கே.வி.மகாதேவனின் தாத்தா ராம பாகவதர் அந்த
நாளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர். இவரது தந்தை வெங்கடாசலமும்
புகழ்பெற்ற பாகவதர். இசைக்கலை இவர்களது குடும்பச் சொத்து. அதனால் சிறுவயதிலேயே இசை
அவருக்குள்ளும் வந்தது. இசைமீது மகனுக்கு இருந்த ஆர்வம் காரணமாக தந்தையே முதல்
குருவாக இருந்து ஆரம்ப பாடத்தை கற்றுக்கொடுத்தார்.
வடசேரியில் இருந்த எஸ்.எம்.ஆர்.வி. உயர்நிலைப்
பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்ட மகாதேவன், சங்கீதம் படிக்க பூதப்பாண்டி
கிராமத்தில் வசித்து வந்த அருணாச்சலக் கவிராயர் என்பவரிடம் சென்றார்.
வாய்ப்பாட்டைத் தவிர நாதஸ்வரம், தவில், பம்பை, முரசு,
புல்லாங்குழல், ஹார்மோனியம், மோர்சிங், ஜலதரங்கம், வீணை,
வயலின், கொன்னக்கோல், கோட்டுவாத்தியம்
ஆகியவற்றையும் கற்றுக்கொண்ட மகாதேவன், சிறுவயதிலேயே மேடை ஏறி கச்சேரி செய்யும்
அளவுக்கு இசைஞானத்தை வளர்த்துக் கொண்டார்.
பாட்டு மகாதேவனை ஈர்த்த அளவுக்கு படிப்பு அவரை ஈர்க்கவில்லை.
இந்த நிலையில் ஒருநாள் சென்னையில் இருந்து வந்த பால கந்தர்வ கானசபா என்ற நாடகக்
குழுவினர் பூதப்பாண்டி அருணாச்சலக் கவிராயரை தொடர்பு கொண்டு நன்றாகப் பாடத்தெரிந்த
யாராவது இருந்தால் நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொள்வதாக ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்க,
அவருக்கு மகாதேவனின் நினைவு வந்தது. உடனே
மகாதேவனின் முகவரியை கொடுத்திருக்கிறார்.
"நாடகக் கம்பெனியில் சேர்ந்து சென்னைக்கு
சென்றால் நன்றாக முன்னுக்கு வரலாம். ஒரு தியாகராஜ பாகவதர் மாதிரி.. நாமும் நன்னா
பெரிய லெவல்லே வரலாம்." - பதினான்கு வயசு மகாதேவனின் மனசுக்குள் கற்பனை
சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது. அதே சமயம் வீட்டிலோ மூத்த மகனை அப்படி அனுப்ப
மனமில்லை. ஆனால் மகாதேவன் மனதிலோ நாடகக்
கம்பெனியில் சேரவேண்டும் என்ற எண்ணம் அழுத்தமாகப் பதிந்திருந்தது. பெற்றோருக்கு
சமாதானம் சொல்லி அவர்களைச் சம்மதிக்க வைத்தார்.
சென்னை
வந்த மகாதேவனுக்கு பாலகந்தர்வ நாடக சபா நாடககுழு நடத்திய நாடகத்தில்
நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இசை ஞானம் நிரம்பப் பெற்ற மகாதேவனின் சாரீர வளம்
அவனது திறமையை வெளிப் படுத்த உதவியது. ஆனாலும், நாடகத்திற்கு வசூல் இல்லை என்று
தினம் சாப்பாடு சாப்பிடுவதற்கே அனைவரும் கஷ்டப்பட்டனர். ஒரு கட்டத்தில் நம்பி வந்த நாடக கம்பெனி
நஷ்டத்தில் இழுத்து மூடப்பட்டதும், ஊருக்கு திரும்ப மனமில்லாமல், வடசென்னையில் வால்டாக்ஸ் ரோட்டின் கடைசியில்
இருந்த யானை கவுனியில் ஒரு ஹோட்டல் வேலைக்கு சேர்ந்தார் மகாதேவன்.
நடிக்க வந்த மகாதேவனனுக்கு ஓட்டலில், "சார் சாப்பிட்டது
ரெண்டு தோசை.. ஒரு காப்பி.. ரெண்டரை அணா" -
என்று ஒரு அறிவிக்கும் சர்வர் வேலை.
ஓட்டலில் வேலைப் பார்த்துக் கொண்டே நாடகங்களில்
நடிக்கவும், வாசிக்கவும் முயற்சி செய்தார். பெருசாக வாய்ப்பு கிடைக்கவில்லை
என்றாலும், சின்ன சின்ன வாய்ப்புகள் அவ்வப்போது கிடைத்தன. அப்படியே நான்கு
ஆண்டுகள் ஓடின. ஒருமுறை "திருமங்கை
ஆழ்வார்" என்ற படத்தில் துவார பாலகர்களில் ஒருவராக தோன்ற ஒரு வாய்ப்பு
கிடைத்தது. நடித்தார்.
பாய்ஸ் நாடக கம்பெனி போலவே "ஸ்பெஷல் நாடகக்
கம்பெனி"களும் இயங்கி வந்தன. அதாவது மிகப் பிரபலமான நாடக நடிகர் -
நடிகையர்கள் தங்களுக்கென்று தனிக்குழுவை அமைத்துக்கொண்டு நடத்தும் நாடகங்கள். எம்.
கே. தியாகராஜ பாகவதர், எஸ்.ஜி. கிட்டப்பா ஆகியோர்
இப்படி ஸ்பெஷல் நாடகக் கம்பெனிகள் மூலம் பிரபலம் ஆனவர்கள். அதுபோல ஒரு
"ஸ்பெஷல்" நாடகக் குழுவில் ஹார்மோனியம் வாசிக்கும் வாய்ப்பு
மகாதேவனுக்குக் கிடைத்தது.
தொடர்ந்து அந்த நாடக்குழு நடத்திய நாடகங்களுக்கு
ஊர் ஊராக சென்று ஹார்மோனியம் வாசித்த மகாதேவன், கர்நாடகாவில் உள்ள கோலார்
தங்கவயலில் நாடகம் நடந்த போது அங்கும் உற்சாகமாக வாசித்தார்.
அப்போது பார்வையாளர் வரிசையில் இருந்து மகாதேவன்
திறமையை கவனித்தவ இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கடராமன், நாடகம் முடிந்த பிறகு
மகாதேவனை மனமார பாராட்டியதுடன், தான் ஏவி.மெய்யப்ப செட்டியாரின் நந்தகுமார்
படத்துக்கு இசையமைக்க இருப்பதகாவும், அதில் தன்னுடன் இணைந்து பணியாற்றும்படியும்
அழைப்புவிடுத்தார்.
நந்தகுமார் படத்தில் இசையமைப்பாளராக
எஸ்.வி.வெங்கடராமன் அறிமுகமானார். அவரிடம் உதவியாளராக மகாதேவன் பணியாற்றினார்.
முதல் முறையாக டி.ஆர்.மகாலிங்கம், டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்த அந்தப் படத்தில்
முதல் முறையாக பின்னணி பாடும் முறையை அறிமுகம் செய்யப்பட்டு, அதில் முதல் முறையாக
பின்னணிப் பாடினர் லலிதா வெங்கட்ராமன்.
நந்தகுமார் படம் எதிரப்பார்த்த வரவேற்பை
பெறவில்லை. அடுத்ததடுத்து வந்த படங்களின் தோல்வி கருத்து வேறுபாடுகளினால்
ஏவி.எம்.நிருவனத்தைவிட்டு எஸ்.வி.வெங்கடராமன் வெளியேறினார். இதனால், டி.ஓ.சுப்பாராவ்
என்ற இசை அமைப்பாளரிடம் சேர்ந்து அவரிடம் சிறிது காலம் வேலை செய்த மகாதேவன், பிறகு
டி.ஏ.கல்யாணத்திடம் வந்து சேர்ந்தார்.
சேலம் மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் இசை அமைப்பாளராக டி.ஏ.கல்யாணம் பணியாற்றினார். அங்கு
மனோன்மணி படம் உருவான போது அந்தப் படத்திற்கு இசையமைத்த டி.ஏ.கல்யாணம்,
மகாதேவனிடம் நீ ஒரு பாட்டுக்கு டியூன் போடு என்று கூறி இருக்கிறார்.
தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை பயன்படுத்திக்
கொண்டு “மோகனாங்க வதனி" என்று துவங்கும் பாபநாசம் ராஜகோபால அய்யரின் பாடளுக்கு
கே.வி. மகாதேவன் இசை அமைத்தார். அந்தப் பாடலைக் கேட்ட கதாநாயகன் பி.யு.சின்னப்பா கே.வி.மகாதேவனை
அழைத்து பாராட்டியதுடன் அந்தப் பாடலில் உணர்ச்சிப் பொங்கும் குரலில் பாடி
நடித்தார்.
டி.ஏ.கல்யாணம் இசையமைத்த படத்தில் உதவியாளராக
இருந்து ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்து இசை அமைப்பாளராக கே.வி. மகாதேவன் அறிமுகமான
ஆண்டு 1942 ஆம் ஆண்டு.
அதன் பிறகு,
டி.ஏ. கல்யாணத்துடன் இணைந்து மாயஜோதி, சிவலிங்க சாட்சி ஆகிய மாடர்ன்
தியேட்டர்ஸ் தயாரித்த படங்களுக்கு பணியாற்றிய கே.வி. மகாதேவன். ஜி.ராமநாதன்
இசையமைத்த ஆனந்தன் அல்லது அக்னிபுராண மகிமை என்கிற படத்துக்கும் இசையமைத்தார்.
அதன் பிறகு எழுத்தாளர் பி.எஸ்.ராமையா இயக்கிய
‘தன அமராவதி’ படத்திற்கு தனியாக இசையமைத்தார், கே.வி.மகாதேவன். அந்தப் படத்தில்
நகைச்சுவை வேடத்தில் அறிமுகமான ஜே.பி.சந்திரபாபுவை “உன்னழகிற்கு இணை என்னத்தை
சொல்வது” என்கிற பாடலை பாடவைத்தார். அந்தப் படத்தில் நடித்த பி.எஸ்.சரோஜாவிற்காக
வைக்கம் சரஸ்வதி என்கிற பாடகியை பின்னணி பாட வைத்தார்.
அடுத்து இசையமைத்த ‘தேவதாசி’ படம் அவருக்கு நல்ல
பெயரை பெற்று தந்தது. அதன் பிறகு 1953 ஆம் ஆண்டு வெளியான ‘மதன மோகினி’ படத்தில் பனிரெண்டு
பாடல்களுக்கு இசையமைத்தார். அதில் நான்கு பாடல்களை பாடியவர், பி. லீலாவுடன்
இணைந்து பாடிய “கண்ணோடு கண்ணாய் ரகசியம் பேசி" என்கிற பாடல் அவருக்கு பெரும் புகழ்
ஈட்டி தந்தது.
1952 ஆம் ஆண்டு ஆர்.பதமநாபன் தயாரித்து, இயக்கிய
‘குமாரி’ படத்துக்கு இசையைத்து, அதில் இடம் பெற்ற ‘ஆணுக்கு பெண் வேணுமே’ என்கிற
பாடலையும் பாடி இருந்த மகாதேவன், இரண்டு பாடல்களை பாடவைத்து ஏ.எம்.ராஜாவை பாடகராக
அறிமுகம் செய்தார். கதாநாயகனாக எம்.ஜி.ஆரும், அவருக்கு ஜோடியாக
ஸ்ரீரஞ்சனியும் குமாரி படத்தில் நடிக்க, மகாராணியாக மாதுரிதேவியும் அவரது தம்பியாக
டி.எஸ். துரைராஜும் நடித்தனர்.
அடுத்து.எம்.எல். பதி இயக்கத்தில் ‘மதன மோகினி’
என்ற படத்துக்கு இசை அமைத்தார் கே.வி. மகாதேவன். நரசிம்மபாரதி, சி. ஆர். ராஜகுமாரி நடித்த இந்தப் படத்துக்கு இசை அமைக்கும் போது ஒரு டூயட் பாடலைப் பாட பி. லீலா பாடல்
பதிவுக்கு வந்து விட்டார். ஆனால்
பாடவேண்டிய ஆண் பாடகர் வரவே இல்லை. அதனால்,
கே.வி. மகாதேவனே பி. லீலாவுடன் இணைந்து பாடிவிட்டார். இந்த ஒரு பாடல் என்று இல்லை. படத்தில் கதாநாயகனுக்கான மூன்று பாடல்களையுமே
கே.வி. மகாதேவனே பாடிவிட்டார்.
ஷண்முகப்ரியா ராகத்தில் அமைக்கப் பட்ட "கண்ணோடு கண்ணால் ரகசியம் பேசி” என்று தொடங்கும்
பாடலில் கே.வி. மகாதேவனின் குரல் இனிமை கேட்பவரை பிரமிக்க வைத்தன.
நடிகை மாதுரி தேவி தயாரித்து நடித்த ரோஹினி,
ஏ.பி.நாகராஜன் கதை எழுதி நடித்த நாலவர், மாங்கல்யம், எம்.கே.ராதா நடித்த
நல்லகாலம், எம்.ஜி.ஆர். – சிவாஜி நடித்த கூண்டுக்கிளி என பள படங்கள் வந்தாலும்
அடுத்த வெற்றி படமாக எம்.ஏ.வேணு தயாரித்த "டவுன் பஸ்" படம் 1955-இல் வெளிவந்தது. கண்ணப்பா - அஞ்சலிதேவி ஜோடியாக நடித்த அந்தப்
படத்தில் கே.வி. மகாதேவனின் இசையமைப்பில் இடம் பெற்ற இனிமையான பாடல்கள் வெற்றிக்கு
உதவின.
அதில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய "சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி சேதி தெரியுமா” பாடல் பெரும் புகழ் பெற்ற பாடலாகும். இந்த
பாடலுக்கு மிகக் குறைந்த இசைக் கருவிகளைக் கொண்டு அவர் இசையமைத்திருந்தார்.
அதன் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த ‘தாய்க்கு பின்
தாரம்’ படத்தில் ஏ.மருதகாசி எழுதிய “மனுசனை மனுஷன் சாப்பிடுறாண்டா” என்கிற பாடல்
கே.வி.மகாதேவனை இன்னும் உயர்த்தி அழகுப் பார்த்தது. அடுத்து வந்த ‘முதலாளி’
படத்தில் இடம்பெற்ற “ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே” பாடல் திக்கெட்டும்
பரவியது.
மக்களை பெற்ற மகராசி படத்தில்,
டி.எம்.சௌந்தரராஜன் பாடிய “மணப்பாற மாடுகட்டி”, “போறவளே போறவளே பொன்னுரங்கம்”,
நடிகை பானுமதி பாடிய “சொன்ன பேச்ச கேக்கணும்”, சீனிவாஸ் பாடிய “ஒன்று சேர்ந்த
அன்பு மாறுமா”, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய ஓ மயிலக்கா என எல்லா
பாடல்களும் புகழ் பெற்ற பாடல்களாக, கேட்கக் கேட்கத் திகட்டாக மண்மணம் கமழும்
பாடல்களாக அமைந்தன.
நல்ல இடத்து சம்பந்தம், படிக்காத மேதை, சாரதா, இருவர்
உள்ளம், வானம்பாடி, திருவிளையாடல், இதயக் கமலம், தில்லானா
மோகனாம்பாள், சரஸ்வதி சபதம், கந்தன்
கருணை, திருவருட்செல்வர், திருமால்
பெருமை, சங்கராபரணம், சம்பூர்ண
ராமாயணம், அடிமைப்பெண், வசந்தமாளிகை,
குலமா குணமா, கண்கண்ட தெய்வம், கைதி கண்ணாயிரம், அன்னை இல்லம், விளையாட்டுப் பிள்ளை என பல படங்களின்
மகத்தான வெற்றிக்கு கே.வி.மகாதேவனின் இசையமைப்பும் முக்கிய காரணம் என்றால் அது
மிகையாகாது.
இவரது இசையில் எத்தனை எத்தனை பாடல்கள் காலம்
கடந்து காற்றின் பெருவெளிக்கு கவுரவம் செய்திருக்கின்றன. மிஸ்ர யமன் ராகத்தில்
‘நிலவோடு வான் முகில் விளையாடுதே’, அரபி ராகத்தில் ‘ஏரிக்கரையின்
மேலே போறவளே பெண் மயிலே’, மோகனத்தில் ‘மலர்கள் நனைந்தன
பனியாலே’, கல்யாணி ராகத்தில் ‘மன்னவன் வந்தானடி’, பீம்ப்ளாஸ் ராகத்தில் ‘கோமாதா எங்கள் குலமாதா’ என்று ராகங்களுக்கு இவர்
செய்த ஆராதனையின் பட்டியல் அடங்க மறுக்கும்.
சுத்தமான கர்நாடக இசையில் பாடல்கள் அமைத்தால்
“இது என்ன பாகவதர் காலமா?” என்று கேலிக்கும்
கிண்டலுக்கும் ஆளான நேரத்தில் செந்தேனாக கர்நாடக இசையைத் திரையிசையில் குழைத்துத்
தந்தவர்தான் ‘திரை இசைத்திலகம்’ என்று அனைவராலும் முடிசூட்டப்பட்ட கே.வி.மகாதேவன்.
1965-ல் அவரது இசையமைப்பில் வெளிவந்த ‘திருவிளையாடல்’. அந்தப் படத்தில் இடம்பெற்ற
‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ பாடலை மறக்க முடியுமா?
தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் நாடக மேடைக்காக
எழுதிய விருத்தப் பாடல் அது. அதை அப்படியே எடுத்துக்கொண்டு, முழுமையாக ஒரு ராகத்துக்குள் பொருத்தி, கே.பி.
சுந்தராம்பாளைப் பாடவைத்து பண்டிதர் முதல் பாமரர்வரை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி
கொடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு நம்பிக்கையும் துணிவும் ஒரு இசை அமைப்பாளருக்கு
இருந்திருக்க வேண்டும்! அது கே.வி. மகாதேவனுக்கு இருந்தது. அதனால் அவரால் அந்தப் பாடலை
ஒரு வெற்றிப்பாடலாகக் கொடுக்க முடிந்தது.
திரை இசைப் பாடல்களுக்கு நமது கர்நாடக இசை
பொருத்துவதைப் போல வேறு எதுவும் பொருந்துவதில்லை” என்ற அழுத்தமான கருத்தைப்
பலதரப்பட்ட பாடல்கள் மூலமாக நிரூபித்திருக்கிறார். புன்னாகவராளி ராகத்தில் “நாதர்
முடிமேலிருக்கும் நல்ல பாம்பே” என்று கர்நாடகரீதியில் அமைத்தவர் அதே ராகத்தைப்
பயன்படுத்தி ‘எலந்தப் பயம்’ என்ற ‘பணமா பாசமா’ படத்தின் பாடலை அமைத்து பாமர
மக்களின் இதயத்தையும் வென்றிருக்கிறார்.
கர்நாடக இசையின் பெருமையைத் திரைப்படங்களின்
மூலம் எடுத்துக் காட்டியவர்களில் கே.வி.மகாதேவனும் ஒருவர். கிராமியப்
பாடல்களுக்கு-கிராமிய இசைக்கு முக்கியத்துவம் ஏற்படுத்திக் கொடுத்தவர்களில்
குறிப்பிடத்தக்கவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
தனது பாடலை நன்றாகப் பாடிவிட்டால் பாடகரை உடனே
பாராட்டிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அதே நேரத்தில் வெற்றிபெறும் பாடல்களால்
தேடி வந்தபடியிருக்கும் பாராட்டுக்களைத் தலைக்கு ஏற்றிக்கொள்ள மாட்டார். பணிவும்
இனிமையும் எளிமையும் கே.வி.மகாதேவனே.
‘மன்னவன் வந்தானடி’ பாடலுக்காக அவரைப் பிரபல
வீணை இசைமேதை எஸ்.பாலச்சந்தர் மனமார பாராட்டியபோது, “இதை
போய்ப் பெரிசாச் சொல்லறேளே.. ‘அம்பிகாபதி’ படத்துலே பெரியவர் ‘இசைச் சக்கரவர்த்தி’
ஜி.ராமநாதன், ‘சிந்தனை செய் மனமே’ன்னு போட்ட பாடல் இன்னும் நம்ம சிந்தனையக்
குடைஞ்சுகிட்டு இருக்கே! அது கல்யாணி. அதுக்கு முன்னாலே நான் போட்டது வெறும்
கடையாணி” என்றார் கே.வி.மகாதேவன்.
ஒரு கோரஸ் பாடகியாக இசை வாழ்க்கையைத் தொடங்கிய
எல்.ஆர். ஈஸ்வரியை முதன்முதலாகப் பின்னணிப் பாடகியாக ‘நல்ல இடத்து சம்பந்தம்’
படத்தின் மூலமாக அறிமுகம் செய்தவர் கே.வி.மகாதேவந்தான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை
முதன்முதலாகச் சொந்தக் குரலில் ‘அம்மா என்றால் அன்பு’ பாடலைப் பாடவைத்தவரும் அவரே.
‘ஆயிரம் நிலவே வா’ பாடலின் மூலம் எஸ்.பி.
பாலசுப்ரமணியத்தை இங்கே அறிமுகம் செய்தவரும் அவர்தான்.
“கர்நாடக இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு
அதிக அனுபவம் இல்லாதது தெரிந்தும், ”சங்கராபரணம்” படத்தின்
கதாநாயகன் சோமையாஜுலுவின் சாரீரத்திற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரல்தான்
பொருத்தமாக இருக்கும் என்று கே.வி.மகாதேவனும் அப்படத்தின் இயக்குநர்
கே.விஸ்வநாத்தும் தீர்மானம் செய்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சற்று கடினமான
பயிற்சி அளித்து பாடச் செய்தார். அவரும் சிரமப்பட்டு அக்கறையுடன் நன்கு பாடி கே.வி.மகாதேவனுக்கு
வெற்றி தேடி கொடுத்தார்”.
கலைஞர்களை கண்டுபிடிப்பது மட்டுமல்ல; தனது இசையில் அமைத்த ஒரு அருமையான மெட்டு மக்களிடம் சரியாகச்
சென்று சேரவில்லை என்றால் அந்த மெட்டை எப்படியாவது கொண்டு சேர்த்துவிட வேண்டும்
என்பதில் குறியாக இருப்பார் அவர்.
‘எங்க வீட்டுப் பெண்’ பி. நாகிரெட்டியார்
இயக்கத்தில் கே.வி.மகாதேவன் இசையில் வெளிவந்த படம். இந்தப் படத்துக்காக ‘கால்களே
நில்லுங்கள்’ என்று ஒரு அருமையான மெலடி பாடலை கொடுத்திருந்தார். ஆனால், படம் சரியாகப் போகாததால் பாடல் எடுபடாமல் போனது. நல்ல ஒரு
டியூன் இப்படி எடுபடாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் அவர் மனதை அரித்துக்கொண்டே
இருந்தது.
பிற்காலத்தில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆரின்
வெற்றிப் படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்துக்கு இசை அமைக்கும்போது ‘கால்களே
நில்லுங்கள்’ மெட்டையே சிறிய மாறுதல் செய்து சற்று வேகமான தாள கதியில் பாடலை அமைத்து
வெளியிட்டபின் அந்தப் பாடலின் வெற்றியை ரசித்தார். அந்தப் பாடல்தான் ‘பட்டிக்காடா
பட்டணமா’.
பாடலுக்கான சரணத்தை அமைக்கும்போது, கடைசி வரியை வாத்தியங்கள் இல்லாமல் நிசப்தமாக அமைத்து
மறுபடியும் பல்லவிக்குத் திரும்பும்போது தாளத்தில் ஒரு ‘பீட்’ முத்திரை கொடுப்பது
கே.வி.மகாதேவனின் பாணி.
எந்தப் பாடலிலும் சரணத்தின் கடைசி வரி பாடலின்
மையக்கருத்தாக அமையும். அந்த மையக்கருத்தை இப்படிப்பட்ட தாளம் மற்றும் மவுன
இடைவெளியுடன் அமைக்கும்போது அழுத்தம் திருத்தமாக மக்கள் மனதில் பதியவைக்க
முடியும். உதாரணமாக ‘வசந்த மாளிகை’ படத்தில் வரும் ‘மயக்கமென்ன’ பாடலின் இறுதிச்
சரணத்தில் வரும் கடைசி வரிகள் இப்படி இருக்கும்.
‘உன் உள்ளம் இருப்பது என்னிடமே - அதை
உயிர் போனாலும் தரமாட்டேன்’
இந்த வரிகளை பி.சுசீலா பாடும்போது
‘உயிர்போனாலும்’ என்ற வார்த்தைகளுக்குத் தனி அழுத்தம் கொடுத்து அந்த வரிகளை நிசப்தமாக
அமைத்து அழுத்தமான காதலைக் கேட்பவர் மனதில் பதியவைத்திருப்பார் கே.வி.மகாதேவன்.
1962 ஆம் ஆண்டு ‘மான்சி மனசுலு’ படத்தின் மூலம் தெலுங்கு
திரைப்படத்தில் அறிமுகமாகி அதில் இடம் பெற்ற "மாமா மாமா மாமா" பாடல் மூலம்
புகழ் பெற்றார். அதன் விளைவாக, தெலுங்கு திரையுலகம் அவரை
அன்புடன் "மாமா" என்று அழைக்கத் தொடங்கியது. சில ரிதங்களுக்கு ‘மாமா
ரிதம்’ என்றே சில இசையமைப்பாளர்கள் அழைக்கின்றனர். அனதலவுக்கு அவரதி ரிதம்
புகழ்பெற்றது.
தெலுங்கு மொழிளில் அதிகப் படங்களுக்கு இசை
அமைத்திருக்கும் கே.வி.மகாதேவன், தமிழ், தெலுங்கு, மலையாளம்,
கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் அறுநூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
ஆரம்பத்தில் ஐந்து படங்களில் ஒன்பது பாடல்களை பாடி இருக்கும் கே.வி.மகாதேவன், திரையிசை
என்பது மனதைச் சுகமாக வருடும் தென்றல் போன்ற உணர்வை தருவது என்று சொன்னவர். .
இசை அமைப்பாளர்களுக்கான தேசிய விருது
முதன்முதலாக 1967ம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டபோது முதல் வருடமே கந்தன்
கருணை படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே.வி.மகாதேவன். பின்னர் ‘சங்கராபரணம்’
படத்துக்காக இரண்டாம் முறை தேசியவிருது பெற்றார். தமிழக அரசின் கலைமாமணி விருது
பெற்றுள்ள கே.வி.மகாதேவன், தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை
அடிமைப் பெண் படத்திற்காக பெற்றார். ஆந்திர அரசின் நந்தி விருதினை, மூன்ருமுடை
பெற்றுள்ள கே.விமகாதேவன், திரை இசைத் திலகம்’, ‘இசைச்
சக்கரவர்த்தி’, ”ஸ்வரப் பிரம்மம்’ போன்ற பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.
கே.வி.மகாதேவன் இசை அமைத்த பாடல்களில் அவருக்கு
மிகவும் பிடித்த பாடல் “தை பிறந்தால் வழி பிறக்கும்” படத்தில் சீர்காழி
கோவிந்தராஜன் பாடிய ”அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே” என்ற பாடல்.
கே.வி.மகாதேவனிடம் உதவியாளராக இருந்த டி.கே.புகழேந்தி
என்பவர் ‘குரு தட்சணை’ உட்பட சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
கே.வி.மகாதேவனுக்கு மனைவியும், மூன்று மகள்களும், இரு
மகன்களும் உள்ளனர். இதில் கண்ணன் என்கிற மகன் மாசிலாமணி படத்தில் நீதிபதியாக
நடித்தவர்.
வாத நோயால் தாக்கப்பட்ட கே.வி.மகாதேவன்
1992-க்குப் பின்னர் இசையமைக்கவில்லை. திரையுலகினரால் “மாமா” என்றழைக்கப்பட்ட
கே.வி.மகாதேவன் 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி தனது 83-ஆவது வயதில் மறைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக