திங்கள், 27 டிசம்பர், 2021

இயக்குநர் இராம நாராயணன் வாழ்க்கை வரலாறு

சூப்பர் ஸ்டார் ராஜினியால் சினிமாவோட யூனிவர்சிட்டி என்று அழைப்பட்ட ராம நாராயணன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இராமசாமி - மீனாட்சி ஆச்சி தம்பதிக்கு மகனாக 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி பிறந்தவர்.

காரைக்குடியில் பள்ளிப் படிப்பை முடித்த இராம.நாராயணன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பி.யு.சி படித்தார். படிக்கும் போதே கதை எழுத வேண்டும் பாடல் எழுத வேண்டும் என்று அவருக்குள் ஆர்வம் அதிகரித்தது. சினிமாவில் சேர்ந்து தனது ஊரை சேர்ந்த கவிஞர் கண்ணதாசன் போல புகழ் பெற வேண்டும் என்று விரும்பினார்.

பி.யு.சி. தேறியதும், சென்னைக்கு புறப்பட்டார். இராம.நாராயணனின் தந்தை ராமசாமி சென்னை திருவல்லிக்கேணியில் மருந்துக்கடை வைத்திருந்தார். அந்த மருந்துக் கடையில் வேலை பார்த்துக் கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

கடையநல்லூரைச் சேர்ந்த எம்.ஏ.காஜாவும், பட வாய்ப்பு தேடி அலைந்து கொண்டு இருந்தார். அப்போது எம்.ஏ.காஜாவுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் ஒரே நோக்கத்தில் இருந்ததால் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். எப்படியாவது பட உலகில் புகுந்து விடவேண்டும், இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற முடிவு செய்து தங்களது பெயரை ‘ராம் ரஹீம்’ என்று வைத்துக் கொண்டு கதை எழுத ஆரம்பித்தனர்.

அந்த கதை நாடகமாக 1974ஆம் ஆண்டு அரங்கேறின. தொடர்ந்து நாடகங்களுக்கு கதை வசனம் எழுதியவர்கள் திரைப்படங்களுக்கும் எழுத வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்தனர்.

1976-ம் ஆண்டு 'ஆசை 60 நாள்'' என்ற படத்திற்கு கதை-வசனம் எழுதும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. விஜயகுமார் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தை துரை இயக்கினார்.  உமா சித்ரா பிலிம்ஸ் தயாரித்த படம், அந்தப் வெற்றிப் படமாக அமைந்து, அடுத்த வாய்ப்பையும் பெற்று தந்தது. அதே நிறுவனம் தயாரிப்பில் 'ரகுபதி ராகவ ராஜாராம்' என்ற படத்திற்கும் ராம்-ரகீம் என்கிற பெயரில் கதை, திரைக்கதை, வசனத்தை இந்த இரட்டையர்கள் எழுதினார்கள். இந்த படத்தையும் துரை இயக்கினார்.

1977-ல் தேவிப்பிரியா என்ற பட நிறுவனத்தை, இராம நாராயணன் தொடங்கினார். சிவகுமார் கதாநாயகனாக நடிக்க, துர்காதேவி' என்ற படத்தை தயாரித்தார். திரைக்கதை, வசனத்தை இராம.நாராயணனும், காஜாவும் சேர்ந்து `ராம்-ரகீம்' என்ற பெயரிலேயே எழுதினார்கள்.

இதேபோல் 1979-ம் ஆண்டு, 'மாந்தோப்பு கிளியே' என்ற படத்தை எம்.ஏ.காஜா தயாரித்து இயக்கினார். இதன் கதை-வசனம் 'ராம்-ரகீம் என்ற பெயரில் இருவரும் எழுதி இருந்தனர். நகைச்சுவை நடிகர் சுருளிராஜனுக்கு பெரிய புகழ் தேடிக்கொடுத்த படம் இது. அடுத்து "ஒரு தொடர்கதை ஒரு விடுகதை'' என்ற படத்தை இராம.நாராயணன் தயாரிக்க, எம்.ஏ.காஜா இயக்கினார். இதில் நடிகர் விஜயனும், ஷோபாவும் நடித்தனர்.

1978-ம் ஆண்டு இராம.நாராயணன் தேவி பிரியா பிலிம்ஸ் சார்பில் மீனாட்சி குங்குமம்' என்ற படத்தை தயாரித்தார். அதை காரைக்குடி நாராயணன் இயக்கினார். அதனைத் தொடர்ந்து ‘வேலும் மயிலும் துணை’, ‘பவுர்ணமி நிலவில்' ஆகிய படங்களையும் இராம. நாராயணன் தயாரித்தார்.

1981 ஆம் ஆண்டு சந்திரசேகர், உஷா நடிப்பில் சுமை என்கிற படத்தை சொந்தமாக தயாரித்து, இயக்குனராக அறிமுகமான இராம நாராயணன், அடுத்து விஜயகாந்த் நடிப்பில் ஏவி.எம். நிறுவனம் தயாரித்த சிவப்பு மல்லி என்கிற படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் வெற்றி அவரை மேலும் புகழ் பெற வைத்தது.

அடுத்து கார்த்திக் நடிப்பில் இளம்ஜோடிகள், மோகன் நடிப்பில் சின்னஞ் சிறுசுகள், பிரபு நடிப்பில் சூரக்கோட்டை சிங்கக்குட்டி என தொடர்ந்து பல படங்களை இயக்கினார். 1984ம் ஆண்டில் மட்டும் 12 படங்களை எடுத்து இருக்கிறார். அடுத்த ஆண்டு 16 படங்களை எடுத்து இந்திய சினிமாவை ஆச்சர்யமாக்கினார்.

அவரது நூறாவது படமான ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’ படத்தை  இருபது நாளில் முடித்தவர். படப்பிடிப்புக்கு வர வேண்டிய நடிகர் வரவில்லை என்றால் படப்பிடிப்பை நிறுத்த மாட்டார். இருக்கின்ற நடிகர்களை வைத்து படப்பிடிப்பை நடத்துவார்.

நான் எப்போதுமே பெரிய நடிகர்-நடிகைகளை வைத்துப் படம் எடுத்ததில்லை. அவர்களின் கால்ஷீட்டுக்காக காத்திருந்ததில்லை. அவர்களிடம், கால்ஷீட் கேட்டு, அவர்களை சங்கடப்படுத்தியதும் இல்லை. அவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்துவதை விரும்பாமல், மிருகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி பெற்றேன்.

இப்போது மிருகவதை சட்டம் கொண்டுவரப்பட்டு கடுமையாக கடைப்பிடிக்கிறார்கள். அதனால் மிருகங்களை வைத்து படம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் குட்டிப்பிசாசு படத்தில், ஒரு காரை முக்கிய கதாபாத்திரமாக்கி படம் எடுத்து இருக்கிறேன். காரை வைத்தும் படம் எடுக்க கூடாது என்று சட்டம் கொண்டு வந்தால், சைக்கிளை வைத்தும் படம் எடுப்பேன். காரணம் இந்த திரை துறையை விட்டு என்னால் வேறு எங்கும் செல்ல முடியாது என்று ஒரு படவிழாவில் தெரிவித்திருக்கிறார், ராம நாராயணன்.

குரங்கு, பாம்பு, யானை போன்ற விலங்குளை வைத்து ரசிக்கும் படியான திரைபடங்களை எடுப்பது இவருக்கு வை வந்த கலை.

என்னுடைய படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என்று ராமநாராயணன் வரையறுத்துக் கொள்ளவில்லை. சிவப்பு மல்லி படத்தில் கம்யூனிசத்தை பற்றி ஆணித்தரமாக சொல்லிய அவர், பக்தி படங்களையும் கொடுத்து வெற்றி பெற்றிருகிறார்.

ராஜ காளியம்மன், அன்னை காளிகாம்பாள், பாளையத்தம்மன், மாயா போன்ற படங்கள் எல்லாம் பார்த்தால் கிட்டத்தட்ட ஒரே கதை. உண்மையான பக்தைக்கு ஒரு அநீதி இழைக்கப்படும்போது கடவுள் அவதரிப்பார் என்பதே இந்தப் படங்களின் நாட். ஆனால், இந்த ஒரே முடிச்சினை வைத்துக் கொண்டு அதை விதவிதமாக பரிமாறிய விதத்தில்தான் ராம நாராயணன் நிற்கிறார்.

இவரின் அம்மன் படங்களை தொடர்ந்து வெளியிடும் திரையரங்கங்களில் அம்மன் சிலை கூட வைக்கப்பட்டிருந்தது. ஆடி வெள்ளி வெளியான போது படம் ஓடிக்கொண்டிருக்கும் போது திரையரங்கில், சாமி வந்து ஆடிய மக்கள் ஆடிய மக்களும் உண்டு.

ராஜகாளியம்மன் படத்தில் 'அய்யோ என் தலை வலிக்குது, அப்படியே கழட்டி வெக்கணும் போல இருக்கே' என்று ஒய்.விஜயா பேசும்போது, அவ்வளவு தானே கழட்டி வெச்சிட்டா போச்சு என்று கூறி வடிவேலு வை. விஜயாவின் தலையை உடலிலிருந்து எடுத்து பந்தாக்கி, அரை முழுதும் சுற்ற விட்டு திருப்பி, கீழுக்கும் மேலுக்குமாக உதைத்து பின் தலையிலே இணைக்கும் காட்சியில் விழுந்து விழுந்து சிரித்த ரசிகர்கள் ஏராளம்.

பக்தி படங்கள் மட்டுமல்ல கலைஞரின் கதை வசனத்தில் வீரன் வேலு தம்பி, மண்ணின் மைந்தன் என்று வேறு கதைக் களத்திலும் படம் எடுப்பதில் வல்லவர். தன்னுடைய் நிறுவனத்தில் மட்டுமல்லாது, வெளி பட நிறுவன படங்களுக்கும் படம் இயக்கி இருக்கும் ராம நாராயணன், தனது நிறுவனத்தில் பல இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்கள் உயர காரணமாக இருந்திருக்கிறார்.

சினிமா உலகில் நுழைவதற்கு முன்பு சங்கரன் என்பவர் இயக்கிய ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ படப்பிடிப்புக்கு சென்றார், ராம நாராயணன். அவரைப் பார்த்த அந்தப் படத்தின் புரொடக்ஷன் மேனேஜர் துரை, படப்பிடிப்பை பார்க்க அனுமதி கொடுத்தத்துடன், சினிமா உலகம் பற்றிய நெளிவு, சுளிவுகளை சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

அதன் பிறகு ராம நாராயணன் இயக்கிய முதல் படம் ‘சுமை’ முதல் கடைசியின் எடுத்த 126வது படமான ‘ஆர்யா சூர்யா’ வரை  அவரது எல்லா படங்களுக்கும் புரொடக்ஷன் மேனேஜர் ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ துரைதான். இடையில் துரையை ‘கரகாட்டக்காரன்’ படத்தின் இணை தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தா, ராம நாராயணன்.

வி.சி.குகநாதன் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அவரிடம் சினிமா சான்ஸ் கேட்க இவரை அழைத்து போனவர் பி.ஆர்.ஓ கிளாமர் கிருஷ்ணமூர்த்தி. அதன்பின் கிருஷ்ணமூர்த்தி இறக்கும்வரை இவரது எல்லா படங்களுக்கும் பி.ஆர்.ஓவாக கிருஷ்ணமூர்த்திதான் பணியாற்றினார். பின்னாளில் தனது தேனான்டாள் பிலிம்ஸில் குகநாதனுக்கு டைரக்ஷன் செய்யும் வாய்ப்பைக் கொடுத்தார். அப்படி உருவானதுதான் பாண்டியராஜன், குஷ்பு நடித்த ‘மனைவிக்கு மரியாதை’ திரைப்படம்.

இயக்குநர் ராம நாராயணன், இயக்குநர் ராஜசேகர், இயக்குநர் எம்.ஏ.காஜா மூன்றுபேரும் நெருங்கிய நண்பர்கள். மூவரும் இணைந்து கதை ராம நாராயணன், வசனம் ராஜசேகர், திரைக்கதை டைரக்ஷன் எம்.ஏ.காஜா என்று டைட்டிலில் போட்டு பல படங்களை உருவாக்கினர்.

தமிழ், தெலுங்கு, ஒரியா, வங்காளி, மராத்தி, கன்னடம், குஜராத்தி, இந்தி, போஜ்புரி, மலாய் ஆகிய 10 மொழிகளில் 128 படங்களை இயக்கி இருக்கும் ராமநாராயணன், உலகிலே அதிக படங்களை இயக்கியவர் என்கிற பெருமையை பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்தவர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ள ராமநாராயணன், தி.மு.க. ஆட்சியின் போது தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்ற தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றவர்.

ஒரு முறை தி.மு.க. கட்சியின் சார்பில் காரைக்குடி சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமநாராயணன், அந்த தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி, தனது கோபாலபுர இல்லத்தை மருத்துவமனைக்காக 2010ம் ஆண்டு தானமாகக் கொடுத்தார். அந்த மருத்துவமனைக்காக அமைத்த ‘அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை’யின் அறங்காவலர்கள் ஐந்து நபரில் ஒருவராக ராம நாராயணனை நியமித்து இருந்தார், கருணாநிதி.

இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான சாதனையாளர் இராம நாராயணன் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள ஓர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். பிறகு சிகிச்சை பலனளிக்காமல் 2014ஆம் ஆண்டு சூன் மாதம் 22ஆம் தேதி காலமானார்.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக