சனி, 1 ஆகஸ்ட், 2015

’காதல் கோட்டை’ தேவயானி



நடிகை தேவயானி  1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் தேதி மும்பையில் பிறந்தவர்.  இவரது தந்தை ஜெயதேவ் தாயார் லட்சுமி இவருக்கு வைத்த பெயர் சுஷ்மா.  கொங்கினி வகுப்பை சேர்ந்த  இவருக்கு நகுல், மயூர் என இரு தம்பிகள் உள்ளனர். சிறு வயதில் இருந்தே பாடவும் நடிக்கவும் ஆர்வம் கொண்ட இவருக்கு இந்தியில் கோயல் என்கிற பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட பிறகு வங்களா மொழியில் சாத் பென்சொமி என்கிற படத்தில் 1993 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

அதன் பிறகு மலையாளத்தில் உருவான ’கின்னாரி புழையோரம்’ படத்தில் நடித்தார்.  இவர் மூன்றாவதாக நடித்த படம் ’தொட்டா சிணுங்கி’. தமிழில் உருவான இந்தப் படத்தை கே.எஸ்.அதியமான் இயக்கி இருந்தார். அதன் பிறகு இந்தியில் ஒரு படம், மலையாளத்தில் இரண்டு படங்கள் என நடித்து வந்தவரை பிரசாந்த் நடித்த கல்லூரி வாசல், அஜித் நடித்த காதல் கோட்டை ஆகிய இரு படங்களும் இவரை தமிழில் நிரந்தர நடிகையாக்கியது.

காதல் கோட்டை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இவருக்கும் நல்ல மரியாதையை ஏற்படுத்தி தந்ததோடு, தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்று தந்தது. அதன் பிறகு கமலுடன் தெனாலி, பஞ்சதந்திரம், சரத்குமாருடன் சூரியவம்சம், பட்டாளி,  சத்யராஜுடன் என்னம்மா கண்ணு, செமரகளை, முரளியுடன்  பூமணி,  கிழக்கும் மேற்கும், பார்த்திபனுடன் சொர்ணமுகி, புதுமைப்பித்தன், அஜித்துடன் காதல் கோட்டை, நீ வருவாய் என, விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், பிரண்ட்ஸ், விக்ரமுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் என  எழுபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி ஆகிய ஆறு மொழிகளிலும் நடித்துள்ள இவர், சின்னத்திரையிலும் அழுத்தமான முத்திரைப் பதித்திருக்கிறார்.

காதல் கோட்டை, சூர்யவம்சம், பாரதி ஆகிய படங்களுக்காக மூன்று முறை தமிழக அரசின்  சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர், தமிழக அரசின் கலைமாமணி விருதையும் வாங்கி இருக்கிறார். இவரது நடிப்பு திறமை  பாராட்டி பல அமைப்புகள் பரிசு கேடயங்கள் அளித்து கௌரவித்திருக்கின்றன.

நீ வருவாயன படத்தை இயக்கிய இயக்குனர் ராஜகுமாரன், தன்னை காதலிப்பதை அறிந்ததும், அவரை காதலித்தார். இந்த காதலுக்கு அவரது தாயார் லட்சுமி சம்மதிக்காததால், நண்பர்கள் முன்னிலையில் திருத்தனியில் 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இப்போது இனியா, பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகும் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய இவர், கணவரின் இயக்கத்தில் காதலுடன், திருமதி தமிழ் ஆகிய இரு படங்களை தயாரித்தார். தனக்கு பெயர் வாங்கி கொடுத்த காதல் கோட்டை படத்தின் கமலி வேடத்தின் பெயரை தனது வீட்டுக்கு ’கமலி இல்லம்’ என வைத்திருக்கும் இவர்,  மகள் இனியா பெயரில் டப்பிங், ரெக்காடிங் ஸ்டுடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார்.
ஆசிரியை வேலை பார்க்க வேண்டும் என்று விரும்பிய இவர் முறைப்படி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்திருக்கிறார். இப்போது சென்னையில் உள்ள ஒரு பள்ளியில்  45 குழந்தைகளுக்கு  ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

நடிப்பும் படிப்பும் இந்த தேவயானிக்கு பிடித்த தொழில். நம்பிக்கைதான் வாழ்க்கை. அது நம்மிடமே இருக்கிறது என்கிறார் இவர்

1 கருத்து: