1950 களில் கேரளாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று
கல்வி கற்பித்த பல மலையாள ஆசிரியர்களில் சுஜாதாவின் தந்தை சங்கர மேனனும் ஒருவர்.
சிறந்த விலங்கியல் ஆசிரியராகத் திகழ்ந்த சங்கரமேனன், 1956ம் ஆண்டுவரை யாழ்ப்பாணக்
குடாநாட்டிலே உள்ள தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்பித்தார். பிறகு
காலிக்கு சென்றார்.
காலியில் உள்ள றிப்பொன் பெண்கள் பாடசாலையில்
ஆரம்ப கல்வியைக் கற்ற சுஜாதான் 14வது வயதில் பெற்றோருடன் கேரளாவிற்குத் திரும்பிச்
அங்கு எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தார்.
ஜோசி பிரகாஷ் என்கிற நடிகர் சுஜாதாவை முதன்
முதலாக மேடை நாடகமான போலீஸ் ஸ்டேசனில் நடிக்க வைத்தது மட்டுமல்ல, திரையுலகத்திற்கும் தபாஸ்வினி
என்ற படத்தில் அறிமுகப்படுத்த உதவினார். பிரேம்நசீர் கதாநாயகனாக நடித்த அந்த
மலையாளப் படத்தை கிருஷ்ணன் நாயர் இயக்கினார். 1971 ஆம் ஆண்டு அந்தப் படம்
வெளியானது.
அதன் பிறகு மலையாளத்தில் பல படங்களில் நடித்தவரை
தமிழுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். மலையாளத்தில் ‘ஏர்ணாம்குளம்
ஜங்ஷன்’ என்ற மலையாளப் படத்தில் நடித்த போதுதான் கே.பாலச்சந்தரின் கண்களில்
பட்டார், சுஜாதா.
1974ஆம் ஆண்டு வெளியான அவள் ஒரு தொடர் கதை படம்
சுஜாதாவைச் ஒரு சிறந்த நடிகையாகத் தமிழ் திரையுலகில் கவனிக்க வைத்தது. எம்.எஸ்.விஸ்வநாதனின்
இசையமைப்பில் வெளியான அந்தப் படத்தில் சுஜாதாவுடன் கமலஹாசன், ஸ்ரீபிரியா, விஜயகுமார் உட்பட பலர் நடித்திருந்தனர்.
தமிழில் அது அவரின் முதல் படம் என்பதை நம்பமுடியாத அளவில் சுஜாதாவின் நடிப்பு
பிரமிக்க வைத்தது.
1976ல் ஆயிரத்தில் ஒருத்தி, மயங்குகிறாள் ஒரு மாது, ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது ஆகிய படங்களுக்கு பிறகு வெளியான அன்னக்கிளி படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அந்தப் படத்தில் இளையராஜாவின் பாடலும், சிவக்குமார், சுஜாதாவின் நடிப்பும் அனைவரையும் கவர்ந்தது. `மச்சானைப் பார்த்தீங்களா' எனக் கிராமத்துப் பெண் அன்னமாக வாழைத் தோப்புக்குள்ளும், மலை மேடுகளிலும் ஆடிப்பாடிப் பட்டித்தொட்டி எங்கும் புகழ்பெற்றார்.
1977-ல் மீண்டும் கே.பாலசந்தரின் இயக்கத்தில் 'அவர்கள்' படத்தில் நடிக்கிறார். அந்த அனுபமா, வெளிப்படையானவள். அதனால் உண்டாகும் இல்லறப் பிரிவும் இறுதியில் ரயில் பயணத்தின் போது துடிக்கும் தாய் மனத் தவிப்பும் இவரை இன்னும் தேர்ந்த நடிகையாக அடையாளப்படுத்தியது.
சுஜாதா தமிழ் திரைக்கு அறிமுகமாகும்போது
தோற்றத்தில் மெச்சூரிட்டி இருந்தது. குடும்பத்தலைவி, வக்கீல், டாக்டர், பழிவாங்கத்
துடிக்கும் நடுத்தர வர்க்கத்துப் பெண், குணச்சித்திர வேடங்கள் அவருக்கு ரொம்பவும்
கை கொடுத்தன.
தொழில் அலட்சியம் என்பது சுஜாதாவின் அகராதியில்
இல்லாத வார்த்தை. உணர்ச்சிகரமான காட்சிகளில் நீண்ட தமிழ் வசனங்களை சுத்தமான உச்சரிப்புடன்
பொரிந்து தள்ளுவதில் வல்லவர்.
சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜனிகாந்த் ஆகியோரோடு கதாநாயகியாக நடித்த பெருமை இவருக்கு
உரியது.
சிவாஜி கணேசனுடன் அண்ணன் ஒரு கோயில், தீபம், அந்தமான் காதலி, விஸ்வரூபம், வா கண்ணா வா, பரிச்சைக்கு நேரமாச்சு, தியாகி, தீர்ப்பு, திருப்பம், சந்திப்பு, நீதிபதி, நேர்மை, சுமங்கலி, மாடி வீட்டு ஏழை, மண்ணுக்குள் வைரம் என பல படங்களில் நடித்தவர், ரஜினியுடன் அன்புக்கு நான் அடிமை, துடிக்கும் கரங்கள், மாவீரன், கொடி பறக்குது, உழைப்பாளி, பாபா, கமலுடன் உயர்ந்தவர்கள், கடல் மீன்கள், ஜெமினியுடன் உறவுக்கு கை கொடுப்போம், ராஜேசுடன் ஆலயதீபம், உத்தமி, நல்ல காலம் பொறக்குது, முத்துராமனுடன் மயங்குகிறாள் ஒரு மாது, சிவக்குமாருடன் அன்னக்கிளி, அவர்கள், பூந்தளிர், விஜயகாந்துடன் தர்மம் வெல்லும், சத்யராஜுடன் விடிஞ்சா கல்யாணம், அமைதிப்படை, பிரபுவுடன் செந்தமிழ் செல்வன், செந்தமிழ் பாட்டு, ராஜகுமாரன், சிவசக்தி, மோகனுடன் விதி, சரத்குமாருடன் நட்புக்காக, பாட்டாளி, சரத்பாபுவுடன் நூல்வேலி, அஜித்துடன் அவள் வருவாளா, வில்லன், அட்டகாசம், வரலாறு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் சுஜாதா, நாகேஸ்வரராவ், சோபன்பாபு, கிருஷ்னா, மோகன்பாபு, சிரஞ்சீவி போன்ற தெலுங்கு நடிகர்களுடன் நடித்தவர்
ஆரம்ப கால படங்களில் கதாநாயகியாக நடித்த சுஜாதா,
அதன் பிறகு அம்மா, அக்கா என்று துனைக் கதாபாத்திரங்களில் நடித்து பலரின்
பாராட்டையும் பெற்றுக்கொண்டார்.
இவர் நடித்த கடல் மீன்கள், அந்தமான் காதலி, விதி, கோயில்காளை, புனர்ஜென்மம், உன்னை
நான் சந்தித்தேன் போன்ற படங்கள் பலராலும் பாராட்டப் பெற்றன. இவர் நடித்த
கடைசிப்படம் தெலுங்கில் வெளிவந்த ஸ்ரீ ராமதாசு என்பதாகும். தமிழில் கடைசி படமாக அஜித்தின்
வரலாறு படத்தில் அம்மாவாக நடித்திருந்தார்.
டப்பிங் பேசும் போது திரையில் வரும் தன் உருவத்தைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கொண்டே குரல் கொடுக்கும் அளவுக்கு ரொம்ப எமோசனல் ரகம். நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள் படங்களில் நடித்திருந்த நடிகை ஜெயப்பிரதாவுக்கு தமிழில் டப்பிங் பேசி இருக்கும் சுஜாதா, தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகள் பேச தெரிந்தவர்.
நடிகை சுஜாதா பாசத்துடனும் நட்புடனும் களங்கம் இல்லாமல் பழகுவார். தவறி மரியாதை குறைவாக யாரேனும் எதுவும் செய்தால் பெரிய மனிதராக இருந்தாலும் நேருக்கு நேர் பொங்கி வெடித்துவிடுவார்.
நடிப்பு ஒரு தொழில். அது வணிகத் தேடலுக்கானது. ஆனால், குடும்பம், குழந்தைகளே நிஜ வாழ்க்கையின் அர்த்தங்கள். இதனைத் தானும் உணர்ந்திருந்தார், சுஜாதா.
சுஜாதாவுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். திவ்யா, டாக்டருக்கு படித்து இருக்கிறார். திருமணத்திற்குப் பின்னும் வற்றாத
நடிப்புத் திறனால் தனக்கென்று ஓர் இடத்தை நிலைநிறுத்திய சாமர்த்தியசாலி சுஜாதா.
துணைவி, பரிச்சைக்கு நேரமாச்சு ஆகிய படங்களுக்காக
தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதுகள் பெற்றுள்ள சுஜாதா, தமிழக அரசின்
கலைமாமணி விருந்தும், ஆந்திர அரசின் நந்தி விருதும் பெற்றிருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக விளங்கிய சுஜாதா, இருதய நோயால் 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு காலமானார்.
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக