தேனி மாவட்டத்தில்
உள்ள பண்ணைபுரம் கிராமத்தில் டேனியல் ராமசாமி, சின்னதாய் தம்பதிக்கு கடைக்குட்டி
மகனாக பிறந்தவர் கங்கை அமரன். இவரது இயற் பெயர் அமர்சிங். இவருடைய மூத்த அண்ணன்
பாவலர் வரதராஜன் பொதுவுடமை இயக்க மேடைகளில் பாடல்கள் இயற்றி பாடும் இசைக் குழுவை
நடத்தி வந்தவர். அந்த இசைக்குழுவில் அவரது இன்னொரு அண்ணன் பாஸ்கர் தபேலா வாசிக்க, சின்ன
அண்ணன் இளையராஜா என்கிற ராசய்யா பெண் குரலில் பாடுவார். மூன்று அண்ணகளும் மேடையில்
புகழ் பெறுவதை பார்த்து வளர்ந்த கங்கை அமரன், தானும் மேடைகளில் பாடி புகழ்பெற்ற
வேண்டும் என்று விரும்பினார். அதற்காக தினமும் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
இளையராஜாவுக்கு
பதினான்காவது வயதில் மகரக்கட்டு வந்தது. அதாவது அவருக்குள் இருந்த பெண் குரல்
மறைந்து ஆண் குரல் வெளிப்பட்டது. அதனால், இளையராஜாவுக்கு பதில் பெண் குரலில் பாட
கங்கை அமரனுக்கு வாய்ப்பு வந்தது. ஏழாம்
வகுப்பு படிக்கின்ற போது பனிரெண்டு வயதில் பாடுவதற்காக மேடை ஏறிய கங்கை அமரன்,
தொடர்ந்து பொதுவுடமை இயக்க மேடைகளில் பாடி வந்தார்.
கங்கை அமரனின் பண்ணைபுரம்
கிராமத்திற்கு மலேரியா இன்ஸ்பெக்டராக வந்த சின்னசாமி என்கிற பாரதிராஜா, இவர்களின்
இசைத் திறமையை கண்டு வியந்ததுடன், தனது நாடகத்தில் அவர்களை பயன்படுத்திக்
கொண்டார். காலம்காலமாக நாடகத்திற்காக பயன்படுத்தும் பாடலை பயன்படுத்துவதற்கு
பதிலாக இளையராஜாவின் இசையில் கங்கை அமரன் ஒரு பாடலை எழுத அந்தப் பாடலை மேடையில்
அரங்கேற்றினர். முதன் முதலில் பாரதிராஜாவின் நாடகத்திற்கு இளையராஜா இசையில் பாடல்
எழுதி பாடகராக தனது திறமையை வெளிப்படுத்தியவர் கங்கை அமரன்.
அதன் பிறகு
சினிமாவில் நடித்து புகழ் பெறுவேன். உங்களையும் அழைத்து செல்கிறேன் என்று
பாரதிராஜா வேலைக்கு குட் பை சொல்லி விட்டு சென்னை சென்றுவிட, இவர்கள் பொதுவுடமை
இயக்க மேடைகளில் இயங்கினர்.
பொதுவுடமை இயக்க
தலைவர்களில் ஒருவரான சங்கரய்யாவின் அண்ணன் மகன் ஆர்.செல்வராஜ், பத்திரிகைகளில் கதை
எழுதி வந்தார். அவருடைய நட்பு கிடைத்ததும், அவரும் சினிமாவுக்கு முயற்சி செய்வதை
அறிந்து மகிழ்ந்தனர்.
சென்னையில் இரண்டு
நண்பர்கள் சினிமாவுக்கு முயற்சி செய்யும் போது நாமும் முயற்சி செய்யலாம் என்று
அண்ணன் பாஸ்கர், இளையராஜா இருவரும் முடிவு செய்ததும், அவர்களுடன் புறப்பட்டு
வந்தார், கங்கை அமரன்.
பாரதிராஜாவை
சந்தித்து அவர் மூலமாக சென்னையில் நடைபெறும் நாடக குழுக்களுக்கு இசையமைக்க
வாய்ப்பை பெற்ற இளையராஜா சகோதரர்கள், சென்னையில் பிரபலமாக இருந்த தன்ராஜ்
மாஸ்டரிடம் இளையராஜா இசை கற்றுக் கொள்ள சென்று, அவர் மூலமாக தெட்சிணாமூர்த்தி,
தேவராஜ், பாபுராவ், அர்ஜுன், மலையாள இசையமைப்பாளர்கள் என பலரிடம் கிட்டார் வாசிக்க
சென்றார்கள். கங்கை அமரனும் கிடார் வாசித்தார்.
சின்சியராக இருக்கும்
சிஷ்யன் இளையராஜாவுக்கு இசைத்துறையில் சிறந்து விளங்கும் எம்.எஸ்.விஸ்வநாதனிடம்
உதவியாளராக சேர்த்துவிட எண்ணிய தன்ராஜ் மாஸ்டர், அவரை சந்திக்க வந்த இசையமைப்பாளர்
ஜி.கே.வெங்கடேஷிடம், இவனை எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சொல்லி சேர்த்துவிடு என்று கூறி
இருக்கிறார்.
அதற்கு இளையராஜா, எம்.எஸ்.விச்வநாதனிடம்
வேண்டாம். அவரிடம் நிறைய பேர் அசிஸ்டென்ட் இருபார்கள். என்னால் முழுமையாக தொழில்
கற்றுக் கொள்ள முடியாது. அதனால் இவரிடமே சேர்ந்து கொள்கிறேன் என்று கூறி
இருக்கிறார்.
இளையராஜா கூறியதை
கேட்டு மகிழ்ச்சி அடைந்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ், இளையராஜாவை உடனே தன்னுடன்
அழைத்துக் கொண்டார். தான் பணிபுரியும் படங்களில் இளையராஜாவுக்கு முக்கியத்துவம்
கொடுத்து அவரையே எல்லா வேலைகளையும் செய்ய வைத்து தயார் படுத்தினார்.
பாடல் எழுத வேண்டும்
என்கிற ஆர்வம் காரணமாக ஜி.கே.வெங்கடேஷ் மூலமாக கவிஞர் கண்ணதாசனிடம் லட்சுமி
கல்யாணம் படத்தில் உதவியாளராக சேர்ந்தார், கங்கை அமரன்.
நடிப்பதற்கு முயற்சி
செய்து கொண்டிருந்த பாரதிராஜாவிடம், உன் திறமைக்கு முதலில் இயக்குநர் ஆகலாம். அதன்
பிறகு நடிப்பது பற்றி யோசிக்கலாம் என்று கூறிய இளையராஜாவின் சகோதரர் பாஸ்கர், அவரை
இளையராஜா மூலம் ஜி.கே.வேங்கடேஷிடம் அறிமுகப்படுத்தி, அவர் மூலமாக புட்டண்ணா கனகல்
என்பவரிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்டார்.
புட்டண்ணா கனகல்
இயக்கிய இருளும் ஒளியும் படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடல் பாட வந்த போது
அவரிடம் பழக்கம் வைத்துக் கொண்ட பாரதிராஜா, அவரை இளையராஜா சகோதர்களுடன்
அறிமுகப்படுத்தி, பாட்டு பாட கச்சேரி நடத்த ஒரு குழு அமைத்துக் கொடுத்தார். பாவலர்
சகோதர்கள் என்கிற பெயரில் படங்களில் பணிபுரிந்து கொண்டே தொடர்ந்து கச்சேரி
நடத்தினார்கள். அந்த கச்சேரிகளில் கிடார் வாசித்தார் கங்கை அமரன்.
சங்கரய்யாவின் அண்ணன்
மகன் ஆர்.செல்வராஜ், பஞ்சு அருணாசலத்திடம் உதவியாளராக சேர்ந்து, ஒரு கட்டத்தில்
அவர் கதையை அன்னக்கிளி என்கிற பெயரில் படமாக தயாரிக்க முடிவான போது, அதில் புதிய
இசையமைப்பாளரை அறிமுகப்படுத்த நினைத்த பஞ்சு அருணாசலத்திடம் இளையராஜாவை அழைத்து
சென்று அறிமுகப்படுத்தி அவருக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்று தந்தார்,
ஆர்.செல்வராஜ்.
அன்னக்கிளி
படத்திற்கு முன்பு இரு படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆனார், இளையராஜா. அதில்
ஒரு படத்தில் ஜெமினி கணேசன் ஹீரோ. டி.ஆர்.ரகுநாதன் இயக்கும் அந்தப் படத்திற்காக
இளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டது. அதில் டி.எம்.சௌந்தராஜன்
பாடிய ஒரு பாடலை கங்கை அமரன் எழுதி இருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு
நடைபெறவில்லை.
அதன் பிறகுதான்
அன்னக்கிளி படம் இளையராஜாவுக்கு கிடைத்தது. அன்னக்கிளி படத்தின் வெற்றி இளையராஜாவை
புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தொடர்ந்து அவரது படங்களுக்கு கிடார் வாசித்து
வந்தார் கங்கை அமரன்.
பாரதிராஜா பதினாறு
வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான போது அந்தப் படத்தின் பாடல் மெட்டு
ஒன்றுக்கு டம்மி வார்த்தைகளை கங்கை அமரன் எழுதி இருந்தார். அந்த வார்த்தைகளைப்
பார்த்த இயக்குநர் பாரதிராஜா, அந்த வரிகளையே பயன் படுத்திக் கொள்ளலாம் என்று
செந்தூரப்பூவே பாடலை ஜானகி குரல் கொண்டு பதிவு செய்தார். அந்தப் பாடல் 25 வது
தேசிய விருதில் சிறந்த பாடகிக்கான தேசிய விருதினை எஸ்.ஜானகிக்கு பெற்று தந்தது.
திரைப்படத்தில் முதல் பாடல் மூலம் கவனிக்க வைத்தவரானார், கங்கை அமரன்.
அதன் பிறகு அவள்
அப்படித்தான், முள்ளும் மலரும், ரோசாப்பூ ரவிக்கைக் காரி என பல படங்களுக்கு பாடல்
எழுதிக் கொண்டு அண்ணன் இளையராஜா இசையமைக்கும் படங்களில் கிடார் வாசித்துக்
கொண்டிருந்த கங்கை அமரனை, மலர்களிலே மல்லிகை படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பினை
ஏற்படுத்திக் கொடுத்தார், அவரது நண்பரும் பாடகருமான மலேஷியா வாசுதேவன். ஆனால்,
அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது.
அதன் பிறகு எம்.ஏ.காஜா இயக்கத்தில் விஜயன், ஷோபா
நடித்த ஒரு விடுகதை ஒரு தொடர்கதை படத்திற்கு இசையமைத்தார் கங்கை
அமரன். அந்தப் படம்தான் இசையமைப்பாளராக
கங்கை அமரனுக்கு முதல் படம். அந்தப் படத்தில் வரும் இரண்டு பாடல்கள்
காலங்கள் கடந்த பின்னும் தேனாக இனிக்கும். ஒன்று "விடுகதை ஒன்று தொடர்கதை
ஒன்று" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்.ஜானகி பாடும் பாடல். இன்னொரு பாடல்
கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் "நாயகன் அவன் ஒரு
புறம்"
அதன் பிறகு கே.பாக்யராஜ்
இயக்குனராக அறிமுகமான சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், கமல் நடித்த
பாலாஜியின் வாழ்வே மாயம், சட்டம், சிவாஜி நடித்த நீதிபதி, இமைகள் என பல
படங்களுக்கு இசையமைத்து வந்த கங்கை அமரனுக்கு பஞ்சு அருணாச்சலத்திடம் இருந்து
அழைப்பு வந்தது.
கோழி கூவுது என்கிற ஒரு
படம். அந்தப் படத்தை நீதான் இயக்கணும் என்கிறார், பஞ்சு அருணாசலம். கூடவே
இளையராஜாவும் அமர்ந்திருக்கிறார். தனியாக இசையமைக்க போவதாக செய்தி வந்த போது எதிர்ப்பு
தெரிவித்த அண்ணன் இளையராஜா, படம் இயக்க வேண்டும் என்கிற போது துணையாக இருக்கிறாரே
என்று ஆச்சர்யப்பட்டார், கங்கை அமரன்.
அலைகள் ஓய்வதில்லை
படத்திற்கு பிறகு பெரிய அண்ணன் பாஸ்கர் தயாரிப்பில், சின்ன அண்ணன் இளையராஜா
இசையில் உருவாகும் படம் என்பதால் உடனே ஒப்புக் கொண்டார், கங்கை அமரன்.
கதை எழுதியது
கிடையாது. படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தது கிடையாது. ஆனாலும் படம் இயக்க களம்
இறங்கினார். அவருக்கு உதவியாக ஒளிப்பாதிவாளர் நிவாஸ் இருந்தார். லெப்ட், ரைட்,
லுக் கொடுத்து பேச வைப்பது என முதல் மூன்று காட்சிகள் படமாக்கு வரை குழப்பம்
இருந்ததுள்ளது. அதன் பிறகு பதினேழு படம் இயக்கி இருக்கிறார், கங்கை அமரன்.
இதில் எங்க ஊரு
பாட்டுக்காரன் படத்தின் மூலம் ராமராஜன் நட்சத்திர அந்தஸ்த் பெற காரணமாக இருந்தவர்,
கரகாட்டக்காரன் படம் மூலம் ராமராஜனை உச்சத்துக்கு கொண்டு போனார்.
பிரபுவுக்கு கோழிகூவுது,
கும்பகர தங்கையா, சின்னவர் என வெற்றிப் படங்களை கொடுத்தவர், கமல் நடிப்பில்
அதிவீரபாண்டியன் என்கிற படத்திற்கு ஒளிப்பதைவாளர் பி.சி.ஸ்ரீராமுடன் இணைந்து லொக்கேஷன்
வரை பார்த்து முடித்தவர், சின்னவர் படம் ஓடாது என்கிற தவறான கணிப்பு படம்
வெளியாகும் முன்பே இருந்ததால் அதிவீரபாண்டியன் படத்தை இழக்கும் வாய்ப்பை இழந்தார்.
மேலும் மகன்கள் படிப்புக்காக லண்டனுக்கு சென்றவர், அங்கு சிறிது காலம் இருந்தார்.
பிறகு சென்னை வந்து
மூன்று ஆண்டுகள் அண்ணன் இளையராஜாவின் கூடவே இருந்து அவரது நிகழ்ச்சிகளை கவனித்துக்
கொண்டார். அப்போது ஸ்ரீதர் படத்திற்கு வந்த முன்பணத்தை கூட அவர் பெறவில்லை.
இளையராஜாவின்
நிகழ்ச்சிகளை கவனித்து வந்தாலும் பாடல் எழுதுவதை நிறுத்தவில்லை, கங்கை அமரன். அவரின் பாடல் திறமையை தொடர்ந்து அங்கீகரித்தவர் பாரதிராஜா.
பாடல் எழுதும் போது
வார்த்தையில் சில மாற்றங்கள் ஏற்படும் போது இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும்
மனஸ்தாபங்கள் ஏற்படுமாம். இதனால் சில சமயம் அண்ணனுடன் பேசாமல் இருந்துவிடுவார்.
ஆனால், தனது பக்கம் தவறு என்றால் உடனே மன்னிப்பு கேட்டுவிடுவார்.
இங்கேயும் ஒரு கங்கை படத்தில் தெற்கு தெரு
மச்சானே, நீதானா அந்தக் குயில் படத்தில் பூஜைக்கேத்த பூவிது, விக்ரம் படத்தில் ஏஞ்ஜோடி
மஞ்சக்குருவி என பல படங்களில் பாடல்கள் பாடி இருக்கிருக்கும் கங்கை அமரன், பாரதிராஜா
இயக்கத்தில் பாக்யராஜ் நடித்த புதிய வார்ப்புகள் படத்தில் முதலில் நாயகனாக நடிக்க
இருந்தவர் இவர்தானாம். ஏனோ அந்த வாய்ப்பு அவரை விட்டு போய், கடைசியில்
பாக்யராஜுக்கு டப்பிங் பேசும் பணியை செய்து அந்தப் படத்திற்குள் இருந்தார்.
ஆனாலும், கரகாட்டக்காரன், இதயம், உன்னிடத்தில் எண்ணக் கொடுத்தேன், ஜோடி, உள்ளம்
கொள்ளை போகுதே, ஆர்யா சூர்யா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
எழுபத்தி ஐந்து படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதி
இருக்கும் கங்கை அமரன், பதினெட்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். சினிமாவில் ஒரே நேரத்தில் படம் இயக்கிக் கொண்டு,
பாடல் எழுதிக் கொண்டு, இசையமைத்துக் கொண்டு, கச்சேரி செய்து கொண்டு, பாடல் பாடிக்
கொண்டு என எல்லா துறைகளிலும் இயங்கிக் கொண்டிருந்த ஒரே நபர் கங்கைஅமரன்தான்.
மணிமேகலை என்பவரை காதலித்து
மனந்த கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர். மூத்த
மகன் வெங்கட் பிரபுவை அமெரிக்கவுக்கு அனுப்பி பிசினஸ் மேனேஜ்மென்ட்
படிக்க வைத்தார். ஆனால், அவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இயக்குனராக,
சென்னை 28, சரோஜா, மங்காத்தா உட்பட சில படங்களை இயக்கி உள்ளார். சின்ன
மகன் பிரேம்ஜியை லண்டனுக்கு அனுப்பி இசை படிக்க வைத்தார். அவரோ இப்போது படங்களில்
நடித்து வருகிறார்.
கங்கை அமரனின் பாட்டு பிடிக்கும். பாட்டுக்கு
மெட்டுப் போட்டால் பிடிக்கும். பாடலைப் பாடினாலும் பிடிக்கும். பாடல்கள் கொண்ட படத்தை
இயக்கினாலும் பிடிக்கும். மொத்தத்தில் கலகலப்பான பேச்சுக்கும் சிரிப்புக்குமான
கங்கை அமரனை எல்லோருக்கும் பிடிக்கும்.
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக