செவ்வாய், 21 ஏப்ரல், 2015

இந்தியாவின் அடையாளமாக விளங்கும் ஏ .ஆர் ரகுமான்

1966 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் பிறந்தவர்  இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.    இவரது இயற்பெயர் திலீப்குமார். இவரின் தந்தை ஆர்.கே.சேகர் தமிழ், மற்றும் மலையாள படங்களுக்கு  இசையமைப்பாளராக பணியாற்றியவர். தந்தைக்கு உதவியாக இருக்கும் போதே பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார் இவர்.

ரகுமானுக்கு ஒன்பது வயது இருக்கும் போது தந்தை சேகர் இறந்துவிட,  குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டு அந்த குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தியவர்  இவரது தயாரான  கஸ்தூரி.  

பதினோறாவது வயதில், தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டு, பின்னர்  எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ராஜ் கோட்டி போன்ற முன்னணி இசையமைப்பாளர்களிடம் கீபோர்டு வாசித்து வந்த இவர்,  டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றவர்.

இந்து முதலியார் குடும்பமாக இருந்த இவரது குடும்பம் இஸ்லாம் மதத்துக்கு மாறியது. திலிப்குமார் என்கிற இவரது பெயரை அல்லா ரக்ஹா ரகுமான் என மற்றினார் இவரது தாயார். தாயின் வார்த்தைக்கு மதிப்பளிக்கும் இவர், இறைவனுக்கு நிகரான பக்தியைத் தனது தாயிடமும் கொண்டுள்ளவர் . தனது சகோதரிகள் ரெஹானா, பாத்திமா, இஸ்ரத் ஆகியோரை  தந்தையின் இழப்பு தெரியாத அளவுக்கு பாசத்தை காட்டி இவர் வளர்த்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த இவரது திறமையை பார்த்து, ரோஜா படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை இவருக்கு வழங்கியவர் இயக்குனர் மணிரத்னம். கே.பாலசந்தரின் நிறுவனமான கவிதாலயா தயாரித்த இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, இவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினையும்  பெற்றுத்  தந்தது.

மணிரத்னம் இயக்கிய திருடா திருடா, பம்பாய், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், கடல், ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன், காதலன், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, பாரதிராஜா இயக்கிய கிழக்குச்சீமையிலே, கருத்தம்மா, தாஜ் மஹால், கே.பாலசந்தர் இயக்கிய டூயட், கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய முத்து, படையப்பா, தெனாலி, வரலாறு, என ஏராளமான தமிழ் படங்களுக்கு வித்தியாசமான பாடல்களை கொடுத்து தனக்கென ஒரு தனி  இடத்தை தமிழ்ப்பட உலகில் உருவாக்கிக் கொண்டவர் இவர்  

மலையாளத்தில் யோதா, தெலுங்கில் ஒக்கே ஓக்கடு, பிரேமிகுலு ரோஜு, இந்தியில் லகான், ஜோதா அக்பர், ரங் தே பசந்தி, என பல இந்திய மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் ஆங்கிலத்தில் ஸ்லம் டாக் மில்லியனியர்,  சீன மொழியில் Tian di ying xiong என பல உலக மொழிப் படங்களுக்கும்  இசையமைத்து சாதனை படைத்த முதல் இந்திய இசையமைப்பாளர் ஆவார் .

Return of the Thief of Baghdad,      தீன் இசை மாலை, செட் மீ ஃப்ரீ, வந்தே மாதரம், ஜன கன மன, பாம்பே ட்ரீம்ஸ் போன்ற இசை ஆல்பங்களுக்கும் இவர்  இசையமைத்துள்ளார்.

பல பாடகிகளையும், இசையமைப்பளர்களையும் திரையுலகிற்கு தந்த இவரது ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப வசதிகள் நிறைந்த ஒலிப்பதிவுக் கூடமாக உள்ளது.  
      
இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இவருக்கு, அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது

2008 ஆம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலை நாட்டியவர் இவர் .

மொரீசியஸ்  நாட்டின் விருது, மலேசிய நாட்டின்  விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீவிருது, பத்ம பூஷண் விருது, ஆறு முறை தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கன விருது, 13 முறை பிலிம்பேர் விருது, 13 முறை பிலிம்பேர் சவுத் விருது, ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது,  கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது என இவர் வாங்கிக் குவித்துள்ள விருதுகளின் பட்டியல் மிகவும் நீளமானது

மிடில்செக்ஸ் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டத்தைப்  பெற்றுள்ள இவர் ரங் தே பசந்தி, லகான், சாத்தியா, தாள் ஆகிய திரைப்படங்களுக்காக ஐ.ஐ.எஃப்.ஏ விருது பெற்றவர் .
கனடாவில் உள்ள ஒன்டோரியா மாநிலத்தில் 'மார்க்கம்' என்ற நகரத்தில் ஒரு தெருவுக்கு .ஆர். ரகுமான் என பெயர் வைத்து இவருக்கு பெருமை சேர்த்துள்ளனர் .

இவ்வளவு விருதுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ள இவர் பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். குடும்பச் சூழல் காரணமாக அதற்கு மேல் அவரால் படிக்க முடியவில்லை.

இவரது மனைவி பெயர் ஷெரினா பானு, இவர்களுக்கு கதீஜா, ரஹிமா என இரண்டு பெண் குழந்தைகளும், அமீன் என ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர்.

ஹஜ் யாத்திரைக்கு இரண்டு முறை தன் தாயார் கரீமா பேகத்தோடு சென்று வந்துள்ள இவர் தன் தந்தை சேகர் படத்தை வணங்காமல் வீட்டை விட்டு வெளியே  புறப்படமாட்டாராம்  


இசையுலகில் இந்தியாவின் அடையாளமாக விளங்கும் ஏ .ஆர் ரகுமான் நிலை உயரும்போது பணிவு வந்தால் உலகம் உன்னை வணங்கும் என்ற கவிஞர்  கண்ணதாசனின் வரிகளுக்கு பொருளாக உள்ள அற்புதமான கலைஞர் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக