சனி, 31 ஜூலை, 2021

ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களை சம்பாத்தித நாகேஷ்.

எத்தனை நூற்றாண்டானாலும் நாகேஷையும், நகைச்சுவையையும் மறக்க முடியாது. நாகேஷ்.... ஒரு நகைச்சுவை மேதை. நாகேஷ் என்றால் நகைச்சுவை, நாகேஷ் என்றால் அவர் நடித்த கதாபாத்திரம், நாகேஷ் என்றால் அவர் நடித்த நடனம் நம் ஞாபகத்திற்கு வரும். அவர் நடிக்காத வேடங்கள் இல்லை. ஆடாத ஆட்டம் இல்லை. 

அந்த மகா கலைஞன் நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். தாராபுரத்தில் படித்து வளர்ந்தவர். எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் வரை வசீகரமான முகமும் துடிப்பான இளைஞராக இருந்தவர், அம்மை நோய் மூன்று முறை தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் மிகவும் பாதிப்புக்கு ஆளாகி மூன்று மாதங்கள் படுக்கையில் விழுந்தார். அதனால், அவரால் செலக்ஷன் பரிசையும், அதைத் தொடர்ந்து பைனல் பரிச்சையும் எழுத முடியவில்லையாம்.

அதன் பிறகு படிக்கவில்லை. வேலைக்கு போகவில்லை என்றால் வீட்டில் எப்படி மதிப்பு இருக்கும். கண்டிப்பான அப்பாவுடன் கஷ்டமான வாழ்க்கயை அவரால் நடத்த முடியவில்லை. வீட்டை விட்டு வெளியேறினார். தாலுக்கா ஆபிசில் மனு எழுதி கொடுக்கும் வேலை கொஞ்ச நாள் பார்த்திருக்கிறார். அதன் பிறகு ஐதராப்பாத் சென்று வேலை பார்த்த போது விபத்து அறுவை சிகிச்சை என்று நிறைய செலவுகள். அவரால் சமாளிக்க முடியவில்லை.

ரயில்வே சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதிருந்ததால் சில வாரங்களில் வேலை கிடைத்தது. சென்னைக்கு ஒடி வந்தார். ரயில்வேயின் கமர்சியல் ஆபிசில் சரக்கு போக்குவரத்து பிரிவில் வேலை. தி. நகரில் தீனதயாளு தெருவில் தங்கிக் கொண்டு வேலைக்கு சென்றவர், பாட்டு, நாடகம் என்று ரயில்வேயில் கலாச்சார பிரிவு இருக்கிறதா என்று விசாரித்திருக்கிறார். இரண்டிலும் அவருக்குள்ள ஆர்வம்தான் அவரை விசாரிக்க வைத்தது.

அங்குள்ளவர்கள் மா.ரா. என்பவரை அடையாளம் காட்ட, அவரை அணுகி உங்கள் நாடகத்தில் நான் நடிக்கணும் என்று கேட்டிருக்கிறார். ஒல்லியான அவரது உடம்பையும், அம்மை தழும்புள்ள அவரது முகத்தையும் பார்த்த அவர், இந்த உடம்பை வச்சிக்கிட்டு நடிக்க வந்துட்டியா? இந்த காலத்துல யார் யாருக்கு நடிக்க ஆசை வரணும்னு விவஸ்தையே இல்லாமல் போச்சு என்று பதில் சொல்லி இருக்கிறார்.  

அந்த வார்த்தையை கேட்டு கவலைப்படாத நாகேஷ், எனக்கு நடிக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கு சார்.... ஒரு சின்ன ரோல் குடுத்தீங்கன்னா நான் சந்தோஷமா ஏத்துக்குவேன் சார் என்று கெஞ்சி இருக்கிறார்.  

நடிச்ச அனுபவம் இருக்கா என்கிற கேள்விக்கு, இல்ல சார். நடிப்புன்னா என்னான்னு தெரியாது சார். எப்படின்னு சொல்லிக் கொடுத்தீங்கன்னா... அதுல என் திறமையை காட்டுவேன் சார்... எனக்கு நம்பிக்கை இருக்கு சார்.. என்று சொன்னதும், உனக்கு உம மேல நம்பிக்கை இருக்கலாம். எனக்கு உம மேல நம்பிக்கை இல்லையே... என்று சொன்னவரர் சில மணி நேரங்களுக்கு பிறகு ஒரு சின்ன ரோல் இருக்கு. நீ சின்சியரா நடிக்கணும். நாளையிலிருந்து தினமும் கரைக்டா ரிகர்சலுக்கு வந்துடனும் என்று சொல்லிவிட்டு எழுந்து போனார்.

தினமும் ஒத்திகைக்கு போனார் நாகேஷ். ஒரு மாதம் நடந்தது. ஆனால், அவருக்கான ரோல் பற்றி சொல்லவே இல்லை. கடைசி நாள் ஒத்திகையின் போது, முக்கியமான நடிகர் நடிப்பதற்கு முன்பு டாக்டரை பார்க்க வரும் வயிற்றுவலி நோயாளியாக வரவேண்டும். உன்னைப் பார்த்த பிறகுதான் மெயின் கேரக்டரை நெக்ஸ்ட் பேசன்ட் என்று கூப்பிடுவார்கள் என்று கூறி இருக்கிறார்கள்.

அது ஒரு சின்ன ரோல்தான். அதை சொல்லிக் கொடுத்தார் போல செய்ய வேண்டும். சொதப்பி விடாதே என்று சொல்லி அனுப்பினார்கள்.  மறுநாள் கோகலே ஹாலில் நாடகம் நடந்தது. அடுத்த பேசன்ட் என்று என்று டாக்டர் அழைத்தும், நாகேஷ் வயிற்று வலியால் துடிப்பது போன்ற காட்சியில் நடித்தார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் கை தட்டி சிரித்தார்கள். அரங்கம் அதிர்ந்தது. சொல்லிக் கொடுக்காததையும் சேர்த்து நடித்து அப்ளாஸ் வாங்குறானே என்று நாகேஷின் திறமையை கண்டு வியந்தார், மா.ரா.

விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நாடகத்தில் சிறப்பாக நடித்த யாருக்கு வேண்டுமானாலும் பரிசு கோப்பையை கொடுக்கலாமா என்றவர், எனக்கு ஒல்லியா வயித்துவளிக்காரர் வந்தாரே அவருக்கு கொடுக்க ஆசையாக இருக்கிறது என்று கூறி மீண்டும் கை தட்டலை வாங்கிக் கொடுத்து நாகேஷுக்கு பரிசு கோப்பையை வழங்கி இருக்கிறார்.

பக்கம் பக்கமாக வசனத்தை மனப்பாடம் செய்து ஒருமாதமாக நடித்து பயிற்சி எடுத்த எங்களுக்கு பரிசு கிடைக்கவில்லை. ஒத்திகையை வேடிக்கைப் பார்த்தவன் பரிசு கோப்பையை வாங்கிகிட்டு போய்விட்டானே என்று சக நடிகர்கள் நாகேஷை விமர்சனம் செய்தனர்.

அதன் பிறகு சில நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த நாகேஷ், தீனதயாளு தெருவில் இருந்த அறையை காளி செய்ய வேண்டிய நிலை வந்த போது சிவா விஷ்ணு கோவில் எதிரே இருந்த கிளப் ஹவுஸ்க்கு இடம் பெயர்ந்தார். அங்கு தங்கிக் கொண்டு வேலைக்கு செல்வதும் நாடகங்களில் நடிப்பதும், மற்ற நாடக கம்பெனிகளுக்கு சென்று வாய்ப்பு கேட்பதுமாக இருந்தவர், ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடக குழுவிலும் நடித்து வந்தார்.

அவரது அறையில் அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஸ்ரீகாந்த், சினிமாவுக்கு பாடல் எழுத முயற்சி செய்து கொண்டிருந்த கவிஞர் வாலி என பலர் அவருக்கு நண்பர்களாக கிடைத்தனர்.

காங்கிரஸ் மைதானத்தில் பொருட்காட்சி நடந்த போது நல்ல நாடகங்கள் நடத்த வாய்ப்பு கிடைத்தது. இதனால் கட் அன்ட் கேஸ், கைராசி என இரண்டு நாடகங்களை நடத்த முடிவு செய்து ஸ்ரீகாந்தை நாயகனாக்கினார். கூடவே டைப்பிஸ்ட் கோபு போன்ற நண்பர்களை சேர்த்துக் கொண்டு நாடகம் போட்டார். அந்த நாடகங்களுக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்து. 

ஒல்லியான இந்த மனிதருக்குள் இத்தனை திறமையா என்று பிரமித்துப் போன நடிகர் பாலாஜி, நீ ஏன் இங்கு தங்கி கஷ்டப்படுறே. நீ என்கூட வந்து என்னுடன் தங்கிக் கொள் என்று தனது இடத்திற்கு நாகேஷை அழைத்து சென்றார், பாலாஜி.

ஒரு நாடகத்தில் நாகேஷின் நடிப்பை பார்த்துவிட்டு நேரில் வந்து பாராட்டிய பஞ்சு என்பவர், முக்தா சீனிவாசன் இயக்கும் தாமரைக்குளம் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்தப் படத்திற்கு ஐநூறு ரூபாய் சம்பளம் பேசப்பட்டு ஐம்பது ரூபாய் முன் பணம் தரப்பட்டது. கோல்டன் ஸ்டுடியோவில் முதல் நாள் நடந்த படப்பிடிப்பில் எம்.ஆர்.ராதாவுடன் நடிக்கும் போது பயந்தார். எம்.ஆர்.ராதா, அவரது பயத்தை  போக்கி, ஆலோசனைகள் கூறி தன்னுடன் நடிக்க வைத்தார்.

அதன் பிறகு நாகேஷின் நாடகங்களைப் பார்த்துவிட்டு பல கம்பெனிகளில் இருந்து அவருக்கு அழைப்புகள் வந்தன. எல்லாம் சின்ன சின்ன வேடங்கள். கே.பாலாஜி கதாநாயகனாக நடித்த உத்தமி பெற்ற பிள்ளை படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்த நாகேஷ், பி.ஆர்.பந்துலு இயக்கிய குழந்தைகள் கண்ட குடியரசு படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

எல்.வி.பிரசாத்தின் தாயில்லா பிள்ளை படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது பாலாஜி, இயக்குநர் ஸ்ரீதரிடம் அழைத்து சென்று இவன் என் நண்பன் நல்லா நடிப்பான். இவனுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க என்று கூறி இருக்கிறார்.

இப்போது தேன் நிலவு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அடுத்தது நெஞ்சில் ஒரு ஆலயம் படம் இயக்குவேன். அதில் நடிக்க வாய்ப்பு தருகிறேன். மத்ததை கோபுவிடம் பேசிக்குங்க என்று கோபுவை காட்டி இருக்கிறார், ஸ்ரீதர்.  

நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் கிராமத்து வேடம் ஒன்று என்று கூறிய கோபு, படப்பிடிப்புக்கான நாளையும் கூறினார். கல்யாண்குமார், முத்துராமன், தேவிகா நடித்த அந்தப் படத்தில் கம்பவுண்டராக நடிக்க வேண்டிய ராமாராவ் என்பவர் வரவில்லை. அவர் வேறு ஏதோ ஒரு படத்தில் மாட்டிக் கொண்டிருந்ததால், அவர் வர நேரம் ஆகும் என்பதை அறிந்தவர்கள். பிறகு நாகேஷை அழைத்து தலையானை தூக்கி மேலே போடு. கட்டிலுக்கு கீழே குனிந்து பாரு என்று ஒத்திகைப் பார்த்தார்கள்.

நாகேஷின் நடிப்பும் ரியாக்ஷனும் திருப்தி என்பதை உணர்ந்த இயக்குநர் ஸ்ரீதரும், ஒளிப்பதிவாளர் வின்சென்டும், உதவி இயக்குனராக இருந்த பி.மாதவனை அழைத்து, இந்த புது பையனுக்கு கம்ன்பவுண்டர் டிரஸ் போட்டு அழைச்சிட்டு வா என்று கூறி இருக்கிறார்கள்.

கிராமத்துகாரன். வேஷ்டி போதும் என்று சொன்ன உதவி இயக்குநர் மாதவன், இப்போது கம்பவுண்டர் உடை கொடுகிறாரே? என்று அதை வாங்கி உள்ளுக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியை அடக்கிக் கொண்டு, இங்கே நாம் பாஸ் ஆகிவிட்டோம் என்று ஒரு குதி... குதித்திருக்கிறார், நாகேஷ்.

நெஞ்சில் ஓர் ஆலயம் படம் வெளியாகி பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. விமர்சனங்களில் நாகேஷின் பெயரையும் குறிப்பிட்டு பாராட்டி எழுதி இருந்தார்கள்.

அதன் பிறகு சம்பளம் பெரிதாக இருக்கிறதோ இல்லையோ, சின்ன வேடம் பெரிய வேடம், நாடகம், சினிமா, வானொலி நாடகம் எதுவாக இருந்தாலும் நடித்துக் கொண்டிருந்தார் நாகேஷ்.

பாலசந்தரின் சர்வர் சுந்தரம் நாடகத்தைப் பார்த்த ஏவி.மெய்யப்ப செட்டியார், அந்தக் கதையை வாங்கி கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் அதே சர்வர் சுந்தரம் பெயரில் படமாக தயாரித்தார். அந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நாகேஷ், நடித்தார். அந்தப் படமும் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது.

எம்ஜிஆருக்கு நண்பன், சிவாஜிக்கு நண்பன், ஜெமினிக்கு நண்பன், முத்துராமனுக்கு நண்பன் என்று தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்து நீர்க்குமிழி’ படத்தில் இயக்குனராக அறிமுகமானார், கே.பாலசந்தர். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் இயக்கும் படங்களில் சின்ன வேடமோ, பெரிய வேடமோ நாகேஷை பயன்படுத்தினார் கே.பாலசந்தர். அதிலும் மாடிப்படி மாதுவாக எதிர் நீச்சல் படத்தில் நடிக்க வைத்து அவரது நடிப்புக்கு பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

‘தில்லானா மோகனாம்பாள்’ வைத்தி, ‘திருவிளையாடல்’ தருமி ‘காதலிக்க நேரமில்லை’ செல்லப்பா என்று பல படங்களில் நாகேஷின் நடிப்புக்கும் உடல்மொழிக்கும் பெரும்பங்கு இருக்கிறது. 'பாமா விஜயம்’ ‘அனுபவி ராஜா அனுபவி’ என நாகேஷ் முத்திரை பதிக்காத படங்களே இல்லை. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வில்லனாக நடித்தார். மகளிர் மட்டும் படத்தில் பிணமாக நடித்தார்.

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன் தனி முத்திரை பதித்துவிடுகிற மகா கலைஞன், நகைச்சுவை நாயகன் நாகேஷ்.

கர்நாடக மாநிலம் அரிசிக்கரே என்ற ஊரில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியில் இருந்த கிருஷ்ணராவ் -ருக்மணி அம்மாளுக்கு மகனாக பிறந்த நாகேஷ், தமிழ்நாட்டில் தாராபுரத்தில் படித்து வளர்ந்தார்.

ரெஜினா என்பவரை காதலித்து மணந்த நாகேஷுக்கு ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ்பாபு என மூன்று மகன்கள் உள்ளனர். இதில் ஆனந்த் பாபு லயோலா கல்லூரியில் படித்த போது கல்லூரிகளுக்கு இடையே நடந்த போட்டியில் நடனம் ஆடுவதில் சிறந்த ஆட்டக்காரர் என்று பெயர் வாங்கி பரிசு பெற்றிருக்கிறார்.

அந்த செய்தியை அறிந்த டி.ராஜேந்தர், நடிகர் நாகேஷை தொடர்பு கொண்டு உங்கள் மகனை எனது படத்தில் அறிமுகப்படுத்தலாமா என்று கேட்டி இருக்கிறார்.

பிள்ளைகளின் விருப்பப்படி அவர்களை படிக்க வைத்த நாகேஷ், அவர்கள் மீது தனது எண்ணங்களை திணித்ததில்லை. மகன் ஆனந்த்பாபுவை அழைத்த நாகேஷ், டி.ராஜேந்தரின் அழைப்பை அவரிடம் தெரிவித்து விருப்பம் இருந்தால் நடி.. இல்லை என்றால் பதில் சொல்லிவிடலாம் என்று கூறி இருக்கிறார்.

லயோலா கல்லூரிக்கு சென்ற பிறகு நண்பர்கள் கல்லூரிகளுக்கு இடையான போட்டியில் பங்குபெற வேண்டும் என்று கூறிய போது தனக்கு எதிலும் ஆர்வம் இல்லை. பயிற்சி இல்லை என்று கூறியதும்,  நாகேஷ் மகனாக இருந்து கொண்டு இப்படி சொல்லலாமா என்று ஆனந்த் பாபுவை உசுப்பேற்றி, அன்றே தியேட்டருக்கு அழைத்து சென்று நாகேஷ் நடித்த நீர்குமிழி படத்தை இருமுறை பார்க்க வைத்து, அதில் நாகேஷ் ஆடியது போல ஆட வேண்டும் என்று அவருக்கு சவால் வைத்துள்ளனர்.

அதனால், மூன்று நாட்கள் வீட்டில் தனது அறைக் கதவை சாத்திக் கொண்டு நடனம் ஆட பயிற்சி எடுத்துக் கொண்டார், ஆனந்த்பாபு. அப்படி சொந்த முயற்சியில் ஆடி மேடையில் பரிசு வாங்கும் அளவிற்கு உயர்ந்த தன்னால் நடிக்க முடியாதா என்பதையும் சவாலாக எடுத்துக் கொண்டார்.

லயோலா கல்லூரி படிப்பு முடிந்து பெங்களூர் செயின் ஜோன்ஸ் மருத்துவக் கல்லூரியில் படிக்க பணம் கட்டி முடித்தாவிட்டது. படிப்பு நடிப்பு என்பதில்  கல்லூரிக்கு செல்ல இன்னும் நாட்கள் இருக்கிறது. அதற்குள் நடித்து விட்டு செல்கிறேன் என்று பதில் கொடுத்தார், ஆனந்த் பாபு.

டி.ராஜேந்தர் இயக்கிய தங்கைகோர் கீதம் படத்தில் பாபுவாக அறிமுகமான ஆனந்த் பாபு, நடிப்போடு, தனது டிஸ்கோ நடனத்தாலும் பெரிதும் பேசப்பட்டார். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடமை, புயல் கடந்த பூமி, நியாயம் கேட்கிறேன், பந்தம் ஆகிய படங்களில் நடித்து வந்தவரை இந்தியில் மிதுன் நடித்த டிஸ்கோ டான்சர் படத்தின் தமிழ்ப் பதிப்பான பாடும் வானம்பாடி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தின் பாடல்களும் ஆனந்த்பாபுவின் நடனமும் பெரும் புகழ் பெற்றன. இந்தியில் நூறு நாட்கள் ஓடிய அந்தப் படம் தமிழில் சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. இந்த தகவலை அறிந்த இந்தி நடிகர் மிதுன், நேரில் வந்து ஆனந்த் பாபுவை வாழ்த்தி இருக்கிறார்.

அதன் பிறகு உதயகீதம் உட்பட பல படங்களில் நடித்து வந்தவருக்கு விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் படம் மீண்டும் கவனிக்கும் அடுத்த பயணத்தை தொடங்க வாய்ப்பாக அமைந்தது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் புரியாத புதிர், சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம், சூரியன் சந்திரன், கொண்டாட்டம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். கவிதாலயா தயாரிப்பில் அனந்து இயக்கிய சிகரம் படத்தில் நடிக்க சென்றவர், அங்கு கே.பாலசந்தர் இயக்கத்தில் வானமே எல்லை படத்திலும் நடித்திருக்கிறார்.

நடிகர் மோகன் இயக்கிய அன்புள்ள காதலுக்கு பிறகு பத்து ஆண்டுகள் நடிக்கமால் இருந்தவர் மீண்டும் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ஆதவன் படத்தின் மூலம் மீண்டும் நடிப்பை தொடங்கி மதுரை சம்பவம், ஏதோ செய்தாய் என்னை, பியார் பிரேமா காதல் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி ஏழு தொடர்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு மொழில் ஐந்து படங்களிலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் என எழுபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ஆனந்த் பாபு, சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு பிஜேஷ், கஜேஷ், யோகேஸ் என மூன்று மகன்களும் சுப்ரீனா என ஒரு மகளும் உள்ளனர். இதில் முதலில் கஜேஷ் மூன்றாவது தலைமுறையாக நாகேஷின் குடும்பத்தி இருந்து நடிகரானார். நந்தகுமார் இயக்கத்தில் கல்கண்டு படம் மூலம் நாயகனாக அறிமுகமான கஜேஸ், டாக்டர் ஆர்.ஜே.ராம்நாராயணா இயக்கிய ஸ்கூல் கேம்பஸ் படத்திலும் நடித்தார்.

அவரைத் தொடர்ந்து ஆனந்த் பாபுவின் மூத்த மகனான பிஜேஷ் சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தொடர்ந்து ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ என்ற படத்தில் விஞ்ஞானியாகவும், ‘பொன் மாணிக்கவேல்’ படத்தில் போலீஸாகவும் நடித்திருக்கிறார்.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக