திங்கள், 27 டிசம்பர், 2021

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆருடைய அப்பா நீதிபதி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்பிரிட்டிஸ் ஆட்சியின் போது கேரளாவில் நீதிபதியாக இருந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆருடைய அப்பா பெயர் மேலகத் கோபாலன் மேனன். இவர் கேரளாவில் உள்ள திருச்சூரில் சங்குன்னி மன்னடியார் – லட்சுமி தம்பதிக்கு மூத்த மகனாக 1884 ஆம் ஆண்டு பிறந்தவர்.

இவரது தம்பி பெயர் மேலகத் ரவுன்னி மேனன். படித்து  வழக்கறிஞராக பணியாற்றி வந்த கோபாலன் மேனன், அதன் பிறகு திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய ஊர்களில் நீதிபதியாகப் பணியாற்றி உள்ளார்.

இரின்ஜலகுடாவைச் சேர்ந்த வட்டபரம்பில் நாயர் குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாவை முதலில் மணந்த கோபாலன் மேனன், கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு இரண்டவது மனைவியும் இறக்கவே, மூன்றாவதாக மருதுர் வீட்டைச் சேர்ந்த வடவனூர் சத்தியபாமாவை மணந்தார்.  அவர்களுக்கு சக்ரபாணி, பாலகிருஷ்ணன் என இரண்டு மகன்களும், காமாட்சி, சுமித்ரா என இரண்டு மகள்களும் பிறந்தனர்.

அரசாங்க வருமானம். நல்ல வாழ்க்கை என்று போய்க் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் 1914 ஆம் ஆண்டு ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்தது. அது என்ன சம்வம்ன்னா...

முன் சீப் கோர்ட் நீதிபதியா இருந்த அவர் உறவினர்கள் பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் மாட்டிக் கொண்ட ஒரு வழக்கில் அவர்களுக்கு எதிராக தீர்ப்பு சொல்ல வேண்டிய சூழ்நிலை. நேர்மையா இருந்த அந்த மனிதரால், அவர்களுக்கு ஆதரவாகவும் இருக்க முடியல. அதனால், தன்னோட பணியை ராஜினாமா செய்தார்.

அவரது நேர்மை உறவினர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை. அவரை வெறுத்து ஒத்துக்கினார்கள். தினமும் அவர்கள் முன்பு அவர்களை எதிர்கொண்டு வாழ்வது அவருக்கு கஷ்டமாக இருந்தது. அதனால், தனது மனைவி சத்யபாமா, மற்றும் நான்கு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு இலங்கையில் உள்ள கண்டிக்கு புறப்பட்டார்.

அங்கு அவரது காவல் துறை நண்பர் வேலுபிள்ளை உதவியுடன் கண்டிக்கு அருகே உள்ள நாவலப்பிட்டியில் குடியேறினார். ஒரு எஸ்டேட் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். 1915 ஆம் ஆண்டு சிங்கள - முஸ்லீம் கலவரங்களுக்குப் பிறகு, அவர் ஒரு சட்ட அதிகாரியாகவும், பணிபுரிந்திருக்கிறார்.

அங்குதான் 1917ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதினேழாம் தேதி புதன்கிழமை காலை பதினொன்றரை மணியளவில் எம்.ஜி.ஆர். பிறந்தார்.

தனது மனைவி சத்யபாமாவின், தந்தை சீதாராமன் பெயரில் உள்ள ராமன், தனது தந்தை சந்திரசேகரன் பெயரில் உள்ள சந்திரன் ஆகிய இரு பெயரையும் இணைத்து ராமச்சந்திரன் என்று எம்.ஜி.ஆருக்கு பெயர் வைத்தார் கோபால மேனன்.

சக்ரபாணி, பாலகிருஷ்ணன், ராமச்சந்திரன் என மூன்று மகன்கள், காமாட்சி, சுமித்ரா என இரண்டு மகள்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த கோபால மேனன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் காலரா நோய்யின் தீவிரம் காரணமாக  இரண்டாவது மகன் பாலகிருஷ்ணன், மகள் காமாட்சி ஆகியோரை பலி கொடுத்தார். மேலும் அவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது பல நாடுகளில் காலரா நோயின் தாக்குதல் அதிகமாக இருந்தது. அதானால், இருப்பவர்களையும் இழக்கக் கூடாது என்று ஊருக்கு திரும்ப முடிவு செய்தார்.

கேரளாவுக்கு திரும்பியதும் உறவினர்களிட மிருந்து எந்த ஆதரவுமில்லை. நோயின் தீவிரம் காரணமாக சில மாதங்களில் கோபால மேனனும் காலமானார். வீட்டின் ஒரே வருவாய் ஆதாரம் மறைந்துவிட்டதால், தன பிள்ளைகளை காப்பாற்ற சத்தியபாமா வீட்டு வேலைக்கு சென்றார்.

வேலைக்கு செல்லும் இடத்தில் பெரிய மரியாதையும் கிடைக்கவில்லை. இந்தப் பிள்ளைகளை எப்படி கரை சேர்க்கப் போகிறோமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த சத்தியபாமாவுக்கு வேலு நாயர் வழிகாட்டினார்.

அவர் கொடுத்த தைரியத்தில் கும்பகோணத்துக்கு குழந்தைகளுடன் சென்ற சத்யபாமா, அங்கு சிறுசிறு வேலைகள் செய்து பிள்ளைகளை வளர்த்தார். கஷ்டமோ நஷ்டமோ அது நம்முடன் போகட்டும். பிள்ளைகள் வாழ்க்கை உயர வேண்டும் என்று பள்ளியில் சேர்த்தார்.

ஒரு முறை பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் அரங்கேற்றப்பட்ட 'லவகுசா' நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு லவன் வேஷம் கிடைத்தது. அதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டு எல்லோரும் பாராட்டும் படி எம்.ஜி.ஆர். நடித்திருக்கிறார்.

விடுமுறை நாளில் வில் அம்பு செய்து தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர் விட்ட அம்பு தெருவில் வந்து கொண்டிருந்த நாராயணன் என்பவரை பதம் பார்த்தது. எங்கே பிடித்து அடிப்பாரோ என்று பயந்து வீட்டுக்குள் ஒடி ஒளிந்தார், எம்.ஜி.ஆர்.

நாராயணன் எம்.ஜி.ஆரின் வீடு அருகே சென்ற போது, அங்கு அவரது உறவினர் வேலு நாயரை எதிர்கொண்டார். நலம் விசாரிப்புக்கு பிறகு, அவர் கும்பகோணத்தில் முகாமிட்டுள்ள நாடகக்குழுவுடன் வந்திருப்பதை தெரிவித்தார்.

பிறகு எம்.ஜி.ஆரை அழைத்து பேசி பயத்தை போக்கிய நாராயணன், அம்புவிட்ட கதையும், நாடகத்தில் நடித்த கதையையும் கேட்டு ரசித்தவர், எம்.ஜி.ஆரின் அழகிய தோற்றத்தையும், சுறுசுறுப்பையும் பார்த்து, பையனை என் கூட நாடகத்திற்கு அனுப்புங்கள். நான் அவனை பாத்துக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

அப்போது நாடக கம்பெனிக்கு சிறுவர்கள் தேவையாக இருந்தார்கள். வேலு நாயரும், நாராயணனும் கலந்து பேசினார்கள். சத்யபாமாவிடம் அனுமதி பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம்.

புகழ் பெற்ற பாய்ஸ் கம்பெனி நாடகக்குழுவில் மகன்கள் நடிப்பதற்கு அழைப்பு வந்ததை கண்டு, "படிக்க வேண்டிய வயதில் என் பிள்ளைகளை நடிக்க வைத்து பிழைக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டேனே" என்று வருந்தி, அவர்கள் வயிறு காயாமல் வாழட்டும் என்று சத்யபாமா அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கும், அவரது அண்ணன் சக்கரபாணிக்கும் கும்பலில் ஒருவராக வேஷம் என்கிற நிலைதான். நாடக கம்பெனியில் நாடகம் சொல்லிக் கொடுப்பவர் முதல் சில நடிகர்கள் வரை தனது மகன்களை அடிக்கிறார்கள். காயப்படுத்துகிறார்கள் என்பதை அறிந்த அன்னை சத்தியபாமா, நாடகத்தில் நடித்தது போதும் என்று பாய்ஸ் நாடக கம்பெனியில் இருந்து அவர்களை அழைத்து வந்துவிட்டார்.

பிறகு, இருவரும் கந்தசாமி முதலியாரின் நாடக கம்பெனியில் சேர்ந்தனர். அங்கு சேர்ந்ததுமே, பர்மாவுக்கு செல்கிற வாய்ப்பு கிடைத்தது. ரங்கூனில் நடைபெற்ற நாடகத்திலே உல்லாசத்தைத் தேடுகின்ற ஊதாரியின் வேடத்திலே ஒரு நாடகத்தில் நடித்தார், எம்.ஜி.ஆர்.

அடுத்து ராஜாம்பாள் நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார். வெளிநாடுகளில் ஆறு ஆண்டுகள் நாடகங்கள். அதை முடிந்து இந்தியா திரும்பியதும் முன்பு பணிபுரிந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலிருந்து எம்.ஜி.ஆருக்கு அழைப்பு.

பல ஊர்களில் பல நாடகங்கள். அதில் பதிபக்திசமூக நாடகத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு. கே.பி.கேசவன் என்கிற குணச்சித்திர நடிகர் நாயகனாக நடித்த அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கும், சக்கரபாணிக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது.

அந்த கால கட்டத்தில்தான் தமிழ்  சினிமா பேச ஆரம்பித்தது. இதனால், நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்க ஆரம்பித்தது. எம்.ஜி.ஆருக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எழுந்தது.

தந்து பதிபக்தி நாடகத்தை திரைப்படமாகும் முயற்சியில் இறங்கிய கந்தசாமி முதலியார், நாயகனாக கே.பி.கேசவன் நடித்த பாத்திரத்தில், தனது மகன் எம்.கே.ராதாவை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார். பதிபக்தி நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனின் கையால் வேடம்தான். அதனால், இந்த நாடகம் படமானால், நமக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதில் பெரிய முன்னேற்றம் இருக்காது என்று நினைத்தார், எம்.ஜி.ஆர்.

பதிபக்தி கதைக்கு எதிர்ப்பு கிளம்பியதால், எஸ்.எஸ்.வாசன் எழுதிய கதையை வாங்கி சதி லிலாவதி என்று படத்துக்கு பெயர் வைத்தனர்.  இந்தப் படத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும்படி கந்தசாமி முதலியாரை சந்தித்து கேட்டிருக்கிறார், எம்.ஜி.ஆர்.

மறுநாள் தயாரிப்பாளர் மருதாச்சலத்திடம் எம்.ஜி.ஆரையும், சக்ரபாணியையும் அறிமுகப்படுத்தி, சதிலீலாவதி படத்தில் நடிக்க வாய்ப்பளிக்க உதவ கேட்டுக் கொண்டார். சதி லீலாவதி படத்தில் எம்.ஜி.ஆருக்கு துப்பறிபவன் வேடம் என்றும் சக்ரபாணிக்கு இன்ஸ்பெக்டர் வேடம் என்றும் முடிவு செய்து இருவருக்கும் முன்பணம் கொடுக்கப்பட்டது.

பிறகு எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கிய துப்பறிபவன் வேடத்தை பாய்ஸ் கம்பெனி மணி என்பவருக்கு கொடுத்த மருதாலாசலம் செட்டியார், கதாநாயகனுக்கு உதவுகின்ற நண்பன் வேடத்தை எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப் போவதாக கூறிவிட்டார்.

ஒரு வாரம் கழித்து தனக்கு வேண்டிய நம்மாழ்வார் என்பவருக்கு அந்த வேடத்தை கொடுத்த மருதாசலம் செட்டியார், கடைசியாக இன்ஸ்பெக்டர் வேடத்தை எம்.ஜி.,ஆருக்கு கொடுத்திருக்கிறார்.

எம்.கே.ராதாவும் ஞானாம்பாளும் ஜோடியாக நடித்த சதிலீலாவதி படத்தை எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கினார். 1936 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படம், வெற்றிப் படமாக அமைந்தது.

அதன் பிறகு இன்னொரு படத்திலும் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க கந்தசாமி முதலியார் மூலம் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வேடமா என்று தயங்கிய எம்.ஜி.ஆர், கே.பி.கேசவன் அழைப்பின் பேரில் இரு சகோதரர்கள் படத்தில் வில்லனாக நடிக்க அண்ணனுடன் பம்பாய் புறப்பட்டு சென்றார்.

பம்பாய் சென்ற மறுநாள் எம்.ஜி.ஆர். நடிக்க இருந்த வில்லன் வேடத்தில் டி.எஸ்.பாலையா நடிக்கப் போகிறார் என்று தெரிந்ததும், எம்.ஜி.ஆருக்கு அழுகையே வந்துவிட்டது.

இரு சகோதரர்கள் படத்திற்கு எம்.ஜி.ஆரை மும்பைக்கு அழைத்து சென்ற அந்தப் படத்தின் நாயகன் கே.பி.கேசவன், எம்.ஜி.ஆருக்கு ஆறுதல் கூறி, அந்தப் படத்தில் உள்ள ஜமீந்தார் வேடத்தை அவருக்கு பெற்று தருவதாகவும், அதுவும் ஒரு வில்லன் வேடம்தான். அதில் நடித்து உனது திறமையை வெளிப்படுத்து என்று தெரிவித்திருக்கிறார். 

பிறகு ஜமீந்தார் வேடத்தில் நடிக்க வேறொரு நடிகரை முடிவு செய்த படக்குழு, கடைசியில் ஹெட் கான்ஸ்டபிள் வேடத்தை எம்.ஜி.ஆருக்கு கொடுத்தார்கள்.

சென்னையில் கந்தசாமி முதலியார் சொன்ன இன்ஸ்பெக்டர் வேடத்தை வேண்டாம் என்று சொல்லி இங்கு பம்பாய் வந்தால் கடைசியில் ஹெட் கான்ஸ்டபிள் வேடம் கொடுக்கிறார்களே என்று கை நீட்டி முன் பணம் வாங்கிய கொடுமைக்காக நடித்துக் கொடுத்துவிட்டு சென்னை திரும்பினார், எம்.ஜி.ஆர்.

அதன் பிறகு ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வி.ஏ.செல்லப்பா நடித்த  தக்ஷயக்ஞம் படத்தில் விஷ்ணுவாக நடித்தார் எம்.ஜி.ஆர். அதே நிறுவனம் அடுத்து தயாரித்த மாயா மச்சீந்திரா படத்தில் சூரிய கேதுவின் அண்ணனான விசாலாட்சி மகாராஜா வேடம் எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்டது.

அந்த பாத்திரம் படத்தின் முதல் காட்சியோடு முடிந்துவிடக் கூடிய ஒரு பாத்திரம். இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம் என்று ஒப்புக் கொண்டார், எம்.ஜி.ஆர். ஆனால், சூர்யகேதுவின் பாத்திரத்தில் நடிக்க இருந்த நடராஜ பிள்ளை காலமனாதால், அவர் நடிக்க இருந்த சூர்யகேதுவின் பாத்திரம் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டது.

இந்தப் படத்தில் கத்திச் சண்டை காட்சிகளில் நடித்திருந்தார், எம்.ஜி.ஆர். அது பலரையும் வியக்க வைத்தது.

இந்த நிலையில் உடனே வரசொல்லி சத்தியபாமா எழுதிய கடிதத்தை எடுத்துக் கொண்டு பாலக்காடு விரைந்த எம்.ஜி.ஆர்., அங்கு பார்க்கவி என்கிற பெண்ணை காட்டி அவளை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி இருக்கிறார். திரையுலகில் கதாநாயகனாக உயர்ந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாக எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவரது தயார் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அந்தப் பெண்தான் தனக்கு மருமகளாக வர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.

தாய் சொல்லை தட்டமுடியாமல் பார்க்கவியை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு அழைத்து வந்தார், எம்.ஜி.ஆர்.

தியாகராஜா பாகவதருடன் அசோக்குமார் படத்தில் நடிக்கும் ஒரு சிறிய வாய்ப்பு எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. சினிமாவில் நடிக்க வந்து நாடகத்திற்கும் திரும்ப முடியாத நிலை. அதே நேரம் குடும்பம் பொருளாதாரம் எல்லாம் மனதில் எழ சினிமாவில் என்றாவது ஒரு நாள் சாதிப்போம் என்று கிடைத்த வாய்ப்பை பெற்றுக் கொண்டு நடிக்கிற நிலைக்கு ஆளானார், எம்.ஜி.ஆர்.

ராஜாசந்திரசேகர் திரைக்கதை எழுத டி.ஆர்.ரகுநாத் இயக்கத்தில் சீதா ஜனனம் என்கிற படத்தில் இந்திரஜித் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ராஜாசந்திரசேகருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் உடைந்து போயிருந்தார்.

பட வாய்ப்பு இல்லாமல் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுகின்ற ஏற்பட்டது. அப்போது பத்திரிக்கை ஒன்றில் வெளியாகியிருந்த பட்டாளத்திற்கு ஆட்கள் தேவை என்கிற விளம்பரத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., பட்டாளத்தில் ஜமேதார் வேலையில் சேர முடிவு செய்தார். குடும்ப பொருளாதார பிரச்சினை தீரும் என்று நம்பினார். இது குறித்து அண்ணன் சக்கரபாணியுடன் கலந்து பேசினார்.

பட்டாளத்துக்கு செல்ல அம்மாவும், பார்கவியும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். அதனால், அவர்களை உலக போரை காரணம் சொல்லி சென்னை நகரத்தின் மீது குண்டு மழை பொழிய உள்ளதாக பீதியாக இருக்கிறது. போர் முடிந்த பிறகு வந்து அழைத்துக் கொள்கிறோம் என்று அவர்களை பாலக்காட்டுக்கு அனுப்புவது என்று திட்டம் போட்டார்கள்.

உங்களுடனே இருந்து எல்லாவற்றையும் அனுபவித்துக் கொள்கிறோம் என்று பிடிவாதமாக இருந்தவர்களை ஒரு வழியாக பாலக்காட்டுக்கு அனுப்பி வைப்பதற்குள் எம்.ஜி.ஆருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

பட்டாளத்துக்கு செல்ல ஆயத்தமாகும் போது, நாராயணன் கம்பெனியில் இருந்து எம்.ஜி.ஆருக்கு அழைப்பு வந்தது.

“மாயா மச்சீந்திரா படத்தில் உன்னுடைய கத்தி சண்டை எங்களுக்கு பிடித்திருந்தது. அதனால், நாங்கள் தயாரிக்கும் சாயா படத்தில் உன்னை கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறோம். கதாநாயகியாக குமுதினி நடிப்பார். இவர்தான் இயக்குநர் நந்தலால் என்று நாராயண அய்யங்கார் சொன்னதும், எம்.ஜி.ஆருக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. மகிழ்ஹ்சியில் ஆகாயத்தில் பறப்பது போல உணர்ந்தாராம்.

நான் கதாநாயகனா?, அசோக்குமார் படத்தில் தியாகராஜா பாகவதருக்கு ஜோடியாக நடித்த குமுதினி, எனக்கு ஜோடியா? எம்.ஜி.ஆரால் நம்பவே முடியவில்லை? மகிழ்ச்சியில் திளைத்தார்.

படத்திற்கு 35௦ ரூபாய் சம்பளம். படி செலவுக்கு மாதம் முப்பத்தை ஐந்து ரூபாய் என்று முடிவு செய்து முன்பணமும் கொடுத்தார், நாராயண ஐயங்கார்.

"சாயா" படத்திற்காக தினமும் குதிரை ஓட்டப் பயிற்சி எடுத்துக் கொண்டார், எம்.ஜி.ஆர். சாயா படத்தின் படப்பிடிப்பு கோயம்பத்தூரில் அமைந்திருந்த சென்ட்ரல் ஸ்டுடியோவில் தொடங்கியது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் திடீர் என இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து மோதல். இதனால், படப்பிடிப்பு நின்றது.

சில நாட்களுக்கு பிறகு மீண்டும் சாயா படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், எம்.ஜி.ஆரை படப்பிடிப்புக்கு அழைக்கவில்லை. எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் பி.யு சின்னப்பாவை நடிக்க வைத்து எடுக்கிறார்கள் என்கிற தகவல் மட்டுமே கிடைத்தது. இதனால், பெரும் வேதனைக்கு ஆளானார், எம்.ஜி.ஆர்.

பட்டாளத்துக்கு செல்லும் முயற்சியையும் கைவிட்டோமே என்று வருத்தப் பட்ட எம்.ஜி.ஆர்.

வேதனை வாட்டியது. மனதை தேற்ற மனைவி பார்க்கவியை பார்க்க முடிவு செய்து பாலக்காடு புறப்பட்டார், எம்.ஜி.ஆர். அவர் சென்ற பிறகு அவரது முகவரிக்கு ஒரு தந்தி வந்தது. அவர் மனைவி பார்க்கவி இறந்துவிட்டார் என்று.

பாலக்காடு சென்ற பிறகே மனைவி பார்க்கவி இறந்த தகவலை அறிந்தார் எம்.ஜி.ஆர். வயிற்று வழியால் துடித்து இறந்த மனைவியின் உடலை கூட எம்.ஜி.ஆரால் பார்க்க முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க மயங்கி விழுந்திருக்கிறார்.

காலம் எல்லாவற்றையும் கடந்து போக வைத்தது. சென்னைக்கு திரும்பிய எம்.ஜி.ஆரை அழைத்த இயக்குநர் டி.ஆர். ரகுநாத், தான் இயக்கும் ‘தமிழறியும் பெருமாள்’ படத்தில் பத்து நாட்கள் நடிக்க கூடிய ஒரு சிறு வேடம் இருக்கிறது நடிக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொண்டார். சம்பளம் குறைவு என்றாலும் அவருக்காக அந்த படத்தில் நடித்தார், எம்.ஜி.ஆர்.,

இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கு இரண்டாவது திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார், அன்னை சத்யபாமா. பார்க்கவியுடன் ஒழுங்காக கூட நான் வாழவில்லை. அதற்குள் இன்னொரு திருமணமா? வேண்டவே வேண்டாம் என்று மறுத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற சக கலைஞர்கள் வற்புறுத்தி அவரை சம்மதிக்க வைத்தனர்.

கேரளாவில் குழல்மனனம் பகுதியை சேர்ந்த சந்தானவதியை 1942 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், எம்.ஜி.ஆர்.

சதானந்தவதிக்கு முதன்முறை கர்ப்பம் தரித்தபோது அது தவறுதலாக கர்ப்பப்பையின் வாசலிலேயே உருவானது. இது அவர் உயிருக்கே ஆபத்தை உருவாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்ததால் ஒரு முடிவோடு அதைக் கலைத்தனர். தொடர்ந்து சதானந்தவதிக்கு காசநோய் உருவானது. இதனால் அவர் உடல் பலவீனமடைந்தது. இதனால் அவர் இயல்பான இல்லற வாழ்க்கை வாழ்வது அவர் வாழ்நாளை குறைத்துவிடும் என குடும்ப மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனால் எம்.ஜி.ஆர், திருமணம் ஆனபின்னாலும் பிரம்மச்சாரியாகவே காலம் கழிக்க நேர்ந்தது. ஆனாலும் திரையுலகில் ஒரு அந்தஸ்தை அடையவேண்டும் என்ற லட்சியத்தை அவர் கைவிடாமல் தொடர்ந்து தன் சினிமா முயற்சிகளை தொடர்ந்தார்.

எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கிய தாசிப்பெண் படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துடன் நடித்த எம்.ஜி.ஆர்., அந்தப் படத்தில் கதாநாயகியாக வி.என்.ஜானகி நடித்தார். பார்க்க முதல் மனைவி பார்க்கவி போலவே முக சாயலில் வி.என்.ஜானகி இருந்தார். அவரால் நம்பவே முடியவில்லை.

மறுபடியும் மோகினி படத்தில் மோகினி பாத்திரத்தில் நடிக்க வந்தார், வி.என்.ஜானகி.

கே.சுப்பிரமணியம் தயாரிப்பில் நந்தலால் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவாகி இருந்தார். ஆனால், அந்தப் படம் கை நழுவி போனது. அதன் பிறகு நடிகை கண்ணாம்பாவின் கணவர் நாகபூசனம் இயக்கத்தில் ஹரிச்சந்திரா படத்தில் சத்தியகீர்த்தி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு ரஞ்சனும் டி.ஆர்.ராஜகுமாரியும் ஜோடியாக நடித்த சாலிவாகனன் படத்தில் எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்தார். இதில் ரஞ்சனுடன் எம்.ஜி.ஆர். மோதிக் கொண்ட கத்திச் சண்டைக் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த மீரா படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார், எம்.ஜி.ஆர்.  ஸ்ரீமுருகன் படம் தொடங்கிய போது அதில் கதாநாயகனாக நடிக்க இருந்த தியாகராஜா பாகவதர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் கைதானார். இதனால், பெங்களூரைச் சேர்ந்த ஹொன்னப்ப பாகவதர் அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

அந்த மாற்றத்தை விரும்பாத இயக்குநர் ராஜாசந்திர சேகர், அந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ள, அந்தப் படத்தின் கதாசிரியரான ஏ.எஸ்.ஏ.சாமிக்கு அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்தப் படத்தில் சிவபெருமானாக எம்.ஜி.ஆர். நடிக்க, பார்வதியாக மாலதி என்பவர் நடித்தார். அந்தப் படத்திற்காக ஒரு வாரத்திற்கும் மேல் கடுமையாக பயிற்சி எடுத்துக் கொண்டு ருத்ர தான்தவம், ஆனந்த தான்தவம் என இரு நடனங்களை மாலதியுடன் இணைந்து ஆடினார், எம்.ஜி.ஆர். அந்த நடனம் சிறப்பாக வெளியாகி எல்லோரிடத்திலும் எம்.ஜி.ஆருக்கு நல்ல மரியாதை கிடைத்தது.

ஸ்ரீமுருகன் படம் வெளியானதும் ஏ.எஸ்.ஏ.சாமிக்கு ராஜகுமாரி படத்தை இயக்குகின்ற வாய்ப்பை கொடுத்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம், அந்தப் படத்தில் கதாநாயகனாக பி.யு.சின்னப்பா, கதாநாயகியாக டி.ஆர்.ராஜகுமாரி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதுடன், அவர்களை ஒப்பந்தம் செய்யவும் முயன்றனர்.

ஆனால், இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி, அவர்கள் இருவரும் எனக்கு வேண்டாம். ஸ்ரீமுருகன் படத்தில் சிவனாக நடித்த ராமசந்தர், பார்வதியாக நடித்த மாலதியை ஒப்பந்தம் செய்து தாருங்கள் என்று என்று கேட்டுக் கொண்டார்.

கதை நன்றாக இருக்கிறது. பிரபல் நடிகர்கள் நடித்தால் வெற்றி உறுதியாகிவிடும். நன்றாக செலவு செய்து படத்தை எடுப்போம் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தும், அதை இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி ஏற்றுக் கொள்ளவில்லை.

ராமச்சந்தரையும், மாலதியையும் வைத்து இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கலாம் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி தெரிவித்ததும், உங்களுக்கு நம்பிக்கை இருக்கும் போது அதில் குறுக்கிட நாங்கள் விரும்பவில்லை. உங்கள் விருப்பபடியே படத்தை எடுங்கள் என்று ஏ.எஸ்.ஏ.சாமிக்கு தாயாரிப்பாளர்கள் உடன்பட்டார்கள்.

எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்று இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி உறுதியாக, பிடிவாதமாக இருந்தார்.  இந்த தகவல் எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு சென்ற போது அவருக்கு நம்பிக்கை இல்லை.  

சாயா படத்தில் அவரை மாற்றிய அனுபவம் அவரை அப்படி நினைக்க வைத்தது. எப்போது வேண்டுமானாலும் கதாப்பத்திரங்களை மாற்றிவிடுவார்கள் என்று நினைத்தார்.

இந்தப் படத்தில் நடிக்க இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் சம்பளம் என்று முடிவு செய்து எம்.ஜி.ஆருக்கு முன்பணம் கொடுத்தார்கள். அந்தப் படத்திற்காக பதினெட்டு மாதங்கள் செலவிட்டார் எம்.ஜி.ஆர்.

‘ராஜகுமாரி’ திரைப்படம் வெளியாகி 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகி மிகப்பரிய வெற்றிப்படமாக அமைந்து. தமிழ்த்திரைப்பட  கதாநாயகர்களின் பட்டியலில் எம்ஜிஆருக்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தது. படத்தில் எம்.ஜி.ஆரின் மின்னல் வேக கத்திச் சண்டைகள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

பதினான்கு வயதில் மேடை நாடகங்களில் தோன்றிய எம்.ஜி.ஆருக்கு வெள்ளித்திரை செட்டுக்குள் நுழைய ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டன. 1936ஆம் ஆண்டில் தனது 20ஆவது வயதில் சதி லீலாவதி என்ற படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து 1946 ஆம் ஆண்டு ராஜகுமாரி படத்தின் மூலம் கதாநாயகனாக ஆனார். இந்தப் படம் வெற்றிப் படமாக அமைய, அதே நிறுவனம் அதே ஏ.எஸ்.ஏ.சாமி கூட்டணியில் உருவான அபிமன்யூ படத்திலும் எம்.ஜி.ஆர். நடித்தார்.  

ஏ.காசிலிங்கம் இயக்கத்தில் மருதநாட்டு இளவரசி படத்தில் நடிக்க முடிவான போது, அந்தப் படத்திற்கு கதை வசனம் எழுத கலைஞர் மு.கருணாநிதியை சிபாரிசு செய்தார், எம்.ஜி.ஆர். ராஜகுமாரி, அபிமன்யூ படங்களுக்கு ஏ.எஸ்.ஏ.சாமியுடன் இணைந்து வசனம் எழுதிய கருணாநிதிக்கு மருதநாட்டு இளவரசி படமே அவரது பெயரை தாங்கி வெளிவந்த படமாக அமைந்தது.

1948-ல் பாகவதர் நடித்த ‘ராஜமுக்தி’ படத்தில் எம்.ஜி.ஆர் தளபதி வேடம் ஏற்றிருந்தார். 1949-ல் பாகவதர் நடித்து வெளிவந்த ரத்னகுமார் படத்தில் பாலதேவனாக சிறுபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பாகவதருக்குத் தரவில்லை. அவர் சரிவை சந்தித்தார். அந்தச் சரிவு எம்.ஜி.ஆருக்கு நல்வாய்ப்பாக அமைந்தது.

எம்.ஜி.ஆர் 1948-ல் வி.என். ஜானகியுடன் ‘மோகினி’, 1950-ல் ஜி. சகுந்தலாவுடன் நடித்த ‘மந்திரிகுமாரி’, 1951-ல் மாதுரிதேவியுடன் நடித்த ‘மர்மயோகி’ அதே ஆண்டில் அஞ்சலி தேவியுடன் ‘சர்வாதிகாரி’ என தொடந்து நடித்து முன்னேரிக்கொண்டே வந்தார், எம்.ஜி.ஆர்.

மருதநாட்டு இளவரசி படத்திற்கு கருணாநிதியை எம்.ஜி.ஆர். சிபாரிசு செய்தது போல, தான் கதை எழுதிய மந்திரி குமாரி படத்திற்கு எம்.ஜி.ஆரை சிபாரிசு செய்திருந்தார், கருணாநிதி.  மார்டன் தியேட்டர் தயாரிப்பில் கருணாநிதி கதை வசனத்தில் எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளியான மந்திரிகுமாரி படம் எம்.ஜி.ஆருக்கு பெரும் வெற்றிப் படமாக அமைந்து  

எம்.ஜி.ஆரின் படங்களில் ‘என் தங்கை’ இலங்கையில் ஒரு வருடம் ஓடி வெற்றிவாகை சூடியது. கிறிஸ்தவ மன்னராக எம்.ஜி.ஆர் நடித்திருந்த ‘ஜெனோவா’ நூறு நாட்களைக் கடந்து வெற்றி நடைபோட்டது. இந்தப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதனின் இசையை எம்.ஜி.ஆர் முதன்முதலாக அங்கீகரித்தார்.

பியுசின்னப்பா 1951-ல் மறைந்த பின்பு தமிழ்த்திரையுலகில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை நிரப்ப வாள்சண்டையில் தேர்ச்சி பெற்றிருந்த எம்.ஜி.ஆருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. பி.யு. சின்னப்பாவைப் போல எம்.ஜி.ஆரும் இரண்டு கைகளாலும் வாள் சுழற்றுவதில் கெட்டிக்காரர். 1954-ல் வெளிவந்த “மலைக்கள்ளன்” தமிழுக்கு ஜனாதிபதி விருதை பெற்றுத் தந்தது. 150 நாட்கள் வெற்றிநடை போட்ட இந்தப் படம் எம்.ஜி.ஆரின் வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

1955-ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி ஆகியன வெற்றிப் படங்களாக எம்.ஜி.ஆருக்கு அமைந்தன. அடுத்த ஆண்டில் ‘மதுரை வீரன்’, ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆகிய படங்கள் எம்.ஜி.ஆருக்கு வெற்றிப் பரிசு அளித்தன.

1958-ல் எம்.ஜி.ஆர். இயக்கி தயாரித்த நாடோடிமன்னன் படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அவருக்கு போட்டியாக வந்த ரஞ்சன் படங்களின் தோல்வியால் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர் தனிச்செல்வாக்கு பெற்ற உச்ச நட்சத்திரம் ஆனார்.

அண்ணாவின் அறிவாற்றலில் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவரது படைப்புகளைத் தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தார். பணத்தோட்டம் நாவலை படித்தபோது அவரது தீவிர ரசிகனானார். 'அபிமன்யு' படத்தின் படப்பிடிப்பிற்காக கோவையில் தங்கியிருந்த கருணாநிதியுடனான நட்பும் திராவிடக்கொள்கையின் மீது அவருக்கு ஒருவித ஈர்ப்பை உருவாக்கிக்கொண்டிருந்தது.

சுயமரியாதைக் கொள்கைகளை, திராவிட கலாசாரத்தைப்பற்றி மணிக்கணக்கில் கருணாநிதி பேசுவார். இதன் விளைவாக கதர்ச்சட்டையை கழற்றிவிட்டு கருப்புச் சட்டை மேல் காதல் கொள்ள ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர். பெரியாருடன் முரண்பட்டு அண்ணா, திமுகவைத்துவங்கிய பின்னர் தொடர்ந்து அண்ணாவின் கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தார்.

துப்பாக்கியால் சுட்ட எம்.ஆர். ராதாவுடன் ஏற்பட்ட ஆரம்பகால நட்பு வழியாகத்தான் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை, போக்கு மாறியது. திராவிட அரசியலுக்கான தேவையையும், அண்ணாவையும் பெரியாரையும் அவர் எம்.ஆர்.ராதா மூலமாகவும் அறிந்துகொண்டார்.

1952 ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் அண்ணாவிடமிருந்து தி.மு.க. உறுப்பினர் அட்டை பெற்றுக் கொண்டார், எம்.ஜி.ஆர்.

1958-ம் ஆண்டில் நேருவுக்கு எதிராகக் கறுப்புக்கொடி போராட்டத்தில் அண்ணாவுடன் ஈடுபட்டு எம்.ஜி.ஆர், நள்ளிரவு இரண்டு மணிக்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு நாள்கள் சிறையில் இருந்தார்.

திமுக என்ற இயக்கத்தை மக்களிடையே கொண்டுசெல்ல தன் திரைப்படங்களையும் தனிப்பட்ட தன் புகழையும் எந்த பிரதிபலனுமின்றி பயன்படுத்தினார் எம்.ஜி.ஆர். ஆனால் தான் உயிராக நேசித்த கட்சியிலிருந்து ஒருநாள் இரக்கமின்றி துாக்கியெறியப்பட்டபோது அதே கட்சியை எதிர்த்து புதிய கட்சியை துவக்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் அவர். பின்னாளில் அந்தக் கட்சியை எதிர்ப்பதும், அதை தடுப்பதும்தான் அவரது எஞ்சிய காலமாக கழிந்தது.

தன்னம்பிக்கையாலும் தளராத முயற்சிகளாலும் வெற்றிகரமான மனிதராக உயர்ந்து அரைநுாற்றாண்டு காலம் தமிழர்களின் வாழ்வில் தவிர்க்கமுடியாதவராக விளங்கியவர் எம்.ஜி.ஆர்.

தொகுப்பு : ஜி.பாலன் 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக