வியாழன், 26 மே, 2022

இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் வாழக்கை வரலாறு

ஏ.சி.திருலோகசந்தர் 

திருலோகசந்தரின் சொந்த ஊர் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு. தந்தை பெயர் ஏ.செங்கல்வராயன். சென்னையில் ஆங்கிலேய கம்பெனி ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்தவர். 1930ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி பிறந்த ஏ.சி.திருலோகசந்தர்... சென்னை புரசைவாக்கத்தில் ஈ.எல்.எம். பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார்.

சிறுவயதில் இருந்தே கதை கேட்கும் ஆர்வம் திருலோகசந்தருக்கு இருந்தது. அவரது அம்மா புராண கதைகளை அவரிடம் சொல்வார். அதை ஆர்வத்துடன் கேட்டு மகிழும் திருலோகசந்தர், அதை நண்பர்களிடம் சொல்லி மகிழ்வாராம். பள்ளியில் படிக்கும் போதே புத்தகங்கள் படிக்கிற ஆர்வம் அவருக்கு இருந்தது. பல எழுத்தாளர்களின் படைப்புகள் அவரை உயர்த்தின. இதே மாதிரி நாமும் எழுத  வேண்டும் என்று கதைகள் எழுத தொடங்கினார். அந்த கதைகளை தனது கையெழுத்துப் பத்திரிகையில் வெளியிட்டார். நாடகங்களையும் எழுதி சக மாணவர்களுடன் சேர்ந்து நடித்தார்.

காலம் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ‘எம்.ஏ’ படிக்க அழைத்து சென்றது. அங்கு படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் பல பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதினார். அந்த கதைகளை மிஸ் சந்திரா எம்.ஏ, திருசந்தர், திருலோகசந்தர் என்ற பெயர்களில் எழுதினர். அதே நேரத்தில் அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பான ஒரு நாடகத்தில் நடித்தார்.

கல்லூரியில் நடக்கும் கலை விழாக்களிலும் தனது பங்கை திறம்பட செய்வார், திருலோகசந்தர். ஆனால், திருலோகசந்தரின் தந்தைக்கு நாடகம், சினிமா என்றாலே பிடிக்காது. எப்படியாவது ‘ஐ.ஏ.எஸ்” எழுதச்செய்து, கலெக்டர் ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

21 வயது ஆன பிறகுதான் ஐ.ஏ.எஸ்’ பரீட்சை எழுதமுடியும். ஆனால், 19-வது வயதிலேயே எம்.ஏ பட்டப்படிப்பை முடித்துவிட்டார், திருலோகசந்தர். அதனால், ஒரு வருடம் வீட்டில் சும்மா இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் திருலோகசந்தரின் கல்லூரி தோழனான ராஜகோபால், தனது தந்தையான இயக்குநர் பத்மநாபனிடம் திருலோகசந்தருக்கு உள்ள கதை எழுதும் ஆற்றலைத் தெரிவித்து, அவரது படங்களில் பணிபுரிய சிபாரிசு செய்திருக்கிறார்.

மகனின் சிபாரிசை ஏற்று திருலோகசந்தரை ஒரு நாள் கதை விவாதத்திற்கு இயக்குநர் பத்மநாபன் அழைத்தார். அதுவே, திரைப்பட துறைக்குள் திருலோகசந்தர் நுழைய வாசலாக அமைந்தது.

1950-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்-ஸ்ரீரஞ்சனி நடித்த ‘குமாரி’ படத்தை பத்மநாபன் இயக்கினார். அந்த படத்திற்கு உதவி இயக்குனராக திருலோகசந்தர் பணியாற்றினார். தொடர்ந்து ‘எல்லாம் இன்பமயம்’ என்ற படத்திற்கும் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இந்த அனுபவங்கள் காரணமாக, நண்பன் அபிபுல்லா மூலமாக ஜுபிடர் பிக்சர்ஸ் படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு திருலோகசந்தருக்கு கிடைத்தது.

திரைப்படத்தில் நடிக்க வேண்டும்-நடிகராக வேண்டும் என்ற ஆர்வமும், கதை எழுதி திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வமும் திருலோக்சந்தருக்கு இருந்தது. அதனால், அதிக ஆர்வத்துடன் தான் வேலை செய்த படங்களில் ஈடுபட்டு வந்தார். ஆனால், படங்களில் நடித்தால் மகன் கெட்டு விடுவான் என்று அவரது அப்பா நினைத்தார். அதனால், நடிக்கவே கூடாது என்று அவரிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டார்.

1950-ம் ஆண்டு திரையுலகிற்குள் உதவி இயக்குனராக நுழைந்த திருலோகசந்தருக்கு பத்து ஆண்டுகள் கழித்து 1960-ம் ஆண்டு சிட்டாடல் பிலிம் கார்பரேஷன் தயாரித்த ‘விஜயபுரி வீரன்’ படத்திற்கு கதை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ஜோசப் தளியத் இயக்கிய ‘விஜயபுரி வீரன்’ படத்தில் சி.எல்.ஆனந்தன் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்த நடிகர் அசோகன், திருலோகசந்தரின் நெருங்கிய நண்பரானார். இருவரும் தங்களின் அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசிய போது, அடுத்த இரு படங்களின் கதைகளை அசோகனிடம் கூறி இருக்கிறார், திருலோகசந்தர்.

அந்த இரு கதைகளும் அசோகனுக்கு பிடித்துவிட்டது. இந்த கதைகளுக்கு நல்ல தயாரிப்பாளரை உனக்கு அறிமுகப்படுத்துகிறேன் என்று தெரிவித்த நடிகர் அசோகன், பிறகு ஏவி.எம். நிறுவனத்தில் கதை சொல்ல ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அந்த வாய்ப்பு ஏ.சி.திருலோகசந்தர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்ட காரணமாக அமைந்தது.

ஆமாம். ஏவி.எம்.நிறுவனத்தில் தன்னிடமிருந்த இரண்டு கதைகளை ஏவி.எம்.சரவணனிடம் கூறினார், திருலோகசந்தர். அதில் ஒரு கதையை ஏ.பீம்சிங் இயக்கத்தில் ‘பார்த்தால் பசி தீரும்’ என்கிற பெயரில் தயாரித்த ஏவி.எம்.நிறுவனம், இன்னொரு கதையை திருலோகசந்தர் இயக்கத்தில் ‘வீரத்திருமகன்’ என்கிற பெயரில் தயாரித்தது.

சி.எல்.ஆனந்தன் காதானாயகனாக அறிமுகமான ‘விஜயபுரி வீரன்’ படத்திற்கு கதை எழுதி கதாசிரியராக அறிமுகமான திருலோகசந்தர், சி.எல்.ஆனந்தன் கதாநாயகனாக நடித்த ‘வீரத்திருமகன்’ படத்திற்கு கதை கொடுத்து ஏவி.எம் நிறுவனம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார்.

ராஜா ராணிக் கதையில் நவீனத்தைப் புகுத்தி திருலோகசந்தர் இயக்கிய சி.எல்.ஆனந்தனுக்கு ஜோடியாக சச்சு கதாநாயகியாக அறிமுகமானார். அவர்களுடன் ஈ.வி.சரோஜா, அசோகன் உட்பட பலர் நடிக்க, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ஒன்பது பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருந்தார்.

அதில் ஸ்ரீநிவாஸ், பி.சுசிலா பாடிய “ரோஜா மலரே ராஜகுமாரி” பாடல் அனைவரையும் கவர்ந்தது. பெரிய தடாகத்தில் தாமரை மலர்கள் விரிந்திருக்க அதில் நங்கையர் நின்றபடி நடனம் ஆடும் காட்சி பெரிய அளவில் பேசப்பட்டது.

கதாசிரியராக ‘பாரத்தால் பசி தீரும்’ படம் பொங்கலுக்கும், இயக்குனராக ‘வீரத்திருமகன்’ படம் மே மாத தொழிலாளர் தினத்திலும் 1962 ஆம் ஆண்டு வெளியாகி திருலோகசந்தருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தொடர்ந்து 1963ஆம் ஆண்டு ஏவி.எம். நிறுவனத்துக்காக எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி நடித்த ‘நானும் ஒரு பெண்’ படத்தை இயக்கிய திருலோகசந்தர், அந்தப் படத்தின் இந்திப் பதிப்பையும் இயக்கினார். ‘மைன் பி லட்கி ஹூன்’ என்கிற பெயரில் உருவான இந்திப் படத்தில் தர்மேந்திரா, மீனாகுமாரி நடித்தனர்,

அதன் பிறகு எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி நடித்த ‘கக்கும் கரங்கள்’ படத்தை இயக்கினார். 1965ஆம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தில் சிவக்குமார் முருகன் வேடத்தில் நடித்து அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற “ஞாயிறு என்பது கண்ணாக” பாடல் இன்றளவும் பேசப்படும் பாடலாக அமைந்தது. இந்தப் பாடல் மூலம் பாடலைப் படம் பிடிப்பதில் வல்லவர் என்ற பெயர் திருலோகசந்தருக்கு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து திருலோகசந்தர் இயக்கிய படம், ‘நாடி ஆட ஜன்மே’. தெலுங்கு மொழியில் எஸ்.வி.ரங்காராவ் தயாரிப்பில் என்.டி.ராமாராவ், சாவித்திரி நடித்த அந்தப் படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

தமிழிலும், தெலுங்கு இரு மொழிகளிலும் வெற்றிப் படம் கொடுக்கும் இயக்குநர் என்று பெயர் எடுத்த ஏ.சி.திருலோகசந்தர், ஆங்கிலத்தில் வெளியாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த ‘கம் செப்டம்பர்’ என்கிற படத்தைப் பார்த்து அசந்து போனார். அதன் தாக்கத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு கதையை எழுதி அதற்கு ‘அன்பே வா’ என்று பெயர் வைத்தார்.

அந்தக் கதையை கேட்ட தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், ஜெய்சங்கர் அல்லது ரவிச்சந்திரன் நடிக்க கருப்பு வெள்ளைப் படமாகத் தயாரிக்கலாம் என்று கூறியவர், பிறகு வண்ணப்படமாக எடுத்தால் எம்.ஜி.ஆரை வைத்து தயாரிக்கலாம் என்று தனது தந்தை ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் சென்று ‘அன்பே வா’ கதையைச் சொல்ல வைத்தார்.

கதையைக்கேட்ட மெய்யப்ப செட்டியார், ‘இதுல லேடீஸ் சென்டிமென்ட் ஒண்ணும் இல்லே. எம்.ஜி.ஆர்னா அம்மா, தங்கச்சி யாராவது ஒருத்தர் வேணும். இதுவரைக்கும் நாம பேமிலி எலிமென்ட் ஸோட தான் படம் எடுத்திருக்கோம். இந்தக் கதையில அப்படி ஒண்ணும் இல்லே. ஆனா கேக்குறதுக்கு நல்லாருக்கு. எதுக்கும் எம்.ஜி.ஆர். கிட்டே சொல்லிப்பாருங்க. அவருக்குப் பிடிச்சிருந்தா கலர்லயே எடுக்கலாம்’ என்று கூறி இருக்கிறார்.

நடிகர் அசோகன் மூலமாக எம்.ஜி.ஆரிடம் சென்று கதையை சொன்னார், இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். கதையை கேட்ட எம்.ஜி.ஆர்., ‘இது என்னுடைய சம்பிரதாய முறைகள்ளேருந்து மாறுபட்ட ஒரு கதை. இந்தப்படத்தோட வெற்றி டைரக்டரைப் பொறுத்தது. அவர் என்னை எப்படிக் கையாளப்போறாரோ அதை வைத்துத்தான் படம் அமையும். நான் நடிக்கிற படங்கள்ளே என்னோட டைரக்டர் இருப்பாரு. ஆனா இந்தப்படத்துல டைரக்டரோட நான் இருக்கணும். சரி. ஒங்க விருப்பப்படி நான் நடிக்கிறேன். அவ்வளவுதான்’ என்று கூறினார்.

அதன் பிறகு ‘அன்பே வா’ படத்தின் வேலைகள் தொடங்கின. கதாநாயகியாக பி.சரோஜாதேவியும், இசை அமைப்பாளராக எம்.எஸ்.விஸ்வநாதனும், பாடலாசிரியராக கவிஞர் வாலியும், வசனம் எழுத ஆரூர் தாசும் ஒப்பந்தமானார்கள். கலை இயக்குனர் ஏ.கே.சேகரின் கற்பனையில் தோன்றிய பணக்கார ஜெபியின் மாளிகையின் கண்கவர் கூடமும், அதனைச் சார்ந்த படுக்கை அறையும், மற்றும் மேன்மாடமும் அதிகப்பொருட் செலவில் அசலாக ஒரு அரங்கு அமைத்து அதில் உருவாக்கி இருந்தனர்.

முதலில் பாடல்களின் காட்சிகளுக்காக ஊட்டி மற்றும், சிம்லா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பிய படக்குழு, பிறகு எட்டாவதாக கட்டப்பட்ட அரங்கில் மாளிகை காட்சிகளை படமாக்கினார்கள்.

படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகப்பாடலான ‘புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது’ பாடலில் தொடங்கி, ‘‘அன்பே வா... அன்பே வா’’,  ‘லவ் பேர்ட்ஸ்... லவ் பேர்ட்ஸ்’, ‘வெட்கமில்லை நாணமில்லை’, ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’, ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ என படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் பதிவு செய்யப்பட்ட போதே பெரும் புகழ்பெற்ற பாடல்களாக அமையப் போகிறது என்று பேசப்பட்டது. அதே போல பாடல்கள வெளியாகி இனிக்கும் இனிய கற்கண்டுப் பாடல்களாக அமைந்து இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், பாடலாசிரியர் கவிஞர் வாலிக்கும் மேலும் புகழ் சேர்த்தன.

அனைத்துப் பாடல்களும் அடங்கிய ‘‘அன்பே வா’’ பாட்டுப்புத்தகம் வட்ட வடிவமாக ஓர் இசைத்தட்டுபோல அழகாக அச்சிடப்பெற்று தியேட்டர்களில் விற்கப்பட்டன.

அன்பே வா படத்தை முப்பத்து மூன்று லட்ச ரூபாய்க்கு விற்று தமிழ்ப்பட விநியோக விற்பனையில் புதிய சாதனை புரிந்தார், தயாரிப்பாளர், ஏவி.மெய்யப்ப செட்டியார்.

1966 ஆம் ஆண்டு பொங்கல் அன்று ‘‘நான் ஆணையிட்டால்’’ படம் வெளியிட அனுமதி அளித்திருந்த எம்.ஜி.ஆர்., ஏவி.எம்.நிறுவனத்துக்காக பொங்கலுக்கு ‘அன்பே வா’ படத்தை வெளியிட ஒப்புக் கொண்டார். அதன்படி 1966 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் ‘அன்பே வா’ படம் வெளியாகி பெரும் வெற்றிப் படமாக அமைந்து இயக்குனர் ஏ.சி.திருலோக்சந்தரை நட்சத்திர இயக்குநர் உயரத்திற்குக் கொண்டு சென்றது.

அதன் பிறகு ஜெமினி கணேசன் நடிப்பில் இயக்கிய ‘ராமு’, சிவாஜி கணேசன் நடிப்பில் இயக்கிய ‘தங்கை’ ஆகிய படங்கள் வெளிவந்தது. சிவாஜி படம் என்றால் அதுவரையில் சோகம் மட்டுமே அதிகமாக இருக்கும். சிவாஜிக்கு ஸ்டைல் நடிப்பு வரும் என்பதை உணர்ந்து கொண்டு அதனை அதிகமாக ‘தங்கை’ படத்தில் வெளிப்படச் செய்தார், திருலோகசந்தர்.

ரவிச்சந்திரன், காஞ்சனா நடிப்பில் ‘அதே கண்கள்’ என்கிற சஸ்பென்ஸ் திரிலர் படத்தை தமிழிலும், கிருஷ்ணா, காஞ்சனா நடிப்பில் ‘அவே கல்லு’  என்கிற பெயரில் தெலுங்கு மொழியிலும் ஏவி.எம். நிறுவனத்துக்காக இயக்கிய திருலோகசந்தர், அதன் பிறகு சிவாஜி கணேசன் நடித்த ‘இருமலர்கள்’ என்கிற படத்தை இயக்கினார். சிவாஜி கணேசன், பத்மினி, கே.ஆர்.விஜயா நடித்த இந்தப் படம் 1967 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடியதுடன், தமிழக அரசின் சிறந்த கதாசிரியருக்கான விருது ஏ.சி.திருலோக்சந்தருக்கும், சிறந்த நடிகைக்கான விருது கே.ஆர்.விஜயாவுக்கும் பெற்று தந்தது. 

இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் ஜெமினி கணேசன் நடிப்பில் இயக்கிய ‘ராமு’ படத்தை அதே பெயரில் தெலுங்கு மொழியில் இயக்கினார். என்.டி.ராமாராவ் நடித்த அந்தப் படம் ஆந்திராவில் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து கே.பாலாஜி தயாரிப்பில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி நடிப்பில் ‘என் தம்பி’ படத்தை இயக்கியவர், தொடர்ந்து சிவாஜி கணேசன் நடிப்பில் ‘அன்பளிப்பு’, ‘தெய்வமகன்’, ‘திருடன்’, ‘எங்க மாமா’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘பாபு’, ‘தர்மம் எங்கே’, ‘பாரத விலாஸ்’, ‘அவன்தான் மனிதன்’, ‘அன்பே ஆருயிரே’, ‘டாக்டர் சிவா’, ‘பைலட் பிரேம்நாத்’, ‘விஸ்வரூபம்’,  ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’, ‘வசந்தத்தில் ஓர் நாள்’, ‘அன்புள்ள அப்பா’, ‘குடும்பம் ஒரு கோயில்’ என சிவாஜி கணேசன் நடித்த பதினெட்டு படங்களை இயக்கினார்.

இடையில் ஏவி.எம்.ராஜன் நடித்த ‘அவள்’, முத்துராமன் நடித்த’ இதோ எந்தன் தெய்வம்’, ‘சொந்தம்’, ‘ராதா’, ‘தீர்க்க சுமங்கலி’, ‘பெண் ஜென்மம்’, சிவக்குமார் நடித்த ‘பத்ரகாளி’, ‘நீ இன்றி நானில்லை’, விஜயகுமார், ரஜினிகாந்த் நடித்த ‘வணக்குத்துக்குரிய காதலியே’ போன்ற படங்களை இயக்கிய ஏ.சி.திருலோகசந்தர், ‘பாவ்ரி’, ‘தெரி கசம்’, ‘டோ திலோன் கி தாஸ்தான்’, ‘பாபு’, ‘சுக்கிரியா’ ஆகிய இந்திப் படங்களையும் இயக்கினார்.

‘தெய்வமகன்’ படத்தில் சிவாஜியை மூன்று வேடங்களில் பேச வைத்து ரசிகர்களை உருக வைத்தார். தமிழகத்திலிருந்து முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் ‘தெய்வமகன்’ திரைப்படம்தான்!

திருலோகசந்தர் இயக்கிய பெரும்பாலான படங்கள் தமிழ் சினிமாவையும் அதன் நாயகர்களையும் நவீனப்படுத்திக் காட்டியுள்ளன. தமிழ் திரையுலகத்தை மற்றொரு புதிய பாணிக்குத் திருப்பியிருக்கின்றன.

திருலோகசந்தர் வேண்டாம் என்று கூறியும் நடிகர் ஏவிஎம் ராஜன் வற்புறுத்தல் பேரில் அவர் சொந்தமாகத் தயாரித்த ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணுவை இயக்க நேர்ந்தது. சிவாஜி கணேசன் நடித்திருந்தும் படம் தோல்வி அடைந்தது. தெலுங்கு வாடையுடன் இருந்ததால் படத்தை தமிழ் ரசிர்கள் ஏற்காமல் போயினர்.

திருலோகசந்தர் திறமைசாலி. அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து உயர்த்தி விட நினைத்த சிவாஜி கணேசன், ‘அன்புள்ள அப்பா’ படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். படம் வெற்றி பெற்றது என்றாலும் அதற்கு மேலும் திரைப்படங்களை இயக்க அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கு அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதே காரணமாக அமந்தது.

திருலோகசந்தர் இயக்கிய ‘பத்ரகாளி’ திரைப்படத்தின் கதாநாயகி ராணி சந்திரா கலைநிகழ்ச்சிக்காக வெளிநாட்டு சென்ற போது விமான விபத்தில் இறந்து போனார். அதனால், கதாநாயகி இல்லாமல் மீதிப் படத்தை முடிக்க முடியாது என்று என்கிற நிலை உருவானது. இந்த நிலையில் ராணி சந்திரா சாயலில் உள்ள ஒரு நடன பெண்ணை அழைத்து வந்து, ராணி சந்திரா இல்லையே என்கிற குறை தெரியத அளவுக்கு கேமிரா கோணங்கள், வசன பாணி, நடை, உடை பாவனை என அத்தனையும் மாற்றி அந்தப் பெண்ணை நடிக்க வைத்து படமாக்கினார், திருலோகசந்தர். அதற்கு நாயகன் சிவக்குமார் உதவியாக இருந்தார். 

பாடல்களும், படமும் வெற்றி அடைந்து தெலுங்கு மொழியில் முரளி மோகன், ஜெயபிரதா நடிக்க திருலோகசந்தர் இயக்க அங்கும் பத்ரகாளி என்கிற பெயரில் வெளியாகி வெற்றியை பெற்றது.   

'உருக்கமான சம்பவங்கள்', 'நேர்த்தியான திரைக்கதை, திறமையான கலைஞர்கள், விரசமில்லாத காட்சியமைப்புகள் இவற்றின் ஒரு கலவையாக ரசிகர்களுக்கு படங்களை கொடுத்து, குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பவர் என்று பெயர் பெற்றவர் ஏ.சி.திருலோகசந்தர்.

1969ல்  சிவாஜி நடித்து இவர் இயக்கிய ‘இருமலர்கள்’ படமும், ஸ்ரீதர் இயக்கி சிவாஜி நடித்த ‘ஊட்டி வரை உறவு’ படமும் ஒரேநாளில் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றன. அதேபோல 1970ல் சிவாஜி நடித்து இவர் இயக்கிய ‘எங்கிருந்தோ வந்தாள்’ படமும், டி.ஆர்.ராமண்ணா இயக்கி சிவாஜி நடித்த ‘சொர்க்கம்’ படமும் ஒன்றாக வெளியாகி மாபெரும் வெற்றிப் படங்களாயின. 1975ல் சிவாஜி நடித்த ‘டாக்டர் சிவா’ படமும், ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி நடித்த ‘வைரநெஞ்சம்’ படமும் வெளியானது. மூன்று முறை இவர் இயக்கிய சிவாஜி படங்கள் வேறு ஒருவர் இயக்கிய சிவாஜி படத்துடன் வெளியாகி வெற்றிப் பெற்றது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தின.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் 50 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கும் ஏ.சி.திருலோகசந்தர், தமிழக அரசின் கலைமாமணி விருது, தமிழக அரசின் ராஜா சாண்டோ விருது ஆகிய கௌரவங்களை பெற்றவர்.

சில தொலைக்காட்சி தொடர்கள் இயக்கிய ஏ.சி.திருலோகசந்தர், வயதும் உடல்நிலையும் இடம்கொடுக்கவில்லை என்றதும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது வீட்டில் புத்தகங்களுடன் பொழுதை கழித்தார். அவருக்கு பெரும் உதவியாக இருந்த அவரது மனைவி பாரதியை காலம் முதலில் எடுத்துக் கொண்டதுடன், இரண்டாவதாக அவரது மூத்த மகன் பிரேம் திரிலோக்கை அமெரிக்காவில் காலம் எடுத்துக் கொண்டது.

சில காலம் உடல்நலம் பாதிப்பில் நினைவு தவறியிருந்த ஏ.சி.திருலோகசந்தருக்கு, அவரது இரண்டாவது மகன் ராஜ்சந்தர், மகள் மல்லி சீனிவாசன் ஆகியோர் உதவியாக இருந்தார்கள். ஆனால், 2016 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதி தனது 86-வது வயதில் இயற்கையுடன் கலந்து தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு தனது படைப்புகளை சாட்சியாக கொடுத்து நம்முடன் நல்ல படைப்புகளுடன் வாழ்கிறார். அந்த மகத்தான கலைஞனின் நினைவை போற்றுவோம்....

தொகுப்பு : ஜி.பாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக