திங்கள், 27 டிசம்பர், 2021

இளைய திலகம் பிரபு வாழ்க்கை வரலாறு

தமிழ் சினிமாவை தனது நடிப்பினாலும், வசன உச்சரிப்பினாலும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் மாதிரியே அவரது பிள்ளைகள் இருப்பார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது. அவர்கள் படித்தால் அவர்களின் படிப்புக்கு தகுந்த உயர்ந்த நிலையை அடைவார்கள் என்று சினிமா வாசனையே படக் கூடாது என்று பெங்களூரில் படிக்க வைத்தார், சிவாஜி கணேசன்.

படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரராக இருந்த பிரபு, வாய்ப்பு கிடைக்கும் போது எம்.ஜி.ஆரின் ஆக்ஷன் படங்களைப் பார்த்து வளர்ந்திருக்கிறார்.

பள்ளி படிப்பை பெங்களூர் பிஷப் காட்டன் பள்ளியில் முடித்தவர், கல்லூரி படிப்புக்காக சென்னை லயோலா கல்லூரிக்கு வந்தார். சிவாஜி நடித்த சுமதி என் சுந்தரி, ராஜா ஆகிய படங்களை இயக்கிய போது சிவாஜியை அடிக்கடி சந்திக்க வீட்டுக்கு சென்ற இயக்குநர் இயக்குநர் சி.வி.ராஜேந்திரன், அப்போது பிரபுவை பார்த்து பேசி நலம் விசாரிப்பது நடத்ந்திருக்கிறது.

இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் ஓ மஞ்சு என்கிற படத்தை தொடங்கிய போது அந்தப் படத்தில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தப் போவதாக கூறி உனக்கு தெரிந்த புதுமுகம் இருந்தால் தகவல் தரவும் என்று சி.வி.ராஜேந்திரனிடம் கூறி இருக்கிறார்.

உடனே சி.வி.ராஜேந்திரனுக்கு பிரபு மனதுக்குள் வந்ததும், உடனே சிவாஜியின் சகோதரர் சண்முகத்திடம் விசாரித்திருக்கிறார். பையன் படித்து முடிக்கட்டும். அதுவரை படம் குறித்து எதுவும் இப்போது பேச வேண்டாம் என்று அவர் கூறி இருக்கிறார். சிவாஜியின் தம்பியான சண்முகம் சிவாஜி குடும்பத்தின் எல்லா முடிவுகளையும் அவர்தான் எடுப்பார்.

ஸ்ரீதரிடம் ஏழு படங்களுக்கு மேல் உதவி இயக்குனராக பணிபுரிந்துவிட்டு, அதன் பிறகு தமிழ், கனண்ட மொழிகளில் இருபத்தி ஏழு படங்களை இயக்கி முடித்த இயக்குநர் சி.வி.ராஜேந்திரன், இருபத்தி எட்டாவது படமாக இந்தியில் வெளியான காளி சரண் என்கிற படத்தை தமிழில் எடுக்க இறங்கினார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக சிவாஜியை ஒப்பந்தம் செய்த அவர், அதில் முக்கியமான வில்லன் பாத்திரத்தில் நடிக்க பிரபுவை நடிக்க வைக்க முடிவு செய்து, இந்த முறை சிவாஜியிடம் சென்று பிரபு நடிப்பது குறித்து பேசி இருக்கிறார்.

ஆரம்பத்தில் தயங்கிய சிவாஜி, பிறகு தனது தம்பி சண்முகத்திடம் பேசிக் கொள்ளுமாறு கூறி இருக்கிறார். சிவாஜியின் தம்பி சண்முகத்தை சந்தித்து பிரபு நடிப்பது குறித்து பேசி இருக்கிறார், சி.வி.ராஜேந்திரன். அப்போது பிரபுவையும் அழைத்து பேசிய சண்முகம், ஒழுங்கா நடிப்பியா? பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு பிரபு பதலில் சொல்வதற்குள், அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். கவலைப் படாதீங்க என்று கூறி இருக்கிறார். பிரபு நடிக்க சண்முகம் சம்மதம் தெரிவித்த பிறகு தயாரிப்பாளர் தேவராஜ் ஐந்தாராம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

1982 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சங்கிலி படத்தின் தொடக்கவிழா அருணாசலம் ஸ்டுடியோவில் படப்பிடிப்புடன் நடந்தது. இந்த விழாவுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆளுயரமாலை தனது சார்பில் அனுப்பி வைத்திருந்தார். பட விழாவுக்கு வந்த ரஜினி, கமல் இருவரும் சினிமாவை வெளியில் கற்றுக் கொள்வதைவிட அப்பாவின் படங்களில் இருந்து கற்றுக் கொள் என்று வாழ்த்து சொல்லி சென்றார்கள்.

முதல் நாள் டி.எஸ்.பி.சரவணன் என்கிற காவல்துறை அதிகாரியான சிவாஜியுடன் பேட்டை ரவுடியான பிறப்பு ஆக்ரோசமாக வசனம் பேசி நடிக்க வேண்டும். வசனத்தை ஒருமுறைக்கு பல முறை மனப்பாடம் செய்து பேசிப் பார்த்து நடிக்க தயாரானார், பிரபு. 

ஸ்ரீபிரியா, சுமித்ரா, மனோரமா என சக நடிகர்கள், படப்பிடிப்பு குழு மொத்தமும் பிரபுவின் நடிப்பை காண ஆவலுடன் காத்திருந்தார்கள். வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் மீண்டும் வசனத்தை சொல்லிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். அது வரை தன்னம்பிக்கையுடன் தைரியமாக நின்ற பிரபு, அப்பாவை சிவாஜியை கண்டதும் கொஞ்சம் பயந்தார். உதறல் எடுத்தது. பில்டிங் ஸ்டாங். பேஸ் மட்டம் வீக் என்பது போல வசனம் சொதப்ப ஆரம்பித்தது.

பிரபு பேசிய வசனத்தை கேட்டு தமிழை ஒழுங்கா பேசுடா என்று அதட்டி இருக்கிறார், சிவாஜி. நான்குமுறை பேசியும் வசனம் சரியாக வந்தபாடில்லை. இவனை எங்கருந்துடா கூட்டி வந்தீங்க என்று திட்டி இருக்கிறார்.

கான்வென்ட் தமிழ் படித்து வளர்ந்தவர் பிரபு. உடனே வருமா என்று அவருக்கு எடுத்து சொன்னார்கள்.

சிவாஜியின் படங்களில் சண்டைக் காட்சிகள் அமைத்தவர் வெங்கடேஷ். அவரிடம் சண்டைப் பயிற்சி பெற்ற பிரபு, சங்கிலி படத்தில் புதிதாக அறிமுகமான விஜயன் மாஸ்டர் சொல்லிக் கொடுத்தபடி சிவாஜியிடம் சண்டை போட்டிருக்கிறார். சில நேரங்களில் உண்மையாகவே தந்தையிடம் அடிவாங்கி இருக்கிறார், பிரபு.

திரையுலகிற்கு வந்த பிறகுதான் நடிப்பு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஆரம்பித்தார், பிரபு. ரஜினி, கமல் சொன்னது போல சிவாஜியின் படங்களை போட்டுப் பார்த்து ஒவ்வொரு படத்திலும் அவர் எப்படியெல்லாம் தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்.

தந்தை சிவாஜியுடன் இணைந்து நடித்த சங்கிலி முதல் படம், 1982-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது. எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றி கிடைக்க வில்லை என்றாலும் அந்தப் படத்தின் மூலம் பிரபுவுக்கு ஒரு தயாளம் கிடைத்தது.

சங்கிலி படத்தைப் பார்த்து பல தயாரிப்பாளர்களிடம் இருந்து புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால், அதில் சிவாஜியும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று வற்புறுத்தினார்கள். மகனின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பிரபுவுடன் படங்களில் நடித்து வந்த சிவாஜி, ஒரு கட்டத்திற்கு பிறகு, எத்தனை படங்களில்தான் இணைந்து நடிப்பது. இனி நீ தனியாக நடிக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.

நீண்ட நாட்களாக பிரபுவின் மனதில் எழுந்த கேள்வியும் அதுதான். மற்றவர்கள் அப்பாவும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி நடிக்க வைத்தார்கள். இனி நமக்கென்று ஒரு வியாபாரம், படம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து பத்து மாதம் இடைவெளி எடுத்துக் கொண்டார்.

மூன்று மாதம் அமெரிக்காவுக்கு சென்று திரும்பியவர், சத்யராஜுடன் கலைஞர் கதை வசனத்தில் மணிவண்ணன் இயக்கிய பாலைவன ரோஜாக்கள் படத்தில் நடித்தார். அதன் பிறகு சத்யராஜுடன் சின்னத்தம்பி பெரியதம்பி,  கார்த்திக்குடன் அக்னிநட்சத்திரம், ரஜினியுடன் குரு சிஷ்யன் என்று நடித்துக் கொண்டிருந்தவர், பி.வாசு இயக்கிய ‘என் தங்கச்சி படிச்சவ’ படத்திலிருந்து தனது பாதையை மாற்றிக் கொண்டார்.

நடிகர் திலகம் சிவாஜியுடன் 19 படங்களில் இணைந்து நடித்துள்ள பிரபு, கலைஞானி கமலுடன் ‘வெற்றி விழா’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்திலும் நடித்திருந்தார். கமல் நடிப்பில்  கலைஞன் என்கிற படத்தையும் தயாரித்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘தர்மத்தின் தலைவன்’, ‘குரு சிஷ்யன்’, ‘குசேலன்’, ‘சந்திரமுகி’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் பிரபு,  ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் மன்னன், சந்திரமுகி படங்களை தயாரித்திருக்கிறார். இதில் மன்னன் பெரும் வெற்றிப் படமாகவும், சந்திரமுகி 824 நாட்கள் திரையில் ஓடி சாதனை புரிந்து தென்னகத் திரையுலகில் அதிக நாட்கள் ஓடிய படத்தை தயாரித்த பெருமைக்குரியவர் என்கிற பெயரையும் பிரபுவுக்கு பெற்று தந்துள்ளது.

பிரபு ஜோடியாக அதிக படங்களில் நடிகை குஷ்பு, நடிகை ராதா நடித்துள்ளனர். பிரபு நடித்த அதிக படங்களை இயக்கியவர் பி.வாசு. அதில் சின்னத்தம்பி படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்து சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதும் பெற்றிருக்கிறார்.

2002-ம் ஆண்டு வெளியான ‘சார்லி சாப்ளின்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் சிறப்பு விருது பெற்றிருக்கும் பிரபு, தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

பெற்றோர் பார்த்த உறவுப் பெண்ணான புனிதவதி என்பவரை 1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார் பிரபு. அதே ஆண்டு பிப்ரவரி மாதம் நடிக்க வந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் பிரபு, இப்போதும் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்து பிசியான நடிகராக வலம் வருகிறார்.

வாரிசு நடிகர்கள் எத்தனையோ பேர் திரைத்துறையில் நிலைக்க முடியாமல் போனதை பார்த்திருப்போம், பிரபு தனது நடிப்புத் திறனால் இத்தனை ஆண்டுகாலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்றால், அதற்கு அவரது பழகும் குணமும், நடிப்பு மீது கொண்ட பக்தியுமே காரணம்.

பிரபு – புனிதவதி தம்பதிக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் விக்ரம் பிரபு, 2012வது ஆண்டில் வெளியான கும்கி திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக