விடுமுறைக்கு அப்பாவை காண திருக்காம்புலியூர்
வரும் ராமச்சந்திரனுக்கு அங்கு வாய்ப்பாட்டு கற்றுக் கொள்ளும் வாய்ப்பு
கிடைத்திருக்கிறது. வாய்ப்பாட்டுடன் ஆர்மோனியமும் கற்றுக்கொடுத்தவர் கரூர்
ராகவேந்திராவ். இவர் நாடகங்களில் பின்பாட்டுப் பாடும் பாடகர். அவர் நடிப்பது போன்ற
பாவனைகளுடன் பாடக் கற்றுக்கொடுக்க, ராமச்சந்திரனுக்கு நடிப்புமீது
காதல் வந்துவிட்டது.
அப்பாவின் அனுமதியுடன் ராகவேந்திரராவுடன்
ஒட்டிக்கொண்ட ராமச்சந்திரன் திருச்சி, தஞ்சாவூர், மதுரை என்று நாடகக் குழுக்களுடன் ஊர் சுற்றியிருக்கிறார்.
மகனின் விருப்பத்துக்கு அப்பா தடை போடவில்லை. மதுரையின்
புகழ்பெற்ற நாடக கம்பெனிகளில் ஒன்றான ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா’வில் நடிகராகச்
சேர்ந்தார் ராமச்சந்திரன். ஜெகன்நாத ஐயர் வாத்தியாராகவும் முதலாளியாகவும் இருந்து
நடத்திவந்த இந்த நாடகக் குழுவில் ஸ்திரீ பார்ட் போடுபவர்களுக்குத் தோழியாக நடிக்க
ஆரம்பித்தார், ராமச்சந்திரன். தங்க இடம், மூன்று வேளை சாப்பாடு உட்பட
மாதம் 3 ரூபாய் சம்பளத்துடன் கலை வாழ்க்கையைத் தொடங்கினார்.
இவரது நடிப்புத்திறமையைக் கண்ட சக நடிகரான
எஸ்.வி. வெங்கடராமன் பின்னாளில் தனியாக நாடக கம்பெனி தொடங்கியபோது 25 ரூபாய்
சம்பளத்துடன் ராமச்சந்திரனை அழைத்துக் கொண்டார். அவருடைய கம்பெனியில் சேர்ந்தவுடன்
ராமச்சந்திரனுக்கு படவாய்ப்பை கிடைத்தது.
காரைக்குடியில் வெங்கட்ராமன் குழுவின் திறமையைக்
கண்ட ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், பிரகதி பிக்சர்ஸ் கம்பெனி
சார்பில் தயாரித்த ‘நந்தகுமார்’ படத்தில் நடிக்க வெங்கட்ராமன் நாடகக் குழுவில்
இருந்த அத்தனை பேரையும் ஒப்பந்தம் செய்தார்.
அதன் பின்னர் இரண்டாண்டுகள் எந்த வாய்ப்பும்
இல்லாமல் காலத்தைக் கழித்த இராமச்சந்திரனுக்கு, வாயாடி
திரைப்படத்தில் மாதுரிதேவியுடன் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் நவீன
மார்க்கண்டேயா, திருவள்ளுவர், வானரசேனை
ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்கள் மன
இறுக்கத்துடன் இருந்தார்கள். இந்த நேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு
நல்ல ரிலீஃபாக இருக்கும் என்று நினைத்த ஏவி.மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான
‘சபாபதியை’, அதே பெயரில் படமாக்குவது என்று முடிவு செய்தார்.
ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த ராமச்சந்திரனை நாயகனாக்கினார்.
சபாபதி படத்தின் வெற்றியால் டி.ஆர்.இராமச்சந்திரன்
ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் செல்லப் பிள்ளையானார். உலக போர் முடிந்த பிறகு
சென்னைக்கு ஏ.வி.எம் ஸ்டூடியோ இடமாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு ஏ.வி.எம்
தயாரித்த பெரும்பாலான வெற்றிப் படங்களில் ராமச்சந்திரனுக்காவே ரகளையான காமெடி
கதாபாத்திரங்கள் முக்கியவத்துடன் உருவாக்கப்பட்டன.
1940-ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில்
கோலோச்சியவர் டி.ஆர். ராமச்சந்திரன். அதிலும் செல்வந்தர் குடும்ப இளைஞர்களைப்
பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம், குறும்புத்தனம்,
அப்பாவித்தனம், வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி
என கலவையான உடல் மொழிக்குச் சொந்தக்காரர். ஒரு விதமான பதற்றம் கலந்த இவரது
நகைச்சுவை உணர்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டது.
டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்த எத்தனையோ படங்கள்
நம் நினைவில் நிற்கக் கூடியவை. அறிவாளி, இருவர் உள்ளம் போன்றவை
குறிப்பிடத்தக்கவை. தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் கூட வரதன் என்கிற
பாத்திரம் ஏற்றிருப்பார். சிறு பாத்திரமானாலும் அவரின் நடிப்பு நினைவில் நிற்கும்.
ரசிக்கும்படியும் இருக்கும்.
அறிவாளி படத்தில் “ஏக் லவ்” என்ற பெயரில் நடிகர்
திலகத்திற்கு நண்பனாய் வருவார். முரட்டு பானுமதியை அடக்கிக் கல்யாணம் பண்ண
சிபாரிசு செய்து, அவரது தங்கையான சரோஜாவைத் தான் திருமணம்
செய்து கொள்ள ஐடியா பண்ணுவார்.
இருவர் உள்ளம் திரைப்படம் நாம் அனைவரும் அறிந்து, ஒரு முறைக்குப் பலமுறை பார்த்து ரசித்ததே. கடைசிக் கிளைமாக்ஸ்
காட்சியில் டி.ஆர்.ராமச்சந்திரனின் அபாரமான நடிப்பு பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கும்.
ஒரு அசடு, ஒரு கொலையையும் பண்ணிட்டு என்ன பாடு படுத்துது
எல்லோரையும் என்று வியந்த காலம் அது.
தனக்கு அமைந்த உடலமைப்பு, குரல் வளம், உருவ அமைப்பு, இவற்றையே மூலதனமாக்கிக்கொண்டு ஏற்றுக்கொண்ட எல்லாப் படங்களிலும்
சிறப்புறத் தன் திறமையைக் காட்டிய அற்புதமான நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன்.
அன்பே வா படத்தில் பாப்பு பாப்பு என்று
சரோஜாதேவின் தந்தையாக புண்ணாக்கு வியாபாரி புண்ணியகோடியாக வந்து சிரிக்க வைப்பார்.
அவர் நடித்த சாது மிரண்டால், ஆலயமணி, புனர்ஜென்மம், அடுத்த வீட்டுப் பெண், வண்ணக்கிளி, யார் பையன், மணமகன் தேவை, பாக்தாத்
திருடன், கோமதியின் காதலன், கள்வனின்
காதலி என்று சொல்வதற்கு இன்னும் பல படங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக அடுத்த
வீட்டுப் பெண் படத்தில் தங்கவேலு கோஷ்டியோடு சேர்ந்து அஞ்சலிதேவியைக் காதலிக்க
அவர் அடிக்கும் கூத்து சொல்லி மாளாது. அந்தக் காலத்திலேயே வந்த மிகச் சிறந்த
நகைச்சுவைத் திரைப்படம் அடுத்த வீட்டுப் பெண் இந்தக் கால இளைஞர்கள்
அறிந்திருப்பதற்கில்லை.
டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த படங்களில் இணைந்த
சில கலைஞர்களுக்கு, அப்படமே முதல் படமாக அமைந்தது.
வாழ்க்கை படத்தில் நடித்த வைஜெயந்திமாலாவுக்கு அதுவே முதல் படமாக அமைந்தது.
வானம்பாடி படத்தில் "யாரடி வந்தார் என்னடி சொன்னார்' என்ற
பாடல் காட்சியில் நடனமாடியதன் மூலம் ஜோதிலட்சுமி, தனது முதல்
திரைப்பயணத்தை துவங்கினார்.
வித்யாபதி படத்தில்தான் முதன் முதலாக
எம்.என்.நம்பியார் அறிமுகமானார். சகடயோகம் படமே வி.என்.ஜானகி நாயகியாக நடித்த
முதல் படம். பொன்வயல் படத்தில்தான் சீர்காழி கோவிந்தராஜன் முதன் முதலில் பாடினார்.
தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியார் இயக்கிய முதல் படம் சபாபதி. செட்டியாருடன்
சேர்ந்து இயக்கியவர் ஏ.டி.கிருஷ்ணசாமி.
1940 முதல் 1960 காலம்வரை தன்னைத் தமிழ்த்
திரையில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில்
ரசிகர்களுக்கு அலுக்காமல், தோன்றி அவர்களின் மனதில்
முக்கிய இடம் பிடித்தவர்தான் நகைச்சுவை நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன்.
டி.ஆர்.ராமச்சந்திரனைப் பார்த்தாலே சிரிப்பு
வந்து விடும். காரணம் அவரின் அப்பாவித்தனமான முகமும், மேடுதட்டிய அசடு வழியும் சிரிப்பும், முட்டைக்
கண்களும், காதில் விழும் வார்த்தைக்கெல்லாம் உடம்போடு ஒரு
உதறு உதறிக்கொண்டு பதறியது போலும், நிறையப் புரிந்தது போலும்
அவர் பேசும் பேச்சும், நமக்கு விடாத சிரிப்பை வரவழைக்கும்
என்றாலும், இந்த அப்பாவி எங்கே போய் ஏமாறப் போகிறானோ,
யார் இவனை ஏமாற்றப் போகிறார்களோ என்று அவர் மீது கரிசனம் கொண்டு
பயந்தவாறே படம் பார்க்கும் அந்தக் கால ரசிகர்கள்….அவருக்காகப் பரிதாபப் படவும்
செய்து, கடைசியில் அது சினிமாதானே என்று உணர்ந்து தங்களைத்
தேற்றிக் கொண்டார்கள்.
தொள தொளா பேன்ட் போட்டுக் கொண்டு நிற்பதும், கால்கள் நடுங்கும்போது பேன்ட்டோடு சேர்ந்து வெளிப்படும் அந்த
நடுக்கம் நமக்கு அத்தனை சிரிப்பை வரவழைக்கும்.
நடிகனுக்கு காஸ்ட்யூம்ஸ் மிக முக்கியமல்லவா? பாத்திரத்தின்
தன்மையை வெளிப்படுத்த அதுதானே முக்கியப் பங்கு வகிக்கிறது!
1954 ஆம் ஆண்டு சொந்தமாக படநிறுவனம் தொடங்கி தன்னை
சபாபதி படத்தில் நாயகனாக நடிக்க வைக்க உதவியாக இருந்த ஏ.டி.கிருஷ்ணசாமி
இயக்கத்தில் ‘பொன் வயல்’ என்ற படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக
அஞ்சலிதேவி நடித்தார்.
கண்ணால பேசிப் பேசிக் கொல்லாதே...காதால கேட்டுக் கேட்டுச் செல்லாதே...'என்ற பாடலில் நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனின் உடல் மொழியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. டி.ஆர்.ராமச்சந்திரன் பத்துக்கும் மேற்பட்ட படங்களில்... இருபதுக்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கிறார்.
1937 முதல் 1982 ஆம் ஆண்டு
வரை எழுபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் டி.ஆர்.ராமச்சந்திரன், ஓய்வுக்காக
அமெரிக்கா சென்றார். அங்கு அவரது மகள்கள் ஜெயந்தி, வசந்தி ஆகியோருடன் வசித்து
வந்தார். ஒரு நாள் திடீர் என இதயவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதய அறுவை சிகிச்சை பலனளிக்கவில்லை. 1990 ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் 30 தேதி தனது 73 வது வயதில் மறைந்தார்.
அவர் மறைந்தாலும் அவரது உருண்டையான கண்களையும்
வித்தியாசமான உடல் மொழியையும் ரசிகர்களால் என்றும் மறக்கவே முடியாது.
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக