பூவே பூச்சூடவா... எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா.. என்று தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் குடிக் கொண்ட நடிகை நதியா, என்.கே.மொய்து - லலிதா தம்பதிக்கு மகளாக பிறந்தவர்.
இவரது தந்தை என்.கே.மொய்து கேரளாவில் உள்ள
தலச்சேரியை சேர்ந்தவர். இஸ்லாமிய மதத்தை கடைபிடிப்பவர். இவரது தாயார் லலிதா கேரளாவில்
உள்ள திருவல்லாவை சேர்ந்தவர். இந்து மதத்தை கடைப்பிடிப்பவர். பெற்றோர் கேரளாவை
பூர்வீகமாக கொண்டிருந்தாலும், அவர்களின் வாழ்க்கை மும்பையில்
அமைந்தது. அங்குதான், 1966 ஆண்டு அக்டோபர் மாதம் இருபத்தி நான்காம் தேதி பிறந்தார்,
நதியா. அவருக்கு பெற்றோர் வைத்த பெயர், ஜரினா.
மும்பையில் உள்ள பெண்களுக்கான ஜே.பி.வச்சா
உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த நதியா, கல்லூரி படிப்பை, சர் ஜாம்செட்ஜி ஜீஜ்பாய் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டில் தொடங்கினார்.
ஆனால், பட்டப்படிப்பை அவரால் நிறைவு செய்ய முடியவில்லை. அதற்கு காரணம், மலையாளத்தில் ‘நோக்கேத்த தூரத்து கண்ணும் நட்டு”
என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்ததால்...
பல வெற்றிப் படங்களை இயக்கிய பாசில்.... மோகன்லால், பத்மினி முக்கிய வேடத்தில் நடிக்கும்
படத்தில் கதாநாயகியாக... ஒரு புதுமுகத்தை நடிக்க வைக்க வேண்டும் என்று, முடிவு
செய்தார். அப்போது பலரை அழைத்து பரிசீலித்துக் கொண்டிருந்தவர், நதியாவின் ஞாபகம்
வர அவரை அறிமுகப்படுத்துவது என்று முடிவு செய்திருக்கிறார்.
இயக்குனர் பாசிலின் சகோதரரும், நடிகை நதியாவின் தந்தையும் நெருங்கிய நண்பர்கள். அதனால்,
நதியைவைப் பற்றி தெரிந்தவர், இயக்குனர் பாசிலின் சகோதரர் மூலமாக தனது படத்தில்
நடிக்க நதியாவுக்கு அழைப்பு விடுத்தார்.
நடிகை நதியா, பார்ப்பதற்கு, மிகவும் அழகாக இருந்ததால், மாடலிங் துறையிலிருந்து
ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஆனால் படித்துக் கொண்டிருந்ததால், அந்த வாய்ப்புகளை எல்லாம் மறுத்துவிட்டார். இப்போது தங்களுக்கு பிடித்த
இயக்குநர் பாசில் அழைப்பதால், அவரது வார்த்தைய மறுக்க முடியவில்லை. மேலும்
படிப்புக்கு இடையூறு இல்லாமல் விடுமுறை நாட்களில் மட்டும் நடித்துக் கொடுப்பதாக
ஒப்புக் கொண்டு திரையுலகிற்கு வந்தார், நதியா.
ஜரினா என்கிற பெயரை சினிமாவுக்காக நதியா என்று
மாற்றி ‘நோக்கேத்த தூரத்து கண்ணும் நட்டு’ படத்தில் பதினெட்டு வயதில் அவரை
அறிமுகப்படுத்தினார், பாசில். நதி போல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக நதியா
என்கிற பெயரை தேர்ந்தெடுத்தாராம், பாசில்.
அவர் எதிர்ப்பார்த்தது போல நதியா நடித்த ‘நோக்கேத்த
தூரத்து கண்ணும் நட்டு’ படம் 1984–ம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகி நல்ல
வரவேற்பை பெற்றது. நடிகை பத்மினியும் நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்து நடித்தப் படம்
என்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது. படம் இருநூறு நாட்களுக்கு மேல் ஒடி
வசூலில் சாதனைப் படைத்தது. கேரளா அரசும் சிறந்த படத்திற்கான விருது வழங்கி
கௌரவித்தது.
அதன் பிறகு படிக்க நேரமில்லாத அளவுக்கு பட
வாய்ப்புகள் குவிந்தன. மறுபடியும் மோகன்லாலுடன் கூடும் தேடி, கந்து கண்டரிஞ்சு,
மம்மூட்டியுடன் ஒன்னிங்கு வண்ணெங்கில், வான்னு கண்டு கீழடக்கி ஆகிய படங்களில் நடித்தவரை தமிழுக்கு
பூவே பூச்சுடவா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார், பாசில்.
மலையாளத்தில் எந்தப் படத்தில் கதாநாயகியாக
அறிமுகப்படுத்தினாரோ, அதே கதையை தமிழுக்கு கொண்டு வந்து நதியாவையும், அந்தப்
படத்தையும் கொடுத்தார். இசைஞானியின் இளையராஜாவின் இசையில் பாடல்கள் அத்தனையும்
மிகப்பெரிய வெற்றிப் பாடல்களாக அமைந்து படத்தையும் வெறிப் பெற வைத்தது.
இந்தப் படம் வெளியாகும் முன்பே வேந்தம்பட்டி வி அழகப்பன்
இயக்கத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் பூக்களை பறிக்காதீர்கள் படத்தில் கதாநாயகியாக
ஒப்பந்தமானார், நதியா. அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க கால தாமதம் ஆனது.
படப்பிடிப்புக்கு செல்லும் முன்பு கதாநாயகியை
மாற்றிவிடலாம் என்று தயாரிப்பாளர் முடிவு செய்து, டி.ராஜேந்தர் இயக்கும் படத்தில்
அமலா என்கிற புதுமுகம் நடித்து வருகிறார். அவரை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம்
என்று முடிவு செய்து, டி.ராஜேந்தரிடம் பேசுவதற்கு சென்றனர்.
நேரடியாக உங்கள் பட நாயகியை எங்கள் படத்திற்கு
கதாநாயகியாக நடிக்க சிபாரிசு செய்ய முடியுமா என்று கேட்க கூடாது என்றும், நாங்கள்
புதுமுகங்கள் நடிப்பில் ஒரு படம் தயாரிக்கிறோம். அதற்கு நீங்கள் இசை அமைக்க
வேண்டும் என்றும் கேட்போம். அவர் வெளிப்படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என்று
பதில் சொல்வார். அதன் பிறகு அமலா குறித்து அவரிடம் கேட்கலாம் என்று முடிவு செய்து
சென்றார்கள்.
ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக இசையமைத்து தர
சம்மதம் தெரிவித்தார், டி.ராஜேந்தர், கதாநாயகி விஷயத்தில் அமலா புதுமுகம் நிறைய
டேக் வாங்குகிறார் என்று கூறி இருக்கிறார்.
கதை நன்றாக இருக்கிறது. யார் நடித்தாலும்
புதுமுகம் படம்தான். டி.ராஜேந்தர் முதல் முறையாக வெளிப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இசையால் இந்தப் படம் பேசப்படும் என்று டி.ராஜேந்தரை இசைக்கு முடிவு செய்து
திரும்பினார்கள்.
வெளியூருக்கு சென்று முதல் கட்ட படப்பிடிப்பு
முடிக்க கையில் போதிய பணம் இல்லாமல் படப்பிடிப்பு குழு திரும்ப முடிவு செய்த போது,
சேலத்தை சேர்ந்த செட்டியார் ஒருவர், படக்குழுவை தேடி படப்பிடிப்பு நடந்த
இடத்துக்கே சென்றிருக்கிறார்.
இப்போது நாங்கள் வெளியிட்ட பூவே பூச்சூடவ படம்
நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ள நதியா வேறு
எந்த தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் என்று விசாரித்தேன். உங்கள் படத்தில்
நடிக்கிறார் என்பதை அறிந்தேன். அதனால், உங்களை தேடி வந்தேன் என்று கூறிய
செட்டியார், சேலம் ஏரியாவிற்கு பூக்களை பறிக்காதீர்கள் படத்திகு முன்பணம் கொடுத்து
ஒப்பந்தம் செய்துள்ளார்.
பூக்களை பறிக்காதீர்கள் படம் வளர வளர சேலத்தை
சேர்ந்த அந்த செட்டியாரே முழு படத்திற்கும் பைனான்ஸ் செய்து படத்தை முடிக்க உதவி
இருக்கிறார். தரங்கை சண்முகம், மோகன் நடஜன் தயாரிப்பில் அழகப்பன் இயக்கத்தில்
டி.ராஜேந்தர் இசையில் வெளியான பூக்களை பறிக்காதீர்கள் படம் பெரும் வெற்றிப் படமாக
அமைந்து அந்த நிறுவனம் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க காரணமாக
அமைந்தது. அந்தப் படத்தின் நாயகியாக இருந்து அந்தப் படத்தின் வளர்ச்சிக்கும்
முன்னேற்றத்திகும் காரணமாக இருந்திருக்கிறார், நதியா.
மணிரத்னம் இயக்கிய மௌன ராகம் படத்தில் ரேவதி
நடித்த பாத்திரத்திலும் இவரைத்தான் நடிக்க கேட்டார்கள். கால்ஷீட் பிரச்சினையால்
அவரால் மௌனராகம் படத்தை ஒப்புக் கொள்ள முடியவில்லை.
அதன் பிறகு கே.ரங்கராஜ் இயக்கத்தில் மோகனுடன்
உயிரே உனக்காக, சுரேஷுடன் உனக்காகவே வாழ்கிறேன்,
ரகுமானுடன் நிலவே மலரே, விஜயகாந்துடன் பூமழை பொழியுது, பிரபுவுடன்
சின்னத்தம்பி பெரிய தம்பி, ராஜகுமாரன், ரஜினியுடன் ராஜாதிராஜா, மங்கை ஒரு கங்கை, அன்புள்ள அப்பா என பல வெற்றி படங்களில் நடித்தார், நதியா.
அன்றைய முன்னணி நடிகர்களுக்கு, எத்தனை ரசிகர் மன்றங்கள் இருந்ததோ, அதே
அளவுக்கு, நதியாவுக்கும், ரசிகர்
மன்றங்கள் உருவாகின.
அன்றைய காலகட்டத்தில் இவரது நடிப்பினை பார்த்து
பெண்களுக்கு ரொம்பவும் பிடித்து போனது. இவரது பெயரிலே நதியா வலையல், நதியா சேலை,
நதியா பொட்டு என்று பல பொருட்கள் விற்கப்பட்டன. சில பெற்றோர் தங்களது
குழந்தைகளுக்கு, நதியா என பெயர் சூட்டியும், மகிழ்ந்தனர்.
மும்பையில் தனது வீட்டிற்கு பக்கத்து தெருவில்
வசித்து வந்த சிரீஸ் கோட்பால் என்பவருக்கும், நதியாவுக்கும் படிக்கும் போதே பழக்கம்
ஏற்பட்டு, அது காதலாக மாறியது.
ஒரு நாள் தன் தோழியை பார்க்க செல்வதாக தனது
வீட்டில் பொய் சொல்லி விட்டு தன் காதலனை பார்க்க சென்ற விஷயம், இவரது தந்தைக்கு தெரிந்து, முதலில்
ஆத்திரம் அடைந்திருக்கிறார். காரணம், சிரீஸ் மராட்டிய பிராமணர் வகுப்பை
சேர்ந்தவர். பிறகு சிரீஸ் வெளிநாட்டிற்கு சென்று, நன்றாக
சம்பாதித்த பிறகு, திருமணம் செய்து கொள்ளலாம் என, முடிவெடுத்தனர். சிரீஸ் வெளிநாட்டு சென்றார். அதன் பிறகு நதியாவுக்கு
சினிமா வாய்ப்பு சென்றது.
நதியா சினிமாவுக்கு வந்த நான்கு ஆண்டுகளில், இருபத்தி ஏழு படங்களில் நடித்து, புகழின்
உச்சியில் இருந்த போதே, ராஜாதி ராஜா பட படப்பிடிப்பு முடிந்த
ஒரே வாரத்தில், தனது காதலரான சிரீசை, திருமணம்
செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு, தனது கணவருடன், அமெரிக்காவிற்கு சென்ற நதியா,
அங்குள்ள கல்லூரி ஒன்றில், communication arts என்கிற associate degree ஒன்றில் தேர்ச்சி பெற்றோர்.
சிரீஸ் – நதியா தம்பதிகளுக்கு, சனம், ஜனா என்கிற இரண்டு மகள்கள்
உள்ளனர். இருவருமே அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர்கள்.
அமெரிக்காவை தொடர்ந்து லண்டனிலும் ஏழு ஆண்டுகள்
வாழ்ந்த நதியா, ஒரு முறை மும்பை வந்த போது இயக்குநர் ஜெயம்ராஜா, நதியாவை அணுகி
‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தில் நடிக்குமாறு கதையை சொல்லி கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து 2004–ம் ஆண்டு ‘எம்.குமரன் சன்
ஆப் மகாலட்சுமி’ படத்தில் மறுஅறிமுகம் ஆனார், நதியா. அந்தப் படத்தில் ஜெயம்
ரவிக்கு அம்மாவாக நடித்தார். அந்தப் படத்தை தொடர்ந்து விஷால் நடித்த தாமிரபரணி,
சுந்தர்.சி. நடித்த சண்டை போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தவர், மலையாளம் மற்றும்
தெலுங்கு மொழி படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.
தெலுங்கு மொழியில் இவர் நடித்த ‘அத்தரிந்திகி
தரேடி’ படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்ததுடன், அந்தப் படத்திற்காக ஆந்திர அரசின்
நந்தி விருதை சிறந்த துணை நடிகைக்காக பெற்று தந்தது. மேலும் பிலிம் பேர் விருது
உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரரான நதியா, சின்னத்திரையிலும் தனது திறமையை
வெளிப்படுத்தி இருக்கிறார்.
அன்று போல இன்று வரை ரசிகர்களின் என்றும் பசுமை
மாறாத நடிகையாக நதியா இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக