திங்கள், 27 டிசம்பர், 2021

நடிகை சரோஜாதேவியின் வாழ்க்கை வரலாறு

கடற்கரைய சுத்திப் பாக்க வந்த நடிகைக்கு காத்து வாங்க வந்த ஒரு பிரபலத்தால் ஒரு பட வாய்ப்பு கிடைச்சுதுன்னா... பாருங்களேன்.. அது யார் தெரியுமா?

அபிநய சரஸ்வதி என்றும், கன்னடத்து பைங்கிளி என்றும் ரசிகர்களால் இன்றுவரை செல்லமாக அழைக்கப்படும் நடிகை சரோஜாதேவிதான்.

பெங்களூரை சேர்ந்த சரோஜாதேவி, சென்னை கடற்கரைக்கு எப்போ காத்து வணக்க வந்தாங்க... அவரை பார்த்த பிரபலம் யார்? அவர் மூலமா எந்த தமிழ்ப் படத்துல அறிமுகமானார்னு சரோஜாதேவியின் திரையுலக வாழ்க்கை வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

படபடக்கும் அழகிய கண்கள், குறும்பு கொப்பளிக்கும் முகமும், கலகலவென்ற சிரித்து பார்த்து அனைவரையும் கொள்ளை கொண்டு விடும் அழகுக்கு சொந்தக்காரர்.... அந்த காலத்து இளைஞர்களை எப்போதும் கனவினில் மிதக்கவும் சஞ்சரிக்கவும் வைத்த கனவுக் கன்னி...  இளம் பெண்களையும் அவர் அணிந்து நடித்த உடைகள், அணிமணிகள் வாயிலாகக் கவர்ந்து இழுத்தவர்....

அவர் கொஞ்சிப் பேசும் அழகுக்கே மீண்டும் மீண்டும் அவரது படங்களை தேடிச் சென்று பார்த்து ரசித்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.... அவரது நடை அழகு சொல்லில் வடிக்க இயலாதது.... ஐம்பதுகளில் நடிக்க ஆரம்பித்து மணி விழா கண்ட... அந்த அழகு தேவதை....

தமிழ்த் திரையில் 25 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த பி. சரோஜாதேவி சினிமாவில் நுழைந்ததே ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். சரோஜாதேவியின் தந்தை பைரவப்பா ஒரு காவல்துறை அதிகாரி. தாய் ருத்ரம்மா ஒரு குடும்பத் தலைவி. இவர்களுக்கு மூன்றாவது மகளாகப் பிறந்தவர்  சரோஜாதேவி.

பெங்களூரின் செயிண்ட் தெரசா கான்வென்டில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டார், சரோஜாதேவி. எல்லாரும் கன்னடக் கீர்த்தனைகள், கன்னட சினிமா பாடல்கள் என்று பாட, யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ‘ஏ ஜிந்தகி' என்ற இந்திப் படப் பாடலைப் பாடினார், சரோஜாதேவி. இந்தப் பாடல் அனைவரையும் கவர்ந்தது.

அங்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, நடிகரும் தயாரிப்பாளருமான ஹொன்னப்ப பாகவதருக்குப் சரோஜாதேவியின் திறமையும், ஆர்வமும்,  குரலும் பிடித்துவிட்டது.

நிகழ்ச்சி முடிந்த பிறகு சரோஜாதேவியின் தாயாரிடம், ‘உங்க பொண்ணு நல்லா பாடுறா, சினிமாவில் பாட வைக்கலாம் என்று சொன்ன ஹொன்னப்ப பாகவதர், நாளை ஸ்டுடியோவுக்கு அழைத்து வாருங்கள்’ என்று சொல்லி விட்டுப் போக அம்மா ருத்ரம்மா ஆனந்தத்தின் எல்லைக்கே போய் விட்டார்.

மறுநாள் மகளை அழைத்துக்கொண்டு போகவே, பள்ளி மாணவியாக சீருடையில் பார்த்த பெண்ணா இது என்று அசந்து போய் விட்டார் பாகவதர். சரோஜாதேவி அப்படி சீவி சிங்காரித்து புதிய உடையில் காட்சி அளித்தார். சௌந்தர்யமான அழகு பாடுவதை விட அவரை நடிக்கவே வைக்கலாம் என்று அவருக்குத் தோன்றி விட்டது.

ருத்ரம்மாவிடம் பேசி சம்மதம் பெற்று உடனே மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்தார். சரோஜாதேவியின் தோற்றம் ஹொன்னப்ப பாகவதருக்கும் படக் குழுவிருக்கும் பிடித்துவிடவே சரோஜாதேவியை தனது 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். 1955 –ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம், வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமின்றி  அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இப்படித்தான் திரையுலக வாய்ப்பு சரோஜாதேவியை வந்தடைந்தது. ராதாதேவியாக இருந்தவர் சினிமாவுக்காக சரோஜாதேவி ஆனார்.

அதன் பிறகு தொடர்ந்து ஹொன்ன பாகவதருடன் இரண்டு படங்கள், நடிகரும் இயக்குனருமான கே.எஸ்.அஸ்வத் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்து வந்த சரோஜாதேவியை, தமிழுக்கு கொண்டு வந்தார். ஏ.பீம்சிங். ஜெமினிகணேசன் நடிப்பில் அவர் இயக்கிய திருமணம் என்கிற படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடித்தார், சரோஜாதேவி. 

நாட்டிய உலகில் பல்வேறு விதமான நடனங்களால் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த கோபி கிருஷ்ணா, பிஞ்சு வயதிலிருந்து பரதத்தில் சிறந்த குமாரி கமலா என இருவரும் அப்படத்தில் நடனமாடியிருக்கிறார்கள். சரோஜா தேவியும் அப்படத்தில் ஒரு நடனத் தாரகை என்றால் நம்ப முடிகிறதா? வெறும் அதிர்ஷ்டம் மட்டுமல்லாமல், அபாரமான திறமையும் ஒளிந்திருந்ததாலேயே அவரால் துணிச்சலுடன் நடனமாடவும் முடிந்தது. பூலோக ரம்பை, திருமணம் இரு படங்களிலும் நடனம் மட்டுமே அவரது பங்களிப்பு.

திருமணம் படத்தில் சரோஜாதேவியின் நடனத்தைப் பார்த்தி ரசித்தார், இயக்குநர் கே.சுப்பிரமணியம். விளைவு, அவர் கன்னடத்தில் இயக்க இருந்த ‘கச்ச தேவயானி’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தன் படத்துக்கு ஒப்பந்தம் செய்த கே.சுப்பிரமணியம், சென்னை வந்தால் நிறையப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று பெங்களூரிலிருந்து சென்னை வருவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

கே.சுப்பிரமணியம் மீதும் அவருடைய பேச்சின் மீதும் நம்பிக்கை இருந்ததால், சரோஜாதேவியின் தாயார் ருத்ரம்மா, தன் மகளை அழைத்துக்கொண்டு சென்னை வந்தார். ‘கச்ச தேவயானி’ கன்னடப் பதிப்பு படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. 

சென்னையில் கச்ச தேவயாணி கன்னட படத்தின் படப்பிடிபில் கலந்து கொண்டு நடித்த நடிகை சரோஜாதேவி, நேரம் கிடைக்கும் போது மெட்ராசை சுத்திப் பார்க்க ஆசைப்பட்டார். அவருக்கு தோழியாக கிடைத்தவர், இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மகள்  பத்மா சுப்பிரமணியம்.

பாரத நாட்டிய கலைஞரான பத்மா சுப்பிரமணியம் ஒருமுறை மெரீனா கடற்கரையை சுற்றிக் காட்ட சரோஜாதேவியை அழைத்து சென்ற போது கடற்கரையில் காற்று வாங்க வந்திருந்த சினிமா கதாசிரியர் சின்ன அண்ணாமலையை சந்திக்க நேர்ந்ததது. அவர் பத்மாவை பார்த்ததுமே நலம் விசாரித்தார்.

பிறகு அருகில் நின்ற சரோஜாதேவியைப் பார்த்திருக்கிறார்.

இவுங்க என்னுடைய தோழி ரமாதேவி. பெங்களூர். அப்பா எடுக்கிற கன்னடப் படத்தில் நடிக்கிறார் என்று அவரிடம் சரோஜாதேவியை அறிமுகப்படுத்திய பத்மா, தமிழ்ப் படத்தில் வாய்ப்பு கிடைத்தாலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்றும் கூறி இருக்கிறார்.

அந்த ஒத்தை வார்த்தைதாங்க... கடற்கரையில் கத்துவாங்க வந்த சின்ன அண்ணாமலையின் மனசுக்குள் உட்கார்ந்தது. அப்புறம் ரமாதேவி என்கிற பெண் சரோஜாதேவியாக மாறி தமிழ் ரசிகர்கள் கொண்டாடுற கனவுக் கன்னியாக எவ்வளவு படங்கள்ல நடிச்சிருக்காங்க தெரியுமா?

எல்லாம் இந்த மெரீனா கடற்கரை ஏற்படித்தி தந்த வாய்ப்புங்க...

பத்மா சுப்ரமணித்திடமும், சரோஜாதேவியிடமும் விடைபெற்று சென்ற சின்ன அண்ணாமலை, அப்போது தான் கதை எழுதிய தங்கமலை ரகசியம் படத்தின் இயக்குநர் பி.ஆர்.பந்துலுவிடம் சரோஜாதேவி பற்றி தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் கே.சுப்பிரமணியத்தைத் தொடர்புகொண்டு சரோஜாதேவி பற்றி மேலும் விசாரித்துத் தகவல் அறிந்த இயக்குநர் பி.ஆர். பந்துலு, ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் நடனத்துடன் வசனமும் பேசக்கூடிய ஒரு சிறு வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.

அழகு, இளமை இரண்டுக்கும் தேவதைகளான மோகினிகள் இருவர், அழகு பெரிதா, இளமை பெரிதா என ஆடிப் பாடுவதாக அந்தப் பாடல் காட்சி அமைந்தது.  ‘அழகினிலே… யௌவனமே’ என்ற அந்தப் பாடலும் பிரபலமானது.

சரோஜாதேவிக்கு அது சிறு வேடம்தான் என்றாலும், படத்தின் நாயகனான சிவாஜிக்கும், படத்தின் கதையிலும் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக அமைந்தது. சரோஜாதேவிக்கும் இப்படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைத்தது. தமிழ்ப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு சின்ன அண்ணாமலை மூலம் அவருக்குக் கிடைத்தது. இதே படம் கன்னடத்திலும் ‘ரத்னகிரி ரஹஸ்யா’ என்ற பெயரில் வெளியானது. அதிலும் சரோஜாதேவியே இந்த வேடத்தைச் செய்தார்.

விஜயா - வாஹினி படப்பிடிப்புத் தளத்தில் ‘கச்ச தேவயானி’ படப்பிடிப்பு நடந்த போது ஒரு நாள் உணவு இடைவேளையில் பக்கத்து செட்டில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., இயக்குநர் கே.சுப்பிரமணியத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். படக்குழுவினர் எம்.ஜி.ஆருக்கு கொடுத்த மரியாதையையும், வரவேற்பையும் கண்டு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சரோஜாதேவி, எம்.ஜி.ஆர். சென்ற பிறகு, இயக்குநர் கே.சுப்பிரமணியத்திடம் அவர் யார் என்று விசாரித்திருக்கிறார். .

அவர் எம்.ஜி.ஆர். என்று தெரிவித்ததும் சரோஜாதேவிக்கு தூக்கி வாரிப் போட வைத்தது. அப்போது அவருடைய ‘நாடோடி மன்னன்’ படத்தின் படப்பிடிப்புதான் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கி நடித்த நாடோடி மன்னன் படத்தில் கதாநாயகியாக பானுமதி நடித்து வந்தார், படத்தில் பாடுவது, வசனம் பேசுவது என எல்லாவற்றிலும் பானுமதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் பிரச்சினை இருந்தது. இதனால், பானுமதியின் ஒத்துழைப்பு சரியாக அமையவில்லை.

ஒரு பாடலுக்கும், சில காட்சிகளுக்கும் மட்டும் சரோஜாதேவியை தேர்வு செய்து எடுத்து முடித்தார், எம்.ஜி.ஆர்.

ஒரு கட்டத்தில் பானுமதியை வைத்து தொடர்ந்து எடுக்க முடியாது என்பதை உணர்ந்து அவரது கதாபாத்திரம் ஏற்கனவே எடுக்கப்பட்டக் காட்சிகளோடு நிறுத்தி விட்டார் எம்.ஜி்.ஆர். பானுமதியின் கதாபாத்திரத்தை இறந்து விட்டது போல் எடுத்து அந்தக் கதாபாத்திரத்துக்கு முற்றுப்புள்ளியும் வைத்தார் எம்.ஜி்ஆர். 

மேற்கொண்டு இரண்டாம் கதாநாயகியாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற யோசனையில் இருந்த எம்.ஜி.ஆருக்கு எழுத்த்ஹளர் ரவீந்தர், சரோஜாதேவியை அழக்காக இருக்கிறார். அவரையே கதாநாயகியாக நடிக்க வைத்துவிடலாம். அவரது பாத்திரத்துக்கு வேறு யாரையாவது நடிக்க வைத்துவிடலாம் என்று கூறி இருக்கிறார். அவர் கூறுவது சரி என்று உணர்ந்த எம்.ஜி.ஆர்., சரோஜாதேவியை கதாநாயகியாக அறிமுகப்ப டுத்தினார். சரோஜாதேவி நடித்த காட்சிகளை வேறு நடிகையை வைத்து மீண்டும் எடுத்தார்.  

நாடோடி மன்னன் படம் சரோஜாதேவிக்கு வெற்றிப் படமாக அமைந்தாலும் அதற்கு பிறகு நிறைய படங்களில் அவர் நடித்தாலும் அவருக்கு  நட்சத்திர அந்தஸ்த்தை பெற்று தந்த படமாக ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு' படம் அமைந்தது.

படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜாதேவி அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் நடித்துள்ள இவர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன், காதல் மன்னன் ஜெமினிகணேசன், தெலுங்கு மொழியில் நாகேஸ்வர ராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் பல வெற்றிப் படங்களில் நடித்து, தென்னிந்திய சினிமாவில் மாபெரும் நட்ச்சத்திரமாக உயர்ந்தார். இந்தியிலும் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் இவர்.

சுமார் 200–க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்துள்ளா சரோஜாதேவி 1967 ஆம் ஆண்டு என்ஜினியர் ஆன ஸ்ரீஹர்ஷாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு புவனேஸ்வரி, இந்திரா என இரு மகள்களும், ராமச்சந்திரன், கவுதம் என இரு மகன்களும் உள்ளனர்.

நடிகைகள் திருமணம் செய்து கொண்டால், பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்கிற கருத்தைப் போக்கியவர் இவர். திருமணத்துக்கு பிறகு இவர் நடித்தப் பல படங்கள் பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. 

1986 ஆம் ஆண்டு அவரது கணவர் ஸ்ரீஹர்ஷா காலமானார். அதன் பிறகு எட்டு ஆண்டுகள் நடிப்பை தவிர்த்த இவர், அதற்கு பிறகு தன் முடிவை மாற்றிக் கொண்டு, பூவுக்குள் பூகம்பம், அடிமை விலங்கு, பரம்பரை, தாய்மேல் ஆணை, பொன்ன்மனச் செல்வன், ஒரே தாய் ஒரே குலம், ஒன்ஸ்மோர் போன்ற படங்களில் நடித்தார்.

இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’, மற்றும் ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இவர், தமிழக அரசின் ‘எம்.ஜி.ஆர் விருது’,  ஆந்திர அரசின் ‘என்.டி.ஆர் தேசிய விருது’, பெங்களூர் பல்கலைக்கழகம் சார்பில் ‘கௌரவ டாக்டர் பட்டமும்’, 2008-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான இந்திய அரசின் ‘தேசிய விருது’, பிலிம்பேர், சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் விருது எனப் பல விருதுகளை பெற்று சாதனைப் படைத்தவர் இவர்.

பல ஆண்டுகளாக திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்துடன் நிலைத்து நிற்பது சரோஜாதேவியின் தனிப்பட்ட சாதனைதான். அவரது சாதனையை இனி யாரும் முறியடிக்க முடியாது,

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக