சனி, 1 ஆகஸ்ட், 2015

’சகலகலா வல்லவர்’ டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்


சகலகலா வல்லவர் என்று திரைத்துறையில் அழைக்கப்படும் டி.ராஜேந்தர் 1955 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாயவரத்தில் தேசிங்கு ராஜா உடையார், ராஜலட்சுமி தமபதியினருக்கு மகனாக பிறந்தவர். 

மாயவரத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மண்ணம்பந்தல் என்ற ஊரில் அமைந்துள்ள ஏவிசி கல்லூரியில் எம்.ஏ. படித்த இவர், அக்கல்லூரியில் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவத்தை அக்கல்லூரிலேயே படமாக எடுத்தார். 

இவரது முதல் படம் ஒருதலை ராகம். முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருந்த அப்படம் வியாபாரம் ஆகாமல் பெரும் வலியோடு 1980 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் அப்படத்தை ரசிகர்கள் வரவேற்று மாபெரும் வெற்றி படமாக்கி வசூலில் சரித்திர சாதனை படைக்க வைத்தனர். 

மேஜையில் தளம் போட்டு பாட்டுப் பாடி பட வாய்ப்பை பெற்ற திறமைக்கு சொந்தக்காரர் இவர். இப்படத்தில் இவர் எழுதி இசை அமைத்த அத்தனை பாடல்களும் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது எழுதிய பாடல்கள்

அடுத்து இவர் இயக்கிய வசந்த அழைப்புகள் படத்தை ஜெப்பியார் தயாரித்தார். இந்தப் படத்தை அடுத்து வெளியான ரயில் பயணங்களில் படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. 

தொடர்ந்து காதல் கதைகளை படமாக தந்தவர் தங்கையின் பாசத்தை மையமாக வைத்து தங்கைகோர் கீதம் என்கிற படத்தை இயக்கினார். இந்தப் படமும் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் பெரிதும் வரவேற்பை பெற்றன. இதில் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். 

அடுத்து இயக்கிய உயிருள்ள வரை உஷா, உறவைக் காத்த கிளி போன்ற படங்களும் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. இப்படங்களில் நடிகராகவும் வலம் வந்தார். இப்படங்களின் பாடல்களுக்கு செட் அமைதிதிருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. 

அதன் பிறகு இவர் இயக்கிய படங்களில் அவரது மகன் சில்ம்பரசனுக்கு முக்கியத்துவம் வருகிற மாதிரி கதைகளை அமைத்தார். தாய் தங்கை பாசம், ஒரு தாயின் சபதம், எங்க வீட்டு வேலன், ஒரு வசந்த கீதம், காதல் அழிவதில்லை என்று வரிசையாக படங்களை கொடுத்தார். இந்தப் படங்களும் அவருக்கு பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. 

அவருடன் புதுமுகங்களை வைத்து சொன்னால் தான் காதலா,   மோனிசா என் மோனலிசா, வீராச்சாமி போன்ற பாடங்களையும் இயக்கினார்.

அவரது அறிமுகங்களான அமலா, நளினி, ஜோதி, ஜீவிதா, மும்தாஜ் போன்ற நடிகைகள் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றனர். 

இவரது படங்களில் குடிப்பது, புகைப்பது, வன்முறையை துண்டுவது போன்ற காட்சிகள் இருக்காது. எப்போதும் சமூகத்துக்கு தவறான கருத்துக்களை சொல்லிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்

இவரது பாடல்களையும், இசையையும் ரசித்து ஒரு ரசிகராக இவரை பூக்களை பறிக்காதீர்கள் படத்திற்கு இசையமைக்க வைத்தார் தயாரிப்பாளர் தரங்கை சண்முகம். புதுமுகங்கள் நடித்த அப்படம் இவரது இசைக்காகவும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது என்கிறார் அவர். 

இவர் நடிக்காத சில படங்களுக்கும் இசையாமதிருக்கிறார் இவர். இவரது மகன் சிலம்பரசன் நடித்த வல்லவன் படத்தில் அம்மாடி ஆத்தாடி, ஒஸ்தி படத்தில் கலாசலா போன்ற பாடல்களையும் பாடி இருக்கிறார். 

நடிகர், இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர், கலை இயக்குனர், நடன இயக்குனர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர், என பன்முக கலைஞர் இவர்.
இவரது திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும். என்பதுகளில் இவரது வசனத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது. படம் வெளியான பிறகு கதை வசன புத்தங்களே தனியாக விற்பனையானது . 

திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996ல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 

2004ல் திமுகவிலிருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக் கொண்டுள்ளார். 

டி.ராஜேந்தர், உஷா இருவருக்கும் காதல் தோல்வி இருந்ததாகவும், அந்த தோல்வியின் வலியை இருவரும் பகிர்ந்து கொண்ட போது, இருவருக்குள்ளும் பரஸ்பரம் ஒரு அன்பு உருவாகி அதுதான் திருமணத்தில் முடிந்தது என்கிறார்கள் மூத்த சினிமா நிருபர்கள்.

இவர்களுக்கு சிலம்பரசன், குரளரசன் என்கிற இரு மகன்களும் இலக்கிய என்கிற ஒரு மகளும் உள்ளனர். மகள் இலக்கியாவை, ஆந்திராவைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இவரின் மூத்த மகன் சிலம்பரசன் தமிழில் புகழ்பெற்ற முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இளைய மகன் குரளரசன், சிலம்பரசன் நடிக்கும் இது நம்ம ஆளு படத்தி மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் 

34 வருடங்களுக்கு முன்பு ஒரு தலை ராகம் படத்தை இயக்கிய வர், இப்போது ஒரு தலைக் காதல் என்ற படத்தை இயக்கி நடித்துக் கொண்டிருக்கிறார். அதீத  தன்னபிக்கையும் பலவகைத் திறனும்  கொண்டு ரசிகர்களைக் கவர்ந்தவர் இவர்

தன் தனித்தனி திறமைகளால் அந்தத் துறைகளில் மட்டும் முன்னுக்கு வந்தவரை விட அனைத்துத் துறைகளிலும் தன் முத்திரையை பதித்தவர் வர்.

"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது" என்பது ஒரு பழமொழி. இது இவருக்கு அப்படியே பொருந்தும்.

பின்னணி பாடகி பி.சுசீலா



இசை ரசிகர்களின் மனதில் தனக்கென இடம் பிடித்தவர் பின்னணி பாடகி பி.சுசீலா. இவர் ஆந்திராவில் உள்ள விஜயநகரத்தில் 1935 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி புலப்பாக்க முந்தராவ் கவுத்தாரம் – ஷேசாவதாரம் தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர். இவருக்கு ஐந்து சகோதரிகளும், மூன்று சகோதரர்களும் உள்ளனர்.

பள்ளியில் படிக்கும் பொழுதே இசையின் மீது ஏற்பட்ட ஆர்வத்தினால் ஆந்திராவில் புகழ்பெற்று விளங்கிய துவாரம் வேங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசைப் பயின்றார். அதன் பிறகு, ‘சென்னை மகாராஜா இசைக்கல்லூரியில்’ சேர்ந்து, இசைக் கல்வி பயின்ற இவர், ‘ஆந்திரா பல்கலைக் கழகத்தில்’ சேர்ந்து இசைத்துறையில் ‘டிப்ளமோ’ முடித்தார்.

சென்னை வானொலியில் ‘பாப்பா மலர் நிகழ்ச்சியில்’ பாடத்தொடங்கிய இவரின் இசைத் திறமையைக் கண்டவர்  பண்டியாலா நாகேஸ்வர ராவ். இயக்குனர் கே.எஸ் பிரகாஷ்ராவ், தன்னுடைய ‘பெற்றதாய்’ திரைப்படத்தில் முதன் முதலாக பாட வைத்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற எதுக்கு அழைத்தாய் என்கிற பாடலை ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பாடினார்.

பிறகு ஏ.வி.எம் ஸ்டுடியோவில் சிறிது காலம் பாடிய இவர், லஷ்மிநாராயணம் என்பவரிடம் தமிழ் கற்று 1955 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்கிற படத்தில் ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்’ மற்றும் ‘உன்னைக் கண் தேடுதே’ என்ற பாடல்களை பாடினார். இந்தப் பாடல்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. 

அதே ஆண்டில் எஸ்.வி பிரசாத் இயக்கிய மிஸ்ஸியம்மா படத்தில் இவர் பாடிய இரண்டு பாடல்கள் மேலும் புகழைப் பெற்றுத் தந்தது.

‘ஆலயமணியின் ஓசையை நான்கேட்டேன்’, ‘நினைக்கத் தெரிந்த மனமே’, ‘சிட்டுக்குருவி முத்தம்’, ‘முத்தான முத்தல்லவோ’, ‘மன்னவனே அழலாமா’, ‘பேசுவது கிளியா’, ‘ஆயிரம் நிலவே வா’, ‘வளர்ந்த கலை’, ‘அனுபவம் புதுமை’, ‘தாமரை கன்னங்கள்’, ‘மறைந்திருந்துப் பார்க்கும்’ போன்ற பலப் பாடல்கள் இசை நெஞ்சங்களின் மனதில் ஆலயமணியாய் ஒலித்தன.

தாய்மொழி தெலுங்கு என்றாலும், தமிழ் கற்றப்பிறகு, அவர் உச்சரிப்பில் உதிர்ந்த அனைத்துப் பாடல்களும் கேட்பவர் மனதில் ஒரு பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தின. ‘தமிழ் மொழியைப்’ பற்றி அவர் பாடிய ‘தமிழுக்கும் அமுதென்றுப் பேர்’ என்ற பாடல் தமிழ் இசை நெஞ்சங்களின் மனதை உருகவைத்தது.

நாகேஸ்வரராவ், விஸ்வநாதன் ராமமூர்த்தி, எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் என பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம், சிங்களம் எனப் பல இந்திய மொழிகளில் அறுபது ஆண்டுகளாக 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இருக்கிறார் இவர். டி.எம்.சௌந்தர்ராஜனுடன் இணைந்து 727பாடல்கள், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து 257 பாடல்கள் என பாடியுள்ளார் இவர்.

ஐந்து முறை தேசிய விருதுகள், ஆறு முறை ஆந்திர அரசின் விருதுகள், மூன்று முறை தமிழக அரசின் விருதுகள், இரண்டு முறை கேரள அரசின் விருதுகள் என பல விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்த இவருக்கு, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதும் கிடைத்தது. ஆந்திர மாநில அரசால் ரகுபதி பெங்கையா விருது, தமிழக அரசால் கலைமாமணி விருது என பல கௌரவ விருதுகளையும் பெற்றவர் இவர். பிரபுதேவா நடித்த மனதை திருடிவிட்டாய் படத்தில் இவரது ரசிகையாக கௌசல்யா நடித்திருப்பர். அந்த ரசிகையை பார்க்க வரும் பாடகியாக நடித்திருக்கிறார் இவர்.

தன் பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை நிறுவி, தேசிய அளவில் இசைத்துறையில் சாதனைப் புரிபவர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறார்.

1957 ஆம் ஆண்டில் டாக்டர் மோகன்ராவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.

மறக்க தெரிந்த மனதிலும் நினைக்க தெரிந்த பாடல்களுக்கு சொந்தக்காரர் இவர். தனது தேன் குரலால் பல இதயங்களை கொள்ளை கொண்ட இவர், நம் தமிழுக்கு கிடைத்த பெரும் வரம்.

’காதல் கோட்டை’ தேவயானி



நடிகை தேவயானி  1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் தேதி மும்பையில் பிறந்தவர்.  இவரது தந்தை ஜெயதேவ் தாயார் லட்சுமி இவருக்கு வைத்த பெயர் சுஷ்மா.  கொங்கினி வகுப்பை சேர்ந்த  இவருக்கு நகுல், மயூர் என இரு தம்பிகள் உள்ளனர். சிறு வயதில் இருந்தே பாடவும் நடிக்கவும் ஆர்வம் கொண்ட இவருக்கு இந்தியில் கோயல் என்கிற பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட பிறகு வங்களா மொழியில் சாத் பென்சொமி என்கிற படத்தில் 1993 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

அதன் பிறகு மலையாளத்தில் உருவான ’கின்னாரி புழையோரம்’ படத்தில் நடித்தார்.  இவர் மூன்றாவதாக நடித்த படம் ’தொட்டா சிணுங்கி’. தமிழில் உருவான இந்தப் படத்தை கே.எஸ்.அதியமான் இயக்கி இருந்தார். அதன் பிறகு இந்தியில் ஒரு படம், மலையாளத்தில் இரண்டு படங்கள் என நடித்து வந்தவரை பிரசாந்த் நடித்த கல்லூரி வாசல், அஜித் நடித்த காதல் கோட்டை ஆகிய இரு படங்களும் இவரை தமிழில் நிரந்தர நடிகையாக்கியது.

காதல் கோட்டை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இவருக்கும் நல்ல மரியாதையை ஏற்படுத்தி தந்ததோடு, தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்று தந்தது. அதன் பிறகு கமலுடன் தெனாலி, பஞ்சதந்திரம், சரத்குமாருடன் சூரியவம்சம், பட்டாளி,  சத்யராஜுடன் என்னம்மா கண்ணு, செமரகளை, முரளியுடன்  பூமணி,  கிழக்கும் மேற்கும், பார்த்திபனுடன் சொர்ணமுகி, புதுமைப்பித்தன், அஜித்துடன் காதல் கோட்டை, நீ வருவாய் என, விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், பிரண்ட்ஸ், விக்ரமுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் என  எழுபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி ஆகிய ஆறு மொழிகளிலும் நடித்துள்ள இவர், சின்னத்திரையிலும் அழுத்தமான முத்திரைப் பதித்திருக்கிறார்.

காதல் கோட்டை, சூர்யவம்சம், பாரதி ஆகிய படங்களுக்காக மூன்று முறை தமிழக அரசின்  சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர், தமிழக அரசின் கலைமாமணி விருதையும் வாங்கி இருக்கிறார். இவரது நடிப்பு திறமை  பாராட்டி பல அமைப்புகள் பரிசு கேடயங்கள் அளித்து கௌரவித்திருக்கின்றன.

நீ வருவாயன படத்தை இயக்கிய இயக்குனர் ராஜகுமாரன், தன்னை காதலிப்பதை அறிந்ததும், அவரை காதலித்தார். இந்த காதலுக்கு அவரது தாயார் லட்சுமி சம்மதிக்காததால், நண்பர்கள் முன்னிலையில் திருத்தனியில் 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இப்போது இனியா, பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகும் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய இவர், கணவரின் இயக்கத்தில் காதலுடன், திருமதி தமிழ் ஆகிய இரு படங்களை தயாரித்தார். தனக்கு பெயர் வாங்கி கொடுத்த காதல் கோட்டை படத்தின் கமலி வேடத்தின் பெயரை தனது வீட்டுக்கு ’கமலி இல்லம்’ என வைத்திருக்கும் இவர்,  மகள் இனியா பெயரில் டப்பிங், ரெக்காடிங் ஸ்டுடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார்.
ஆசிரியை வேலை பார்க்க வேண்டும் என்று விரும்பிய இவர் முறைப்படி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்திருக்கிறார். இப்போது சென்னையில் உள்ள ஒரு பள்ளியில்  45 குழந்தைகளுக்கு  ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

நடிப்பும் படிப்பும் இந்த தேவயானிக்கு பிடித்த தொழில். நம்பிக்கைதான் வாழ்க்கை. அது நம்மிடமே இருக்கிறது என்கிறார் இவர்

நடிகர் முத்துராமன் வாழ்க்கை வரலாறு

முத்துராமன்.... முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருந்தாலும் ஏனோ அவர் மற்ற கதாநாயகர்களைப் போல புகழின் உச்சிக்கு செல்ல இயலவில்லை. குணசித்திர நடிகராக மட்டுமல்ல கதாநாயகன், நகைச்சுவை நடிகர் என்று பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் ஜொலித்தவர் அவர்.

ரசிகர்களால் நவரச திலகம் என்று கொண்டாடப்பட்ட முத்துராமன் 1960—ல்  தொடங்கி 1970-ம் ஆண்டு இறுதிவரை கதாநாயகனாக நடித்தார். இயல்பான நடிப்பு, தெளிவான தமிழ் உச்சரிப்பு மற்றும் தனித்துவமான குரல் வளத்தால் இன்றளவும் பல ரசிகர்களை கொண்டுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.

அன்றைய கதாநாயகர்களைப் போல ஆரம்பத்தில் நாடக நடிகராகத்தான் தன் திரைவழிப் பயணத்தை தொடங்கினார் முத்துராமன். பள்ளியில் படிக்கும் போதே, நாடகத்தின் மீது ஆர்வம். அதை அவரது பெற்றோர்கள் விரும்பவில்லை. நாடகத்தின் மீதிருந்த ஆர்வத்தில் தன் குடும்பத்தை விட்டு வெளியேறி ஒவ்வொரு நாடகக் கம்பெனிக்கும் ஏறி இறங்கி வாய்ப்புகள் கேட்டார். சிறு, சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இவரது நாடக பிரவேசம், சில ஆண்டுகளில் அவரை சிறந்த நடிகராக மிளிரச் செய்தது. தனது நடிப்பால், குரல் வளத்தால் புகழ் பெற்ற இவரை காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார்  பாராட்டிக் கொண்டே இருந்தார். அவர் நடத்திய  , ஏழைப் பெண், தாகசாந்தி, குடும்ப வாழ்க்கை, புயலுக்குப் பின், எதிர்பார்த்தது, அன்னை  உட்பட பல நாடங்களில் நடித்து வந்தார், முத்துராமன்.

அதன் பிறகு, ராமனாதன், குலதெய்வம்ராஜகோபால் போன்ற நடிகர்களுடன் இணைந்து  வைரம் நாடக சபா என்ற பெயரில் சில காலம், நீதிபதி, சந்திப்பு, கடமை, சாந்தி, கட்ட பொம்மன் என  பல நாடகங்களை அரங்கேற்றினர்.

பிறகு, குலதெய்வம் ராஜகோபால், வைரம் கிருஷ்ணமூர்த்தி, மணிநாதன் ஆகியோருடன் இணைந்து 'கலைமணி நாடக சபா' என்ற நாடகக் கம்பெனியை ஆரம்பித்து நாடகங்கள் நடத்தினார். இதில் மனோரமா உட்பட பலர் நடித்தனர். சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகங்களிலும் அன்றைய நாட்களில் அவர் நடித்திருக்கிறார்.

மேடை நாடகத்தில் நடித்த காலத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரனுடன் இணைந்து, எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றத்தில் தொடர்ந்து பல நாடங்களில் நடித்தார். மணிமகுடம், முத்து மண்டபம் போன்ற நாடகங்கள் அந்நாட்களில் புகழ்பெற்றவை. மேலும் மகாகவி பாரதியாரின் கவிதைவரி நாடகத்தில் பங்கேற்று தனித்துவமான கவனம் பெற்றார்.

அதன் பின்னர் கே.எஸ்.பி.எஸ். கணபதி மூலமாகத் தமிழ் திரை உலகினுள் நுழைத்தார் முத்துராமன். அறிஞர் அண்ணா கதை எழுத, கலைஞர் வசனம் தீட்டிய ரங்கூன் ராதா படத்தில் வக்கீல் கதாபாத்திரம் கிடைத்தது. . 1956-ம் ஆண்டு வெளியான ரங்கூன் ராதா படமே அவரது முதல் வாய்ப்பு. அதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த முத்துராமன், அதன் பிறகு எம்.ஜி.ஆருடன் நடித்த அரசிளங்குமரி என்ற திரைப்படத்தில் ‘ஏற்றமுன்னா ஏற்றம்..’ என்ற பாடலில் வருவார். இந்தப் படம் மூலம் வெகுஜன ரசிகர்களிடம் சென்றார், முத்துராமன்.

அதன் பின் பல திரைப்படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களில் தோன்றி தனக்கென தனி முத்திரை பதிக்கத் தொடங்கினார் முத்துராமன், நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், சுமைதாங்கி, தெய்வம், சர்வர் சுந்தரம், காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம், காசேதான் கடவுளடா, எதிர் நீச்சல், ஊட்டி வரை உறவு, மயங்குகிறாள் ஒரு மாது, வாணி ராணி, மூன்று தெய்வங்கள் என பல படங்கள் அவரது நடிப்பு திறமையை மக்களிடம் கொண்டு சென்றன.

குணசித்திர வேடத்தில் அறிமுகமாகி கதாநாயகனாக தொடர்ந்து சில படங்களில் இரண்டாம் நாயகனாக, துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் அனைத்துப் படங்களிலும் அவரது பங்களிப்பு மிகச் சிறப்பாகவே இருந்தது. .

வாணி ராணி திரைபடத்தில் வாணிஸ்ரீயுடன் நகைச்சுவை நடிப்பில் அசத்தியிருப்பார். மூன்று தெய்வங்கள் என்ற படத்தில் திருடனாக நடித்திருப்பார். எதிர் நீச்சல் படத்தில் பாலக்காட்டு மலையாளம் பேசியும் அசத்தி இருப்பார். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் புற்றுநோயாளியாக பலவீனமான ஒருவராக காட்சியளிக்கும்படி வெகு இயல்பாக நடித்திருப்பார். ஜெயலலிதாவுடன் அவர் நடித்த சூரியகாந்தி எனும் திரைப்படம் அவரது திரை வாழ்வில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.

சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் கே.ஆர்.விஜயாவை ஒரு தலையாக விரும்புவது தெரியாமல் நண்பனுக்கும் காதலிக்கும் இடையில் சிக்கியவராக நடித்திருப்பார். காலத்தால் அழியாத கதாபாத்திரங்கள் பலவற்றில் நடித்துள்ளதால் முத்துராமனின் பிம்பம் என்பது திரை ரசிகர்களால் என்றென்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது.

நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவருடைய வேடத்திற்கு தகுந்தாற்போல மிதமான நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் மனதில் பதியச் செய்து விடுவார், முத்துராமன்.

கே.ஆர்.விஜயாவுடன்தான் அதிக படங்களில் நடித்துள்ளார் முத்துராமன்.  தேவிகா, ஜெயலலிதா, காஞ்சனா என முன்னணி கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர் அவர். கடைசி வரை எந்தக் கெட்ட பெயரும் வாங்காமல் நடிகைகளிடம் ‘ஜென்டில்மேன்’ என்று பெயரெடுத்தார், முத்துராமன்.

கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கரை ‘முரட்டுக் காளை’ படத்தில்  வில்லனாக அறிமுகப்படுத்தியது போல ‘போக்கிரி ராஜா’ படத்தில் வில்லனாக முத்துராமனை அறிமுகப்படுத்தலாம் என்ற யோசனையை ஏவி.எம்.சரவணனுக்கு தெரிவித்தார், கதையாசிரியர், பஞ்சு அருணாச்சலம்.

“நல்ல யோசனை”  “முத்துராமனைப்  பார்த்து பேசி அவரை ஒப்புக் கொள்ள வைக்கும் பொறுப்பு உங்களுடையது” என்று அந்தப் பொறுப்பை பஞ்சு அருணாச்சலத்திடமே ஒப்படைத்தார், ஏவி.எம்.சரவணன்.

முத்துராமனை சந்தித்த பஞ்சு அருணாச்சலம் ‘போக்கிரி ராஜா’ என்ற பெயரில் ரஜினிகாந்த இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ஒன்றை ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கின்ற விவரத்தை அவருக்கு எடுத்துக் கூறி அதில் வில்லன் வேடத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த முத்துராமன், பிறகு ‘பஞ்சு, நீங்க வீடு தேடி வந்து என்னைக் கூப்பிட்டதில் மகிழ்ச்சி. ஆனா, சினிமா, நாடகம் என்று இத்தனை வருஷம் தொடர்ந்து நடித்துவிட்டேன். இப்ப  வசதி வாய்ப்போடு செட்டிலாகி நிம்மதியா  ரெஸ்ட் எடுத்துட்டிருக்கேன். இவ்வளவு நாள் நல்ல நல்ல பாத்திரங்களில் நடிச்சிட்டு  இப்ப கடைசியில் வில்லனா நடிச்சு ஹீரோகிட்ட எதுக்கு அடி வாங்கணும்னுதான் நான் யோசிக்கிறேன்…” என்றார் முத்துராமன்.

“நீங்க ஏன்  வில்லன்னா அப்படி  நினைக்கறீங்க. நெகட்டிவாக  இருந்தாலும் அது ஒரு நல்ல  கேரக்டர். அதனால்  யோசனை செய்யாமல் இந்தப் படத்தில நடிங்க. இது காமெடி கலந்த வில்லன் பாத்திரம். நீங்க நடித்தால் நிச்சயம் அந்த கேரக்டர் வெற்றி பெறுவது மட்டுமில்லை. உங்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.…” என்றார் பஞ்சு அருணாச்சலம்.

முத்துராமன் அந்தப் பாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டவுடன்  அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையிலும் பல மாற்றங்களை செய்தார்  பஞ்சு அருணாசலம். அந்தப் படத்திலும் கலந்து கொண்டு நடித்தார்.

நடிகர் முத்துராமன் தன்னுடன் நடித்த நாடக நடிகையான சுலோச்சனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டவர். இயக்குனர்கள் தேவராஜ் மோகன் இருவரில் மோகன் என்பவரது சகோதரிதான் சுலோசனா. இவர்களுக்கு கணேஷ், முரளி கார்த்திகேயன் என இரண்டு மகன்கள். இரண்டாவது மகன் முரளி கார்த்திகேயன் கல்லூரியில்  படித்துக் கொண்டிருந்த போது, அவரது பெயரில் எம்.ஏ.காஜா இயக்கத்தில் பணம் பெண் பாசம் என்கிற படத்தை தயாரித்திருக்கிறா, முத்துராமன்.

தான் தயாரித்த மூன்று படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாரதிராஜாவை சொந்த வீடு என்கிற படத்தில் இயக்குனராக  அறிமுகப்படுத்தினார், தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி..

அந்தப் படத்தில் முத்துராமன் நாயகனாக நடிக்க நாயகியாக ஜெயலலிதா நடிக்க இருந்தார்கள். பாரதிராஜாவின் முதல் படமாக உருவாக இருந்த அந்தப் படம் ஜெயலலிதாவின் கால்ஷீட் தள்ளிப் போனதால் படமும் தள்ளிப் போனது. அதனால், பாரதிராஜா பதினாறு வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து புதுமுகங்கள் நடிப்பில் படங்களை இயக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது புதுமுகங்கள் நடிப்பில் அலைகள் ஓய்வதில்லை படத்தை இயக்க இருந்தவர், எக்மோரில் உள்ள ‘டான் பாஸ்கோ பள்ளியில் இருந்து கதாநாயகனையும், அவருக்கு உதவும் நான்கு நண்பர்களையும் தேர்வு செய்து வைத்திருந்த பாரதிராஜா, ஒரு வேலையாக முத்துராமன் வீடு வழியாக காரில் சென்ற போது, வீட்டு வாசலில் கார்த்திக் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார்.

பிறகு காரை நிறுத்தச் சொல்லி சிறிது நேரம் கார்த்திக் விளையாடுவதை காரில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்தவர், இந்தப் படத்தில் கார்த்திக்கை கதாநாயகனாக நடிக்க வைக்கலாமே என்று நினைத்திருக்கிறார்.

பிறகு கார்த்திக்கை அழைத்திருக்கிறார். கார்த்திக் அருகே சென்று ‘என்ன அங்கிள்’ என்று கேட்க, ‘அப்பா இருக்காரா?’ என்று பாரதிராஜா கூறி இருக்கிறார்.

“அப்பா ’ஃபுட்பால் மேட்ச் பார்க்கப் போயிருக்கார் அங்கிள்’” என்று சொன்ன கார்த்திக், “வாங்க அங்கிள்” என்று வீட்டுக்கு அழைத்திருக்கிறார். 

வீட்டுக்குள் சென்றதும், ‘நீ நடிக்கிறியா என்று பாரதிராஜா கேட்க, ‘ஐ டோ நோ அங்கிள்.... டாடிகிட்ட கேக்கணும்’ என்று கார்த்திக் பதில் சொல்லி இருக்கிறார்.

உனக்கு இன்ரஸ்ட் இருக்கா என்று கேட்டவர், பதில் எதுவும் சொல்லாமல் நின்ற கார்த்திக்கை பார்த்து, பிறகு போட்டோ எதுவும் வச்சிருக்கியா என்று கேட்டிருக்கிறார்.

மாங்கனியை கடிப்பது போன்ற ஒரு போட்டோவை கொண்டு வந்து கார்த்திக் கொடுத்திருக்கிறார். அந்தப் படத்தை பார்த்த பாரதிராஜா, இது தவிர வேற போட்டோ எதுவும் இல்லையா என்று கேட்டிருக்கிறார்.

கார்த்திக் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியில் பதில் சொல்லமுடியாமல் திகைத்து நின்றிருக்கிறார். பிறகு, அப்பா வந்ததும் பாரதிராஜா வந்தேன். விசாரித்தேன்னு சொல்லு என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார், பாரதிராஜா.

பாரதிராஜா வந்து சென்ற தகவலும், நடிக்கிறாயா என்று கேட்ட தகவலும் தெரிந்ததும், இன்ப அதிர்ச்சி அடைந்த முத்துராமன், உடனே பாரதிராஜாவை தொடர்பு கொண்டார்.

என்ன பாரதி... என்னால நம்பவே முடியல.... உங்க புது படத்துக்கு பையன் வேணும்னா...  தாராளமா கூட்டிட்டு போங்க... அது உங்க புள்ள... என்று கூறியவர், கார்த்திக்கின் பலம், பலவீனம் என எல்லாவற்றையும் தெரிவித்திருக்கிறார்.

நாகர்கோயில் அருகே உள்ள ஒரு கோவிலில் பூஜை போட்டு கார்த்திக், ராதா இருவரையும் நெருக்கமாக நிற்க வைத்து ஒரு ஷாட் எடுத்தார் பாரதிராஜா.

அதன் பிறகு ஜேப்பியார் பிறந்த ஊரான முட்டம் பகுதியில் முதல் நாள் படப்பிடிப்பு. புழுதி மண்ணும், நீல வானமும், கடலும் மேகக் கூட்டங்களும் பாறைகளை மோதிச்செல்லும் கடல் அலைகளும் உள்ள அழகான அந்த அந்த இடத்தில் ‘’புத்தம் புது காலை’ என்கிற அற்புதமான பாடலை கண்ணன் ஒளிப்பதிவில் படமாக்கினார், இயக்குநர் பாரதிராஜா.

நிழல்கள் படத்தின் தோல்வியால் பாரதிராஜா அவ்வளவுதான் என்று பேசிய வாய்களுக்கு பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை என்று சொல்லும் விதமாக இளையராஜாவின் இசையில் அவரது அண்ணன் பாஸ்கரின் தயாரிப்பில் மணிவண்ணன் கதையில் அலைகள் ஓய்வதில்லை படம் வெளியாகி பெரும் வெற்றிப் படமாக அமைந்து வசூலில் சாதனை படைத்தது.

விச்சு என்கிற கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருந்தார், கார்த்திக். முதல் வாய்ப்பு, முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவரிடம் இயக்குநர் பாரதிராஜா வேலை வாங்கி இருப்பார். ரசிகர்கள் அவரை பாராட்டினார்கள். தமிழக அரசு சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கௌரவித்தது. முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான விருது பெற்று மகிழ்ந்தார் கார்த்திக்.

அலைகள் ஓய்வதில்லை படம் தெலுங்கு மொழியிலும் உருவானது. பாரதிராஜா இயக்கிய அந்தப் படத்திலும் கார்த்திக் கதாநாயகனாக தெலுங்கு மொழியில் கதாநாயகனாக அறிமுகமானார். கதாநாயகியாக அருணா நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு ஆந்திர அரசு நந்தி விருதும், மத்திய அரசி சிறந்த மாநில மொழி படத்திற்கான தேசிய விருதும் வழங்கி கௌரவித்தது.

அடுத்து ராமநாராயணன் இயக்கத்தில் ராதாவுடன் இளஞ்ஜோடிகள்,  அதன் பிறகு நேரம் வந்தாச்சு படத்தில் ராதாவுடன் என தொடர்ந்து படங்கள் குவிந்தன.

எம்ஜிஆர் - சரோஜாதேவி, சிவாஜி - பத்மினி, கமல் - ஸ்ரீதேவி ஜோடி போல, கார்த்திக் - ராதா ஜோடி கொண்டாடப்பட்டது.

ஆனாலும் கார்த்திக் - ரேவதி, கார்த்திக் - அம்பிகா, கார்த்திக் - பானுப்ரியா, கார்த்திக் - ஜீஜீ, கார்த்திக் - குஷ்பு, கார்த்திக் - சுஹாசினி, கார்த்திக் - சசிகலா, கார்த்திக் - ரம்பா, கார்த்திக் - நக்மா, கார்த்திக் - நிரோஷா, கார்த்திக் - ஜீவிதா... என எல்லா ஜோடியும் பேசப்பட்டது.

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் பொருந்திப்போவார் கார்த்திக். எந்த கதாநாயகியாக இருந்தாலும் பொருத்தமான ஜோடி என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

தமிழ்நாட்டின் ஜாம்பவான் இயக்குநர்கள் அத்தனைப் பேர் கையினாலும் மோதிரக் குட்டு வாங்கிய திறமைசாலி நடிகர் என்று இவரைச் சொல்லலாம். ஆரம்பத்தில் விடலைத்தனமான கேரக்டர்களிலேயே நடித்து வந்தாலும் இவருக்கான திருப்புமுனை தந்த இயக்குநர் மணிரத்னம்.

தேசியவிருது பெற்ற 'மெளன ராகம்' படத்தின் ஹீரோ மோகன். படத்தில் வெறும் அரைமணி நேரம் மட்டுமே வரும் கார்த்திக் படம் முழுவதும் ஆக்ரமித்தது மட்டுமன்றி தமிழ்நாட்டு மக்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்றார். துள்ளலும் துடிப்பும் நிறைந்த கேரக்டர் என்றாலே நடிகர் கார்த்திக்தான் என்று அப்போதைய இளசுகளின் மனதில் அசையா இடம் பெற்றிருந்தார்.

படத்தில் வரும் 'சந்திரமெளலி...மிஸ்டர் சந்திரமெளலி' வசனம் அப்போதைய ட்ரெண்ட்.

‘ஊமைவிழிகள்’ படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் ‘மாமரத்துப்பூவெடுத்து’ பாடலையும் கார்த்திக்கையும் அப்படி ரசித்தார்கள். ‘கோபுர வாசலிலே’ படத்தில் காதலுக்கு தவிக்கும் கதாபாத்திரத்தையும் நண்பர்களின் துரோகத்தால் புழுங்கி தவிப்பதையும் அட்டகாசமாக செய்திருப்பார், கார்த்திக்.

திரையில் தோன்றியதுமே பார்வையாளர்கள் மனதில் கரன்ட் பாய்ச்சுவதில் கார்த்திக்கின் உடல் மொழியும் நடிப்பும் இருந்தன. உதாரணத்துக்கு 'அக்னிநட்சத்திரம்' படத்தில் பிரபுவும் ஒரு ஹீரோ என்றாலும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப ரொமான்ஸையும் இறுக்கமாகத்தான் வெளிப்படுத்துவார்.

ஆனால் கார்த்திக்கோ அவரின் வயதுக்கேற்ப நண்பர்களுடன் ஜாலி அரட்டை, திருட்டுத்தனமாக நிரோஷா வீட்டு நீச்சல் குளத்துக்குள் வந்து ஐ லவ் யூ சொல்வது என்று படத்தின் அக்னி வெப்பத்தைக் குறைக்கும் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியிருப்பார். ராஜாதி ராஜனிந்த ராஜா' பாடலுக்கு கார்த்திக்கின் துள்ளான் நடனம் அனைவரையும் மகிழ்ச்சியுடன் பார்க்க வைத்தது.

கார்த்திக்கை தங்கள் வீட்டுப் பிள்ளையாக ஒவ்வொரு குடும்பமும் நினைக்க வைத்த படம் 'வருசம் 16'. பாசில் இயக்கிய அந்தப் படத்தில் குடும்பத்தின் மீதான பாசம், குஷ்புவின் மீதான காதல் என்று எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்திருப்பார் கார்த்திக்.

சிட்டியில் மட்டுமின்றி கிராமத்து ஹீரோவாய் இவர் நடித்த படங்களின் வெற்றி அனைத்து சென்டர்களிலும் இவரை நெருக்கமான ஸ்டாராக மாற்றியது. 'பாண்டி நாட்டுத் தங்கம்', 'பெரிய வீட்டுப் பண்ணக்காரன்', 'பொன்னுமணி' போன்ற படங்கள் உதாரணம்.

'கிழக்கு வாசல்' படத்தில் கார்த்திக் ஏற்று நடித்த பொன்னுரங்கம் கதாபாத்திரத்தை மற்ற முடியுமா? இந்தப் படத்தில் சிறப்பாக நடித்தற்காக தமிழ அரசு சிறந்த நடிகருக்கான விருது கொடுத்து கௌரவித்தது.

காதல் நாயகனாகவே கலக்கி வந்த கார்த்திக்கின் சினிமா வரலாற்றில் அவரின் 'அமரன்' படம் பெரும் திருப்புமுனை. படம் முழுதும் மிக ஸ்டைலிஷான டானாகப் பிரமாதப்படுத்தியிருப்பார் கார்த்திக். இந்தப் படத்தில் 'வெத்தல போட்ட ஷோக்குல' பாடல் முலம் பாடகராகவும் அறியப்பட்டவர் கார்த்திக்.

சில படங்களில் தோல்விகளுக்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸாக தன் வெற்றிப் பயணத்தைத் தொடர காரணமாக அமைந்தது சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா'. காமெடி கலகலப்பில் வெள்ளிவிழா கொண்டாடியது படம் அது. கார்த்திக், கவுண்டமணி கூட்டணி தொடர்ந்து 'மேட்டுக்குடி'. 'உனக்காக எல்லாம் உனக்காக', என்று வெற்றிப்படங்களைத் தந்தன.

இயக்குநர் அகத்தியனின் ‘கோகுலத்தில் சீதை’ கார்த்திக்கின் வேற லெவல் நடிப்பு. விக்ரமனின் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ அநாயச நடிப்பால் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அள்ளிக்கொண்டார்.

கார்த்திக்கின் நடை, பேசுகிற பாவனை, முகத்தில் படபடவென விழுந்து கொண்டே இருக்கும் ரியாக்‌ஷன்... இவை எல்லாமே கார்த்திக்கை தனித்துவம் மிக்க நடிகராகவும் மகத்துவம் மிக்க கலைஞனாகவும் காட்டியது.

பெரும்பாலான கலைஞர்களுக்கு இருப்பது போலவே இவருக்கும் சில பலவீனங்கள் இருந்தன. ஆனால் அவற்றை விட்டு மீளமுடியாமல் போனது அவரைவிட தமிழ் சினிமாவுக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம்.

அனைத்திந்திய பார்வார்டு பிளாக்’ கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று அரசியலில் நுழைந்த கார்த்திக், அதன் பிறகு நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கினார். பின்பு அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு `மனித உரிமை காக்கும் கட்சி' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

1988ஆம் ஆண்டு சோலைக்குயில் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ராகினியை திருமணம் செய்து கொண்டார் கார்த்திக். இவர்களுக்கு கவுதம் கார்த்திக், கயன் கார்த்திக் என இரண்டு மகன்கள் உள்ளனர். பின்னர் மனைவி ராகினியின் சகோதரி ரதியை 1992ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திரன் கார்த்திக் என்ற மகன் உள்ளார்.

இதில் கெளதம் கார்த்திக் மனிரத்ணம் இயக்கிய கடல் படத்தில் ராதாவின் மகள் கார்த்திகாவுடன் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் அவர் இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

முத்துராமனின் மூன்றாவது வாரிசான கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிப்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், மகன் கார்த்திக் நடித்த முதல் படமான அலைகள் ஓய்வதில்லை படத்தை தந்தை முத்துராமன் பார்க்கமல் போனது வேதனையின் உச்சம்.

அன்னக்கிளி தந்த தேவராஜ் இயக்கத்தில் ஆயிரம் முத்தங்கள் படத்தின் படப்பிடிப்புக்காக ஊட்டிக்குச் சென்றிருந்தார், முத்துராமன். காலையில் படப்பிடிப்புக்கு செல்லும் முன் நடைபயிற்சிக்கு சென்ற அவர், திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட கீழே விழுந்திருக்கிறார். கேள்விப்பட்ட இன்னொரு நாயகன் சிவக்குமார் உட்பட படக்குழு ஒடி சென்று அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்து பார்த்த மருத்துவர், அவர் இறந்து அரை மணி நேரம் ஆகிவிட்டது என்று கூறி இருக்கிறார்.

ஊட்டியில், 7000 அடி உயரத்தில் அதிகாலையில், பனிமூட்டம் அதிகம் இருக்கும்போது, ஆக்சிஜன் மிகவும் குறைவாக இருக்கும். அப்போது ஓடியதால் மூச்சுத்திணறி இறந்திருக்கிறார். இந்த தகவலை சென்னையிலுள்ள அவர் வீட்டுக்குத் தெரிவித்த சிவக்குமார், அரசு ஒத்துழைப்புடன் மறுநாள் விடியற்காலை 5.00 மணிக்கு அவரது உடலை சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.

சிவாஜியுடன் திரையுலகமே திரண்டு அந்த அதிகாலையில் காத்திருக்க, சிரித்துக்கொண்டு ஊட்டி போனவர், சடலமாய்த் திரும்பிய கோரக்காட்சியைக் கண்டதும், முத்துராமனின் மனைவி சுலோசனா மயங்கிச் சரிந்திருக்கிறார்.

நட்பு, பழகும் தன்மை இவற்றைப் பொருத்தவரை ஒரு சகாப்தம் மறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும் என்று எம்.ஜி.ஆர் தமது இரங்கலை முத்துராமனின் மறைவின் போது கூறி இருக்கிறார்.

1929-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி பிறந்த மன்னார்குடி அருகே உள்ள ஒக்கநாடு கிராமத்தில் வசித்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், ரத்னாவதி தம்பதிக்கு பிறந்த முத்துராமன், 1981-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி மறைந்தார். நவரச திலகம் என்று மக்கள் கொண்டாடிய முத்துராமன் 190க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.