப்பது என்பது மிகவும் கடினம். வேண்டுமானால் நீயே வந்து நடித்துப் பார்’ என்றாராம் அந்த நடிகர். அவர் அப்படிச் சொன்னதை சவாலாக ஏற்றுக்கொண்டு பார்வையாளரான கண்ணாம்பா, உடனே மேடையில் தாவி ஏறிக் குதித்து, சந்திரமதியின் பாடல்களைப் பாடி, அக்காட்சியை சோக பாவத்துடன் நடித்து ரசிகர்களின் கைத்தட்டலையும் பெற்றிருக்கிறார்.

அந்த நிமிடம் முதல் அவர் அந்த நாடகக் கம்பெனியின் முக்கியமான நடிகரானார். தொடர்ந்து அனுசுயா, சாவித்திரி, யசோதா போன்ற முன்னணி பாத்திரங்களில் நடித்து ஏலூரு சுற்று வட்டாரங்களில் நல்ல நடிகையாகப் பெரும் புகழையும் பெற்றார்.

இந்த நாடக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரான கே.பி.நாகபூஷணம், கண்ணாம்பாவின் அழகிலும் இசையிலும் நடிப்பிலும் மயங்கி அவர் மீது காதல் கொண்டு, பெற்றவர்கள், பாட்டன்  பாட்டி ஆகியோரின் அனுமதி பெற்று 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார்.

கணவரும் மனைவியுமாக அந்த ஆண்டிலேயே ‘ஸ்ரீராஜ ராஜேஸ்வரி நாட்டிய மண்டலி’ என்ற புதிய நாடகக் குழுவைத் தொடங்கினார்கள். தங்கள் புதிய நாடகக்குழு உறுப்பினர்களுடன் பல நாடகங்களை நடத்தினர். கண்ணாம்பா அந்த நாடகங்களின் நட்சத்திர நடிகையாகவே மக்களால் பார்க்கப்பட்டார். இதனால் கண்ணாம்பாவின் புகழ் மேலும், மேலும் பெருகியது.

ஸ்டார் கம்பைன்ஸ் என்ற பெயரில் திரைப்படங்கள் தயாரித்து வந்த ஏ.ராமையா என்பவர், ‘ஹரிச்சந்திரா’ என்ற புராணப் படத்தில் நடிக்க வைப்பதற்காக கண்ணாம்பாவை அணுகினார். கோலாப்பூரில் உள்ள ஷாலினி சினிடோன் ஸ்டூடியோவில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து சரஸ்வதி டாக்கி என்ற சினிமா கம்பெனி ‘திரௌபதி வஸ்திராபரணம்’ என்ற படத்தை 1936 ஆம் ஆண்டு எடுத்தது. இந்தப் படமும் கோலாப்பூரில்தான் படமாக்கப்பட்டது.

அடுத்து, வேல் பிக்சர்ஸ் தயாரித்த ‘கனகதாரா’ படத்தில் நடித்ததன் மூலம் கண்ணாம்பா பெரும் புகழ் பெற்றார். மூன்று படங்களுக்குப் பின் எச்.எம்.ரெட்டி மற்றும் பி.என்.ரெட்டி ஆகியோருடன் இணைந்து ‘கிருகலட்சுமி’ என்ற படத்தை 1938ஆம் ஆண்டு  சொந்தமாகத் தயாரித்து நடித்தார், கண்ணாம்பா. இதில் கண்ணாம்பாவுடன் இணைந்து நடித்தவர் அப்போதைய புதுமுகம் சித்தூர் வி.நாகையா. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கண்ணாம்பா, நாகையா ஜோடி பெரும் புகழ் பெற்றது.

பொருத்தமான ஜோடியாக ரசிகர்கள் மட்டுமல்லாமல், தயாரிப்பாளர்களும் இருவரையும் ரசித்தனர். அதன் பலனாக இவர்கள் இருவரையும் தமிழ்ப் படங்களில் நடிக்க வைக்க வேண்டுமென இங்குள்ள தயாரிப்பாளர்கள் விரும்பினார்கள்.

ராஜகோபால் பிக்சர்ஸ் நிறுவனம் மோஷன் பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் ’கிருஷ்ணன் தூது’ என்கிற தமிழ் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தனர். அதன் இயக்குநர் ரகுபதி பிரசாத், கண்ணாம்பாவை அணுகி வெற்றி பெற்றார். இதுவே கண்ணாம்பாவுக்கு முதல் தமிழ்ப் படமாக அமைந்தது. இந்தப் படத்தில் திரௌபதியாக வேடமேற்று கண்ணாம்பா நடித்தார்.

அந்தப் படம் எதிரப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அந்தப் படத்தின் மூலம் தமிழைக் கற்றுக் கொண்டு நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் கன்னம்பாவுக்குள் எழுந்தது. ஓய்வின்றி முழுமூச்சுடன் தமிழ் பேச பயிற்சி எடுத்துக் கொண்டு அடுத்த தமிழ்ப் படமான ‘அசோக் குமார்’ படத்தில் இளங்கோவன் எழுதிய வசனங்களை அட்சர சுத்தமாகப் பேசி நடித்தார். இதில் தியாகராஜா பாகவதர், எம்.ஜி.ஆர். குமுதினி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பாபநாசம் சிவன் எழுதிய பாடல்களையும் சொந்தக் குரலில் இந்தப் படத்தில் பாடி ஆடி நடித்திருந்தார், கண்ணாம்பா. ‘அசோக்குமார்' படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அடுத்து பி.யு.சின்னப்பாவின் நடிப்பு, பாடல் இவற்றுடன் உயிரோட்டமான கண்ணகியாக கண்ணாம்பா கண்ணகி படத்தில் நடித்திருந்தார். இளங்கோவனின் இலக்கிய நயம் மிக்க உணர்ச்சிகரமான வசனங்களை, தெளிவாக உயிர்த் துடிப்புடன் பேசி நடித்தார் கண்ணாம்பா.

தமிழ்ப்படம் ஒன்றில் தெலுங்கு பேசும் ஒரு நடிகை, உணர்ச்சிகரமாகத் தமிழ் பேசி நடிக்கிறார். அவர் பேசிய வீர வசனங்கள், அவரைப் புகழின் சிகரத்துக்கே கொண்டு சென்றன.

இதற்கு முன்பே இரு முறை ‘கோவலன்’ என்ற பெயரில் படமாக்கப் பட்டிருந்தாலும், 1941ல் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்து 1942ல் வெளியான ‘கண்ணகி’ அடைந்த வெற்றியை அவை பெறவில்லை.

‘கண்ணகி’ பட வெற்றி ஜோடியான பி.யு.சின்னப்பாவை வைத்தே கண்ணீருக்குப் பஞ்சமில்லாத மற்றொரு கதையான ‘ஹரிச்சந்திரா’ படத்தை சொந்தமாகத் தயாரித்தார் கண்ணாம்பா. ஆனால், இதற்கு எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

சின்னப்பாவும் கண்ணாம்பாவும் தொடர்ந்து ‘அர்த்தநாரி', ‘துளசி ஜலந்தர்', ‘அரிச்சந்திரா', ‘மங்கையர்க்கரசி', ‘சுதர்ஸன்’ என பல படங்களில் இணைந்து நடித்தனர்.

காந்தியின் கொள்கையான காந்தியத்தைச் சிறப்பாகச் சொல்லிய படம் ‘ஏழை உழவன்’. இதனைத் தொடர்ந்து ‘லட்சுமி’ என்றும் ஒரு படத்தைத் தயாரித்தார். ஆர்.எஸ்.மனோகர், சந்திரபாபு, எம்.சரோஜா எனப் பலரும் நடித்திருந்தனர்.

‘நாக பஞ்சமி’ என்றொரு புராணப்படமும் எடுத்தார். கே.ஏ.தங்கவேலு, அஞ்சலி தேவி, எஸ்.வரலட்சுமி நடிப்பில் இப்படம் வெளியானது. சொந்தப் படங்கள் நஷ்டத்தை கொடுத்த போதும், படம் தயாரிக்காமல் அவர் இருந்ததில்லை.

அதே போல மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இருவரின் தாயாகவும் பல படங்களில் நடித்தார். கண்ணீர் சிந்திக் கசிந்து உருகுபவராகவும் கண்களை உருட்டி விழித்துக் கண்டிப்பு காட்டும் தாயாகவும் என இரு வேறு எதிரெதிர் நிலைகளையும் அவர் பல்வேறு படங்களிலும் சிறப்புற வெளிப்படுத்தியவர்.

‘அம்மா வேடம்தானே’ என்று எளிதில் புறம் தள்ளி விட முடியாத அளவுக்கு கண்ணாம்பாவின் வேடங்கள் இன்று வரை நினைவில் கொள்ளும் பாத்திரங்களாக உள்ளன.  

‘கண்ணகி’க்குப் பிறகு அனல் பறக்கும் வசனங்களைப் பேசி கண்ணாம்பா நடித்த படம் ‘மனோகரா.’ ’பொறுமைக்கு எங்கேயிருக்கிறது பெருமை’ என மனம் நொந்து பேசும் வசனம் என்றாலும், மகன் மனோகரன் எதிரிகளால் சங்கிலியால் பிணைக்கப்பட்டுத் தூணோடு கட்டிப் போடப்பட்ட நிலையில், ‘மனோகரா! பொறுத்தது போதும்! பொங்கி எழு!’ என்று கர்ஜிக்கும் போதாகட்டும், இடையில் கொக்கரித்துச் சிரிக்கும் வசந்தசேனை கூட்டத்தாரை ‘செவ்வாழைக் கூட்டத்தில் குதித்தாடும் மந்திகளே….’ என்ற கலைஞர் கருணாநிதியின் நையாண்டி தொனிக்கும் வசனத்தை ஆவேசமாகப் பேசி நடித்த காட்சிகள், ரசிகர்களை மெய் சிலிர்க்கச் செய்தன. கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரம் இது.

இயக்குநர் ஏ.பி.நாகராஜன் கண்ணாம்பாவை முதன்மைப்படுத்தி ‘பெண்ணரசி’ என்றொரு படம் இயக்கினார். பாடல்கள் பிரபலமான அளவு படம் பெரிதாகப் பேசப்படவில்லை. கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் பாத்திரங்களைக் கொண்டு ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்தை சிவாஜி, பானுமதி இணையில் தயாரித்து இயக்கினார். படம் பேர் சொல்லும் படமானது. பாடல்கள் அத்தனையும் பெரும் புகழ் பெற்றன.

‘உத்தமபுத்திரன்’ படத்திலும் தான் பெற்ற மகன், ஆட்சி அதிகாரம் போன்றவற்றின் மீது அக்கறையற்று சிருங்கார மோகத்தில் சிக்கி சீரழிவதைக் கண்டு கொதிக்கும் போதும், தற்குறியானாலும் அவன் சிறைப்படும் அவலநிலை கண்டு கலங்கும்போதும் கொஞ்சமும் மாறாத அதே மன உணர்வை வெளிப்படுத்துவார்.

‘படிக்காத மேதை’ படத்தில் ரங்காராவின் மரணத்துக்குப் பின் சிவாஜியும் கண்ணாம்பாவும் சந்தித்துக் கொள்ளும் அந்த உணர்ச்சிமயமான காட்சியை மறக்க முடியுமா? இருவரும் கதறி அழும் அந்தக் காட்சியில் நம் கண்களும் குளமாகி விடுமே… ‘வணங்காமுடி’, ‘படித்தால் மட்டும் போதுமா?’ போன்ற படங்களில் சிவாஜியின் தாயாராக அருமையாக நடித்தார்.

‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ படத்தில் ‘தொட்டிலிலே பாம்பு’ என்று ஏற்ற இறக்கங்களுடன் வசனத்தை அவர் உச்சரிக்கும் விதமும், எதிரிகளை ஏமாற்ற பித்துப் பிடித்தது போல் நடிப்பதும், கடலுக்கு நடுவில் சிறைப்பட்டபோதும், உளியால் சிறையின் கற்களை உடைத்துத் தப்பிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் அவ்வளவு எளிதானவையல்ல. மிகக் குறைந்த நேரம் மட்டுமே அவர் திரையில் தோன்றினாலும் மிகச் செறிவான காட்சிகள் அவை.

‘தாய்க்குப் பின் தாரம்’, ‘தாயைக் காத்த தனயன்’, ‘தர்மம் தலை காக்கும்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘தாய் மகளுக்குக் கட்டியதாலி’, ‘தாலி பாக்கியம்’ உட்பட பல படங்களில் எம்.ஜி.ஆரின் தாயாராகவும் கண்ணாம்பா நடித்தார். இதில் ‘தாலி பாக்கியம்’ கண்ணாம்பாவின் சொந்தப் படம்.

கணவர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர், சரோஜா தேவி நடிப்பில் ‘தாலிபாக்கியம்' படத்திற்கான அவுட்டோர் படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள முக்கிய பகுதிகளில் நடந்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் படப்பிடிப்பு நடந்து முடிந்து அனைவருக்கும் சம்பளமும், பேட்டாவும் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். அப்பொழுது தான் தெரிய வந்தது தயாரிப்பாளர் தரப்பில் மொத்த படப்பிடிப்பிற்காக கொண்டு வந்த பணம் திருடு போயிருப்பது. தயாரிப்பாளர் கண்ணாம்பா, அவரது கணவர் கே.பி.நாகபூஷணம் அவுட்டோரில் வந்து மாட்டிக் கொண்டோம் என்று அதிர்ச்சியடைந்தார்கள். படப்பிடிப்பபு குழுவினரால் பணம் திருட்டு போன விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. யார் யாரையோ விசாரித்துப் பார்த்தார்கள். திருட்டுப் போன பணம் திரும்பி வரவேயில்லை.

இப்பொழுது என்ன செய்வது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துவதா? கேன்சல் செய்துவிட்டு ஊருக்கு கிளம்புவதா? அப்படி ஊருக்கு போவதாக இருந்தாலும் அவர்களுக்கு தர வேண்டிய பணத்தை செட்டில் செய்யாமல் எப்படி போவது?- இடிந்து போய் உட்கார்ந்துவிட்டார்கள் இருவரும்.

இந்தச் செய்தி எம்.ஜி.ஆரின் காதுகளுக்குச் சென்றது. எம்.ஜி.ஆர் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு அனைவரையும் அமைப்படுத்தினார். தயாரிப்பாளர்களுக்கு தைரியம் சொன்னார். படப்பிடிப்பு நிற்க வேண்டாம் அவுட்டோர் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கட்டும். எல்லாப் பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் பணத்திற்கும் ஏற்பாடு செய்கிறேன் என்றார். படப்பிடிப்பிற்கான தொகை ரூபாய் ஐந்து லட்சத்தை உடனடியாக கொண்டு வரச் சொன்னதுடன், திட்டமிட்டப்படி அவுட்டோர் படப்பிடிப்பு முழுவதும் நடக்க உதவினார்.

தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் மறக்க முடியாத ஓர் ஆளுமைப் பெண்மணி, கண்ணாம்பா. 1930களில் தமிழ், தெலுங்கு திரையுலகில் நுழைந்த கண்ணாம்பா, 1960ஆம் ஆண்டுவரை தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் 175 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். முப்பதாண்டு கால திரையுலக வாழ்க்கையில் அவர் ஏற்ற பாத்திரங்கள்தான் அத்தனையும் மறக்க முடியாத பாத்திரங்கள்.

தங்கள் சொந்த திரைப்பட நிறுவனங்களான ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பிலிம்ஸ், ராஜஸ்ரீ பிக்சர்ஸ், ஸ்ரீவரலட்சுமி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் மூலம் 25 படங்களைத் தமிழிலும், தெலுங்கிலும் சொந்தமாகத் தயாரித்தவர். நடிப்பதுடன் நின்று விடாமல், அவற்றில் சில தெலுங்குப் படங்களில் சொந்தக் குரலில் பாடியும் இருக்கிறார்.

ஜெமினி நிறுவனத்துடன் இணைந்தும் சில படங்களை தயாரித்தார். அதில் 1949ல் இவர் தயாரித்த ‘நவஜீவனம்’ குறிப்பிடத்தக்க படமாகும். இது தேசிய உணர்வை வெளிப்படுத்திய சிறப்பானதொரு படம்.

முதன்முறையாக ஒருங்கிணைந்த மதராஸ் ராஜதானியில் சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகளை வழங்க முடிவு செய்தபோது, 1949ன் சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெற்றது ‘நவஜீவனம்’.

கண்ணாம்பா - நாகபூஷணம் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் ஒரு மகனையும் மகளையும் தத்தெடுத்து வளர்த்தனர். மகளது பெயர் ராஜ ராஜேஸ்வரி. பிரபல இயக்குநர் சி. புல்லையாவின் மகன் சி.ஏ. ராவை ராஜ ராஜேஸ்வரி மணந்து கொண்டார். சி.ஏ.ராவ் ஒரு திரைப்பட இயக்குநரும் கூட. கண்ணாம்பாவின் மகன் தபேலா கலைஞர்.

கண்ணாம்பா பல படங்களில் நடித்து பேரும் புகழும் பொருளும் சம்பாதித்தபோதும் படத் தயாரிப்புத் தொழிலில் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்ததால் இறுதி காலத்தில் தி நகரிலுள்ள தனது வீட்டை விற்க முயற்சி செய்தார். அந்த வீட்டை எம்.ஜி.ஆர். விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். உங்களது இறுதிகாலம் வரை நீங்கள் இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் வேறு வீட்டிற்கு போகக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தார்.

சில காலங்களுக்கு பிறகு புற்றுநோய்த் தாக்குதலுக்கும் ஆளாகி சிகிச்சைகள் மேற்கொண்டும் பலனில்லாமல் 1964 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி அன்று காலமானார். அவர் மறைந்தாலும் அன்பின் ஆகிருதியாய் விளங்கிய அந்தத் தாய் என்னும் பிம்பம் மட்டும் என்றும் உயிர்ப்புடன் நம்முடன் இருக்கிறது.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக