சனி, 26 ஜூலை, 2014

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்

தமிழ்த் திரையுலகின் பிதாமகர் என்று தென்னிந்தியத் திரையுலகினர் அனைவராலும் கொண்டாடப் படும் கே.பாலசந்தர்  தஞ்சாவூர் மாவட்டம் நன்னீலம் அருகே உள்ள நல்ல மாங்குடி கிராமத்தில் 1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தையார் பெயர் கைலாசம். தாயார் பெயர் காமாட்சி அம்மாள் இவருடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரரும், நான்கு சகோதரிகளும்.

இவரது மனைவி பெயர் ராஜம்., இவரது மூத்த மகன் கைலாசம் சின்னத்திரை தயாரிப்பில் பல சாதனைகள் புரிந்தவர். இப்போது புதிய தலை முறை செய்தித் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பில் திறம்படப் பணியாற்றி வருகிறார் .இளைய மகன் பிரசன்னா திரைத்துறையில் ஈடு .படாமல் ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்

இவரது ஒரே மகளான புஷ்பா கந்தசாமி திரைத் துறையில் பிரபலமான தயாரிப்பாளராக உள்ளது மட்டுமின்றி பல திரைத்துறை சார்ந்த அமைப்புகளில் பொறுப்பிலும் இருந்துள்ளார்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் பி.எஸ்.சி ஜுவாலஜி படித்த இவர் முத்துப்பேட்டை பள்ளியில் ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார். பிறகு சென்னையில் உள்ள அக்கவுண்ட் சென்ட்ரல் அலுவலகத்தில் சூப்ரெண்ட் அதிகாரியாக வேலை பார்த்தார். அப்போது முதல் நாடகம் மற்றும் கலைகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

இவர் இயக்கிய மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் போன்ற மேடை நாடகங்களுக்கு பெரும் வரவேற்பு  கிடைத்தது.

இவரது திறமையை பார்த்து எம்.ஜி.ஆர். நடித்த தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பை இயக்குனர்  பி.மாதவன், தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியஇருவரும்வழங்கினார்கள்.

இவர் 1965ஆம் ஆண்டு நீர்க்குமிழி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு நாணல், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், அபூர்வ ராகங்கள், தில்லுமுல்லு, புன்னகை மன்னன், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றுமுடிச்சு, அவர்கள், உன்0னால் முடியும் தம்பி என்று எண்ணற்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

இவருடைய பெரும்பாலான படங்களில் மனித உறவுகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூக பிரச்சனைகள் கருப் பொருளாக விளங்கின.

இன்று சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்தை திரை உலகிற்கு தனது அபூர்வராகங்கள் படத்தில் அறிமுகப்படுத்தி அவரது திரையுலக வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்ட பிதாமகன் இவர்தான்

அதே போன்று தனது திறமைக் கேற்ற சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த கமல்ஹாசன் என்ற மாபெரும் கலைஞனை செதுக்கிய பெருமைக்கு சொந்தக்காரரும் இவரே

ராதாரவி, பிரகாஷ்ராஜ், விவேக், விஜயகுமார், ஜெய்கணேஷ், டெல்லிகணேஷ், முரளி, குயிலி, படாபட் ஜெயலட்சுமி, எனப் பல நடிகர் நடிகைகளை தமிழ்த் திரையுலகில் அறிமுகப்படுத்திய இவர்தான் வேற்று மொழிகளில் இருந்து சுஜாதா, ஷோபா, சரிதா, சரத்பாபு எனப் பல நட்சத்திரங்களை தமிழுக்கு அழைத்து வந்தவர்

மௌலி, விசு, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி‌.மகேந்திரன், மேஜர் சுந்தர்ராஜன், காத்தாடி ராமமூர்த்தி என சினிமாவுக்கு இவர் அழைத்து வந்த நாடகக் கலைஞர்கள் பட்டியல் நீளமானது

கோமல் சுவாமிநாதன் எழுதிய தண்ணீர் தண்ணீர் நாடகத்தை அதன் சாரம், காரம் எதுவுமே குறையாமல் படமாக்கி அப்படத்தின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இவர் பல தரப்பட்ட கதைகள் மூலம் திரை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் வலுவானது

ரஜினிக்கு தில்லு முல்லு  என்ற நகைச்சுவை படத்தின் மூலம் புதிய பரிமாணத்தைத் தந்த இவர்தான் சுகாசினிக்கு சிந்துபைரவி படம் மூலம் தேசிய விருது பெற்றுத் தந்தார். அதில் இசை சாம்ராஜியம் நடத்திய இசைஞானி இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கவும் இவரே காரணம்

இவர் இயக்கிய ஏக் துஜே கேலியே இந்தியில் வசூலில் சாதனை புரிந்த படம். இப்படத்தின் மூலம் தான் கமல்ஹாசன் இந்திப் பட உலகிற்கு அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி சாதனை புரிந்த இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது போன்ற உயர் விருதுகளை வழங்கி கௌரவித்தது.

தமிழக அரசு, ஆந்திர அரசு மற்றும் மத்திய அரசு வழங்கிய விருதுகளை எண்ணற்ற முறை பெற்ற இவர் வெளிநாடுகள் பல வற்றில் கணக்கிலடங்காத விழாக்களில் பாராட்டப்பட்டுள்ளார்

பிற இயக்குனர்களுக்கும் தனது கவிதாலயா நிறுவனத்தில் படம் இயக்க வாய்ப்பு அளித்த இவர். சின்னத்திரை உலகிலும் தனது கம்பீரமான முத்திரையை அழுத்தமாகப்பதித்தவர்,

திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, போன்ற பல முக்கியமான திரைத் துறை அமைப்புகளில் தலைவராக பதவி வகித்த பெருமையும் இவருக்குண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக