வெள்ளி, 31 ஜூலை, 2015

கமர்சியல் இயக்குநர் பி.வாசு

நடிகரும் இயக்குனருமான பி.வாசு 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினைந்தாம் தேதி சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை பீதாம்பரம் என்.டி.ரமாராவ், எம்.ஜி.ஆர். போன்ற முன்னணி சினிமா கலைஞர்களுக்கு ஒப்பனை கலைஞராக இருந்தவர்.

வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே இவருக்கு சினிமா ஆசை வந்துவிட்டது. பெற்றோர் தரும் பேருந்து செலவுக்கான தொகையை சேமித்து வைத்து பள்ளிக்கு நடந்தே செல்லும் இவர், சனி ஞாயிறு விடுமுறை நாளில் இரண்டு நாட்களும் படங்களை சேர்த்து பார்ப்பாராம். தான் பார்த்த அந்தப் படங்களைப் பற்றி டைட்டில் கார்டு தொடங்கியது முதல் என்ட் கார்டு போடும் வரை ஷாட் பை ஷட்டாக இசை ஒலியோடு நண்பர்களுக்கு கதை சொல்லி மகிழ்வாராம்.

இப்படி தனது கதை சொல்லும் திறமையை வளர்த்துக் கொண்ட இவர், பச்சையப்பன் கல்லூரியில் பியூசி படிக்க சென்ற போது, நடிகனாக புகழ் பெற வேண்டும் என்று முடிவு செய்தாராம். அதனால் ஒரு படம் பார்த்துவிட்டு வந்தால் அந்தப் படத்தில் சிவாஜி எப்படி பேசுவாரோ பழகுவாரோ அதே போல வீட்டில் எல்லோரிடமும் பேசுவாராம். பழகுவாராம்.

மேக்கப் அறையில் இருக்கும் விதவிதமான தலைமுடி விக்குகளை தனக்கு வைத்து அழகு பார்ப்பாராம். ஒருநாள் தந்தையிடம் சென்று நான் இனி படிக்க மாட்டேன். சினிமாவில் நடிக்கணும் என்று கூறி இருக்கிறார்.

சினிமாவில் நிரந்தரமான வருமானம் கிடைக்காது. நீ பியூசி முடித்தால் ஐபிஎஸ் படிக்க வைத்துவிடுகிறேன். உன் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்று கூறி இருக்கிறார்.

ஆனால், பி.வாசு அதை ஏற்கவில்லை. தந்தையின் உதவியாளர் மேக்கப் போட்டுவிட விதவிதமாக புகைப்படம் எடுத்து வந்து தந்தையிடம் காட்டி இருக்கிறார். இந்தப் படத்தை கொண்டு சென்று நான் எந்த இயக்குனரிடமும் சிபாரிசு செய்ய மாட்டேன். நீயே முயற்சி செய் என்று அவர் மறுத்திருக்கிறார்.

அதன் பிறகு சில கம்பெனிகளுக்கு தானே முயற்சி செய்த பி.வாசு, தந்தை பீதாம்பரம் தயாரிப்பில் என்.டி.ராமாராவ் நடித்த தெலுங்கு படத்தின் டிஸ்கசன், மற்றும் படப்பிடிப்புக்கு சென்றிருக்கிறார்.

டிஸ்கஷன், படப்பிடிப்பு தளங்களுக்கு சென்ற பிறகு படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வம் பி.வாசுவுக்கு உண்டானது. அதனால், உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று கூறி யாரிடமாவது சேர்த்துவிடுமாறு கூறி இருக்கிறார்.

அடுத்து தெலுங்கு மொழியில் ஒரு படமும், மலையாளத்தில் ஒரு படமும் தயாரிக்கிறேன். மலையாள படத்தை ஐவி சசி டைரக்ட் பண்றார். அவரிடம் சொல்லிவிடுகிறேன். அங்கு போய் தொழில் கற்றுக்கொள் என்று தந்தை பீதாம்பரம் சொல்லி இருக்கிறார்.

ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, படாபட் ஜெயலட்சுமி, வின்சென்ட், சோமன் நடிப்பில் 12 நாட்களில் அந்தர் தாகம் மலையாளப் படத்தை எடுத்து முடித்தார், ஐவி சசி. அந்தப் படத்தில் தயாரிப்பாளர் மகன் என்கிற மரியாதையுடன் விலாசம் இல்லாத அனுபவம் வாசுவுக்கு கிடைத்திருக்கிறது.

உண்மையான உதவியாளராக ஒரு இயக்குனரிடம் சினிமா தொழிலை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பிய பி.வாசு, தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஸ்ரீதரிடம் தன்னை சேர்த்து விடுமாறு தந்தையிடம் சென்று கூறி இருக்கிறார்.

பி.வாசுவின் ஆர்வத்தையும் பிடிவாதத்தையும் கண்ட அவரது தந்தை பீதாம்பரம், புகைப்பட கலைஞர் சாரதி மூலமாக ஸ்ரீதரிடம் பி.வாசுவை அனுப்பி வைத்திருக்கிறார். 

அப்போது எம்.ஜி.ஆர். நடிப்பில் மீனவ நண்பன் படத்தை இயக்க இருந்தார், ஸ்ரீதர். அந்தப் படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்த பி.வாசு, தொடர்ந்து கமல் - ரஜினி நடித்த ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறது’, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’, ‘சவுந்தர்யமே வருக வருக’ ஆகிய படங்களில் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்தவர், ‘மோகனப் புன்னகை’ படத்தின் போது வெளியே வந்துவிட்டார். அவருடன் ஸ்ரீதரின் இன்னொரு உதவியாளரும், வாசுவின் நண்பருமான சந்தானபாரதியும் வெளியே வந்துவிட்டார்.

அதற்கு காரணம் தனியாக இருவரும் இணைந்து படம் இயக்குவது என்கிற முடிவுதான். ஸ்ரீதரிடம் உதவியாளர்களாக பணிபுரியும் போதே `பிற்காலத்தில் நாம் இணைந்து பணிபுரியலாம்’ என்று தீர்மானித்துக் கொண்டதால் பாரதி வாசு என்று பெயர் வைத்துக் கொண்டு கதை விவாதத்தில் இறங்கினர். அதற்கு காரணமாக இருந்தவர், இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன்.

ஸ்ரீதரின் படங்களுக்கு இளையராஜா இசையமைக்க காரணமாக இருந்தவர்கள் சந்தனபாரதியும், பி.வாசுவும். அதனால், அவர்களுக்கு உதவ இந்த முயற்சியை மேற்கொண்டார், கங்கை அமரன். அந்தப் படத்திற்கு இளையராஜா இலவசமாக இசையமைத்துக் கொடுத்தார்.

பிற்காலத்தில் ராஜேஸ்வர் என்கிற பெயரில் ‘அமரன்’ உட்பட பல படங்களை இயக்கிய ராஜேஸ்வர், சோமசுந்தரேஸ்வரர் என்கிற பெயரில் எழுதிய இந்தப் படத்தின் கதையில் கமல் முக்கிய வேடத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

புதுமுகங்கள் நடிப்பில் எடுத்தால் இயக்குனர்களின் படமாக இருக்கும். நான் நடித்தால் நடிகனின் படமாக மாறிவிடும். எப்படி எடுத்தாலும் படம் நன்றாக இருக்கும் என்று கமல் கூறியதுடன் தனது வீட்டிலேயே டிஸ்கஷன் செய்ய உதவி இருக்கிறார். மணிரத்னம் உட்பட பலர் கதை விவாதத்தில் பங்கேற்றனறாம்.

நடிகர் சுரேஷ் இந்தத் திரைப்படத்தில்தான் நாயகனாக அறிமுகமானார். இவரின் தந்தையான M.S.கோபிநாத், பல தென்னிந்தியத் திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியவர். திரைப்படத்தில் நடிப்பதற்காக பல இடங்களில் முயற்சி செய்து சோர்ந்து போன சுரேஷை, பாரதி – வாசு பார்த்த முதல் கணத்திலேயே ஹீரோவாக ஒப்பந்தம் செய்தனர்.

இதன் நாயகியான `சாந்தி கிருஷ்ணா’விற்கும் இதுவே முதல் தமிழ்த் திரைப்படம். மலையாளத்தில் அறிமுகமான அதே ஆண்டில் தமிழிலும் அறிமுகமானார்

1981 ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ‘மதுமலர்’, ‘மெல்ல பேசுங்கள்’, ‘நீதியின் நிழல்’ போன்ற தமிழ்ப் படங்களை இயக்கினார்கள். இதில் சிவாஜி நடிப்பில் ‘நீதியின் நிழல்’ படம் கமர்சியல் படமாக உருவான போது இனி நாம் கமர்சியல் படங்களை இயக்க வேண்டும் என்று பி.வாசு கூறி இருக்கிறார்.

எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இயல்பான படங்கதான் எனக்கு பிடிக்கும் என்று கூறிய சந்தானபாரதி, இனி இருவரும் பிரிந்து தனி தனியே படம் இயக்குவது என்று முடிவு செய்தனர். விஷ்ணுவர்த்தன் நடிப்பில் கன்னடத்தில் ‘கதாநாயகா’ என்கிற படத்தையும், ராஜ்குமார் நடிப்பில் ‘கௌரி’ என்கிற படத்தையும் இயக்கியவர், தொடர்ந்து விஷ்ணுவர்த்தன் நடிப்பில் ஒரே ஆண்டில் நான்கு படங்களை இயக்கி பரபரப்பான இயக்குனராக பி.வாசு பேசப்பட்டார்.

பி.வாசுவின் கமர்சியல் ஹிட் படங்களைப் பார்த்த சிவாஜியின் சகோதரர் சண்முகம், பிரபுவுக்கு ஒரு கமர்சியல் படம் இயக்க வேண்டும் என்று மீண்டும் பி.வாசுவை தமிழுக்கு அழைத்து வந்தார்.   

அந்தப் படம்தான் பிரபு நடித்த ‘என் தன்கச்சி படிச்சவ’. ரஜினி நடித்த ‘பணக்காரன்’, ‘மன்னன்’, ‘உழைப்பாளி’, ‘சந்திரமுகி’, ‘குசேலன்’, பிரபு நடித்த ‘பிள்ளைக்காக’, ‘சின்னத்தம்பி’, ‘செந்தமிழ்ப்பாட்டு’, ‘வண்ணத்தமிழ்ப் பாட்டு’, ‘கட்டுமரக்காரன்’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’, ‘கிழக்குகரை’, சத்யராஜ் நடித்த ‘வாத்தியார் வீட்டுப் பிள்ளை’, ‘வேலை கிடைச்சிடுச்சி’, ‘நடிகன்’, ‘ரிக்‌ஷா மாமா’, ‘வால்டர் வெற்றிவேல்’, ‘மலபார் போலிஸ்’, ‘பொண்ணு வீட்டுக்காரன்’, ‘உடன்பிறப்பு’, ‘அசத்தல்’, ‘சுயம்வரம்’, விஜயகாந்த் நடித்த ‘பொன்மனச்செல்வன்’, ‘சேதுபதி ஐபிஎஸ்’, கார்த்திக் நடித்த ‘இது நம்ம பூமி’, ‘சீனு’, அர்ஜுன் நடித்த ‘சாது’, ஜெயராம் நடித்த ‘பத்தினி’, பாக்யராஜ் நடித்த ‘அம்மா வந்தாச்சு’, பார்த்திபன் நடித்த ‘வாய்மையே வெல்லும்’, ‘காக்கை சிறகினிலே’, அஜித் நடித்த ‘பரமசிவன்’, பிரபுதேவா நடித்த ‘லவ்பேர்ட்ஸ்’, அருண் பாண்டியன் நடித்த ‘அதிகா’ரி, பாலா நடித்த ‘காதல் கிசுகிசு’, ஆர்.கே. நடித்த ‘புலி வேஷம்’, ஷக்தி நடித்த ‘தொட்டால் பூ மலரும்’ ஆகிய தமிழ்ப் படங்களையும், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என பல மொழிகளிலும் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார்.

இவரது ‘சந்திரமுகி’, ‘என் தங்கச்சி படிச்சவ’, ‘பணக்காரன்’, ‘நடிகன்’ ஆகிய படங்கள் இந்தியில் ரீமேக் ஆகி இருக்கின்றன. ஆங்கிலத்தில் சனம் கபூர் நடித்த ‘கரி இன் லவ்’ என்கிற படத்தை இயக்கி இருக்கிறார்.

கன்னடத்தில் ராஜ்குமார் நடித்த ‘கௌ’ரி படம் நூறு நாள் ஒடி வசூலில் சாதனை படைத்தது. அதே போல கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் நடித்த ‘ஆப்தமித்ரா’ படம் ஒரு ஆண்டுக்கும் மேல் ஓடி மாபெரும் வெற்றியை இவருக்கு தந்தது. இந்தப் படம் தெலுங்கிலும் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. தமிழில் ரஜினி நடிக்க சந்திரமுகி என்கிற பெயரில் உருவாகி 827 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனைப் படைத்தது.

விஷ்ணுவர்த்தன் நடித்த ஆப்த ரக்சகா’ 35 வாரமும், ‘ஜெயசிம்மா’ 25 வாரமும், ‘கதாநாயகா’, ‘ஹருதய வந்தா’ ஆகிய படங்கள் நூறு நாட்கள் ஓடியும் சாதனைப் படைத்தது. உபேந்திர நடித்த ‘அராக்சகா’ படமும் நூறு நாள் ஓடி இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தமிழில் இவர் இயக்கிய ‘சின்னத்தம்பி’ ஒரு ஆண்டுக்கு மேல் ஒடி சாதைப் படைத்தது. அதே போல பல படங்கள் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வசூலிலும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

சிறந்த திரைக்கதை வசனத்திற்காக ‘நடிகன்’, ‘வால்டர் வெற்றிவேல்’படத்திற்கு தமிழக அரசின் விருதுகள் பெற்றவர், ‘சின்னத்தம்பி’ படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசு விருதையும் பெற்றார். தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரர். இவர் இயக்கிய ‘பத்தினி’, படத்திற்கு தமிழக அரசின் சிறந்தப் பட விருது கிடைத்தது.

‘வல்லரசு’ படத்தில் வில்லனாக நடிக்கத் துவங்கியவர், ‘சீனு’, ‘தென்காசிப்பட்டணம்’, ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘பந்தா பரமசிவம்’, ‘காதல் கிசுகிசு’, ‘அரசாட்சி’, ‘மகாநடிகன்’, ‘தசாவதாரம்’, ‘சந்திரமுகி’, ‘குசேலன்’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் ‘இ பறக்கும் தளிகா’ என்கிற மலையாளப் படம், ஆப்த ரட்சகா என்கிற தெலுங்கு படம் என பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவரது மகன் ஷக்தியை ‘சின்னத்தம்பி’ உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து அழகுப் பார்த்தவர், ‘தொட்டால் பூ மலரும்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி பல படங்களில் அவர் நடிக்க பாதை அமைத்து தந்தார்.

தனது தாயார் பெயரில் கமலம் மூவிஸ் என்கிற பட நிறுவனத்தை துவங்கி ‘வால்டர் வெற்றிவேல்’, ‘சாது’, ‘மலபார் போலீஸ்’, ‘தொட்டால் பூ மலரும்’ ஆகிய தமிழ்ப் படங்களை தனது மனைவி சாந்தி பெயரில் தயாரித்தார், பி.வாசு.

இவருக்கு சாந்தி என்கிற மனைவியும், ஷக்தி என்கிற மகனும், அபிராமி என்கிற மகளும் உள்ளனர்.

எத்தனை வெற்றிகள் வந்து அவரது புகழையும், வருமானத்தையும் உயர்த்தினாலும் எளிமையான மனிதராக அனைவரிடத்திலும் அன்புக் காட்டி பழகக் கூடிய அற்புதமான மனிதராகவே எப்போதும் இருக்கிறார், பி.வாசு.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக