திங்கள், 27 டிசம்பர், 2021

நாட்டிய பேரொளி பத்மினி வாழ்க்கை வரலாறு

திருவனந்தபுரம் அருகே உள்ள பூஜாப்புர பகுதியில் 1932 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா தம்பதிக்கு இரண்டாவது மகளாக பிறந்தவர் பத்மினி. பத்மினியின் பெரியம்மாள் திருவாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி. இன்னொரு பெரியம்மா மலேயாவில் ரப்பர் தோட்டங்கள் தொழில் நிறுவனங்கள் என்று இருப்பவர். ஆனால், அவருக்கு களை ஆர்வம் சிறு வயதிலிருந்தே இருந்திருக்கிறது. அந்த கலை ஆர்வத்தை பத்மினி மீது இறக்கி வைக்க ஆசைப்பட்டார்.

பத்மினியின் நான்காவது வயதில் திருவாங்கூர் அரண்மனை ஆஸ்தான நடன ஆசிரியர் கோபிநாத் நடத்திய 'நாட்டிய கலாலயம்' பள்ளியில் நாட்டியம் கற்றுக் கொண்டார். பத்மினியைத் தொடர்ந்து அவரது மூத்த சகோதரி லலிதா, இளைய சகோதரி ராகினி ஆகியோரும் நடனம் கற்றுக் கொள்ள ஆம்பித்தனர்.

கதகளி, பரதம், மணிப்புரி ஆகிய மூன்று ஆடல் கலைகளிலும் பயிற்சி பெற்றனர். பத்து வயதில் அரங்கேறம் நடந்தது.

பத்மினியின் வீட்டிற்கு திரைப்பட இயக்குநர் கே.சுப்பிரமணியம் சென்ற போது அவர்கள் கதகளி ஆடுவதை அறிந்து ஏன், பாரத நாட்டியம் கற்றுக் கொள்ளவில்லை என்று கேட்டிருக்கிறார். அதன் விளைவாக திருவிடைமருதூர் டி.கே.மகாலிங்கம் பிள்ளையை வரவழைத்து வீட்டிலேயே ஒன்றரை ஆண்டுகள் பரதநாட்டியம் கற்றுக் கொண்டார்கள்.

நன்கு வயதில் நடனம் ஆட ஆரம்பித்த பத்மினிக்கு பத்தாவது வயதில் அரங்கேற்றம் நடந்துள்ளது. பத்மினியின் பெரியப்பா மும்பையில் கப்பற்படையில் கமாண்டர் ஆக இருந்தார். விடுமுறை காலத்தில் அவரது வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்படி ஒரு முறை சென்ற போது, பெரியப்பாவின் பக்கத்து வீட்டில் உலகப் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் உதயசங்கரை சந்தித்தார். பத்மினியின் நடன திறமையை அறிந்ததும், தான் இந்தியில் ஒரு நாட்டியத் திரைப்படம் எடுக்க உத்தேசித்திருப்பதை தெரிவித்த உதயசங்கர், அந்த நாட்டிய படத்தில் ஆடுகிரீர்களா என்று கேட்டிருக்கிறார்.

குடும்பத்தினர் ஆலோசித்தனர். பிறகு சம்மதம் தெரிவித்தனர். நாட்டிய படமான கல்பானா படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்தனர். இயக்குநர் கே.சுப்பிரமணியம் வீட்டில் தங்கி ஜெமினி ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தனர்.

கல்பனா படத்தில் நடித்த பிறகு 'டான்ஸ் ஆஃப் இந்தியா' என்கிற அமைப்பை தொடங்கி எட்டுப் பேர் கொண்ட குழு அமைத்து பாம்பாட்டி நடனம், சிவபார்வதி நடனம், ராதாகிருஷ்ணன் நடனம் போன்ற நடனங்களை தாங்களே உருவாக்கி ஆடினார்கள்.

இவர்களின் நடனத்தைப் பார்த்த ஸ்ரீராமுலு நாயுடு தான் இயக்கிய கன்னிகா தமிழ்ப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்தார். லலிதா பத்மினி இருவரும் ஒரு பாடலுக்கு சிவமோகினி வேடத்தில் நடனமாடினார். 

சென்னைக்கு வந்த, ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், எழும்பூர் மியூசியம் தியேட்டரில் லலிதா - பத்மினியின் நடனத்தைப் பார்த்து வியந்தார். இவர்களை நமது வேதாள உலகம் படத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்குமே என்று கணக்குப் போட்டார்.

'நாங்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டியம் மட்டுமே ஆடுவோம். படங்களில் நடிக்கமாட்டோம்' என்று ஒவ்வொரு படத்திற்கும் பதில் சொன்னவர்கள், மெய்யப்ப செட்டியாருக்கும் அதே பதிலை சொன்னார்கள். 'உங்களுக்கு இஷ்டம் இல்லையென்றால் நீங்கள் கேரக்டர் ரோலில் நடிக்க வேண்டாம். ஆடினால் போதும் என்று உடனடியாக, நான்கு நடனங்களுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு காரைக்குடிக்கு சென்றார், மெய்யப்ப செட்டியார்.

காரைக்குடியில் வேதாள உலகம் படத்தின் படப்பிடிப்பு நடந்து. 1948ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11ஆம் தேதி வேதாள உலகம் படம் வெளியானது. லலிதா - பத்மினி ஆடிய பவளக்கொடி, பாம்பாட்டி நடனக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடனம் ஆடும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்தன.

கே.ராம்நாத் இயக்கிய ஏழைபடும் பாடு படத்தில் .வி.கோபாலகிருஷ்ணனுடன் கனவுக் காட்சியில் பத்மினி தோன்ற வேண்டும் என்று கேட்டதற்கு 'பப்பி அப்படி நடிக்கமாட்டாள்' என்று மறுத்துவிட்டார், பத்மினியின் அம்மா சரஸ்வதி.

இயக்குநர் என்ன சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில், தங்கை ராகினிக்கு ஆண் வேடம் போட்டு இளைய சகோதரியுடன் தன் முதல் காதல் பாடலைப் பாடி நடித்தார், பத்மினி.

இந்த நிலையில் பத்மினியின் தாயார் சரஸ்வதியை சந்தித்த என்.எஸ்.கிருஷ்ணன், “'மணமகள்’ என்று ஒரு படம் எடுக்க இருக்கிறேன். அதில் கதாநாயகிகளாக உங்கள் மகள்களை நடிக்க வைக்க விரும்புகிறேன் என்று சொன்னதும், அவருக்கு என்ன பதில் செல்வது என்றே சரஸ்வதி அம்மாளுக்கு தெரியவில்லை.

பத்மினிக்கு எட்டு வயது இருக்கும் போது அவர் பாரிஜாத புஷ்பாகரணம் என்ற நாட்டிய நாடகத்தில் நாரதராக நடித்தார். அவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன் பத்மினியை பாராட்டி வாழ்த்தினார். முதல் படமான கன்னிகா படத்தின் போது பத்மினி நடனம் ஆட நம்பிக்கை கொடுத்து உற்சாகம் கொடுத்தார். அப்படிப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் நடிக்க கேட்டு வந்து இருக்கிறார். எப்படி திருப்பி அனுப்புவது என்று குழப்பம்?

மகள்களுக்கு அதற்கான பக்குவம் இன்னும் வரவில்லை என்றும் அவர்களுக்கு நடிக்க வருமா என்கிற சந்தேகத்தை அவரிடமே எழுப்பினார், சரஸ்வதி.  

'நல்லா நடனம் ஆடுகிரவர்களால் நன்றாக நடிக்கவும் முடியும். நீங்க சம்மதம் சொல்லுங்கள். உங்கள் பப்பியை ஸ்டார் ஆக்கிக் காட்டுகிறேன்' என்று என்.எஸ்.கிருஷ்ணன் கூறியதும், அவரால் மறுக்க முடியவில்லை.

என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து இயக்கிய மணமகள் படத்தில் கலைஞர் மு.கருணாநிதியின் வசனம் பேசி எஸ்.வி.சகஸ்ரநாமம் ஜோடியாக நடித்தார், பத்மினி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் குற்றாலத்தில் நடைபெற்றது. படமும் வெளியாகி மகத்தான வெற்றியைப் பெற்றது. இந்தப் படம் தான் பத்மினி வசனம் பேசி நடித்த முதல் படமாக அமைந்தது.

எம்.ஆர்.ராதாவின் ரத்தக்கண்ணீர் நாடகம் பார்க்கும் வாய்ப்பு பத்மினிக்கு கிடைத்திருக்கிறது. அங்கு சென்ற போது மேடைக்கு பின்னால் நின்று உதவிசெய்து கொண்டிருந்த சிவாஜியை பார்த்திருக்கிறார், பத்மினி. அப்போது அவர்தான் சிவாஜி என்றோ, அவருடன் அதிகப் படங்களில் சேர்ந்து நடிக்கப் போகிறோம் என்றோ பதிமினிக்கு தெரியாது. ஆனால், சிவாஜிக்கு பத்மினியுடன் ஒரு முறையாவது நடித்துவிட வேண்டும் என்ற்கிற ஆசை எழுந்திருக்கிறது.

அதன் பிறகு மணமகள் படத்தை இயக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் பணம் படத்தில் நடிக்க சென்றார், பத்மினி. அங்கு பராசக்தி வெற்றிப் படத்தின் நாயகனாக நின்றிருந்தார், சிவாஜி.

அப்போது, “உங்கள் படங்கள் எல்லாவற்றையும் நான் பார்த்திருக்கிறேன். ‘மணமகள்’ திரைப்படத்தில் உங்கள் நடிப்பு ரொம்பவும் பிரமாதமாக இருந்தது. உங்களை மாதிரி நடிகைகளோடு எல்லாம் சேர்ந்து நடிப்பேன் என்று நான் கனவுகூட கண்டதில்லை…” என்றார் சிவாஜி.

சிவாஜியின் அந்த பாராட்டுக்ககளை சிரித்தபடியே ஏற்றுக் கொண்ட பத்மினி, “கணேஷ், இப்போது சினிமா உலகில் இளம் கதாநாயகர்களே இல்லை. அந்தக் குறையைப் போக்கும்விதத்தில் நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களது  ‘பராசக்தி’ படம் பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசுகிறார்கள். அதனால் எதிர்காலத்தில் நீங்கள் ஒரு பெரிய நடிகராக நிச்சயம் புகழ் பெறுவீர்கள்…” என்று சிவாஜியை பாராட்டி இருக்கிறார்.

‘பணம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் சிவாஜியின் திருமணம் நிச்சயம் ஆனது. சுவாமி மலையில் நடைபெற்ற அந்த  திருமணத்திற்கு முதல் நாள் ‘பணம்’ படத்திற்காக படமாக்கப்பட்ட காட்சி சிவாஜி-பத்மினி ஆகிய இருவரின் திருமணக் காட்சியாகும்.

பணம் படத்தைத் தொடர்ந்து அன்பு, தூக்கு தூக்கி, இல்லற ஜோதி எனத் தொடர்ந்தது சிவாஜியுடன் அறுபது படங்களில் நடித்திருக்கிறார், பத்மினி.

தூக்குதூக்கிபடம் அவரை ஒரு உயரத்தில் தூக்கிவிட்டது. ‘ராஜா ராணிபடம், ஒரு ராணியாக, திரையுலகின் முடிசூடா ராணியாகத்தான் வலம் வர உதவியது. ‘தங்கப்பதுமைஇவரின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது. அழகிலும் நடிப்பிலும் திறமையிலும் பதுமை என்று கொண்டாடித் தீர்த்தார்கள் ரசிகர்கள்.

ஒருபக்கம், சிவாஜி பத்மினி செம ஜோடி என்று வியந்து போற்றினார்கள். அதேசமயத்தில், எம்ஜிஆருடன் மன்னதி மன்னன்’, ‘மதுரை வீரன்என பல படங்களில் நடித்தார். எம்ஜிஆருக்கு ஏற்ற ஜோடியாகவும் புகழப்பட்டார்.

எம்ஜிஆருடன் நடித்தாலும் சரி, சிவாஜியுடன் நடித்தாலும் சரி, எவருடன் நடித்தாலும் சரி... அந்தப் படத்தில் பத்மினி நடிக்கிறார் என்றால், அவரின் நடனத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பாட்டாவது வைத்துவிடுவார்கள்.

அதேபோல், பல காட்சிகள் க்ளோஸப் ஷாட்டுகளாக வைத்திருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், அவரின் நடிப்புக்குத் தீனி போடும்விதமாக, ரெண்டு காட்சியாவது இடம்பெற்றுவிடும்.

பத்மினிக்கு டான்ஸ்தாம்பா வரும்என்றெல்லாம் முத்திரை குத்திவிடமுடியாது. அவர் ஒரு பாட்டுக்குக் கூட டான்ஸ் ஆடாமல் நடித்த படங்களும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தன

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் எம்.ஆர்.ராதாவுடன் ஜோடி போட்டு நடித்த சித்திபடத்தை அவ்வளவு சீக்கிரத்தில் எவரும் மறந்துவிடமுடியாது. ஒவ்வொரு காட்சியிலும் பத்மினி, விஸ்வரூபமெடுத்துக் கொண்டே இருப்பார். எம்.ஆர்.ராதா எனும் நடிப்பு அசுரனுக்கு நிகராக, தன் நடிப்பால் வென்றுகொண்டே இருப்பார்.

வியட்நாம் வீடுபடத்தில் பாலக்காடு பக்கத்திலேபாட்டுக்கு ரெண்டு ஸ்டெப் போட்டு ஆடியது மட்டும்தான். மற்றபடி, பிரஸ்டீஜ் பத்மநாபனின் மனைவி சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார்.

பத்மினியின் கண்கள் மகத்துவமும் தனித்துவமும் வாய்ந்தவை. கண்கள் ஒருபக்கம் நடிக்க, கால்கள் வேறொரு விதமாக நர்த்தனமாடும். பத்மினியின் வசன உச்சரிப்புகள் தனிரகம். முகபாவனைகள், மொத்த உணர்ச்சிகளின் பிறப்பிடம்.

தென்னிந்திய மொழிப் படங்களில் தெலுங்கு நடிகைகளே அதிகம் நடித்து வந்த போட்டி மிகுந்த சந்தர்ப்பத்தில், கேரளத்தில் இருந்து முதன் முதலில் தடம் பதித்து, தமிழர்களின் அபிமான நடிகை ஆனவர் பத்மினி.

சிவாஜியும் பத்மினியும் பணம் படத்தில் இணைந்த போது சிவாஜிக்கு திருமணம் நடந்ததது. அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து பத்மினியின் திருமணம் நடைபெற்றது. அப்போது சிவாஜியுடன் பீம்சிங் இயக்கிய செந்தாமரை படத்தில் நடித்துக் கொந்திருந்தார், பத்மினி. இந்தப் படத்திற்கு பிறகு பத்மினி நடிக்க மாட்டார் என்று முடிவு செய்திருந்ததால், நீண்ட கால தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தின் வேலைகள் இரவு பகலாக வேகவேகமாக நடைபெற்றது.

இந்தப் படத்தில் பத்மினியின் சகோதரிகள் லலிதா, ராகினி இருவரும் கூட நடித்தார்கள். ஆனால், படம் தொடங்கிய சில மாதங்களிலேயே அவர்கள் காட்சிகள் முடிந்து அவர்களின் திருமணமும் நடைபெற்றது. 1961-ம் ஆண்டு மே மாதம்  25-ம் தேதி பத்மினி, டாக்டர் ராமச்சந்திரன் திருமண தேதி முடிவாகி இருந்ததால் பத்மினி சம்பந்தப் பட்ட காட்சிகளை முடிக்க இரவு பகலாக வேலைகள் நடைபெற்றன.

செந்தாமரை படம் மட்டுமல்லாமல் வேறு சில படங்களையும் நடித்து முடிக்க திருமணத்திற்கு முதல்நாள் வரை இரவு பகலாக படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார்  பத்மினி.

இருபத்தி ஐந்தாம் தேதி நடக்கவிருந்த திருமணத்திற்காக இருபத்தி நான்காம் தேதி விமானம் மூலம் கொச்சி புறப்பட்ட பத்மினி அன்று விடியற்காலைவரை செந்தாமரைபடத்தின் படப்பிடிப்பில் சிவாஜியோடு கலந்து கொண்டார்.

காலை 10-40 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து கொச்சிக்குப் புறப்பட்ட பத்மினியை வழியனுப்ப சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், 25 ஆயிரம் பேருக்கு மேல் கூடியிருந்தனர். விமான நிலையத்துக்கு வந்த அவருக்கு, பூரண கும்பத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இயக்குநர் கே.சுப்பிரமணியம் ஏற்பாடு செய்திருந்த பல நாதசுரக் கலைஞர்கள் நாதசுரம் வாசிக்க நூற்றுக்கணக்கான பெண்கள்  பத்மினிக்கு ஆரத்தி எடுத்தனர். மாலைகள் வந்து குவிந்தன.

விமான நிலையத்தில் கூடியிருந்த கூட்டத்தையும், தன் மீது ரசிகர்கள் கொண்டிருந்த அன்பையும் கண்ட பத்மினி, நெகிழ்ந்து போய் கண் கலங்கினார். கை கூப்பி வணங்கி, ‘போய் வருகிறேன்என்றார். பேச முடியாமல் அவரது நா தழுதழுத்தது. அவரது கண்களில் இருந்து கண்ணீர் அருவியாகக்  கொட்டியது. கண்களைத் துடைத்துக் கொண்டு. கை அசைத்தபடி  ரசிகர்களிடம் விடைபெற்றுக் கொண்டு  விமானத்தில் ஏறினார் பத்மினி.

குருவாயூரில் நடைபெற்ற அவரது திருமணத்தைக் காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கே குவிந்தனர்.

திருமணத்தைத் தொடர்ந்து பத்மினி-ராமச்சந்திரன் தம்பதிகளின் திருமண வரவேற்பு சென்னை அண்ணா சாலையில் இப்போது ஹயாத் ஹோட்டல் இருக்கும்  இடத்தில் அப்போது அமைந்திருந்த ஆபட்ஸ்பரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்த பத்மினி, கதாநாயகி வாய்ப்பு குறையும் வரை தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடித்தார். அதன் பிறகு அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை நிறுவி நாட்டிய பயிற்சி அளித்தார். இவருக்கு பிரேம் ஆனந்த் என்கிற ஒரு மகன் இருக்கிறார்.

மீண்டும் பூவே பூச்சூடவா படத்தன் மூலம் பூங்காவனத்தம்மாவாக ரசிகர்களை சந்தித்தார். பாட்டிக்கும் பேத்திக்குமான உறவை, அத்தனை உணர்வுமாக சொன்னப் படம் அது. அவரைப் போல  பாசத்துக்கு ஏங்கும் பூங்காவனத்தம்மாக்கள் இன்றைக்குமிருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பத்மினியும் பூங்காவனத்தம்மாவும் ‘பூவே பூச்சூடவா’வும்தான் நினைவுக்கு வருவார்கள்; வரும்.

தொடர்ந்து தாய்க்கு ஒரு தாலாட்டு, லட்சுமி வந்தாச்சு, பிரபுவுடன் ஆயிரம் கண்ணுடையாள் ஆகிய படங்களில் தமிழில் நடித்தார். 1992 ஆம் ஆண்டு வெளியான டாலர் என்கிற மலையாளப் படம் தான் அவர் நடித்த கடைசிப் படம் ஆனது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சிங்களம், பிரஞ்ச்,  ரஷ்யன் ஆகிய மொழிகளில் 250 மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் பத்மினி, நன்கு தொலைக்காட்சி தொடர்களிலும், ஆறு நாட்டிய நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதினை தில்லான மோகனாம்பாள் படத்திற்காக பெற்ற நடிகை பத்மினி, தமிழக அரசின் கலைமாமணி விருது, தமிழக அரசின் கலைவாணர் விருதும் பெற்றுள்ளார்.

ஆப்ரோ-ஆசிய திரைப்பட விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக பாராட்டு சான்றிதழ் பெற்ற பத்மினி, மாஸ்கோவில் நடந்த நாட்டிய விழாவில் சிறந்த நடனக் கலைஞருக்கான விருதும் பெற்றுள்ளார்.

பத்மினியின் கலைத் திறனைப் பாராட்டி ரஷ்யாவில் 1957-இல் தபால் தலை வெளியிடப்பட்டது. நாட்டியப் பேரொளி என்ற பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஸர்.ஸி.பி. ராமசுவாமி ஐயர் வழங்கினார். அலகாபாத்தில் 'நாட்டியராணி' என்ற பட்டம் பெற்றிருக்கிறார்.

கோடி கோடியாய் சம்பாதித்தாலும் - சொர்க்க பூமி என்று போற்றப்படும் அமெரிக்காவிலேயே வாழும் வாய்ப்பு கிடைத்தாலும் - தாய் நாட்டில்தான் வாழ்வேன் - தமிழ்நாட்டில்தான் சாவேன் என்று கூறி அதேபோல தமிழ் மண்ணில் தன்னை கரைத்து கொண்ட தன்னிகரற்ற தேசபக்தர்தான் நடிகை பத்மினி.

அவர் மறைந்தபோது நடிகர் கமலஹாசன் தனது இரங்கல் செய்தியில், "தொலைக்காட்சிகள் ஒரு வரப்பிரசாதம். பத்மினி அம்மா இறந்து போனார்கள் என்கிற உணர்வு கூட இல்லாமல் அவர் நடித்த படங்களையும், ஆடிய நடனங்களையும் நாம் பார்த்து கொண்டு இருக்கலாம்" என்றார்.

மக்கள் மனதில் ஆழப்பதிந்து போன யாராக இருந்தாலும் அவர்களுக்கு கவியரசு கண்ணதாசன் பாடியபடி "எந்த நிலையிலும் மரணமில்லை"தான். இது நாடு போற்றும் நாட்டிய பேரொளி பத்மினிக்கும் பொருந்தும். பத்மினி வரம் பெற்ற நடிகை. சாகா வரம் பெற்ற கலையரசி. 

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக