ஞாயிறு, 12 ஜூலை, 2015

நடிகை ராதிகா வாழ்க்கை வரலாறு

1963ஆம் ஆண்டு  ஆகஸ்டு மாதம் 21ஆம் தேதி  நடிகவேள் எம்.ஆர்.ராதா, கீதா தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர் ராதிகா. இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் பள்ளி படிப்பையும், லண்டனில் பட்டப் படிப்பையும் முடித்தவர் இவர்.


ராதிகாவின் பக்கத்து வீட்டில் வசித்த ஒரு பெ
ண்ணை தனது படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் பாரதிராஜா பார்க்க சென்றிருந்த போது, அவர்கள காட்டிய குரூப் போட்டோவில் ராதிகாவை பார்த்துவிட்டு, இந்தப் பெண் யார் என்று விசாரிக்க, பக்கத்து வீட்டு பெண் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

பாரதிராஜா பக்கத்து வீட்டுக்கு நடந்து சென்ற போது, அங்கு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாராம்  ராதிகா. அவரிடம் பாரதிராஜா விசாரிக்க முயன்ற போது, அவர் பயந்து போய் அங்கிருந்து ஓடி இருக்கிறார். ஏற்கனவே அந்த பகுதியில் கொலை நடந்திருந்ததால், புதியவர்களை கண்டால் ராதிகாவுக்கு பயம்.

ராதிகாவின் அம்மா, கீதா வெளியில் வந்து பார்த்து, பாரதிராஜாவிடம் விசாரிக்க, அவர்தான் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் பதினாறு வயனிலே படத்தின் இயக்குனர் என்று தெரிந்திருக்கிறது. பிறகு உள்ளே அழைத்து சென்று பெசி இருக்கிறார்.

தனது கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்க வெகுளியான ஒரு பெண் தேவை என்றும், அதற்காக ஒரு புதுமுகம் தேடுவதையும், அதற்கு ராதிகா பொருத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார் பாரதிராஜா. 


எம்.ஆர்.ராதா மகள்தான் ராதிகா என்று பாரதிராஜாவுக்கு பிறகுதான் தெரிந்திருக்கிறது. இந்த விஷயத்தை எம்.ஆர்.ராதாவிடம் தெரிவித்த போது சிரித்துக் கொண்டாராம். அவரை பொருத்தவரை நடனத்திலும் பாடுவதிலும் ஆர்வமாக இருக்கும் ராதிகாவின் தங்கை நிரோஷாதான் சினிமாவுக்கு வருவார் என்று நினைத்தாராம். இப்போது படிப்பில் மட்டுமே ஆர்வமாக இருக்கும் ராதிகாவை நடிக்க கேட்டதும் நம்பவில்லையாம். பிறகு தேடி வந்த வாய்ப்பை மிஸ் பண்ண வேண்டாம். ஒரு படம் நடி என்று தெரிவித்தாராம் எம்.ஆர்.ராதா. முதலில் நடிக்க தெரியாதே என்று சொன்னவரை, நான் சொல்லித் தருகிறேன் என்று நம்பிக்கை தெரிவித்து நடிக்க வைத்திருக்கிறார், பாரதிராஜா.

லண்டனில் படித்து வளர்ந்த ராதிகாவை பாவடை தாவணியில் கிராமத்து பெண்ணாக கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்க வைத்தார் பாரதிராஜா.  1978ல் வெளியான இந்தப் படம் மாபெறும் வெற்றி பெற்று அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று தந்தது.

நிறம் மாறாத பூக்கள், இன்று போய் நாளை வா, போக்கிரி ராஜா, மூன்று முகம், ரெட்டை வால் குருவி, பூந்தோட்ட காவல்காரன், ஊர்க்காவலன், கிழக்குச் சீமையிலே, சிப்பிக்குள் முத்து, நல்லவனுக்கு நல்லவன், தாவணி கனவுகள், பசும் பொன், தூங்காதே தம்பி தூங்காதே, கேளடி கண்மணி என  எழுபத்தி ஐந்து தமிழ்ப் படங்கள், ஐம்பத்தி ஐந்து தெலுங்கு படங்கள், நான்கு கன்னட படங்கள், மூன்று மலையாள படங்கள், பதினோரு இந்திப் படங்கள் என மொத்தம்  148 படங்களில் நடித்திருக்கிறார் இவர்.

ஜித்தன், தலைமகன், கண்ணாமூச்சி ஏனடா, சென்னையில் ஒருநாள், புலிவால், சண்டமாருதம் என ஆறு படங்களை தயாரித்திருக்கும் இவர், தற்போது தனுஷ் நடித்துள்ள மாரி, விக்ரம் பிரபு நடித்துள்ள இது என்ன மாயம், பாபி சிம்ஹா நடிக்கும் பாம்பு சட்டை ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.

சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி என சின்னத்திரையிலும் நடிப்பு, தயாரிப்பு என தனது அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கும் இவர், பூந்தோட்ட காவல்காரன், நினைவு சின்னம் ஆகிய படங்களுக்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது இரு முறையும், தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான சிறந்த சிறப்பு விருதுகளை ராணி மகாராணி, பசும்பொன் ஆகிய படங்களுக்காக இரு முறை பெற்றார். ஆந்திர அரசின் நந்தி விருது  பிரேம கதா படத்திற்காக பெற்ற இவர், பத்திரிகைகள், ஊடகங்கள், தனியார் அமைப்புகள் பாராட்டி அளித்துள்ள ஏராளமான விருதுகளுக்கு சொந்தக்காரர்.

சினிமாவுக்கு விளையாட்டுதனமாக வந்துவிட்டேன் என்று சொல்லும் இவர் நடிக்க வந்த பிறகு ஒரே மாதிரி தெரியக் கூடாது என்று  புதிதாக மற்றிக் கொண்டு பர்பெக்டாக இருக்க வேண்டும் நடிப்பாராம். நடிக்க விருப்பம் இல்லாத இவர் ஒவ்வொரு படத்தை ஒப்புக் கொள்ளும் போதும்  இதுதான் கடைசி படம் என்று தாயாரிடம் சொல்லி ஒப்புக்கொள்வாராம்.

தெலுங்கு பட உலகில் இவரது திறமைக்கு சரியான படங்கள் அமைந்தன. மொழி தெரியாமல் சென்றாலும் அந்த கதாப்பாத்திரங்கள் இவருக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுத்தன என்கிறார் இவர். தெலுங்கு மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போது, இவருக்கு வந்த சில வாய்ப்புகளை தனது தோழி சுகாசினிக்கு சிபாரிசு செய்திருக்கிறார். 

முதன் முதலாக நடிப்புக்காக கை கொடுத்த தெய்வம் படத்தை ஆர்வத்துடன் பார்த்த போது, அதில் நடிகை சாவித்ரியின் அர்ப்பணிப்பான நடிப்பை கண்டு வியந்திருக்கிறார். அதனால், இவருக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்டால், சாவித்திரி. என்பார்.

நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தனை முதலில் திருமணம் செய்து கொண்டவர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.  இனிமேல் சினிமாக்காரரை திருமணம் செய்துக் கொள்ள கூடாது என்று முடிவெடுத்தவர், பிறகு இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மகள் ரயான் பிறந்த போது, கிழக்கு சீமையிலே என்று படம் எடுக்கிறேன். அதில் நீதான் தங்கையாக நடிக்க வேண்டும் என்று மீண்டும் இவரை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இவரது குருநாதர் பாரதிராஜா.

ரிச்சார்டு ஹார்டியுடனான மனமுறிவுக்கு பிறகு சினிமா, சின்னத்திரை என்று தனது திறமையை அழுத்தமாக முத்திரைப் பதித்தவர்,  கார்க்கில் போர் நடந்த காலகட்டத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் நிதி திரட்டி உதவ அரவிந்தசாமி, சரத்குமார் போன்ற முன்னணி கலைஞர்களோடு இணைந்து மதுரையில் நட்சத்திர கலை நிகழ்ச்சி, சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி என்று முன்னின்று நடத்தினார். அப்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக நடிகர் சரத்குமார் இவரை திருமணம் செய்து கொள்ள கேட்டிருக்கிறார், விளையாட்டுக்கு கேட்கிறார் என்று எடுத்துக் கொண்டார் இவர். ஆனால், இவரின் அம்மா கீதாவை அனுகி தனது எண்ணத்தை சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.

படிப்பு, நடிப்பு என்று எல்லாவற்றிற்கும் முடிவெடுத்து ஊற்சாகப்படுத்தும் அம்மா, மீண்டும் திருமணம் பற்றி முடிவு எடுத்ததால், தனது பிடிவாதத்தை தளர்த்தி அம்மாவின் நல்ல முடிவை ஏற்றுக் கொண்டு நடிகரான சரத்குமாரை திருமணம் செய்து கொண்டாராம். இவர்களுக்கு ராகுல் என்கிற மகன் இருக்கிறார். 

உலகம் போற்றும் இத்தனை பெரிய புகழுக்கும், வளர்ச்சிக்கும் காரணமாக இருப்பவர் என் குருநாதர் பார்திராஜா என்று வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் நன்றி உணர்ச்சியோடு சொல்லி வருபவர் இவர். உனக்கு திறமை இருக்கு என்று நம்பிக்கை கொடுத்தவர் என் குருநாதர் பாரதிராஜா. அவர் இல்லை என்றால் நான் இல்லை என்று தன் குருவுக்கு முதல் மரியாதை கொடுப்பவர் இவர்.

முதல் மரியாதை படத்தில் நடிகை ராதா ஏற்ற வேடத்திற்கு இவர்தான் டப்பிங் பேசி இருந்தார். படத்தின் துவக்கத்தில் இவருக்கு நன்றி தெரிவித்து முதல் மரியாதை செய்திருந்தார் இவரது குருநாதர் பாரதிராஜா.

இப்படி நட்புக்கும், மரியாதைக்கும், முற்போக்கு சிந்தனைக்கும் சொந்தகாரரான இவர், எப்போதும் ஜாலியாக சிரித்துப் பேசக் கூடிய சுபாவம் உள்ளவர். வெளிப்படையாக பேசக் கூடியவர், தைரியமான பெண் என்று சக நடிகர், நடிகைகளால் கொண்டாடப்படுபவர்.

தொகுப்பு : ஜி.பாலன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக