ஞாயிறு, 12 ஜூலை, 2015

‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா



தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அன்போடு அழைக்கப்படும் கே. ஆர். விஜயா, கேரளா மாநிலம் திருச்சூரில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பிறந்தவர். தந்தை ராமச்சந்திர ராவ் ஆந்திராவைச் சேர்ந்தவர். தாயார் கல்யாணி கேரளாவைச் சேர்ந்தவர். தந்தையும், தாயின் சகோதரரும் ராணுவத்தில் பணியாற்றியதால் மொழி பார்க்காமல் திருமணம் செய்து வைத்தார்களாம். இவர்களுக்கு மூத்த மகளாக பிறந்தவர் கே.ஆர்.விஜயா. இவருக்கு பெற்றொர்கள் வைத்த பெயர் ‘தெய்வநாயகி’.

அந்திரா, கேரளா என இரண்டு இடங்களிலும் மாறி மாறி பெற்றோர்கள் வசித்ததால் படிப்பு பாதியிலேயே நின்றது. தந்தைக்கு நாடகத்தில் நடிக்கிற ஆர்வம் இருந்ததால், அவர் மேடை ஏற பழனிக்கு இடம் பெயர்ந்திருக்கிறார். அவரோடு இவரும் பதினோரு வயதிலிருந்தே நாடகங்களில் நடிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.

அப்போதே பாசமலர், பாவமன்னிப்பு போன்ற படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்குத்தான் பெரும்பாலும் அவரை ஆட வைப்பார்களாம்.  காசநோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட நாடகம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வர அதன் மூலம் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் நடிக்க சென்றிருக்கிறார். சென்னையில் நடந்த பொருட் காட்சியில் அவரை பர்த்த மற்ற நாடக கலைஞர்கள் அவரை அமெச்சூர் நாடகங்களிலும் நடிக்க அழைத்திருக்கின்றனர். அப்படி பிரபலமானவர், சிம்சன் பிஸ்கட் அண்ட் சாக்லேட் விளம்பரத்துக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

ஜெமினிகணேசன், சரோஜாதேவி நடிப்பில் கற்பகம் படத்தை துவங்கிய இயக்குனர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், சரோஜாதேவி பிசியாக இருந்ததால், அவருக்கு பதில் புதுமுகத்தை தேடியவர் கே. ஆர். விஜயாவின் விளம்பரத்தை பார்த்திருக்கிறார். அது பிடித்துப் போக நேரில் வரவழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

தெய்வநாயகியாக இருந்த கே.ஆர்.விஜயாவை 1963 ஆம் ஆண்டு கற்பகம் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அவருடைய முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.   அதனைத் தொடர்ந்து, நிறைய படவாய்ப்புகள் வரத்தொடங்கின.

‘கற்பகம்’, ‘கந்தன் கருணை’, ‘சரஸ்வதி சபதம்’, ‘இதயக்கமலம்’, ‘நம்ம வீட்டு தெய்வம்’, ‘தங்கப்பதக்கம்’, ‘திரிசூலம்’, ‘கல்தூண்’, ‘மிருதங்க சக்ரவர்த்தி’, ‘வாயாடி’, ‘திருடி’, ‘ரோஷக்காரி’, ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘கந்தன் கருணை’ போன்ற படங்கள் அவரது நடிப்பில் முத்திரைப் பதித்த திரைப் படங்களாகும். தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என்னும் இரண்டு ஜாம்பவான்களுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்தப் பெருமை இவருக்கு உண்டு.

50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் சுமார் 450–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தியில் ஊஞ்சலோக் என்ற ஒரு இந்திப் படத்திலும் நடித்திருக்கிறார். 

தொழிலதிபர் வேலாயுதம் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட கே.ஆர்.விஜயாவுக்கு, ஹேமா என்கிற ஒரு மகள் இருக்கிறார். அவருக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டு பேர பையன்களில். மூத்த பேரன் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் பணியாற்ற, இளைய பேரன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு பரோடாவில் பணியாற்றுகிறார்.

கே. ஆர். விஜயாவின் வசீகரப் புன்னகை, ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் கவர்ந்திழுக்கும் தன்மையுடையது. எழுபதுகளின் மத்தியில் திருச்சியில் நடந்த விழாவில் ரசிகர்கள் அவருக்கு புன்னகை அரசி என்கிற பட்டம் வழங்கினார்கள். அண்ணா முதல்வராக இருந்தபோது அவர் கையால் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற பெருமை அவருக்கு உண்டு
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக