இசை ரசிகர்களின்
மனதில் தனக்கென இடம் பிடித்தவர் பின்னணி பாடகி பி.சுசீலா. இவர் ஆந்திராவில் உள்ள விஜயநகரத்தில்
1935 ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் 13 ஆம் தேதி புலப்பாக்க
முந்தராவ் கவுத்தாரம் – ஷேசாவதாரம் தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர். இவருக்கு ஐந்து
சகோதரிகளும், மூன்று சகோதரர்களும் உள்ளனர்.
பள்ளியில் படிக்கும்
பொழுதே இசையின் மீது ஏற்பட்ட ஆர்வத்தினால் ஆந்திராவில் புகழ்பெற்று விளங்கிய துவாரம்
வேங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசைப் பயின்றார். அதன் பிறகு, ‘சென்னை மகாராஜா இசைக்கல்லூரியில்’
சேர்ந்து, இசைக் கல்வி பயின்ற இவர், ‘ஆந்திரா பல்கலைக் கழகத்தில்’ சேர்ந்து இசைத்துறையில்
‘டிப்ளமோ’ முடித்தார்.
சென்னை வானொலியில்
‘பாப்பா மலர் நிகழ்ச்சியில்’ பாடத்தொடங்கிய இவரின் இசைத் திறமையைக் கண்டவர் பண்டியாலா நாகேஸ்வர ராவ். இயக்குனர் கே.எஸ் பிரகாஷ்ராவ்,
தன்னுடைய ‘பெற்றதாய்’ திரைப்படத்தில் முதன் முதலாக பாட வைத்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற
எதுக்கு அழைத்தாய் என்கிற பாடலை ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பாடினார்.
பிறகு ஏ.வி.எம்
ஸ்டுடியோவில் சிறிது காலம் பாடிய இவர், லஷ்மிநாராயணம் என்பவரிடம் தமிழ் கற்று 1955 ஆம் ஆண்டு
வெளிவந்த ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்கிற படத்தில் ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்’
மற்றும் ‘உன்னைக் கண் தேடுதே’ என்ற பாடல்களை பாடினார். இந்தப் பாடல்கள் இவருக்கு நல்ல
பெயரை பெற்று தந்தது.
அதே ஆண்டில்
எஸ்.வி பிரசாத் இயக்கிய மிஸ்ஸியம்மா படத்தில் இவர் பாடிய இரண்டு பாடல்கள் மேலும் புகழைப்
பெற்றுத் தந்தது.
‘ஆலயமணியின்
ஓசையை நான்கேட்டேன்’, ‘நினைக்கத் தெரிந்த மனமே’, ‘சிட்டுக்குருவி முத்தம்’, ‘முத்தான
முத்தல்லவோ’, ‘மன்னவனே அழலாமா’, ‘பேசுவது கிளியா’, ‘ஆயிரம் நிலவே வா’, ‘வளர்ந்த கலை’,
‘அனுபவம் புதுமை’, ‘தாமரை கன்னங்கள்’, ‘மறைந்திருந்துப் பார்க்கும்’ போன்ற பலப் பாடல்கள்
இசை நெஞ்சங்களின் மனதில் ஆலயமணியாய் ஒலித்தன.
தாய்மொழி தெலுங்கு
என்றாலும், தமிழ் கற்றப்பிறகு, அவர் உச்சரிப்பில் உதிர்ந்த அனைத்துப் பாடல்களும் கேட்பவர்
மனதில் ஒரு பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தின. ‘தமிழ் மொழியைப்’ பற்றி அவர் பாடிய ‘தமிழுக்கும்
அமுதென்றுப் பேர்’ என்ற பாடல் தமிழ் இசை நெஞ்சங்களின் மனதை உருகவைத்தது.
நாகேஸ்வரராவ்,
விஸ்வநாதன் ராமமூர்த்தி, எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் என பல இசையமைப்பாளர்களின்
இசையில் பாடிய அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா,
சமஸ்கிருதம், சிங்களம் எனப் பல இந்திய மொழிகளில் அறுபது ஆண்டுகளாக 25,000-க்கும் மேற்பட்ட
பாடல்களைப் பாடி இருக்கிறார் இவர். டி.எம்.சௌந்தர்ராஜனுடன் இணைந்து 727பாடல்கள், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன்
இணைந்து 257 பாடல்கள் என
பாடியுள்ளார் இவர்.
ஐந்து முறை
தேசிய விருதுகள், ஆறு முறை ஆந்திர அரசின் விருதுகள், மூன்று முறை தமிழக அரசின் விருதுகள்,
இரண்டு முறை கேரள அரசின் விருதுகள் என பல விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்த இவருக்கு,
இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதும் கிடைத்தது. ஆந்திர மாநில
அரசால் ரகுபதி பெங்கையா விருது, தமிழக அரசால் கலைமாமணி விருது என பல கௌரவ விருதுகளையும்
பெற்றவர் இவர். பிரபுதேவா நடித்த மனதை திருடிவிட்டாய் படத்தில் இவரது ரசிகையாக கௌசல்யா
நடித்திருப்பர். அந்த ரசிகையை பார்க்க வரும் பாடகியாக நடித்திருக்கிறார் இவர்.
தன் பெயரிலேயே
அறக்கட்டளை ஒன்றை நிறுவி, தேசிய அளவில் இசைத்துறையில் சாதனைப் புரிபவர்களைப் பாராட்டி
விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறார்.
1957 ஆம் ஆண்டில்
டாக்டர் மோகன்ராவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா
என்ற மகன் உள்ளார்.
மறக்க தெரிந்த
மனதிலும் நினைக்க தெரிந்த பாடல்களுக்கு சொந்தக்காரர் இவர். தனது தேன் குரலால் பல இதயங்களை
கொள்ளை கொண்ட இவர், நம் தமிழுக்கு கிடைத்த பெரும் வரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக