செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு

“என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அதற்கு முழு முதற் காரணமானவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான்!” என எம்.ஜி.ஆரால் புகழப்பட்டவர் நகைச்சுவை மேதை, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.  திரையுலகில் வள்ளல் தன்மையுடன் திகழ்ந்த அந்த மகா கலைமேதையை தான் இன்றைய 24 பிரேம் நிகழ்ச்சியில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.... வாங்க நிகழ்ச்சிக்குப் போவோம்...

நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி சுடலைமுத்துப்பிள்ளை, இசக்கிஅம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர், என்.எஸ்.கிருஷ்ணன். வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் பள்ளிக்கூடப் படிப்பை நிறுத்தினார். பிறகு, நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் ஆரம்பம். சிறுவயதிலேயே தான் பார்த்த நாடக பாதிப்பில் சிறுவர்களை சேர்த்துக் கொண்டு வீட்டு திண்ணையில் அம்மா சீலையை கட்டி நாடகம் போட்டார்.

பிறகு பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார். டி.கே.எஸ்.சகோதரர்கள் நடத்திய கோவலன் நாடகத்தில் பாண்டியனாக நடித்து பாராட்டுக்களை குவித்தார். அவரது நடிப்பு திறமையைப் பார்த்து வியந்தவர்கள் பிற்கலாத்தில் இவன் கலைவாணன் ஆவான் என்று வாழ்த்தினார்கள்.

பிறகு வில்லுப்பாட்டு மீது இருந்த ஆர்வம் காரணமாக அந்த கலையை கற்றுக் கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன், நாளடைவில் சொந்தமாக நாடகக் கம்பெனியையும் நடத்தினார்.

தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்த போது என்.எஸ்.கிருஷ்ணனும் திரைப்படத் துறைக்குள் நுழைந்தார். அவர் முதலில் நடித்த படம் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் உருவான சதிலீலாவதி. சதிலீலாவதியில் அறிமுகமானாலும் முதற்படத்தை முந்திக்கொண்டு அவரது இரண்டாவது படமான மேனகா வெளிவந்தது. மேனகாவின் வெற்றி, பட்டிதொட்டி எங்கும் என்.எஸ்.கிருஷ்ணனின் நகைச்சுவையைக் கொண்டு சேர்த்தது.

பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார், என்.எஸ்.கிருஷ்ணன்.

முகத்தை அஷ்ட கோணலாக்கி அங்குமிங்கும் ஓடி, அடிபட்டு, உதைபட்டு, கேனைத்தனமாகச் சிரித்து, மக்களைச் சிரிக்கவைப்பதுதான் அதுவரை தமிழ்சினிமாவில் நகைச்சுவைக் காட்சி என்பதன் வரையறையாக இருந்து வந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் வருகைக்குப்பின் நகைச்சுவையின் தரம் உயர்ந்தது.

நகைச்சுவை என்பது வெறுமனே உடல் மொழி மட்டுமல்ல; உடல் மொழி, வார்த்தை ஜாலங்கள் இவைகளைத் தாண்டி மக்களைச் சிந்திக்கவும் வைப்பது என்பதைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆணித்தரமாக முன்வைக்க ஆரம்பித்தார் என்.எஸ்.கிருஷ்ணன். மக்களிடம் அவர் புகழ் கூட ஆரம்பித்தது.

நகைச்சுவை நடிகனாக மட்டுமே அவர் சினிமாவைக் கடந்து சென்றுவிடவில்ல. எந்த விஷயத்திலும் தனக்கென ஒரு பார்வையை அவர் கொண்டிருந்தார். நடிப்பு பாடல் புதிய சிந்தனை பகுத்தறிவு என சினிமாவில் அவர் இயங்கினார். தனிப்பட்ட தன் வாழ்வில் அதிகபட்ச மனிதநேயத்தைப் பின்பற்றினார். திறமைசாலிகளைப் போற்றினார். அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார்.

40 களில் கொடிகட்டிப்பறந்த தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா இவர்களுடன் நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தபோதும் தனக்கென ஒரு நாடகக்குழுவையும் நடத்திவந்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.

நாடக வருமானம் என்பது அவரது சினிமா வருமானத்தில் மிகச் சொற்பமே என்றாலும் தனது நாடகக்குழுவில் உள்ளவர்களின் நலனுக்காக அதைத் தொடர்ந்து நடத்தினார். நட்டத்தில் இயங்கும் நாடகக் குழுக்களைத் தானே ஏற்று நடத்துவது அல்லது அந்தக் குழுவின் நாடகங்களில் நடித்து அதைப் பிரபலப்படுத்துவது எனக் கலைஞர்களுக்காகவும் கலைக்காகவுமே தன் வாழ்வை அர்ப்பணித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.

நடிகர்கள் நிறைவாக வாழ்ந்து கலைக்காகவும் கலைஞர்களுக்காவும் பாடுபடவேண்டும் என்பதை விருப்பமாகக் கொண்டிருந்தவர், தானே அதில் முதல்கலைஞனாகச் செயல்பட்டார்.

ராஜாசாண்டோ இயக்கத்தில் வசந்த சேனா படக்குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறவிடவே, வழிச் செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசியை தீர்த்தார்.

ஸ்ரீரங்கத்தில் சுப்பையா-அங்கமுத்து தம்பதியருக்கு மகளாகப் பிறந்த மதுரம், சிறு வயதிலேயே இனிமையாகப் பாடும் ஆற்றல் கொண்டவர். இதனால் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று அதன் மூலம் ராஜா சாண்டோ இயக்கத்தில் ரத்னவாளி படத்தில் அறிமுகமானார். இரண்டாவது படமாக ராஜா சாண்டோ இயக்கிய  வசந்தசேனா படத்திற்கு பூனா வந்திருந்தார். இங்கு  என்.எஸ்.கிருஷ்ணனுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்ததும், அவருடைய நகைச்சுவையான பேச்சும், மனிதநேயமும் அவரை அதிகம் கவர்ந்தது.

தமிழ்சினிமாவில் முதல் தம்பதிக் கலைஞர்களான என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடி இவர்களுக்குப் புகழைத் தந்தன.

நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி, பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல், அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.

தோல்வியடையும் படங்களைப் போட்டு அதில் கதைக்குத் தக்கபடி தனது நகைச்சுவையை இணைத்து வெளியிடச் செய்வார். படம் பெரும் வெற்றிபெறும். வெறும் நடிகராக மட்டுமன்றி இயக்கம், எடிட்டிங், திரைக்கதை, வசனம், பாடல் எழுதுவது என சினிமாவின் சகல துறையிலும் தேர்ந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன்.

கலை என்பது மக்களை மகிழ்விக்க மட்டுமன்றி மக்களைச் சிந்திக்கவைத்து அதன்மூலம் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதே என்ற கொள்கையுடைய என்.எஸ்.கிருஷ்ணன், தன் படங்களில் சுயமரியாதைக் கருத்துகளையும் பகுத்தறிவுக்கருத்துகளையும் பரப்பினார்.

திரையுலகை உலுக்கிய வழக்குகளில் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலைவழக்கு முக்கியமானது. இந்த வழக்கில் அன்றைய சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதர், பட்சிராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவானது. வழக்கின் ஆரம்பத்திலேயே ஸ்ரீராமுலு நாயுடு விடுவிக்கப்பட்டார். ஆனால், இந்தவழக்கில் தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் இருவரும் கைதாகினர். வழக்கில் சென்னை செசன்ஸ் கோர்ட்டு இருவருக்கும் ஆயுள்தண்டனை வழங்கியது.

லண்டன் பிரிவியு கவுன்சிலில் இந்த வழக்கில் மீண்டும் மேற்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவேண்டுமென பிரிவியு கவுன்சில் உத்தரவிட்டது. வழக்கறிஞர் எத்திராஜ் இவர்களுக்காக வாதாடினார். ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய தீர்ப்பு வெளியானது. 

பாகவதர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் இருவரும் நிரபராதிகள் என சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. 2 வருடங்கள் 2 மாதங்கள 13 நாள்கள் சிறைவாசத்திற்குப்பின் விடுதலையானார்கள்.

இந்த வழக்கிற்காக பலரும் உதவி செய்தனர். இருப்பினும் அன்றைக்கு வழக்குச் செலவு அதிகமாக இருந்தது. பிரச்னைக்கு ஒரே தீர்வாக ஒரு திரைப்படம் தயாரிப்பதென முடிவெடுத்தது என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி 'பைத்தியக்காரன்' என்கிற படத்தை தயாரித்தார். அதில் பலர் ஊதியம் பெறாமல் பங்கெடுத்தனர். இந்தப் படத்தின் தயாரிப்பின் போதே என்.எஸ்.கிருஷ்ணன் விடுவிக்கப்பட்டார்.

இதனால் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த மதுரத்தை இரட்டை வேடமாக்கி இன்னொரு மதுரத்துக்கு ஜோடியாகக் என்.எஸ்.கிருஷ்ணனை நடிக்க வைத்தனர். படம் ம் வெற்றிபெற்றது. படத்தில் தன் சிறை அனுபவங்களை 'ஜெயிலிக்குப் போய் வந்த...' எனப் பாட்டாகப் பாடி மக்களை மீண்டும் மகிழ்விக்கத் தொடங்கினார் என்.எஸ்.கிருஷ்ணன். சிறை மீண்டதற்குப்பின் தனிப்பட்ட வாழ்விலும் திரையுலகிலும் என்.எஸ்.கிருஷ்ணனின் புகழ் இன்னும் பலமடங்கு உயர்ந்தது.

என்.எஸ்.கே-வுக்கு திருவல்லிக்கேணி நடராஜா கல்விக் கழகம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே.சம்பந்தம் முதலியார். 

அறிஞர் அண்ணாதுரையின் கதையில் நல்லதம்பி என்கிற படத்தை தயாரித்து நடித்தவர், கலைஞர் மு.கருணாநிதியின் கதை வசனத்தில் பத்மினியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தி மணமகள் படத்தை இயக்கி தயாரித்தார்.

பராசக்தி படத்தில் சிவாஜியின் நடிப்பை பார்த்து பாராட்டியவர், சிவாஜியின் இரண்டாவது படமாக பணம் படத்தை கலைஞரின் கதை வசனத்தில் இயக்கி, தயாரித்தார். இதில் சிவாஜிக்கு ஜோடியாக பத்மினியை நடிக்க வைத்தார். 

125 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கே.ஆர்.ராமசாமி, கே.ஏ.தங்கவேலு, எஸ்.வி.சஹஸ்ரநாமம், பாண்டியன், டி.கே.ராமச்சந்திரன், காகா ராதாகிருஷ்ணன், டி.எஸ்.துரைராஜ், டி.எஸ்.பாலையா, வி.கே.ராமசாமி, குலதெய்வம் ராஜகோபால், பத்மினி, எம்.என்.ராஜம், இயக்குநர்கள் ஏ.பீம்சிங், கிருஷ்ணன்- பஞ்சு, பாடலாசிரியர்கள் உடுமலை நாராயணகவி, சுப்பு ஆறுமுகம் என எண்ணற்ற கலைஞர்கள் முன்னுக்கு வர காரணமாக இருந்தவர், 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி தனது 49-வது வயதில் தீராத வயிற்று வலியின் காரணமாக பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார். 

கொடுத்து சிவந்த கரத்துக்கு சொந்தகாரரான என்.எஸ்.கிருஷ்ணனுக்கு மூன்று மனைவிகள். 1931 ஆம் ஆண்டில் நாகம்மை என்பவரை நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இரண்டாவதாக நடிகை டி.ஏ.மதுரத்தையும், மூன்றாவதாக மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரையும் மணந்து கொண்டார்.   

என்.எஸ். கிருஷ்ணன் மறைவுக்கு பிறகு மதுரம்தான் முழுக் குடும்பத்தின் சுமையையும் ஏற்றார். அவரின் முதல் மனைவியின் குழந்தைகள், மதுரத்தின் தங்கையின் மூலம் பிறந்த குழந்தைகள் என எல்லோரையும் மதுரம்தான் கவனித்துக்கொண்டார். மதுரத்திற்குப் பிறந்த ஒரே குழந்தை பிஞ்சுப் பருவத்திலே இறந்துவிட்டது. டி.ஏ.மதுரம் 1974ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்னாம் தேதி அண்ணா முதலமைச்சாராக இருந்த போது, கலைவாணர் என்எஸ் கிருஷ்ணனுக்கு சென்னை தி.நகரில் சிலை திறக்கப்பட்டது. அப்போது அண்ணா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். எனினும், கலைவாணரின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வேன் என வலியை மீறி வந்து கலந்து கொண்டார். அதுதான் அண்ணா கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சியாக அமைந்தது.

தமிழ்நாடு அரசு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது.

எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடிவிட்டாலும் கலைவாணர் என்.எஸ்.கே. புகழும், நினைவும் இன்றும் தமிழ் நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் கலைவானரது வள்ளல் தன்மையும், மற்றவர்களுக்கு உதவுவதில் தன்னை முன்னிறுத்திக் கொண்ட தனி குணமும்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.   

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக