திங்கள், 27 டிசம்பர், 2021

நடிகை அஞ்சலிதேவி வாழ்க்கை வரலாறு

விசாகப்பட்டினம் அருகே உள்ள பெத்தாபுரம் என்ற ஊரில் நூக்கையா-சத்யவதி என்பவருக்குப் பிறந்தவர் அஞ்சனம்மா. குழந்தை அஞ்சனம்மா ஐந்து வயதை எட்டியபோது குடும்பம் காக்கிநாடாவுக்குக் குடிபெயர்ந்தது. பள்ளிப்படிப்பும் அங்கேயே தொடங்கியது. இயல்பிலேயே ஆடல், பாடல், நடிப்பு போன்ற கலைகளில் சிறுமி அஞ்சனம்மாவுக்கு நல்ல ஆர்வம் இருந்தது.

நாட்டியம் கற்றுக்கொள்வதில் முனைப்புடன் இறங்கியதால் படிப்பைத் தொடரமுடியவில்லை. அதன் பின் தொடர்ச்சியாக நாட்டிய நாடகங்களில் நடிப்பதுடன் தெலுங்கு ராஜ்ஜியம் முழுதும் சென்று நாட்டிய நாடகங்களும் நடத்தப்பட்டன. சிறுமி அஞ்சனம்மாவின் அழகும் நடனமும் எல்லோரையும் கவர்ந்ததைப் போலவே, காக்கிநாடாவைச் சேர்ந்த இளைஞர் ஆதிநாராயண ராவையும் ஈர்த்தது. இசைக்கலைஞரான அவர் சொந்தமாக நாடகங்கள் தயாரித்து நடத்தி வந்தார்.

அஞ்சனம்மாவையும் தன் நாடகங்களில் நடிக்க வைத்தார். அதில் ‘தெருப்பாடகன்’, ‘லோபி’ ஆகிய நாடகங்கள் புகழ் பெற்றதுடன் மக்களின் பாராட்டுதலையும் புகழையும் அஞ்சனம்மாவுக்குக் கொண்டு வந்து குவித்தது. அதற்கேற்ப அவருடைய பெயர்களும் கூட அஞ்சம்மா, அஞ்சனகுமாரி, அஞ்சலிகுமாரி என மாறிக் கொண்டே இருந்தன. 1936ல்  ‘ராஜா ஹரிச்சந்திரா’ தெலுங்குப் படத்தில் லோகிதாசன் வேடத்தில் அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடிக்க வைக்க அவருடைய பெற்றோர் விருப்பம் கொள்ளவில்லை.

நடனம் மற்றும் நாடகங்களில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும் என்றே நினைத்தனர். 13 வயது அஞ்சனம்மாவுக்கும் இளைஞர் ஆதிநாராயண ராவுக்கும் இடையே ஏற்பட்ட காதல், 1940ல் கல்யாணத்தில் முடிந்தது. கல்யாணத்துக்குப் பின்னும் நாடகமும் நாட்டியமும் தொடர்ந்தன.

அஞ்சனம்மாவின் குறும்புத்தனம் கொப்புளிக்கும் முகம் ஆடல் பாடல் திறமையால் கவரப்பட்ட இயக்குநரும் தயாரிப்பாளருமான எல்.வி. பிரசாத் தன் ‘கஷ்ட ஜீவி’ படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்த எண்ணினார். ஏனோ அப்படம் நிறைவு பெறாமல் பாதியில் கைவிடப்பட்டது.

1943ல் இரண்டாம் உலகப்போர் பிரச்சார நிதிக்காக கவர்னர் ஹோப் தலைமையில் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சியின் மூலம் பதினாறு வயது அழகுப்பெண் அஞ்சனம்மா சென்னை நகர மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அன்று அவரது நடனமும் அழகும் பார்த்தவர்கள் அனைவரையும் கிறங்க வைத்தது. அப்படி கிறங்கியவர்களில் ஒருவர் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் சி.புல்லையா.

அவர் இயக்கிய ‘கொல்ல பாமா’ தெலுங்குப் படத்தின் மூலம் அஞ்சனம்மா திரையுலகில் அஞ்சலிதேவியானார். புல்லையா வைத்த அப்பெயர் இறுதிவரை நிலைத்தது.

1945ல் இப்படம் சென்னையிலும் வெளியாகி பிரமாதமாக ஓடியது. அடுத்து நாகேஸ்வர ராவுடன் அஞ்சலிதேவி இணைந்து நடித்த ‘கீலு குர்ரம்’ தமிழில் ‘மாயக்குதிரை’யாக மொழிமாற்றம் செய்யப்பட்டு சென்னையில் வெளியிடப்பட்டது.

1949ல் ‘மகாத்மா உதங்கர்’ என்ற படம் மூலம் தமிழ் கதாநாயகியாக பிரவேசம். படம் வெற்றி பெறவில்லை. ஆனால், இதே ஆண்டின் இறுதியில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளியான ‘ஆதித்தன் கனவு’ அஞ்சலிதேவியை தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பரவலாக அறியச் செய்தது.

அதே ஆண்டில் உருவான ‘கன்னியின் காதலி’, ‘மாயாவதி’ படங்களும் அவருக்கு புகழை தேடி தந்தன.

 

1950 ஆம் ஆண்டு அஞ்சலிதேவி ‘மாயக்காரி’, ‘மாயமாலை’, ‘ஸ்திரீ சாகசம்’, ‘நிரபராதி’ போன்ற தெலுங்கு படங்கள் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு ரசிகர்களை சந்தித்தன. அந்த ஆண்டில் வெளியான நேரடித் தமிழ்ப்படங்கள் இரண்டு மட்டுமே. ‘சர்வாதிகாரி’, ‘மர்மயோகி’. இந்தப் படங்களில் அஞ்சலிதேவியுடன் கதாநாயகனாக நடித்தவர் எம்.ஜி.ஆர்.

1952ல் ஏராளமான தெலுங்குப் படங்களில் நடித்திருந்தாலும், ‘ஏழை உழவன்’ என்று ஒரேயொரு தமிழ்ப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளில் தெலுங்கின் முன்னணி கதாநாயகியர்களில் ஒருவராக அனைத்து கதாநாயகர்களுடனும் நடிக்கும் வாய்ப்பு அமையப் பெற்றவர், அஞ்சலிதேவி.

கல்கியின் ‘பொய் மான் கரடு’ நாவல் ‘பொன்வயல்’ என்ற பெயரில் 1954ல் படமாக்கப்பட்டது. நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன் சொந்தமாகத் தயாரித்து நடித்த படமான இதன் நாயகி அஞ்சலிதேவி. ஏ.வி.எம். தயாரித்த ‘பெண்’. இரண்டு நாயகியரில் ஒருவராக வைஜெயந்திமாலாவுடன் இணைந்து நடித்தார், அஞ்சலிதேவி.

‘சொர்க்க வாசல்’ படத்தில் பேரறிஞர் அண்ணாதுரையின் அழகு கொஞ்சும் தமிழ் வசனங்களையும் பேசி நடித்திருக்கிறார். இப்படத்தின் நாயகன் எஸ்.எஸ்.ராஜேந்திரன். 1955-ன் மிகப் பெரிய வெற்றிப்படம் ‘கணவனே கண் கண்ட தெய்வம்’. கண்ணீரால் கரைந்து ரசிகர்களை, குறிப்பாகப் பெண்களை கலங்க வைத்து வெற்றிப்படமாக ஆக்கியவர் அஞ்சலிதேவி. சிவாஜி கணேசனுடன்  நடித்த ‘முதல்தேதி’ வழக்கமான படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம்.

1960ல் வெளியான ‘லவகுசா’ தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் பேசியது. இது தெலுங்கின் முதல் வண்ணப்படமும் கூட. அஞ்சலி தேவி சீதையாக நடித்து பெண்களை வசீகரித்தார்.

‘அஞ்சலி ஃபிலிம்ஸ்’ என்ற பெயரில் 27 சொந்தப் படங்களையும் தயாரித்தார். ‘அடுத்த வீட்டுப்பெண்’, வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காவியம். ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ - இதுவும் சொந்தப் படமே.

தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என்று வெற்றிக் கதாநாயகர்களுடன் இணையாக நடித்துக் குவித்த படங்கள் ஏராளம். தமிழ் உட்பட மும்மொழிகளிலும் 400 படங்களுக்குக்மேல் நடித்தவர், அஞ்சலிதேவி. அதில் பல படங்கள் வெற்றிப்படங்கள். தனது நிறுவனத்தின் பெயரில் 27 படங்களை தயாரித்துள்ளார். அவற்றில் ‘அனார்கலி’ ஃபிலிம்ஃபேர் விருதை அஞ்சலி தேவிக்குப் பெற்றுத் தந்தது

1950, மற்றும் 1960களின் கதாநாயகி என்ற நிலையிலிருந்து அடுத்த நிலையாக ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களின் அம்மாவாக தோன்றினார். ஸ்ரீதரின் ‘உரிமைக்குரல்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு அண்ணி வேடமேற்று அதையும் சிறப்பாகவே செய்தவர். 1980கள் வரையிலும் இவரது பங்களிப்பு இருந்தது.

கணவர் ஆதிநாராயண ராவ் இசையில்  ‘ஜீவிதமே சபலமோ’, ‘கண்களும் கவி பாடுதே’, ‘வனிதா மணியே’, ‘அழைக்காதே…. நினைக்காதே….’, ‘மான் மழுவாட... மதி அரவாட… மங்கையும் சேர்ந்தாட…..’, ‘ராஜசேகரா….’ போன்ற பாடல்கள் காலந்தோறும் நினைத்து ரசிக்கும் வகையைச் சார்ந்தவை.

நான்கு முறை ஃபிலிம்ஃபேர் விருது பெற்றவர், நடிகை அஞ்சலிதேவி. தெலுங்குப் படவுலகில் நீண்ட காலம் பணியாற்றியதற்காக 2005ம் ஆண்டு ரகுபதி வெங்கையா விருது பெற்றவர்.

அனைத்துக்கும் மேலாக பிற நடிகைகள் எவருக்கும் கிடைக்காத ஒரு பெருமை அஞ்சலிதேவிக்கு உண்டு. இன்றுவரையிலும் ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த திரையுலகில் நடிகை, தயாரிப்பாளர் என்பதை எல்லாம் கடந்து 1959 ஆம் ஆண்டில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக சிறப்பாக இயங்கியுள்ளார். இவருக்கு முன்னர் தலைவராக இருந்த எம்.ஜி.ஆரின் ஒப்புதல்பெற்று நடிகர் சங்க லோகோவை மாற்றினார். இப்போது வரை வேறொரு நடிகை, தலைவர் பொறுப்புக்கு வரவில்லை. ஆளுமைத்திறன் கொண்ட பெண் என்பதாலேயே இவை அனைத்தும் சாத்தியமாகி இருக்கிறது.

இந்துமத சம்பிரதாயப்படி கணவரின் மறைவுக்குப் பின் மனைவிக்கு எந்த மரியாதையும் அளிக்கப்படுவதில்லை. ஒரு அமங்கலியாக, விதவைப் பெண்ணாக மங்கல நிகழ்ச்சிகளில் ஒதுக்கி வைக்கப்படுவதே இங்கு வழக்கம். மணி விழா, சதாபிஷேகம் என்ற கொண்டாட்டங்கள், விழாக்கள் எல்லாமே ஆண்களை முன்னிறுத்தியே இங்கு நடத்தப்படுவது வாடிக்கை.

கணவனின் 60 வயது, 80 வயது விழாக்களில் மனைவியும் இணைத்துக் கொள்ளப்படுவாள், அவ்வளதான். பெண்ணின் வயது, இடம் இங்கு முக்கியத்துவம் பெறாது. அவை எப்போதும் பெண்ணுக்கு இல்லை. ஆனால், கணவரை இழந்த நிலையில் தன்னுடைய 80 வயது நிறைவை, கணவரின் நிழற்படத்தை அருகில் வைத்துக்கொண்டு சதாபிஷேகம் என்ற நிகழ்வாக, விழாவாகச் சம்பிரதாயங்களை மீறி சிறப்புற நடத்திக்கொண்ட துணிச்சல்காரரான ஒரே பெண்மணியும் அஞ்சலி தேவிதான்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள மேயர் ராமநாதன் அரங்கில் நடந்த அந்த விழாவில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, நடிகர்கள் பிரபு, அர்ஜூன், எஸ்.வி. சேகர், நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, ராஜ சுலோசனா, சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, காஞ்சனா, சாரதா, குசலகுமாரி, ரம்யாகிருஷ்ணன், எஸ்.என். லட்சுமி, பின்னணி பாடகி சுசீலா, எழுத்தாளர் சோ, இயக்குநர் முக்தா சீனிவாசன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

அஞ்சலிதேவியின் பேரன், பேத்திகள் மற்றும் உறவினர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அஞ்சலிதேவி பிறந்த நாள் விழாவில் சாய்பாபா பங்கேற்பதாக இருந்தது. ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது. அஞ்சலிதேவிக்கு வாழ்த்து செய்தியும் பிரசாதமும் சாய்பாபா அனுப்பி இருந்தார்.

1927 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ஆம் தேதி பிறந்த அஞ்சலிதேவி, 2014ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி தனது 86வது வயதில் உடல்நலக்குறைவால் மறைந்தார்.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக