வெள்ளி, 31 ஜூலை, 2015

ரம்யா கிருஷ்ணன்



தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம்  இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இரு நூறுக்கும் மேற்பட்ட படங்களில் வித்யாசமான பல வேடங்களில்  நடித்து தனது நடிப்புத் திறனால் மக்கள் மனதில் இன்று வரை இடம் பிடித்து இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன், 1967-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினைந்தாம் தேதி சென்னையில் பிறந்தவர்.

சிறு வயதிலேயே  பரதநாட்டியம், குச்சுப்புடி போன்ற நடனங்களை கற்ற
இவர் நடித்த முதல் படம் Neram Pularumbol என்கிற மலையாளப் படம்  மம்முட்டி –மோகன்லால் இருவரும் நடித்த அந்தப் படத்தில் நடித்தபோது இவருக்கு வயது பதினைந்து  

1983-ஆம் ஆண்டு வெளியான ’வெள்ளை மனசு’ படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி நடித்த ’படிக்காதவன்' படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்த விஜயபாபுவுக்கு ஜோடியாக நடித்தார்.  இவரை தமிழ் ரசிகர்களுக்கு பிரபலப்படுத்திய படம் என்றால் அது மணிவண்ணன் இயக்கிய ’முதல் வசந்தம்’ படம்தான் அதில் பாண்டியன் ஜோடியாக நடித்திருந்தார் இவர்.

தமிழில் ஐம்பத்தி ஆறு, தெலுங்கில் தொன்னூற்றி ஆறு, மலையாளத்தில் பதினைந்து, கன்னடத்தில் பத்தொன்பது, இந்தியில் பத்து என முப்பத்தி மூன்று ஆண்டுகள் பரபரப்பாக இயங்கிய இவரைத் தேடி இன்றும் திரைப்பட   வாய்ப்புகள் வந்த வண்ணமிருப்பதற்குக் காரணம் தொழிலில் இவருக்குள்ள ஈடுபாடு

தமிழில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ், கார்த்திக், அர்ஜூன், மோகன், சுரேஷ், தெலுங்கில் என்.டி.ராமாராவ், சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வெங்கடேஷ், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், கன்னடத்தில் விஷ்ணூவர்தன், ரவிச்சந்திரன், உபேந்திரா, ஹிந்தியில் அமிதாப் பச்சன், வினோத்குமார், ஷாருக் கான், சஞ்சய் தத், அனில் கபூர், கோவிந்தா பல பல மொழிகளைச் சேர்ந்த என அனைத்து முன்னணி கதாநாயர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் இவர்.

80-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே சினிமாவுக்கு வந்தாலும்  பெரும் போராட்டத்திற்குப் பிறகே முன்னணிக்கு வந்தார் இவர்.   இவரது திறமையை அங்கீகரித்து இவரை முன்னணி நடிகையாக்கியதில் தெலுங்குப் பட உலகிற்கு பெரும் பங்குண்டு  இவர் நடித்த முதல் தெலுங்கு படம் பலே மித்ரலு என்ற படம் என்றாலும் இவரை புகழேணியில் ஏற்றிய பெருமை சூத்ரதாரிலு என்ற படத்தையே சேரும்

80-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ராதா, பானுப்பிரியா, ராதிகா, சுகாசினி, விஜயசாந்தி ஆகியோருடன் முன்னணி நாயகியாக வலம் வந்த இவர் நவீன நடனம், பரதநாட்டியம் என இரண்டிலுமே சிறந்து விளங்கிய ஒரு நடிகை.  

ஒரு பக்கம் கவர்ச்சிக் கதாநாயகியாக வலம் வந்த இவர், மறுபக்கம் உணர்ச்சிப் பூர்வமான பல கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

கே.ஆர்.விஜயாவுக்குப் பிறகு அம்மன் வேடத்திற்கு மிகவும் பொருத்தமான நடிகை என ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே நடிகையான இவர், ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அன்னை காளிகாம்பாள். அம்மன்,மதுரை மீனாட்சி, குட்டி பிசாசு  என்று ஏராளமான பக்திப் படங்களில் அம்மன் வேடத்தில் நடித்தவர்
தமிழ்ப் படங்களில் இவர் ஏற்ற வேடங்களில் அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மறக்க முடியாத பாத்திரம் ஒன்று உண்டென்றால் அது படையப்பா படத்தில் இவர் ஏற்ற நீலாம்பரி பாத்திரம். ரஜினிகாந்த் போன்ற ஒரு மிகப் பெரிய நடிகரின் படத்திலே ஒரு நடிகைக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் அமைவது மிகவும் கஷ்டம்  .

அப்படி கிடைக்கப் பெற்ற வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு ரஜினிக்கு சவால் விடும் வகையில் 'நீலாம்பரியாகவே’வாழ்ந்து அனைவரையும் அசத்தினார் இவர்.

வெள்ளித்திரையில் வெற்றிக் கொடி நாட்டிய இவர், பின்னர் சின்னத் திரையிலும் கால் பதித்தார். "தங்க வேட்டை" நிகழ்ச்சித் தொகுப்பாளராகத் தொடங்கியது இவரது சின்னத் திரை பிரவேசம்  பிறகு கலசம், வம்சம், தங்கம் என ஐந்துக்கும் மேறப்பட்ட மெகா தொடர்களில் நடித்தது மட்டுமின்றி சின்னத் திரையில் தொடர்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளராகவும்இப்போது  உயர்ந்திருக்கிறார்இவர்

நடிகரும் பத்திரிகையாருமான சோ ராமசாமியின் உறவினரான இவர்,  பிரபல தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரித்வித் என்ற மகன் இருக்கிறான்.

படையப்பா படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருது பெற்ற இவர், Kante Koothurne Kanu, Raju Maharaju ஆகிய இரு படங்களுக்காக ஆந்திர அரசின் நந்தி விருதினைப் பெற்றிருக்கிறார்.

படையப்பாவில் ரஜினியை பார்த்து ‘உனக்கு வயசானாலும் ஸ்டைலும், அழகும் மட்டும் அப்படியே இருக்குது’ என்று வசனம் பேசுவார் ரம்யாகிருஷ்ணன். அந்த வசனம் ரம்யாகிருஷ்ணனுக்கும் பொருந்தும் என்பதில் சந்தேகம் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக