செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

'காதல் மன்னன்' ஜெமினி கணேசன்

ஜெமினி கணேசனை வெறும் காதல் மன்னனாக மட்டுமே தமிழ்த் திரை உலகம் இதுநாள் வரை சித்திரித்திருக்கிறது. உண்மையில், ஜெமினியின் ஆளுமை பன்முகப்பட்டது. எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரையுமே திகைக்க வைத்த போட்டியாளர் இவர். ஸ்டைல், நடிப்பு என்று ஆளுக்கொரு திசையில் கொடிகட்டிப் பறந்தபோது, தனக்கென்று ஓர் அசத்தலான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் ஜெமினி. ஜெமினிக்கு, யாருடனும் சச்சரவுகள் இருந்ததில்லை. ஆனால் சர்ச்சைகளோ ஏராளம். பார்க்கும் பெண்கள் அத்தனை பேரையும் வசீகரிக்கும் ஆற்றல் இவருக்கு இருந்ததுதான் பிரச்னையே.

புதுக்கோட்டையில் நல்ல வசதியுடன் வாழ்ந்த ராமசாமி – கங்கம்மா தம்பதிக்கு மகனாக 1920 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி பிறந்தவர் ஜெமினி கணேசன்.

புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய நாராயணசாமி அய்யர் ஜெமினி கணேசனுக்கு சின்னத் தாத்தா முறையாகும். ஜெமினி கணேசன் தனது பத்து வயது வரை நாராயணசாமி அய்யர் வீட்டில்தான் வளர்ந்தார். மேலும், தேவதாசி முறையை ஒழிக்க காரணமாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஜெமினிக்கு அத்தை முறையாகும். 

நெல்லுமண்டி தெருவில் இருந்த குலமது பாலையா பிரைமரி ஸ்கூலில் பள்ளிப்படிப்பை தொடங்கினார். பத்து வயதில் தந்தையை இழந்த போது, சென்னையில் இருந்த அத்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். ஏழாம் வகுப்பை சென்னையில் உள்ள ராஜாமுத்தையா செட்டியார் பள்ளியிலும், பிறகு ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியிலும் படித்த ஜெமினிகணேசன், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து அறிவியல் பட்டம் பெற்றார்.

டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது அவரது ஆசை. திருச்சியில் இருந்த உறவுக்காரர், மருத்துவக் கல்வியில் சேர்த்து விடுவதாக வாக்கு வந்து, தனது மகளை திருமணம் செய்து கொள்ள சொன்னதும், அலமேலுவை மணந்து கொண்டார், ஜெமினி கணேசன்.

திருமணம் நடந்த ஒரு மாதத்திற்குள் வாக்கு தந்த மாமனாரை பறிகொடுத்து டாக்டராகும் கனவையும் இழந்தார், ஜெமினி கணேசன். குடும்பத்தை காப்பாற்ற இந்திய விமானப்படைக்கு செல்ல முடிவு செய்தார். அது உனக்கு சரியாக வராது என்று சொன்னார், தாய் மாமா நாராயணசாமி. அதனால், தான் படித்த கிறிஸ்தவ கல்லூரியிலேயே விரிவுரையாளராகப் பணிக்குச் சேர்ந்தார்.

சிறு வயதிலிருந்தே கலையின் மீது இருந்த ஆர்வம் காரணமாக நேரம் கிடைக்கும் போது நாடகங்கள் பார்க்க, நடிக்க சென்ற ஜெமினி கணேசனுக்கு, ஜெமினி பட நிறுவனத்தில் பணிபுரியும் கொத்தமங்கலம் சுப்புவுடன் அறிமுகம் கிடைத்து நண்பரானார்.

ஜெமினி நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நடிக்க ஆசைப்பட்டு கொத்தமங்கலம் சுப்புவின் ஆலோசனையுடன் விண்ணப்பம் செய்தார். ஸ்கிரீன் டெஸ்ட்டுக்கு அழைப்பு வந்தது. டெஸ்ட்டுக்கு சென்றார். ஒரு வாரம் கழித்து நடிகர்களை தேர்வு செய்யும் பிரிவில் வேலை கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முன்னேறலாம் என்று அந்த வேலையை ஒப்புக் கொண்டார், ஜெமினி.

நடிகர்களைத் தேர்வுசெய்யும் பணியில் இருக்கும் போது திரைக் கலையின் அனைத்து துறைகளையும் அருகிலிருந்து காணவும் கற்றுக்கொள்ளவும் பெரும் வாய்ப்பாக ஜெமினி கணேசனுக்கு ஜெமினி நிறுவனத்தில் அமைந்தது.

ஜெமினி ஸ்டுடியோ தயாரிப்பான ‘மிஸ் மாலினி’ படத்தில் உதவி இயக்குனராக நடித்தார், ஜெமினி கணேசன். அந்தப் படத்தில் அவருடைய இரண்டாவது மனைவியான புஷ்பவல்லியோடு பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

பிறகு ஜெமினியின் சக்கரதாரி படத்தில் கிருஷ்ணராக நடித்தார். அடுத்து ஜெமினியின் ‘மூன்று பிள்ளை’கள் படத்திலும் நடித்தார். ஜெமினி நிறுவனத்தின் படைப்புகளில் போதிய வாய்ப்பு அமையாமல் ஜெமினியிலிருந்து வெளியேறிய ஜெமினி  கணேசன், ஜெமினி நிறுவனத்தில் இயக்குனராக இருந்து வெளியே சென்று படம் இயக்கிக் கொண்டிருந்த கே. ராம்நாத் என்பவரை சந்தித்து, தனது நோக்கங்களை தெரிவித்திருக்கிறார்.

அப்போது நாராயணன் கம்பெனி தயாரித்த தாய் உள்ளம் என்கிற படத்தை இயக்கும் வேலையில் இருந்தார், ராம்நாத். ஜெமினி கணேசனை தயாரிப்பாளரிடம் சிபாரிசு செய்து, தாய் உள்ளம் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்திருக்கிறார், இயக்குநர் ராம்நாத்.

1953ஆம் ஆண்டு வெளியான தாய் உள்ளம் படம் ஜெமினி கணேசனை விமர்சகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் நடிகராக நிலைநிறுத்தியது.

அடுத்து நாராயணன் கம்பெனி தயாரிப்பில் உருவான மனம் போல் மாங்கல்யம் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் இரட்டை வேடம் தாங்கி நடித்தார், ஜெமினிகணேசன். ஒரு வேடத்திற்கு, அவருடைய மிகப் பொருத்தமான ஜோடி என்று வர்ணிக்கப்படும் சாவித்திரி நடித்தார்.

ஜெமினி ஸ்டுடியோவில் நட்சத்திர தேர்வில் பணியாற்றிய போது பனிரெண்டு வயது சிறுமியாக டெஸ்ட்டுக்கு வந்து சென்ற சாவித்திரி, அதன் பிறகு சில படங்களில் நடித்து, இப்போது தனக்கு ஜோடியாக வந்து நிற்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்.

புஷ்பவல்லியின் பிரிவால் வேதனையில் இருந்த ஜெமினி கணேசனுக்கு சாவித்திரியின் அன்பும், பாசமும் ஆறுதலாக இருந்தன. ஒத்திகையின் போதே இருவருக்குள்ளும் எல்லாமும் ஒத்துப் போனது. நாள்பட நாள் பட இருவரும் மனதை பறிகொடுத்துக் கொண்டனர். படத்தின் பெயரைப் போலவே மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தார், சாவித்திரி.

இதன் நடுவே “மனம் போல் மாங்கல்யம்” படம் முடிந்து ஜெமினி கணேசனுக்கு முதல் வெற்றிப் படமாக அமைந்தது. அதை இருவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதன் பிறகு ஏவி.எம். தயாரித்த பெண், விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த மிஸ்ஸியம்மா என்று ஜெமினிகணேசனின் வாழ்க்கை ஏற்றம் மிகுந்த வாழ்க்கையாகவே அமைந்தன.

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நல்லவர்களாகவும் நடிப்பரசர்களாகவும் திரையில் உலா வந்த காலகட்டத்தில், தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு திரையுலகில் வெற்றி நாயகனாக ஜெமினி கணேசனும் வலம் வரத்தொடங்கினார்.

கதைதான் கதாநாயகன் என்று நம்பிய கே.ராம்நாத், பி.புல்லையா, ஆர்.பிரகாஷ் ராவ், எல்.வி.பிரசாத் போன்ற முதுபெரும் சாதனை இயக்குநர்களின் இயக்கத்தில் தன் திரைப் பயணத்தை தொடங்கியவர் ஜெமினி.

‘பதிபக்தி’, ‘பாசமலர்’, ‘பார்த்தால் பசி தீரும்’ ஆகிய படங்களில் பீம்சிங்கும், ‘கற்பகம்’, ‘சித்தி’ என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும், ‘கல்யாணப் பரிசு’, ‘மீண்ட சொர்க்கம்’, ‘தேன் நிலவு’. சுமைதாங்கி’ என ஸ்ரீதரும், ‘புன்னகை’, ‘இரு கோடுகள்’, ‘காவியத் தலைவி’, ‘பூவா தலையா’, ‘வெள்ளி விழா’, ‘உன்னால் முடியும் தம்பி’ என கே.பாலசந்தரும் ஜெமினியை பல பரிமாணங்களில் நமக்கு அடையாளம் காட்டினார்கள்.

‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் கோரத் தோற்றமுடைய பிச்சைக்காரனாக, ‘வீரபாண்டியக் கட்டப்பொம்மன்’ படத்தில், தளபதி வெள்ளையத்தேவனாக, ‘மாமன் மகள்’ படத்தில் பெண் வேடம், ‘பெண்ணின் பெருமை’ படத்தில் மனவளர்ச்சி குன்றிய வளர்ந்த மனிதனின் குழந்தைத்தனம் என்று பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம்.

முக்கியமாக சொல்ல வேண்டியது என்னவென்றால் ஜெமினி கணேசன் புகழ் பெற்ற நட்சத்திரம் ஆன பின்பும் சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன் என்று அனைத்து நடிகர்களுடனும் எந்த ஒரு பாகுபாடும், மருப்பும் சொல்லாமல் நடித்தவர்.

அதில் முக்கியமான திரைப்படங்கள் வீரபாண்டியன் கட்டபொம்மன், பாசமலர், பார்த்தால் பசி தீரும், சரஸ்வதி சபதம், கப்பலோட்டிய தமிழன் ஆகியவை. எம்.ஜி.ஆருடன் முகராசி திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பின் 1970க்கு பின் ஜெமினியின் படங்கள் இறங்கு முகமாக இருந்தது. மீண்டும் தனது இடத்தை குணச்சித்திர வேடங்களின் மூலம் பிடித்தார். 1988ஆம் ஆண்டு சீரஞ்சீவி நடிப்பில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ‘ருத்ர வீணா’ திரைப்படத்தில் ஒரு கர்நாடக இசைக் கலைஞராக நடித்திருந்தார். அதே படம் தமிழில் கமல் நடிப்பில் ‘உன்னால் முடியும் தம்பி’ என்று வெளியானது. இதில் ஜெமினியின் கதா பாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

கமல் நடிப்பில் வெளியான ‘அவ்வை சண்முகி’ திரைப்படத்தில் கமல் பெண் வேடம் போட்டிருப்பார். அந்த கதாபாத்திரம் தன் மனைவிபோல் இருப்பதாக எண்ணி கமலிடம் காதலைக் கூறுவார் ஜெமினி. இந்தப் படத்தில் நடிக்க கமல் முதலில் அணுகியது சிவாஜியைதான் என்றும், ‘இந்தக் கதாப்பாத்திரத்திற்கு சரியான ஆள் நானில்லை, காதல்மன்னன் ஜெமினிதான்’ என்று சிவாஜி கூறியதாக கமல் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

கார்த்திக், கமல், சத்யராஜ், விக்ரம், விஜயகாந்த் என அடுத்ததலைமுறை நடிகர்களின் படங்களில் எந்த பாகுபாடும் இல்லாமல் நடித்த கலைஞர் ஜெமினி கணேசன்.

தன்னை வளர்த்தெடுத்த நிறுவனத்தின் மீதான நன்றியைக் காட்ட தன் பெயருக்கு முன்னாள் ‘ஜெமினி’ என்ற பெயரைச் சேர்த்துக்கொண்ட ஜெமினி கணேசன், சாவித்திரியுடன்  25 படங்களிலும், சரோஜாதேவியுடன் 21 படங்களிலும், பத்மினியுடன் 19 படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழில் 172, மலையாளத்தில் 9, இந்தியில் 5,தெலுங்கில் 4 என 190 படங்களில் நடித்திருக்கிறார், ஜெமினி கணேசன். இதில் 30 படங்கள் நூறு நாள்களை தாண்டி ஓடிய வெற்றி படங்கள். "கல்யாணப்பரிசு" வெள்ளி விழா கண்டது.

ஜெமினி கணேசன் தயாரித்து, நடித்த ஒரே படம் 'நான் அவனில்லை'. இதேபோல் ஜெமினிகணேசன், தாமரை மணாளனுடன் இணைந்து 'இதய மலர்' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். 'இதய மலர்' படத்தில் "லவ் ஆல்' என்று துவங்கும் ஒரு பாடலை சொந்தக் குரலில் பாடிய இருக்கிறார்.

1970 ம் ஆண்டு மத்திய அரசால் 'பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஜெமினிகணேசன். தமிழக அரசின் கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர்.விருது, "காவியத்தலைவி" படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றிருக்கிறார். இவரது நடிப்புத் திறமைக்கு மரியாதை செய்யும் விதமாக, மத்திய அரசு 2006 ஆம் ஆண்டில் தபால் தலை ஒன்றை வெளியிட்டு பெருமைப்படுத்தியது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பல நடிகர்கள் காதல் காட்சியில் உருகி உருகி நடித்திருந்தாலும், 'காதல் மன்னன்' என்று சொன்னதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஜெமினி கணேசன்தான். திரைப்படங்களில் மட்டுமன்றி சொந்த வாழ்க்கையிலும் காதல் மன்னனாக வாழ்ந்த ஜெமினிகணேசனுக்கு அலமேலு என்கிற பாப்ஜி, புஷ்பவல்லி, சாவித்திரி என்று மூன்று மனைவிகள்.

ஜெமினி - பாப்ஜி தம்பதிக்கு ரேவதி, கமலா, நாராயணி, ஜெயலட்சுமி என நான்கு பெண் பிள்ளைகள். இவர்களில் தமிழ்நாட்டின் முன்னணி மருத்துவர்களில் ஒருவராகச் சாதனைத் தடம்பதித்தவர் டாக்டர் கமலா செல்வரஜ். ஜெயலட்சுமி, ‘நினைவெல்லாம் நித்யா’ திரைப்படத்தில் அறிமுகமாகி நடித்தபின் முழுவதும் மருத்துவத்துறையில் கவனம் செலுத்திவருகிறார். ஜெமினி - புஷ்பவல்லி தம்பதிக்கு ரேகா, ராதா என்று இரண்டு பெண் பிள்ளைகள். இவர்களில் ரேகா, தனது தந்தை - தாயின் வழியில் திரை நடிப்புத் துறையைத் தேர்ந்துகொண்டு, இந்திப் படவுலகில் கனவுக்கன்னியாக கீரிடம் சூட்டப்பட்டவர்.

ஜெமினி - சாவித்திரி தம்பதிக்கு விஜயசாமுண்டீஸ்வரி என்ற மகளும் சதீஷ்குமார் என்ற மகனும் பிறந்தனர். விஜயசாமுண்டீஸ்வரி ‘ஹெல்த் & ஃபிட்னெஸ்’ துறையில் புகழ்பெற்றவர். சதீஷ் அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார்.

தனது தந்தையின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக தனது சகோதரிகள், தம்பியுடன் இணைந்து, டாக்டர் கமலா செல்வராஜ் ‘காதல் மன்னன்’ என்ற பெயரில் ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை ஒன்றரை மணிநேர ஆவணப்படமாகத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.

‘ஜெமினி - மந்திரச் சொல்’ என்ற தலைப்பில் விஜயசாமுண்டீஸ்வரி ஒரு புத்தகம் தயாரித்துள்ளார். சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து நடிகையர் திலகம் என்கிற திரைப்படமும் வெளியாகி உள்ளது.

தமிழ்த் திரை உலகில் எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும், புகழின் உச்சியிலிருந்த அதே காலகட்டத்தில் தன் அழகாலும், இயற்கையான நடிப்பாலும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களாலும் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு 'காதல் மன்னனாக' கொடிகட்டிப் பறந்த  ஜெமினிகணேசன், சிறுநீரக கோளாறு காரணமாக 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ம் தேதி அதிகாலை இரண்டு மணியளவில் காலமானார்.

காதல் மன்னன் ஜெமினியின் வாழ்கை வரலாற்றை சுருக்கி சொல்வது கஷ்டம்தான். அந்தளவுக்கு அவரது வாழ்க்கையும் அனுபவங்களும் பெரியது...

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக