சனி, 26 ஜூலை, 2014

எம்.ஜி.ஆர் பாராட்டிய கோவை சரளா

தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூரில் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி பிறந்தவர் கோவை சரளா. இவருக்கு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். அவரது இயற்பெயர் சரளா. இவரது பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும் கோவையில் இருந்து நடிக்க வந்ததால், அவரை கோவை சரளா என்று பத்திரிகையாளர்கள் அழைத்ததால் அவருக்கு கோவை சரளா என்ற பெயரே நிலைத்தது.

சிறுவயதிலேயே மிகவும் பேசும் திறமை உடையவராக திகழ்ந்தார் கோவை சரளா. கோவையில் உள்ள ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கோவை மாவட்டத்திற்கு சுற்றுபயணமாக சென்றிருந்த எம்.ஜி.ஆரிடம், பேசுகிற வாய்ப்பு கிடைத்தும், தன்னுடைய பேச்சு திறமையை எம்.ஜி.ஆரிடம் நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார், சரளா.

சிறு வயதில் சுறுசுறுப்பாகவும், நன்கு பேசும் திறமையும் உடைய கோவை சரளாவின் திறமையை கண்ட எம்.ஜி.ஆர்., "உனக்கு நிறைய திறமை இருக்குநல்லா படிக்கணும்" என்று கூறி வாழ்த்தியதுடன், அவர் படிப்பதற்கு உதவி தொகையும்  வழங்கி இருக்கிறார். அந்த  நிகழ்வுதான் சரளாவின் வாழ்வில் முக்கியமான திருப்பமாக அமைந்தது.

அன்றுமுதல் எம்ஜிஆரின் படங்களை ஒன்று விடாமல் பார்க்க ஆரம்பித்திருக்கிறார், சரளா. தொடர்ந்து படங்கள் பார்க்கிற அனுபவம் அவருக்குள் நடிப்பு ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.  பள்ளிப்படிப்பை முடித்த பிறகு திரையுலகில் சாதிக்க வேண்டுமென்ற ஆசை அதிகமாகி, அந்த உணர்வை வீட்டில் தெரிவித்திருக்கிறார்.

சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் சரளாவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர் அவரது அக்காள். பிறகு அவரும், அக்காளுமாக அப்பாவிடம் தொடர் வேண்டுகோள் வைத்து, அவருடைய ஆதரவு கிடைத்ததும், கோவையில் நாடகங்களில் நடித்து நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டார்.

இருபது நாடகங்களுக்கு மேல் நடித்து அனுபவம் கிடைத்ததும் அக்காள், மற்றும் அப்பாவுடன் சென்னைக்கு வந்து தங்கி வாய்ப்புகள் தேடி அலைந்தார். பல முயற்சிகளுக்கு பிறகு பாக்யராஜை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  

சரளாவின் பேச்சால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பாக்யராஜ்.  தான்  இயக்கி,  நடித்த 'முந்தானை முடிச்சு' படத்தில் ஒரு சிறிய கர்ப்பிணிப் பெண் கதாப்பாத்திரத்தில் நடிகிற வாய்ப்பை வழங்கினார்.

முந்தானை முடிச்சு படத்தின் வெற்றியும் அவரது கர்ப்பிணி பெண் வேடமும் பெரிய அளவில் பேசப்பட்டதால் வரிசையாக பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது. அடுத்த ஆண்டே 'வைதேகி காத்திருந்தால்', 'தம்பிக்கு எந்த ஊரு',  'மண்ணுக்கேத்த பொண்ணு' என வரிசையாக மூன்று படங்களில் நடித்தார், கோவை சரளா.

அதன் பிறகு அவருக்கு அழுத்தமான வேடம் என்றால் அது பாக்யராஜின் அம்மாவாக சின்ன வீடு படம்தான். அந்தப் படத்தில் நடிக்க இரவு பனிரெண்டு மணிக்கு சென்று அழைத்திருக்கிறார், அந்தப் படத்தின் மேனேஜர் நாராயணன். இந்நேரத்துக்கு அழைக்கிறார்களே என்று தயக்கத்துடன் அப்பாவை அழைத்துக் கொண்டு பாக்யராஜின் அலுவலத்துக்கு சென்றால், அங்கு அலுவலகமே பகல் மாதிரி விழா கொண்டாட்டத்தில் இருந்திருக்கிறது.

பல பெண்கள் வயதான தோற்றத்தில் பெண்கள் மேக்கப்புடன் அமர்ந்திருக்க, அவர்களை பார்த்துக் கொண்டே சென்ற கோவைசரளாவுக்கு பாக்யராஜிடம் இருந்து, இவுங்களுக்கும் ஓல்டு கெட்டப் போட்டு அழைச்சிட்டு வாங்க என்கிற ஆணை பிறக்க அதிர்ந்து போயிருக்கிறார், கோவை சரளா.

எனக்கு வயதான வேடமா? அதுவும் பாக்யராஜுக்கு அம்மாவாக நடிக்க வேண்டுமா? இதற்காக இந்நேரத்துக்கு அவரசர அவசரமாக அழைத்து வந்தார்கள் என்று என்று ஆதங்கப்பட்டு, அம்மா வேடத்திலா முடியவே முடியாது என்று மறுப்பதற்குள், மேக்கப், விக், உடை என்று ஆள்கள் வந்து சூழ்ந்து கொண்டார்கள்.

மேக்கப் டெஸ்ட் போட்டுக் கொண்டு பாக்யராஜிடம் சென்றார், கோவை சரளா. பாக்யறேஆசுக்கு பிடித்துவிட்டது. இந்தப் படத்தில் இந்த அம்மா வேடத்தில் நடி. அதன் பிறகு பாரு. உனக்கு நல்ல மாற்றங்கள் நடக்கும் என்று பாக்யராஜ் சொன்னதும், ஒரு சீனியர், அனுபவம் உள்ளவர், முதல் வாய்ப்பு கொடுத்தவர் சொல்கிறாரே என்று நடிக்க ஒப்புக் கொண்டார், கோவை சரளா.

பாக்யராஜ் சொன்னது போலவே முந்தனை முடிச்சு படத்தில் நடித்த பிறகு நல்ல பெயர் கிடைத்தது.  அதன் பிறகு எல்லா ஹீரோவுக்கும் அம்மாதான். ஜப்பானில்  கல்யாணராமன் படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்த பிறகு தொடர்ந்து கவுண்டமணி, செந்தில், எஸ்.எஸ்.சந்திரன் என ஏராளமான படங்களில் அவர்களின் கொட்டனியில் நகைச்சுவை நடிகையாக மிளிர்ந்தார் கோவை சரளா. அதிலும் கரகாட்டகாரன் படத்தில் கரகட்டகாரியாக அவர் நடித்து பேசிய வசனமும், படத்தின் வெற்றியும் அவரை மேலும் பிரபலப்படுத்தியது.

அதன் பிறகு வடிவேலு, விவேக் என பல முன்னணி நகைச்சுவை கலைஞர்களுடன் பல படங்களில் நடித்தார். கோவை சரளாவின் கொங்கு தமிழும்வடிவேலுடன் இவர் இணைந்து நடிக்கும் காதாபாத்திரங்களும் மக்களை இவரின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

வி.சேகரின் இயக்கத்தில் உருவான பொண்டாட்டி சொன்னா  கேட்கணும்வரவு எட்டணா  செலவு பத்தணா, பொறந்த வீடா புகுந்த வீடா, பொங்கலோ பொங்கல், காலம் மாறி போச்சுவிரலுக்கேத்த வீக்கம் என பல படங்கள் அவருடைய நடிப்பு திறமையை நன்கு வெளிபடுத்திய படங்கள். அதே போல டி.பி. கஜேந்திரனின் பட்ஜெட் பத்மநாபன், இராமநாராயணனின் கந்தா கடம்பா கதிர்வேலா, விஸ்வநாதன் ராமமூர்த்தி என பல படங்கள் அவருக்கு நல்ல வாய்ப்பை தந்தன.

கமல் தயாரித்த மகளீர்க்காக படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர், கமல் ஜோடியாக சதிலீலாவதி படத்தில் நடித்து பாராட்டினை பெற்றார். முதலில் கமலின் மனைவியாக சதிலீலாவதி படத்தில் நடிக்க வைக்க அந்தப் படத்தின் இயக்குநர் பாலு மகேந்திரா ஒத்துக் கொள்ளவே இல்லையாம். கமல்தான் இந்த பிடிவாதமாக இருந்து கோவை சரளா நடிக்க காரணமாக இருந்தாராம்.

தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போது அவர் நடித்த படங்கள் தெலுங்கு மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால், நேரடி தெலுங்கு மொழி படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நடித்து வந்தார் கோவை சரளா.

1983 இலிருந்து 2008ஆம் ஆண்டு வரை இருபத்தி ஐந்து ஆண்டுகள் சினிமாவில் அசத்திய கோவை சரளா,  2008 ஆம் ஆண்டிலிருந்து சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

மீண்டும் 2011 ல் முனி படத்தில் தொடங்கிய அவரது நடிப்பு பயணம், காஞ்சனா, கண்ணா லட்டு திங்க ஆசையா, தில்லு முள்ளு, அரண்மனை என தொடர்கிறது.

‘என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்’ என்று பேசிய இவர் கரகாட்டக்காரன் படத்தில் பேசிய வசனம், ’சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’ என்று ஷாஜஹான் படத்தில் பேசிய வசனமும் ரசிகர்களிடையே பிரபலம், அதேபோல அவர் வடிவேலுவை அடித்த காட்சிகள், ஜப்பனுக்கு கவுண்டமனியுடன் சென்ற காட்சிகள் என பல படங்களில் பல காட்சிகள் கோவை சரளா என்றாளே ஞாபகத்து வருகின்றன்.

நடிப்பை  தவிர்த்து சினிமாத்துறையில்   "சிறையில் பூத்த சின்ன மலர்" மற்றும் "வில்லு" போன்ற படங்களில் இவர் பாடியுள்ளார். "உழைத்து வாழ வேண்டும்"  என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னக மொழிகளில் இதுவரை 750 படங்களுக்கு மேல் நடித்துள்ள கோவை சரளா, சிறந்த நகைச்சுவை நடிகைகான தமிழக அரசின் விருது ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்திற்காக பெற்றவர், ஆந்திர அரசின் நந்தி விருது, ராயலசீமா ராமண்ணா சௌத்ரி, ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ ஆகிய இரு படங்களுக்காக, சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான விருதினை இருமுறை பெற்றிருக்கிறார்.

பிரபல பத்திரிகைகள், ஊடகங்கள், தனியார் அமைப்புகள் வழங்கிய ஏராளமான பரிசு கேடயங்களையும், பாராட்டுக்களையும் பெற்றிருக்கும் கோவை சரளா, இன்றுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. பரந்த உள்ளமும், இறக்க குணமும் நிறைந்த அவர், தனது உடன் பிறந்தவர்களின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களைக் கண்டிப்போடு வளர்த்து வருகிறார்.

நகைச்சுவை திறன் என்பது அனைவருக்குமே  அமைந்துவிடாது. அது ஒரு தனித்துவமான திறன். ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண் நகைச்சுவை நடிகைகள் குறைவாகவே உள்ளனர். அப்படி இருந்தாலும் தனது கொங்கு தமிழாலும், அபாரமான நடிப்பு திறமையாலும் காமெடியில் தனக்கான தனித்துவமான இடத்தை பிடித்தவர்தான் கோவை சரளா. ஆச்சி மனோரம்மாவிற்கு அடுத்து நகைச்சுவையில் கலக்கியவர் என்றால் அது கோவை சரளா தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக