வெள்ளி, 31 ஜூலை, 2015

'இலட்சிய நடிகர்' எஸ்.எஸ்.ராஜேந்திரன்



'இலட்சிய நடிகர்' என்று புகழ் பெற்ற, எஸ்.எஸ்.ராஜேந்திரனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள சேடப்பட்டி கிராமம். இவருடைய தந்தை சூரியநாராயண தேவர். கல்வி அதிகாரியாக பதவி வகித்தவர். தாயார் ஆதிலட்சுமி. 

1928-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்த அவருக்கு ராஜேந்திர பாண்டியன் என பெயர் சூட்டியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பாய்ஸ் கம்பெனி நடத்திய  `வீரஅபிமன்யு' நாடகத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.

அப்போதிலிருந்தே நடிப்பு மீது இவருக்கு ஆர்வம் அதிகமானது. எப்படியாவது தனது மகனை தன்னைப் போல அரசாங்க அதிகாரியாக ஆக்கிவிடவேண்டும் என்று எஸ்.எஸ்.ஆரின் தந்தை லட்சியமாக இருந்தார். ஆனால் இவரோ லட்சிய நடிகராக வேண்டும் என்கிற எண்ணத்தை மனதில் விதைத்தார். 

எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த 'சிந்தாமணி' படம், அப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. அப்படம் இவர் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 'சிந்தாமணி' கதையை பள்ளியில் நாடகமான போது, அதில் எஸ்.எஸ்.ஆர். கதாநாயகனாக நடித்தார். அதில் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. 

இந்த நாடகத்தை நடத்திய ஆசிரியர், 'நீ அழகாக இருக்கிறாய். நடிப்பும் நன்றாக வருகிறது. எனவே, சினிமா உலகிற்கு நீ சென்றால் புகழ் பெறமுடியும்' என்று எஸ்.எஸ்.ஆரிடம் கூறினார். 

மதுரைக்கு சென்று டி.கே.எஸ். நாடக சபாவில் சேர்ந்த எஸ்.எஸ்.ஆர்., அங்கு 'சிவலீலா', 'மகாபாரதம்' போன்ற நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

தொடர்ந்து நாடகத்தில் நடித்து வந்தாலும் சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை அவருக்குள் தீவிரம் அடைந்தது. எனவே, நாடக கம்பெனியில் இருந்து விலகி, சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார். 

கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய பராசக்தி படத்தில் சிவாஜிகணேசனுடன், எஸ்.எஸ். ராஜேந்திரன் புதுமுகமாக அறிமுகமானார். அப்படத்தில் சிவாஜி கணேசனின் அண்ணனாக 'ஞானசேகரன்' என்ற வேடத்தில் எஸ்.எஸ்.ஆர். நடித்தார். குறிப்பாக, சிவாஜிகணேசனைப் போல் தெளிவாகவும், உணர்ச்சியுடனும் வசனம் பேசும் ஆற்றல் எஸ்.எஸ்.ஆருக்கு இருந்தது. 

1952-ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளிவந்த 'பராசக்தி', தமிழ்ப் பட உலகில் மறுமலர்ச்சி ஏற்படச் செய்ததுடன், அதில் இடம் பெற்ற அனைவருடைய வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப் படத்தில் இடம் பெற்ற ’’ஏரிக்கரை மீது போறவளே பெண்மயிலே.. ’’ என்கிற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1958-இல் இவர் நடித்த “தை பிறந்தால் வழி பிறக்கும்வெற்றிகரமாக ஓடியது.

ஆரம்பத்தில் மகனின் படிப்பு வீணாவதை நினைத்து வருந்திய எஸ்.எஸ்.ஆரின் தந்தை, பிற்கு இவரது நடிப்பு திறமையை பார்த்து வியந்தார்.  நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே தந்தை பெரியாருடனும், அறிஞர் அண்ணாவுடனும் பழகும் வாய்ப்பு எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கிடைத்தது. 

இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் காலத்தால் அழியாதவையாகும். பார் மகளே பார், குங்குமம், பச்சைவிளக்கு, கைகொடுத்த தெய்வம், சாரதா போன்ற திரைப்படங்களில் இவருடன் இணைந்து நடித்த விஜயகுமாரியைத் திருமணம் செய்துகொண்டார். 

1960 ஆம் ஆண்டில் இவர் தங்கரத்தினம் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். எம்.ஜி.ஆருடன் சிறந்த நட்பினைப் வளர்த்து வந்தார் எஸ்.எஸ்.ஆர்.

1962 ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980இல் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1970 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார்.  

சில காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கிய இவர் சின்னத்திரையிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.  நடிகர் சங்க தலைவராக சில காலம் பதவி வகித்திருக்கும் இவர், தமிழக அரசின் கலைமாமனி விருது உட்பட பல விருதுகள் பெற்று சாதனையாளராக விளங்குகிறார்.

இவருக்கு, பங்கஜமாள், விஜயகுமாரி, தமிழரசி என மூன்று மனைவிகள். கலைவானன், ரவிகுமார், செல்வராஜ், இளங்கோவன், கண்ணன், ரஜேந்திரகுமார் என்கிற மகன்களும், பாக்யலட்சுமி என்கிற மகளும் உள்ளனர்.
69 திரைப் படங்களில் நடித்துள்ள எஸ்.எஸ்.ஆர்., கடைசியாக நடித்தது சிம்பு நடித்த  தம் திரைப்படமாகும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக