திங்கள், 14 ஜூலை, 2014

“சின்னக்குயில்” சித்ரா


சின்னக்குயில்என்று அழைக்கப்படும் கே.எஸ் சித்ரா, 1963  ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில், கிருஷ்ணன், சாந்தகுமாரி தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர். இவருடைய தந்தை வானொலியில் புகழ்பெற்ற பாடகராகவும், தாயார் சாந்தகுமாரி வீணைக் கலையில் சிறந்தவராகவும் விளங்கியதாள், சித்ராவும் சிறுவயதிலேயே தனக்கென்று தனித் திறமையை வளர்த்துக்கொண்டார். 

தன்னுடைய ஐந்து வயதிலேயே அகில இந்திய வானொலியில் சங்கீதத்தில் சிலவரிகள் பாடியாவர், பெற்றோரின் உதவியால்  சங்கீதம் மற்றும் இசைப் பயிற்சிகளைக் கற்று, இசைத் துறையில் பி.ஏ இளங்கலைப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றார். பிறகு முதுகலைப் படிப்பை தொடர்ந்து இசைத் துறையில் எம்.ஏ பட்டம் பெற்றார்.

பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுதே தெய்வீகக் குரலால் இசையுலகில் புகழ்பெற்று விளங்கும் கே. ஜே. யேசுதாசுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்ற அவர், 1979 ஆம் ஆண்டு எம்.ஜி ராதாகிருஷ்ணன் மூலம் மலையாளத்தில் திரைப்படப் பின்னணி பாடகியாக தன்னுடைய பயணத்தினைத் தொடங்கினார். 

ரவீந்திரன், ஷியாம், ஜெர்ரி அமல்தேவ், கண்ணூர் ராஜன் மற்றும் ஜான்சன் போன்ற மூத்த இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர், இசையமைப்பாளர் ரவீந்திரனின் ஆலோசனையில் திருவனந்தபுரத்தை விட்டு சென்னைக்குக் குடி பெயர்ந்தார்.

மலையாளத்தில் வெற்றிப் பெற்ற தனது படத்தை தமிழில் பூவே பூச்சூடவா என்று ரீமேக் செய்ய இயக்குனர் பாசில் முடிவு செய்து அதற்கு இசையமைக்க இளையராஜாவிடம் படத்தை போட்டு கட்டிய போது, மலையாளத்தில் பாடிய அந்தப் பெண்ணையே தமிழில் பாட வைக்கலாமே என்று கூறிய இளையராஜா அந்தப் பாடகியை வரச்சொல்லுங்கள் வாய்ஸ் எடுத்துக் பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார். அப்படித்தான் தமிழுக்கு அழைத்து வரப்பட்டார், சித்ரா. ஆனால், இளையராஜா, அவரை டெஸ்ட் எடுத்து பாட வைத்த படம் பச்சைக்கொடி. பாடிய பாட்டு பூஜைக்கு ஏத்த பூவிது. அந்த டூயட் பாடலில் அவரோடு இணைந்து பாடகராக அறிமுகமானவர் கங்கை அமரன். ஆர்.செல்வராஜ் இயக்கிய அந்தப் படத்தின் பெயர், நீ தானா அந்தக் குயில் என்று பிறகு மாற்றப்படட்டது. 

1986 ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் "நீதானா அந்தக் குயில்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சித்ரா, தொடர்ந்து கீதாஞ்சலி, "பூவே பூச்சூடவா", "சிந்து பைரவி" என இளையராஜாவின் இசையில் பல தேனினும் இனிய பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்ததோடு "சின்னக்குயில்" சித்ரா என அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்பட்டார். "சிந்து பைரவி" திரைப்படத்தில் "பாடறியேன் படிப்பறியேன்", "நானொரு சிந்து காவடி சிந்து" ஆகிய பாடல்களை சிறப்பாக பாடியதற்காக "தேசிய விருது" பெற்றார். 

கே வி மகாதேவன் இசையமைத்த "பிரளயம்" என்ற திரைப்படத்தின் வாயிலாக பின்னணிப் பாடகியாக தெலுங்கு திரையுலகிற்கும் அறிமுகமானார். கே வி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன், வி குமார், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், கங்கை அமரன், சந்திரபோஸ், தேவா, வித்யாசாகர், எஸ் ஏ ராஜ்குமார், மரகதமணி, மணிஷர்மா, சிற்பி, பரத்வாஜ், ஆதித்யன், பாலபாரதி, யுவன் சங்கர் ராஜா, தஷி என தமிழிலும், நதீம் ஷ்ரவண், அனுமாலிக், ராஜேஷ் ரோஷன், நிகில் வினய் என ஹிந்தியிலும் இவர் பின்னணிப் பாடாத இசையமைப்பாளர்களே இல்லை எனும் அளவிற்கு, தென்னிந்திய மொழிகளன்றி ஹிந்தி, பெங்காளி, ஒரியா, குஜராத்தி, துளு, பஞ்சாபி, ராஜஸ்தானி, உருது, சமஸ்கிருதம், படுகா எனவும் சிங்களம், மலாய், அரபு, லத்தீன், ஆங்கிலம் மற்றும் ஃப்ரஞ்ச் என்று அயல்நாட்டு மொழிகளிலும் ஏறத்தாழ 25000க்கும் மேல் பாடல்களைப் பாடி தனக்கென ஒரு தனி இசை சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர் 'சின்னக்குயில்' சித்ரா.

ஆறு முறை தேசிய விருதுகளும்’, ‘ஐந்து முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகளும்’, ‘பதினைந்து முறை கேரளா அரசு விருதுகளும்’, ‘ஆறு முறை ஆந்திர அரசு விருதுகளும்’, ‘நான்கு முறை தமிழக அரசு விருதுகளும்’, ‘இரண்டு முறை கர்நாடக அரசு விருதுகளும்’ பெற்ற  சித்ரா, 2005-ல் மத்திய அரசால் பத்மஸ்ரீவிருது, 1997-ல் தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருது, 2011-ல் சத்தியபாமா பல்கலைக் கழகத்திலிருந்து கௌரவ டாக்டர் பட்டம்’, 2011-ல் ஆந்திரபிரதேச அரசு கலாச்சார கவுன்சில் மூலம் பாரத் ரத்னா லதா மங்கேஷ்கர் விருது, எனப் பல்வேறு விருதுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார். 

சித்ராவின் கணவர் பெயர் விஜய்சங்கர். இவர்களுக்கு நந்தனா என்கிற ஒரு மகள் இருந்தார். துபாயில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது, அங்கு எதிர்பாராதவிதமாக நீச்சல் குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்ததார். அந்த இழப்பைத் தாங்க முடியாமல் பாடுவதையே சிறிது காலம் நிறுத்தி இருந்தார் சித்ரா.

தென்னிந்திய திரைப்பட உலகில் பல பாடகிகள் வந்து சென்றாலும் எல்லா ரசிகர்களாலும் மறக்க முடியாத பாடகியாக விளங்கி, இசை நெஞ்சங்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் கே. எஸ். சித்ரா, தென்னிந்திய திரைப்படத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்பதை யாராலும் மறுக்க இயலது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக