அண்ணாதுரையாக இருந்து தன் ஒப்பற்ற
அறிவுத்திறனால் 'அறிஞர் அண்ணா' வாக
உயர்ந்து, அன்பினில் மக்களைக் கட்டிப்போட்டு அனைவராலும் பாசத்தோடு 'அண்ணா' என்று அழைக்கப்பட்ட ஒரு மாமனிதர், சி.என்.அண்ணாத்துரை.
தொடக்கத்தில் சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம்
காட்டிய அண்ணா, பிறகு நாடகங்களிலும் கவனம் செலுத்தினார். சந்திரோதயம், சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம், 'வேலைக்காரி', 'ஓர் இரவு', 'கல்
சுமந்த கசடர்', 'பாவையின் பயணம்', 'ரொட்டித்துண்டு',
'இன்ப ஒளி', 'கண்ணாயிரத்தின் உலகம்' என பல நாடகங்கள் எழுதினார். எல்லா நாடகங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
நாடகங்கள் எழுதும் அண்ணா நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.
'சந்திரோதயம்' எனும் நாடகத்தில் அண்ணா
ஜமீன்தார் துரைராஜ் என்ற பாத்திரமேற்று நடித்தார். 'சந்திரமோகன்'
என்ற நாடகத்தில் 'காகபட்டர்' என்ற வேடமிட்டு நடித்தார். 'நீதிதேவன் மயக்கத்தில்'
ராவணனாக நடித்தார்.
அண்ணா எழுதிய 'சிவாஜி கண்ட
இந்து சாம்ராஜ்ஜியம்' நாடகத்தில் நடிக்க முதலில்
ஒப்பந்தமானவர் எம்.ஜி.ஆர். ஆனால், என்ன காரணத்தினாலோ
தொடர்ந்து அதில் நடிக்கமுடியாத சூழல் உருவானது. அப்போது அந்த கதாபாத்திரத்துக்கு,
தனது இல்லத்தில் தங்கியிருந்த 'கணேசன்'
என்ற நாடக நடிகரை நடிக்க வைத்தார் அண்ணா.
அந்த நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
ஒருநாள் அந்த நாடகத்தைக் காணவந்த பெரியார், கணேசனின் நடிப்பைக் கண்டு
வியந்து, “நாடகம் நடந்த இரண்டரை மணிநேரமும் நான் கணேசனை
காணவில்லை. சிவாஜியையே கண்டேன்” என நெகிழ்ந்தார். பெரியாரிடம் பாராட்டு பெற்ற
நடிகர் கணேசன், பெரியார் பாராட்டி அளித்த 'சிவாஜி' என்ற பட்டப்பெயரே நிலைத்து 'சிவாஜி கணேசன்' ஆனார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்காக அண்ணா எழுதிய
கதை “நல்லதம்பி. 'மிஸ்டர் டீட் கோஸ்டு டவுன்'
என்கிற ஆங்கில படத்தை பார்த்து ரசித்த அண்ணா அதைத் தழுவி 'நல்ல தம்பி' கதையை உருவாக்கினார். இதை
என்.எஸ்.கிருஷ்ணன் திரைப்படமாக தயாரித்து 1949-ம் ஆண்டில் வெளியிட்டார். இதில்
என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், சஹஸ்ர நாமம், பி.பானுமதி நடித்தனர். என்.எஸ்.கிருஷ்ணன் படம் முழுவதும் மக்களை சிரிக்க
வைத்தார். மேலும் படத்தில் அவர் நடத்திய தேவலோகம் கூத்தும், கிந்தனார்
கதா காலட்ஷேபமும் படத்தின் வெற்றிக் கொடியை உயர்த்திப் பிடித்தது.
நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி தொடங்கிய
கிருஷ்ணன் நாடக சபாவிற்கு அண்ணாவால் எழுதப்பட்ட நாடகம் 'வேலைக்காரி'. வெற்றிகரமாக நடந்து
வந்த இந்த நாடகமே திரைப்படமானது. ஜூபிடர் நிறுவனம் 'வேலைக்காரி'
திரைப்படத்தை தயாரித்தது. ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கிய இந்தப் படம், 1949-ம்
ஆண்டு வெளியாகி, இப்படத்தின் நாயாகன் .கே.ஆர்.ராமசாமிக்கு திரையுலகிலும், சமூகத்திலும் நன் மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. 'வேலைக்காரி'
படம், 100-வது நாட்கள் வரை பல திரையரங்குகளில் ஓடிய
வெற்றிப்படமாகும்.
வேலைக்காரி படத்தின் வெற்றிக்கு காரணமான அறிஞர்
அண்ணா, கே.ஆர்.ராமசாமி இருவரையும் இணைத்து அடுத்தப் படத்தை தயாரிக்க விரும்பிய
ஏவி.எம்.மெய்யப்ப செட்டியார், கே.ஆர். ராமசாமி நடத்தி வந்த அண்ணாவின் ‘ஒர் இரவு’
நாடகத்தை பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அண்ணாவிடம் ‘ஓர் இரவு’
நாடகத்தைப் பற்றி பேசிய மெய்யப்ப செட்டியார், திரைப்படத்திற்கு தகுந்தார் போல கதை
வசனம் எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டார்.
ஒரு நாள் இரவு பத்து மணிக்கு பேப்பருடன்
உட்கார்ந்த அண்ணா, ஒரு அடித்தல் திருத்தல் இல்லாமல் முன்னூறு பக்கங்களில் ‘ஓர்
இரவு’ கதை வசனத்தை சினிமாவுக்கு வேண்டிய முறையில் ஒரே இரவில் எழுதிக்
கொடுத்துள்ளார்.
இந்தப் படத்தை ப.நீலகண்டன் இயக்க
கே.ஆர்.ராமசாமி, லலிதா, பி.எஸ்.சரோஜா, டி.கே.சண்முகம், டி.எஸ்.பாலையா உட்பட பலர்
நடித்தனர். ஆர்.சுதர்சனம் இசையமைத்த இந்தப் படத்தில் பத்து பாடல்கள் இடம்பெற்றன.
இதில் 'எங்க நாடு இது எங்க நாடு, எங்கும் புகழ் தங்கும் நாடு...' என்ற பாடலை அவ்வை
சண்முகம் எழுதினார். பாரதிதாசனின் 'துன்பம் நேர்கையில்
யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா...' என்ற பாடல்
'தேஷ்' ராகத்தில் அமைக்கப்பட்டு சாகாவரம்
பெற்றது.
'மதிவாணன்' என்ற
பெயரில் அண்ணா நாடகமாக எழுதியிருந்த கதையை 'சொர்க்கவாசல்'
என்ற பெயரில் பரிமளா பிக்சர்ஸார் திரைப்படமாகத் தயாரித்தனர். இந்தப்
படத்தில் கே.ஆர்.ராமசாமி, ஆர்.பாலசுப்பிரமணியம், அஞ்சலி தேவி, பத்மினி ஆகியோர் நடித்திருந்தனர்.
‘சொர்க்கவாசல்’ படத்திற்கு சி.ஆர்.சுப்பாராமன், எஸ்.வி.வெங்கட்ராமன், விஸ்வ
நாதன்-ராமமூர்த்தி என்று நான்கு இசையமைப்பாளர்கள். ஏ.காசிலிங்கம் படத்தை
இயக்கினார். உடுமலை நாராயணகவி பாடல்களை எழுதினர். இப்படத்திற்கு கதையுடன் வசனமும்
அண்ணா எழுதியிருந்தார். 'சொர்க்கவாசல்'
1954-ம் ஆண்டு வெளியானது.
அடுத்து 1956-ம் ஆண்டில் வெளிவந்தது 'ரங்கோன் ராதா'. போலி
வேடதாரிகளின் தோலுரித்துக் காட்டும் வகையில் கதை அமைந்திருந்தது. 'திராவிட நாடு' இதழில் வெளிவந்த அண்ணாவின் இக்கதையை
மேகலா பிக்சர்ஸ் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டனர். திரைக்கதை, வசனத்தை கலைஞர் கருணாநிதி எழுதியதுடன் 'பொதுநலம்
என்றும் பொதுநலம்...' என்ற பாடல் உள்பட மூன்று பாடல்களை
எழுதியிருந்தார். பாரதிதாசனின் 'தலைவாரி பூச்சூட்டி உன்னை...'
என்ற பாடலும் உண்டு.
படத்தில் வில்லத்தனமான கதாநாயகனாக
சிவாஜிகணேசனும், அவரால் கொடுமைப்படுத்தப்படும் கதாநாயகியாக
பானுமதியும் நடித்தனர்.
'ரங்கோன் ராதா'விற்கு
பின் அண்ணாவின் கதை அம்சத்தோடு 'தாய் மகளுக்குக் கட்டிய தாலி',
'நல்லவன் வாழ்வான்', 'எதையும் தாங்கும் இதயம்',
'காதல் ஜோதி', 'வண்டிக்காரன் மகன்' ஆகிய படங்கள் வெளிவந்தன.
அண்ணாவின் கதையம்சங்களோடு 1949-ம் ஆண்டிலிருந்து
1978-ம் ஆண்டு வரை பத்து படங்கள் வெளிவந்தன. 'கலிங்கராணி',
'விஞ்ஞானி' போன்ற அண்ணா உரையாடலுடன்
வெளிவருவதாக இருந்த படங்கள் அறிவிப்போடு நின்று போயின.
அண்ணாவின் வருகைக்கு முன்பு காவியப் படங்கள், அரசர்கள்களைப் பற்றிய படங்கள், தெய்வங்களைப்
பற்றிய படங்கள் வந்துகொண்டிருந்த நிலையில், அண்ணாவின்
வேலைக்காரிதான் சமானிய மனிதர்களைப் பற்றிய கதையை தமிழ்த் திரைத்துறையில் பேசிய
முதல் படமாக வெளியானது.
தெய்வீகமான, காவியமான
பெயர்களைத் தாங்கியே படங்கள் வந்துகொண்டிருந்த நிலையில், வேலைக்காரி
என்ற பெயரே அந்தக் காலத் திரைத்துறையில் புரட்சிகரமானதாக பார்க்கப்பட்டது.
அண்ணா வியாபார நோக்குடனோ, தொழிலாக கருதியோ திரை உலகில் நுழையவில்லை. அவரது திரைப்பட
பங்களிப்பு கொள்கைத்தளத்திலேயே அடங்கியதாகும். அண்ணாவின் திரைப்பட நுழைவு. அவரது
கதையும், கருத்தும், வசனமும் மக்களை
ஈர்த்தன. கதை, வசனகர்த்தாக்கள், யாரென்று சுவரொட்டி விளம்பரங்களில் மக்கள் தேடத் தொடங்கினார்கள்.
கலைத்துறையில் அண்ணா அவர்களது பங்காக
திரையுலகில் திராவிட தோழர்கள் அறிமுகம், திரை உலகில் மறுமலர்ச்சி,
புதிய உத்திகள், அணுகுமுறை போன்றவை
அறிமுகப்படுத்தப்பட்டன.
1909
ஆம் ஆண்டு செப்டம்பர் 15 தேதி காஞ்சிபுரத்தில் நடராசன்
- பங்காரு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த அண்ணா,
பச்சையப்பன் கல்லூரியில் படித்து நீதி கட்சியில் இணைந்து சமூக நீதிக்காக பல
போராட்டங்களை நடத்தி, அரசியலில் பங்கேற்று ஆட்சிக்கு வந்து, முதலமைச்சராகவும் பதவி
வகித்தார்.
புற்றுநோயின் தீவிரம் காரணமாக 1969 ஆம் ஆண்டு
பிப்ரவரி 3 ஆம் தேதி காலமானார். அவரின் இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50
இலட்சம் பேர் கலந்துக் கலந்துக் கொண்டனர். அந்த நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம்
பெற்றுள்ளது.
அண்ணாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில்
அடக்கம் செய்யப்பட்டடுள்ளது. அண்ணாவின் நினைவை போற்றும் வகையில்
அந்த இடம் அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக