திங்கள், 27 டிசம்பர், 2021

நடிகர் சுருளிராஜன் வாழ்க்கை வரலாறு

நடிகவேள் எம்.ஆர்.ராதாவைப் போல மிகவும் வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரர் நகைச்சுவை நடிகரான சுருளிராஜன். எந்த சினிமா பின்னணியும் இன்றி சினிமா உலகிற்குள் நுழைந்த சுருளிராஜன் 1980-ம் ஆண்டில் மட்டும் சுமார் 50 திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தவர். இந்தச் சாதனை இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படாத ஒன்று.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1938-ம் ஆண்டு பிறந்தார் சுருளி ராஜன். சுருளி அருவியருகே இருந்த இவரது குலதெய்வம் சுருளி வேலப்பரின் பெயர் இவருக்கு வைக்கப்பட்டதாம். அவருக்கு சங்கரலிங்கம் என்று இன்னொரு பெயரும் உண்டு. ஆனால் சுருளி என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டார். பின்னாட்களில் அந்தப் பெயர் தமிழகம் அறிந்த பெயராகப் போகிறது என்பதை அவரின் தந்தையார் பொன்னையா பிள்ளை அறிந்திருக்கவில்லை.

பொன்னையா தேனியில் உள்ள விவசாயப் பண்ணையொன்றில் கணக்குப் பிள்ளையாக பணி புரிந்தார். தந்தையின் எதிர்பாராத மரணத்துக்குப் பின் சுருளி ராஜன் மதுரையில் உள்ள தமது சகோதரர் வீட்டுக்கு இடம்பெயர்ர்ந்தார். அங்கிருந்து சிறு தொழிற்சாலையில் பணி புரிந்தார். திடீரென்ற இடமாற்றம், தந்தையின் மறைவு, மனம் விரும்பாத பணிச் சூழல் என சுருளி ராஜன் அந்த நாட்களில் மன சஞ்சலத்துக்கு உள்ளானார்.

அந்த சமயத்தில்தான் தன்னார்வ நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அது அவருக்கு உற்சாகம் அளித்ததுடன் மன நிறைவும் தந்தது. சுருளிராஜன் வசனம் பேசுகின்ற பாணியும், அவரது கீச்சுக் குரலும் ரசிகர்களிடையே மிகுந்த  வரவேற்பைப் பெற்றதைக் கண்ட அவரது  நண்பர்கள் “முயற்சி செய்தால் நீ நிச்சயம் சினிமாவில் பெரிய ஆளாக வரலாம்” என்று அவரிடம் கூறினார்கள்..

அதுக்கு பிறகும்  மதுரையில்  இருக்க சுருளிராஜனின் மனம் ஒப்புக் கொள்ளுமா..?

சினிமா வாய்ப்பு தேடி 1959-ம் ஆண்டு சென்னைக்கு வந்த சுருளிராஜன்  ‘அய்யா தெரியாதய்யா’ ராமராவின் நாடகக் குழுவில் இணைந்தார் . “நான் ஒரு நகைச்சுவை நடிகனாக வெளியே தெரிந்ததற்கு முக்கிய காரணம் ராமாராவ் அவர்கள்தான். அவருடைய நாடகத்தில் நல்ல வாய்ப்பை வழங்கி எனது முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தவர் அவர்தான் ” என்று பல பத்திரிகைப் பேட்டிகளில் மனம் திறந்து ராமாராவ் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் சுருளிராஜன்.

திரைப்படங்களில் நடிக்க முயற்சித்துக் கொண்டே ஓ.ஏ.கே.தேவர், ராமாராவ், டி.என்.பாலு ஆகியோரது நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், கலைஞர் மு. கருணாநிதியின் காகித பூ நாடகத்திலும் நடித்திருக்கிறார்.

இதில் சுருளிராஜனின் முன்னேற்றத்துக்கு பெரிதும் காரணமாக இருந்தவர், டி.என்.பாலு. இவர் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமான ‘இரவும் பகலும்’  படத்தின் கதாசிரியர்.

தான் எழுதி இயக்கி, நடித்த ‘நினைக்கவே இல்லை’ எனற நாடகத்திற்கு இயக்குநர் ஜோசப் தளியத்தை அழைத்திருந்தார் டி.என்.பாலு. அந்த நாடகத்தில்  முக்கிய வேடம் ஒன்றில் நடித்த சுருளிராஜனின் நடிப்பும், அவர் வசனங்களைப் பேசியவிதமும்ஜோசப் தளியத்துக்கு மிகவும் பிடித்து போனது.

சுருளிராஜனுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகளைத் தரவேண்டும் என்று அன்றே முடிவு செய்து விட்டார் அவர். ஆனால்  அவர் அப்போது இயக்கி கொண்டிருந்த இரவும் பகலும்படத்தில் எல்லா பாத்திரங்களுக்கும் நட்சத்திரத் தேர்வு முடிந்துவிட்டு இருந்ததால் அந்த படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில்தான் சுருளிராஜனை அவரால் பயன்படுத்த முடிந்தது.

1965-ம் ஆண்டு பொங்கலன்று வெளியான  இரவும் பகலும்படத்தில் மட்டுமின்றி, ‘எங்க வீட்டுப் பிள்ளைபடத்திலும்  ஒரு சிறு கதாபாத்திரத்தில் றிருந்தார் சுருளிராஜன்.

‘எங்க  வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் துணை நடிகர்கள் பட்டியலில் ‘சுருளி’ என்று அவர்  பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், ‘இரவும் பகலும்’ பட டைட்டிலில் அவர் பெயர் இடம் பெறவில்லை.

‘இரவும் பகலும்’  படத்தில் சரியான முறையில் சுருளிராஜனை பயன் படுத்த முடியவில்லையே என்ற வருத்தம் ஜோசப் தளியத்திற்கு இருந்ததால் தனது அடுத்த படமான ‘காதல் படுத்தும் பாடு’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சுருளிராஜனை நடிக்க வைத்தார்.

‘காதல் படுத்தும் பாடு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் படத்தில் நடிப்பதற்கான அவரது ஊதியம் மொத்தத்தையும் வாங்கி செலவழித்துவிட்டார் சுருளிராஜன்.

கையில் சல்லிக்காசு இல்லாத  நிலையில் நாடகம் நடத்தலாம் என்று அவர் வெளியூர் சென்றபோது, அங்கே ஒரு  வாரம் கடுமையாக மழை பெய்தது. அதனால் கொஞ்சம் காசு பார்க்கலாம் என்ற எண்ணத்தில் நாடகம் நடத்தப் போன அவரது எண்ணம் ஈடேறாதது மட்டுமல்ல…  பொருளாதார ரீதியாக மிகப் பெரிய சிக்கலை சந்திக்க வேண்டிய சூழலும் அவருக்கு ஏற்பட்டது.

சென்னைக்கு திரும்பவே பெரிதும் சிரமப்பட்டு ஒரு வழியாக சென்னை திரும்பிய  சுருளிராஜனை அவர் குடியிருந்த வீட்டின்  சொந்தக்காரர் வாடகை பணத்தைக் கேட்டு விரட்டு விரட்டு என்று விரட்டினார். மதியம் சாப்பிடவே கையில் காசு  இல்லை.. இந்த நிலையில் வாடகையை எங்கே கொடுப்பது..?

இப்படி எல்லா பக்கத்திலிருந்தும் பிரச்னைகள் சூழ்ந்ததால் விரக்தியின் எல்லைக்கே சென்றார் சுருளிராஜன். இனியும் சினிமா வாழ்க்கையை நினைத்துக் கொண்டு இங்கே இருக்க வேண்டுமா என்றெல்லாம் நினைக்க தொடங்கியது அவர் மனது.

அந்த நேரம் பார்த்து அவரது நண்பர் சிவராஜ்  அவரைப் பார்க்க வர சோகத்தின் உச்சியில் இருந்த சுருளிராஜன் “இந்த வாழ்க்கை எனக்கு தேவைதானா?” என்று சலிப்போடு  அவரிடம்  கேட்டார். அவர் இப்படி கேட்டபோது அந்த சோகம் அந்த நண்பரை தொற்றிக் கொள்ளவில்லை. மாறாக அவரது முகத்தில் புன்னகை தோன்றியது

“நேராக ஜெமினி கார்னருக்கு ஒரு முறை போய் பார்த்துவிட்டு அதற்குப் பிறகு இந்த வாழ்க்கை உனக்குத் தேவையா இல்லையா என்பதை முடிவு செய்” என்றார் நண்பர் சிவராஜ். 

“ஏன் அங்கே யாராவது ஜோசியம் சொல்றவங்க இருக்காங்களா?

“அதெல்லாம் உனக்கு எதுக்கு? முதல்ல போய் பார்த்துட்டு வா.. அப்புறம் பேசு” என்றார் எந்த நண்பர்.

ஜெமினி கார்னருக்கும், தனது வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்று புரியாவிட்டாலும் நண்பர் சொல்கிறாரே என்பதற்காக ஜெமினி பகுதிக்கு நடந்தே சென்றார் சுருளிராஜன்.

அங்கு போய் பார்த்தவுடன் அவரால்  தனது கண்களையே நம்ப முடியவில்லை. தான் காண்கின்ற காட்சி நிஜம்தானா என்று கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தார். அது  போதாதென்று  தன்  கையையும்  ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.  சுருளிராஜனை  அப்படி ஒரு நிலைமைக்குத்  தள்ளியது  எது தெரியுமா..?

ஜெமினி கார்னரில் வைக்கப்பட்டிருந்த அவரது  மிகப் பெரிய கட் அவுட்..

‘காதல் படுத்தும் பாடு’ படத்திற்காக வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில் அப்படி ஒரு முக்கியத்துவத்தை  சுருளிராஜனுக்குத் தந்திருந்தார் ஜோசப் தளியத்.

அந்த விளம்பரத்தைப் பார்த்தவுடன்  சுருளிராஜனின்  கண்களில் இருந்து அவரையுமறியாமல் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. அவரது பசி பறந்து போனது. அதுவரை அவர் மனதில் இருந்த வேதனை எங்கே போனது என்று தெரியவில்லை.

சினிமாவில் இனி தனக்கு எதிர்காலமே இல்லை என்று அவநம்பிக்கையோடு இருந்த சுருளிராஜன், இனி சினிமாதான் தனது வாழ்க்கை என்று  முடிவெடுத்ததிலே அந்த கட் அவுட்டுக்கு முக்கிய இடம் உண்டு.

இயக்குநர் ஏ.பி.நாகராஜனுக்கு சுருளிராஜனின் நடிப்பு ரொம்ப பிடிக்கும். அவர் எடுத்த `திருவருட் செல்வர்’, `திருமலை தென்குமரி’ என எல்லாப் படங்களிலும் வாய்ப்புக் கொடுத்தார். 1971ல் 'ஆதிபராசக்தி' என்ற படத்தில் சென்னை மீனவர் பேச்சுப் பேசி அனைவரையும் தன் பக்கம் திருப்பிய சுருளிராஜன், எம்.ஏ.காஜா இயக்கத்தில் உருவான 'மாந்தோப்புக் கிளியே' என்ற படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்று எல்லோராலும் கவனிக்கப்பட்டார்.

`கண் காட்சி' படத்தில் சுருளிராஜனின் நடிப்பைப் பார்த்துவிட்டு, `யார்யா அந்தப் பையன்' என்று இயக்குனர் ஏ.பி.நாகாராஜனிடம் சிவாஜிகணேசன் கேட்டு பாரட்டியதுடன் தன படங்களில் பயன்படுத்த சொல்லி இருக்கிறார். அதே போல எம்.ஜி.ஆரும் தன்னுடைய படங்களுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்.

1965 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான சுருளிராஜனுக்கு 1976, 1977, 1978, 1979, 1980, 1981 ஆகிய ஆறு ஆண்டுகள் அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பை சினிமா அவருக்கு வழங்கியது. அதிலும் கடைசி நான்கு  ஆண்டுகள் ரொம்பக் கடுமையான உழைப்பை கொடுத்தார். ஒரு நாளில் 19 மணி நேரம் உழைத்தார்.

எந்நேரமும் ஏதோ ஒரு புரொடக்‌ஷன் கம்பெனி கார் அவரது வீட்டு வாசலில் அவரை அழைத்து செல்ல வந்து நின்று கொண்டிருக்கும். அவர் பிசியாக இருந்த காலகட்டத்தில் அவரது காட்சிகளுக்கு அவரே வசனங்களை எழுதுவார். சில நேரங்களில் நகைச்சுவை நடிகர் ஏ.வீரப்பனைச் சேர்த்துக்கொள்வார்.

எந்த நேரமும் லைட் முன்பு நின்று நடிப்பது அவ்வளவு எளிதில்லை. ஆனால், `காறுள்ள போதே தூத்திக்க கொள்ள முடியும்' என்று ஓடிக் கொண்டே இருந்தார். இருநூறு படங்களை கடந்து ஓடிக் கொண்டிருந்தார். ஒருநாள், திடீர் என்று உடல் நிலை சரியில்லாமல் போனது. மருத்துவரிடம் சென்று பரிசோதித்தார். `வெளிநாட்டில் இருந்து மருந்து வரவழைக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அந்த மருந்தை வரவழைத்துக் கொடுத்தார்.  இருந்தும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. 1980ம் ஆண்டு தனது 42வது வயதில் அதிக படங்களை ஒப்புக் கொண்டு புகழின் உச்சியில் இருந்த போதே காலமானார்.

நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே மானாமதுரையை சேர்ந்த மாமன் மகள் முத்துலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார், சுருளிராஜன். தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்ப வாழக்கையை துவங்கினார். இவர்களுக்கு சண்முகவேலன், குமரவேலன், செந்தில்வேலன் என்று மூன்று மகன்கள். 

சண்முகவேலன் துபாயில் ஒரு நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக இருக்கிறார். குமரவேலன், சென்னையில் மனிதவள மேலாளராகப் பணிபுரிகிறார். செந்தில்வேலன், சினிமா கிராஃபிக்ஸ் துறையில் பணியாற்றுகிறார். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அனைவரும் சென்னையில் ஒரே வீட்டில்தான் வசிக்கின்றனர்.

சுருளிராஜன் மறைவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவருக்கு `கலைமாமணி' விருது அறிவிக்கப்பட்டது. `அடியே... மார்க்கெட்டு டல்லடிச்சவுங்களுக்குத் தாண்டி கலைமாமணி கொடுப்பாங்க... நான் அந்த விருதை வாங்க மாட்டேன்டீ' என்று தனது மனைவி முத்துலட்சுமியிடம் கிண்டலாக சொல்லி இருக்கிறார், சுருளிராஜன். சொன்னது போலவே அந்த விருதை வாங்காமல்  மறைந்தார். அறிவிக்கப்பட்ட அந்த விருதை அவரது மூத்த மகன் குமாரவேலன் தான் வாங்கினாராம்.

தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதும் பெற்றுள்ள சுருளிராஜன், தன்னுடைய இயல்பான நடிப்பாலும், அச்சு அசல் நம் அண்டை வீட்டு மனிதர் போன்ற தோற்றத்தாலும், எவ்வித சமரசமும் அற்ற நடிப்பாலும், ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தவர். சுருளி ராஜனின் தனித்துவம் என்பது அவர் ஏற்று நடித்த விளிம்பு நிலை கதாபாத்திரங்கள். அது என்று நம் நினைவில் வாழ்பவை....  

தொகுப்பு : ஜி.பாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக