செவ்வாய், 21 ஏப்ரல், 2015

நடிகை சௌகார் ஜானகி வாழ்க்கை வரலாறு

சௌகார் ஜானகி என்று அழைக்கப்படும் சங்கரமஞ்சி ஜானகி 1931 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் வெங்கோஜி ராவ், சச்சி தேவி தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர். இவரது தந்தை ஆந்திராவிலுள்ள தயாராம் சன்ஸ் என்கிற பேப்பர் மில்லில் பணியாற்றினார். பிறகு பெங்காலில் உள்ள ஷட்டகர் பேப்பர் மில்லுக்குச் சென்றார். இப்படி பல மாநிலங்களுக்கும் அவர் பணி மாறிய காரணத்தால் சௌகார் ஜானகியால் பள்ளிப் படிப்பைப் தொடர முடியவில்லை.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சிறிது காலம் வசித்தபோது, சாரதா வித்யாலயா பள்ளியில் படித்திருக்கிறார். அப்போது சிறு குழந்தைகளுக்காக நடத்தப்படும் வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். சௌகார் ஜானகியின் குரல் நன்றாக இருப்பதாகக் கூறி, பெரியவர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சிகளிலும் இவருக்கு வாய்ப்பளிக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து படித்துக் கொண்டும், வானொலி நாடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் இருந்திருக்கிறார், சௌகார் ஜானகி.

ஒரு முறை சௌகார் ஜானகி பங்கு பெற்ற வானொலி நாடகம் ஒன்றைக் கேட்ட தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி வானொலி நிலையத்தை தொடர்பு கொண்டு இவரைப் பற்றி விசாரித்திருக்கிறார். பிறகு தான் எடுக்கும் "குண சுந்தரி கதா' என்கிற படத்தில் நடிப்பதற்கு அழைத்திருக்கிறார்.

இதற்கு குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. பதினைந்து வயது ஆகிவிட்டது உனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று உடனடியாக உறவினர் சீனிவாசராவ் என்பருக்கு 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்குப் பிறகு விஜயவாடாவில் சத்தியநாராயணபுரம் என்ற பகுதியில் ஒரு சிறிய வீட்டில் கணவருடன் குடிஏறிய சௌகார் ஜானகி, கணவரின் வேலை காரணமாக மீண்டும் சென்னை வந்திருக்கிறார்.

சென்னையில்தான் முதல் குழந்தை யக்ஞபிரபா பிறந்திருக்கிறார். கணவரின் வேலைக்கான முயற்சிகள் ஒரு பக்கம் தொடர்ந்தாலும், உறவினர்களின் உதவியை எத்தனை நாள்தான் எதிர்ப் பார்ப்பது என்று  தன்னைத் தேடி வந்த சினிமா வாய்ப்பை இப்போது நாம் தேடிப் போனால் என்ன என்று அவருக்கு தோன்றவே, இதுப் பற்றி கணவருடன் ஆலோசித்திருக்கிறார்.

திருமணத்துக்கு முன்பே வந்த வாய்ப்பு? இப்போது தருவார்களா? என்று யோசித்திருக்கிறார் கணவர்.

நம்பி செல்வோம் என்று கணவரையும் அழைத்துக் கொண்டு கைக்குழந்தையுடன், இயக்குநர் பி.என்.ரெட்டி வீட்டுக்கு சென்றிருக்கிறார் சௌகார் ஜானகி.

கணவனுடனும் கைக்குழந்தையுடனும் வந்து சினிமா வாய்ப்பு கேட்ட இவரைப் பார்த்து வியந்திருக்கிறார் பி.என்.ரெட்டி. பிறகு, இப்போது தான் படம் இயக்கவில்லை என்றும், வேண்டுமானால் தன் தம்பி நாகிரெட்டியிடம் சொல்கிறேன் என்று பதில் சொல்லி இருக்கிறார்.

சொன்னது போலவே நாகிரெட்டியிடம் சௌகார் ஜானகியை சிபாரிசு செய்திருக்கிறார், பி.என்.ரெட்டி. ஏழு விதமான பாவங்களில் சௌகார் ஜானகியை வசனம் பேச வைத்து மேக்கப் டெஸ்ட் எடுத்திருக்கிறார் நாகிரெட்டி. அத்தனையிலும் சௌகார் ஜானகியின் திறமை பளிச்சிட, எல்.வி.பிரசாத் இயக்கத்தில் என்.டி.ராமாராவ் கதாநாயகனாக நடித்த ‘சௌகாரு' தெலுங்கு படத்தில் கதாநாயாகி சௌகார் ஜானகியை அறிமுகப்படுத்தினார், நாகிரெட்டி.

முதல் படமே டைட்டில் ரோலில் நடிக்கும் வாய்ப்பு சௌகார் ஜானகி கிடைத்தது. அதுவும் விஜயா புரொடக்‌ஷன்ஸ் நாகிரெட்டி தயாரிப்பில்.

1950ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான "சௌகாரு' படத்தை, பத்திரிகைகள் பாராட்டியதுடன் இவரது நடிப்பை புகழ்ந்து விமர்சனங்கள் எழுதியிருந்தன. பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்தில் இவர் இருப்பதாக குறிப்பிட்டிருந்தன.

பி.பானுமதி, கண்ணம்மா, டி.ஆர்.ராஜகுமாரி, மாதுரிதேவி போன்றவர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் புதுமுகமாக அறிமுகமானர், சௌகார் ஜானகி.

அடுத்ததாக் ஜெமினியின் நிறுவனத்தில் தெலுங்கு பட வாய்ப்பும், மாடர்ன் தியேட்டர் தயாரிப்பில் "வளையாபதி' படத்தில் பாரதிதாசன் எழுதிய தமிழ் வசனத்தை பேசி நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தன. தொடர்ந்து வாகினி, ஜெமினி, ஏவி.எம். என வரிசையாக முன்னணி நிறுவனங்கள் தயாரித்த படங்களிலேயே வாய்ப்புகள் கிடைத்தன.

பாக்கியலக்ஷ்மி, படிக்காத மேதை, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், என பீம்சிங்கின் "பா' வரிசைப் படங்கள் பலவற்றிலும் நடித்தார், சௌகார் ஜானகி.

மோட்டார் சுந்தரம்பிள்ளை, ‘பார் மகளே பார்’, ‘புதிய பறவை’, பாபு, ‘நீர்க்குமிழி’, ‘பாமா விஜயம்’, ‘எதிர் நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘தில்லுமுல்லு’ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தன. சோகக் காட்சியில் நடிக்கும் வாய்ப்பே அதிகம் கிடைத்தாலும், காதல், வீரம், பாசம், கோபம், நகைச்சுவை என அனைத்து பாவங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர்.

எம்.ஜி.ஆருடன் "ஒளி விளக்கு',  சிவாஜியுடன் "உயர்ந்த மனிதன்',  என்று தமிழின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருப்பதைப் போலவே தெலுங்கிலும் என்.டி.ராமாராவ், ஏ.நாகேஸ்வரராவ் போன்றவர்களுடனும், கன்னடத்தில் ராஜ்குமார் போன்றவர்களுடனும் நடித்திருக்கிறார், சௌகார் ஜானகி.

பீம்ஸிங், கிருஷ்ணன் பஞ்சு, தாதாமிராசி என்று அத்தனை முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் போதே, கே.பாலசந்தரின் "மெழுகுவர்த்தி' நாடகத்தில் நடித்திருக்கிறார். நாடகங்களுக்காக மட்டும் சுமார் முன்னூறு முறை மேடையேறியிருக்கிறாரம் சௌகார் ஜானகி.

அதிகமாக சோக காட்சிகளில் நடித்தவர். அதே சமயம் நல்ல நடிப்பும் வசனம் பேசும் திறனும் கொண்டவர். பாலசந்தர் இவரது நடிப்புத்திறமையை நன்கு பயன்படுத்திக் கொண்டார். அதானாலேயே இவர் தயாரித்த படத்தை இயக்கும் பொறுப்பு பாலசந்தருக்கே கிடைத்தது

இதுவரை மொத்தம் முன்னூற்று எண்பத்தி ஆறு படங்களில் நடித்திருக்கிறார் சௌகார் ஜானகி. இதில் கன்னடம் முப்பத்தைந்துஇந்தியில் மூன்றுமலையாளத்தில் ஒன்று, மீதி அனைத்தும் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்கள்தான். எந்த மொழியானாலும் அவரே டப்பிங் பேசுவார். "காவியத் தலைவி', "ரங்க ராட்டினம்' ஆகிய இரண்டு படங்களையும் சொந்தமாகத் தயாரித்து நடித்திருக்கிறார்.

இரு கோடுகள் படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற சவுகார் ஜானகி, தமிழ அரசின் கலைமாமணி விருது இருமுறையும், தமிழக அரசின் எம்.ஜி.ஆர். விருது ஒரு முறையும் பெற்றிருக்கிறார். ஆந்திர அரசின் நந்தி விருது இரு முறை பெற்றுள்ள அவுகார் ஜானகி, தெலுங்கு திரைப்பட விருதுகள் கமிட்டி தலைவராகப் பணிபுரிந்துள்ளார்.

சௌகார் ஜானகிக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. இரு தங்கைகள். தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கும் கிருஷ்ண குமாரி இவரது தங்கை.

இவருக்கு பிறந்தவர்கள் இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் யக்ஞபிரபாவின் மகள்தான் வைஷ்ணவி. இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். மகன் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்.

ஒரு நடிகைக்குள் இவ்வளவு திறமையை எப்படி ஒளித்து வைத்து கொண்டிருக்கிறார் என்று இந்திய திரையுலகினர் பலர் மூக்கில் விரல் வைத்து வியக்கும் ஒரு திறமையான நடிகை சௌகார் ஜானகி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக