செவ்வாய், 21 ஏப்ரல், 2015

பழகுவதற்கு எளிமையானவர் தனுஷ்

இயற்கையான நடிப்பிற்கு இவர்தான் என்கின்ற அளவிற்கு தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ள தனுஷ் என் தந்தையான கஸ்தூரி ராஜா இல்லையென்றால் நன் சினிமாவிற்கே வந்திருக்க மாட்டேன் என்கிறார்

பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் ராஜேஸ்வரி தம்பதியரின்  இரண்டாவது மகனான தனுஷ்  இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு. 1982ஆம் ஆண்டு  ஜூலை 28 ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர், ஆழ்வார்த் திருநகரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தார்.  

திரையுலகில் ஏற்பட்ட தொடர் நஷ்டம் காரணமாக சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு செல்ல நினைத்த  இவரது தந்தை கடைசி முயற்சியாக, மூத்த மகன் செல்வராகவன் துணையுடன் எடுத்த  துள்ளுவதோ இளமை என்ற படம்தான் இவர்  திரையுலகிற்கு வர காரணமாக அமைந்த படம்  

இவர் கதாநாயகனாக நடித்த அந்தப் படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்று இவரது தந்தையின் பொருளாதாரப் பிரச்னைக்கு தீர்வைத் தந்தது மட்டுமின்றி தனுஷின் திரையுலக வாழ்க்கைக்கும்  வழிகாட்டியது.

தனுஷ் எப்படிப்பட்ட திறமையான நடிகர் என்பதை எடுத்துக்காட்டிய படம் இவரது இரண்டாவது படமான காதல் கொண்டேன். மிகச் சிறந்த பாராட்டை எல்லா தரப்பினரிடமும் பெற்ற அந்தப் படத்தை இயக்கியவர் இவரது  சகோதரரான செல்வ ராகவன்.  களிமண்ணாக இருந்த என்னை நடிகன் ஆக்கியவர் எனது அண்ணன்தான் என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் இவர்.

இளம் வயதில் ஒரு டாக்டராகவோ  இஞ்சினியராகவோ வர ஆசைப்பட்ட   இவர் எனக்கு  நடிப்பின் மீது ஆர்வம் வந்ததற்குக் காரணம் காதல் கொண்டேன் படம்தான் என்கிறார்

இவர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் நடித்த  திருடா திருடி மிகச் சிறந்த வசூல் சித்திரமாக அமைந்தது  மட்டுமின்றி இவருக்கு   கதாநாயகர்கள் பட்டியலில் நிரந்தர இடத்தையும்  பெற்றுத் தந்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற மன்மத ராசாபாடல் இவருக்கு பட்டி தொட்டியெல்லாம் பெரும் புகழை சேர்த்தது.

படிக்காதவன், திருவிளையாடல் ஆரம்பம்,  யாரடி நீ மோகினி போன்ற பல வணிக  ரீதியிலான படங்களில் நடித்த இவர் பொல்லாதவன் ஆடுகளம் போன்ற பல வித்தியாசமான படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்தார்.  அந்தத் தேர்வு இவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது

ஆடுகளம் படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான இந்திய  அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்ற இவருக்கு  அகில இந்தியாவிலும் அறிமுகத்தைத் தேடித் தந்தது ஒரு பாடல்.

3 படத்தில் இவர் எழுதி இடம்பெற்ற  ஒய் திஸ் கொலவெறி  பாடல் இவருக்கு இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று தந்தது. மீண்டும் இந்தியில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் இணைந்து ஷமிதாப் படத்தில் நடித்தார் இவர். இந்தப் படமும் இவருக்கு இந்தியில் ஒரு மரியாதையை பெற்று தந்துள்ளது.

இவரது படங்களில் பாடல்கள் பாடி எழுதி வந்தவர், மூன்று படத்தில் இவருடன் நடித்த சிவகார்த்திகேயனை கதாநாயகனாக நடிக்க வைத்து எதிர்நீச்சல் என்கிற படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். தொடர்ந்து சில படங்களை மற்ற நடிகர்கள் நடிப்பில் தயாரித்து வரும் இவர் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார்.

இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவருக்கு திருடா திருடி, தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், வேலையில்லா பட்டதாரி போன்ற படங்கள் பெரும் திருப்புமுனையாக அமைந்திருக்கின்றன.

இவருடன் இணைந்து நடித்த ஸ்ருதிகாசன் உட்பட பல நடிகைகள் முண்ணனி நடிகைகளாக உயர்ந்துள்ளனர். இவருடைய படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிரூத், இன்று முன்னணி இசையமைப்பாளராக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் நடித்த படங்களை இயக்கிய பல இயக்குனர்கள் முன்னணி இயக்குனர்களாக வலம் வருகின்றனர்.

இளம் வயதிலேயே சினிமாவிற்கு வந்தது போல, இளம் வயதிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன், இயக்குனர் செல்வா ராகவனின் தம்பி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் எனப் பல சிறப்பம்சங்களை உடைய இவர், திறமையான நல்ல நடிகர்,  சிறந்த பின்னணிப் பாடகர், வெற்றிகரமான பாடல்களின் பாடலாசிரியர், தரமான தயாரிப்பாளர் என தனது வெற்றி முத்திரையை அழுத்தமாக பதித்திருக்கிறார்.


பல வெற்றிகளை குவித்து உயர்ந்த இடத்தில் இருந்தாலும் உள்ளத்தளவில் உறுதியும், மனதில் தெளிவும், பழகுவதற்கு எளிமையும் என நல்ல பண்புகளுக்கு சொந்தக்காரர் இவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக