திங்கள், 27 டிசம்பர், 2021

நடிகர் வடிவேலு வாழ்க்கை வரலாறு

சினிமாவில் இத்தனை உயரம் தொட்டிருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலு, சினிமா வாய்ப்பை தேடி வரவில்லை. அவரைத்தான் சினிமா தேடி வாய்ப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது.

சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. ராஜ்கிரண் விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்தவர். அவர் தயாரிக்கும் படங்கள் வெளியாகும் போது அந்தப் படத்தின் விளம்பர யுக்திகள் விதம் விதமாக இருக்கும். அதனால், அவருக்கு பல ரசிகர்கள் கிடைத்தார்கள். அந்த ரசிகர் வட்டாரத்தில் மதுரையை சேர்ந்த இளங்கோவன் என்பவரும் ஒருவர்.

இளங்கோவனுக்கு மதுரையில் திருமணம் முடிவான போது ராஜ்கிரணுக்கு கடிதம் எழுதி, எனது திருமணத்துக்கு நீங்கள் வந்துதான் தாலி எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து திருமண அழைப்பிதழையும் அனுப்பி இருகிறார்.  

இவ்வளவு வெறித்தனாமா அன்பு கொண்ட ரசிகரையும் பெற்றிருக்கோம் என்று மகிழ்ந்த ராஜ்கிரண், இளங்கோவன் திருமணத்துக்கு செல்ல முடிவு செய்து, மதுரைக்கு சென்று, வர ரயிலில் டிக்கெட், தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்து, தான் வருவதையும் இளங்கோவனுக்கும் தெரிவித்திருந்தார்.

திருமண நாள் அன்று மதுரை சென்று மணமக்களை வாழ்த்திய ராஜ்கிரண், ஹோட்டல் அறைக்கு செல்ல விடைபெறும் போது, இரவு ரயில் ஏறும்வரை நீங்கள் ஹோட்டலில் தனியாகத்தானே இருப்பீர்கள். அதுவரை உங்களுடன் பேசிக் கொண்டிருக்க எனது நண்பனை துணைக்கு அனுப்புகிறேன் என்று கூறிய மாப்பிள்ளை இளங்கோவன், வடிவேலுவை அவருடன் அனுப்பி வைத்திருக்கிறார்.

ராஜ்கிரணுக்கு கம்பெனி கொடுக்க, பொழுதுபோக்க பேசிக் கொண்டிருக்க சென்ற வடிவேலு, அங்கு அவர் நாடகத்தில் நடிப்பது, தெருவில் நண்பர்களுடன் கேலி, கிண்டலாக பேசும் சம்பவங்கள் என்று பல நிகழ்வுகளை அவரிடம் சொல்லி மகிழ வைத்துள்ளார்.

ராஜ்கிரணுக்கும் நன்றாக பொழுது போனது. அன்று இரவு ரயிலில் சென்னை திரும்பும் வரை ராஜ்கிரணுடன் இருந்தார், வடிவேலு. அப்போது கூட சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ராஜ்கிரணிடம் வாய்ப்பு கேட்கவில்லை வடிவேலு. அதே போல ராஜ்கிரணுக்கும் வடிவேலுவை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற சிந்தனை கிடையாது.

ஒன்லி டைம் பாஸ். அவ்வளவுதான்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து ‘ என் ராசாவின் மனசில’ படத்தை தயாரித்து, நடிக்கிறார், ராஜ்கிரண். அதில் இரண்டு காட்சிகள் வருகிற மாதிரி ஒரு கேரக்டர் இருந்தது. அந்த கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என்று இயக்குநர் கஸ்தூரிராஜாவிடம் பேசிக் கொண்டிருந்த போது, புதிதாக ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவானது. அப்போது பலரை யோசித்துக் கொண்டிருந்த ராஜ்கிரணுக்கு, வடிவேலு ஞாபகம் வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ஒரு பையன்னை பார்த்தோமே. அவனை நடிக்க வைக்கலாமே என்று முடிவு செய்தவர், அவரை எப்படி இப்போது கண்டு பிடிப்பது என்று யோசித்திருக்கிறார். 

வடிவேலுவை அறிமுகப்படுத்திய மாப்பிள்ளை இளங்கோவை தொடர்பு கொள்ள முடிவு செய்தவர், சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு போன் செய்து, ரசிகர்களின் கடித கட்டுகளை பிரித்து, அதில் பிரம் அட்ரஸில் சீல் போட்டு அனுப்பும் ரசிகரின் கடிதத்தை எடுக்கவும் என்று கூறி இருக்கிறார்.

ரசிகர்கள் அனுப்பிய கடிதங்கள் பண்டல் பண்டாலாக கட்டி இருக்க, அவற்றை இரவு ஒன்பது மணிக்கு பிரித்து தேட ஆரம்பித்த அலுவலக நிர்வாகி, இரவு பன்ரெண்டு மணிக்கு அந்த சீல் போட்ட கடிதத்தை எடுத்தார். ராஜ்கிரண் சொன்னது போலவே அந்த சீல் போட்ட கடிதத்தில் இளங்கோவனின் தொலைபேசி நம்பரும் இருந்துள்ளது.

பிறகு இளங்கோவன் என்னை தொடர்பு கொண்டு உங்கள் திருமணத்துக்கு சார் வந்த போது, பொழுது போக்க ஒரு பையனை அனுப்பினாயாமே. அவன் திண்டுக்கல்லில் காலையில் ஏழு மணிக்கு இருக்க வேண்டும் என்று சார் சொல்லி இருக்கிறார். அவனை பிடித்து அனுப்பி வைக்கவும் என்று தெரிவித்து உள்ளனர்.

ராஜ்கிரண் எதிர்பார்த்தது போல மறுநாள் காலை வடிவேலு திண்டுக்கல் வந்து சேர்ந்தார்.

அன்று படப்பிடிப்பில் கிளி சோசியரிடம் கேட்பது, கவுண்டமணியிடம் நல்லா இருக்கீங்களான்னு கேட்டு அடி வாங்குவது. அந்த இரண்டு காட்சிகள் மட்டுமே வடிவேலுவுக்கு இருந்தது.

அதில் கவுண்டமணியிடம் அடி வாங்குகிற காட்சியில் “ஏன்னே நல்லா இருக்கீங்களான்னு கேட்டது ஒரு குத்தமானே... அடிக்காதேங்கன்னே” என்று அவ்வளவுதான் வசனம் பேச வேண்டும்.

கவுண்டமணி கீழே போட்டு மிதிக்கும் போது வடிவேலு, “அண்ணே அண்ணே பாத்துண்ணே... படாத எடத்துல பட்டுட போகுதுன்னே” என்று எக்ஸ்ட்ராவாக வசனம் பேசினார்.

அது வடிவேலு போட்டுக் கொண்ட வசனம்.

அது ராஜ்கிரனை அதிகம் கவர்ந்தது. அந்த வசனம் நல்லா இருக்கே. ரசிக்கும்படியா இருக்கே என்று நினைத்த ராஜ்கிரண், கிரியேட்டிவா இருக்கிறானே என்று மகிழ்ந்தார்.

தனக்கான காட்சிகள் முடிந்ததும் ஊருக்கு புறப்பட்ட வடிவேலு, ராஜ்கிரணிடம் சென்று போய் வருகிறேன் என்று கூற, இருடா போகலாம் என்று சொன்ன ராஜ்கிரண், பிறகு வடிவேலுவுக்காக சில காட்சிகளையும், “போடா போடா புண்ணாக்கு” போன்ற பாடலையும் உருவாக்கினார்.

1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி வெளியான என் ராசாவின் மனசில திரைப்படம் வடிவேலு என்கிற நகைச்சுவை கலைஞனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது.

அதன் பிறகு எத்தனையோ படங்கள். எல்லா படங்களிலும் வடிவேலுவின் வசனமும், உடல் மொழியும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்டது...

காலம் மாறிப் போச்சு, வெற்றிக் கொடிகட்டு, தவசி, இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, காத்தவராயன் ஆகிய படங்களுக்காக ஐந்து முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது பெற்றவர்.

வடிவேலுவின் திரை வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு காதலன் படம் மூலம் உயர்த்தி பார்த்த இயக்குநர் ஷங்கர், பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு ‘இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி’ என்கிற படத்தை தயாரித்து அந்தப் படம் மூலம் வடிவேலுவை கதாநாயகன் ஆக்கினார்.

ஆனால், அதே கூட்டணி ‘இம்சை அரசன் இருபத்தி நான்காம் புலிகேசி’ படத்தை தொடங்கிய போது, அந்தப் படம் நான்கு ஆண்டுகள் வடிவேலுவை நடிக்க விடாமல் தடை போடும் என்று யாரும் நினைக்கவில்லை.

"எனக்காடா எண்டு கார்டு போடறீங்க. எனக்கே எண்டே கிடையாதுடா" என்று ஒரு திரைப்படத்தில் வசனம் பேசுவார் வடிவேலு. அது போல மீண்டும் நடிக்க களம் இறங்கி இருக்கிறார் வடிவேலு.

“வந்துட்டான்யா வந்துட்டான்” என்று ரசிகர்கள் கொண்டாடுகிறர்கள். ‘பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மென்ட் வீக்கு’ என்பது போல அவருடைய உடம்பு இளைத்திருக்கிறது. எதையும் பிளான் பண்ணிதான் பண்ணனும்’ என்று அவர் முடிவு செய்திருந்தாலும், ‘பீ கேர்ஃபுல் என்னய சொன்னேன்'... என்பது போல அவர் நடந்து கொள்ள வேண்டும். இது ரசிகர்களின் விருப்பமும் கூட...

தொகுப்பு : ஜி.பாலன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக