ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

வெண்ணிற ஆடை மூர்த்தி


வெண்ணிற ஆடை மூர்த்தி

நடிகர், வக்கீல்,கதாசிரியர்,சின்னத்திரை  இயக்குனர், ஜோசியர் எனப் பல முகங்களைக் கொண்ட வெண்ணிற ஆடை மூர்த்தி 1936 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி சிதம்பரத்தில் பிறந்தவர்

இவரது தந்தையான    கே.ஆர்.நடராஜன் கடலூர் மாவட்டத்தில் பிரபலமான வழக்கறிஞர். தந்தை வழியில் இவரும் வழக்கறிஞருக்கு படித்தார்.

சட்டப்படிப்பை முடித்த நேரத்தில் இவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, வேறொரு சீனியரிடம் ஜுனியராக பிராக்டிஸ் செய்ய விருப்பம் இல்லாமல், அப்போது சர்வதேச அளவில் புகழ் பெற்றிருந்த "ரெமிங்டன்'' டைப்ரைட்டர் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்கு சென்றார் இவர்

ஊர் ஊராக சுற்ற வேண்டிய வேலை என்பதால், ஒரு வருடத்திற்கு மேல் அவரால் அந்த வேலையில் நீடிக்க முடியவில்லை. வேறு வேலை தேடிக் கொண்டிருந்த போதுதான்  இயக்குநர் ஸ்ரீதரின் உதவியாளர் என்.சி.சக்ரவர்த்தியின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. உட்லேண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டலில் அவரை சந்தித்த இவர் சக்ரவர்த்தி  இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றுவது தெரிந்ததும் ஸ்ரீதர் படத்தில் நடிக்க தனக்கு  ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று அவரிடம் கேட்டார்.   தான் தங்கியிருந்த ஓய்.எம்.சி.ஏ.வில் மூர்த்தி நடித்த நாடகங்களை சக்ரவர்த்தி பார்த்திருக்கிறார் என்பதால் மறுநாள் சத்ரின் அலுவலகத்திற்கு வந்து அவரை சந்திக்குமாறு இவரிடம் கூறினார்  அவர்

 இயக்குநர் ஸ்ரீதரை இவர் சந்தித்தபோது நீ ஏன் காமடி ரோலில் நடிக்க வேண்டும் உனக்கு அதற்கான முகம் இல்லையே    பார்ப்பதற்கு லட்சணமாக அழகாக அல்லவா இருக்கிறாய் என்று ஸ்ரீதர் சொல்ல நகைச்சுவை வேடங்களில் பெயர் வாங்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்று சொன்ன மூர்த்தி ஸ்ரீதரின் அலுவலகத்தை விட்டுக் கிளம்பும்போது முகம் அழகா இருந்தால் அதிஷ்டம் என்று இதுவரை நினைத்திருந்தேன். அது துரதிருஷ்டம் என்று இன்றுதான் தெரிந்தது என்றிருக்கிறார்

அந்த வார்த்தைகள்தான் என்  வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.  இவரை நடிக்க வைத்து பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தார் ஸ்ரீதர் அதற்குப் பிறகு ஐம்பது வருடங்கள் கடந்து விட்டன இன்னும் நான் சினிமா உலகில் இருக்கிறேன் என்றால் அதற்கு வித்திட்டது அந்த வார்த்தைகள்தான் என்கிறார் இவர்

1965ல் வெளியான `வெண்ணிற ஆடை'. சாதாரண மூர்த்தியாக இருந்த இவரை `வெண்ணிற ஆடை' மூர்த்தி என்று அழைக்க வைத்தது. அதன் பிறகு ஆறு மாதம் கழித்து `காதல் படுத்தும்பாடு' படத்தில்  தங்கவேலுவுடன் வரும்  ஒரு நகைச்சுவை வேடத்தில் நடித்தார் இவர்.

இவரது குடும்பம் மிகவும் ஆச்சாரமான ஒரு குடும்பம் ஆகவே தான் சினிமாவில் நடிப்பதை அவர்களிடம் சொல்லவே முதலில் தைரியம் வரவில்லை இவருக்கு

இவரது தந்தை உடல் நலமில்லாமல் இருந்த போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சான் சினிமாவில நடிப்பது பற்றி இவர் சொன்ன போது இவரது தந்தை சிந்திக்கத் தக்க சில விஷயங்களை சொன்னார்

நீ செய்தது தப்பு என்று சொல்லவோ அல்லது உன்னுடன் வாதம் பண்ணவோ எனக்குத் தெம்பில்லை  ஒரு விஷயம் சொல்றேன் நீ ரொம்ப கொஞ்சமாக சம்பாதித்தால் வாழ்க்கை பிரச்னையாயிடும்  அதே சமயம் அதிகமான சம்பாத்தியம் மிகவும் ஆபத்தானது என்று சொன்னார் அவர்

அவர் ஆசியோ என்னவோ என் வாழ்க்கை அப்படியே அமைந்தது  நான் சினிமாவில் உச்சத்தையும் தொடவில்லை தரையிலும் விழவில்லை என்கிறார் இவர்

இவர் எதிர்பார்த்தபடி தொடர்ந்து  படங்களில் நடிக்க  வாய்ப்பு கிடைக்காததால், `சித்ராலயா' கோபுவுடன் சேர்ந்து `காசேதான் கடவுளடா', `வீட்டுக்கு வீடு', `ஸ்ரீமதி' போன்ற நாடகங்களை நடத்தினார் இவர் . இதில் "காசேதான் கடவுளடா'' நாடத்தைப் பார்த்த பட அதிபர் ஏவி.மெய்யப்ப செட்டியார் அந்த நாடகத்தை படமாக்க விரும்பினார். அதில் இவர் நடித்த வேடத்தில் இவரே நடித்து புகழ் பெற்றார்.

நாடகங்களில் நடித்த அனுபவத்தில் இவரும் "லட்சுமி கல்யாண வைபோகமே'' என்கிற நாடகத்தை உருவாக்கினார். இந்த நாடகம் சிங்கப்பூர், இலங்கை என வெளிநாடுகளிலும் நடந்தது.

இவர் சினிமாவுக்காக இரண்டு கதைகள் எழுதினார். அதில் "மாலை சூடவா'' கமலஹாசன் நடிக்க, சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் படமானது. "ருசி'' என்ற பெயரில் இவர் எழுதிய இன்னொரு கதையில் மோகன் நடிக்க, "அன்னக்கிளி'' இயக்குநர்கள் தேவராஜ் - மோகனில் ஒருவரான மோகன் இயக்கினார். இந்த இரண்டு படங்களுக்கும் வசனமும் எழுதினார், இவர்.

தமிழில் உள்ள பெரும்பாலான நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் இவருக்கு  எம் ஜி ஆருடன்  இணைந்து  நடித்து ஒரு படம் கூட வெளிவரவில்லைஎ என்ற ஏக்கம் இன்றுவரை இருக்கிறது . . எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை'' படத்தில் நடிக்க இவருக்கு  வாய்ப்பு வந்தது. ஆனால் கதையுடன் ஒட்டவில்லை என்று இவர் நடித்த காட்சிகள் நீக்கிவிட்டனர். இருப்பினும் மேஜர் சுந்தர்ராஜனின்  நாடகத்தில் நடித்த போது  எம்.ஜி.ஆர். இவரைப் பாராட்டியது மறக்க முடியாத தருணம் என்கிறார்.

நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சோ, சுருளிராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என அத்தனை நகைச்சுவை நடிகர்களுடனும்  இணைந்து நடித்திருக்கிறார் இவர். இவருக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் நாகேஷ்.

வசனம் பேசிக் கொண்டிருக்கும் போதே இடைச் செருகலாக புதிய வார்த்தைகள் எதையாவது கோர்த்து விடுவது இவர் வழக்கம் . நாளடைவில் ரசிகர்கள் அதை ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். ஒவ்வொரு படத்தில் இவரைப் பார்க்கும் போதும், இந்தப் படத்தில் அதுமாதிரி புதுசாக என்ன சொல்லப்போகிறார் என்று எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.

சினிமாவில் `பிசி'யாக இருந்த நேரத்திலும், ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் நடித்தார் இவர். தூர்தர்ஷனில் கதை வசனம் எழுதி, 5 சீரியல்களை இயக்கியிருக்கிறார். தனியார் டி.வி.யில் 24 சீரியல்களில் நடித்திருக்கிறார். "மீண்டும் மீண்டும் சிரிப்பு'' என்கிற இவர் நடித்த தொடர், ஐந்தாண்டுகள் ஒளிபரப்பு ஆனது.

1992-ஆம் ஆண்டு தமிழக அரசின் "கலைமாமணி'' விருது பெற்ற இவர் சென்சார் போர்டு உறுப்பினராக 2 ஆண்டுகள், பட்ஜெட் படங்களை தீர்மானிக்கும் குழுவில் 2 ஆண்டுகள் சிறந்த படங்களை தேர்வு செய்யும் குழுவில் 2 ஆண்டுகள் என மத்திய, மாநில அரசுகளின் கவுரவப் பொறுப்புகளிலும் இருந்திருக்கிறார்.

நடிப்பில் தன்னை பல கோணங்களில் வெளிப்படுத்திய மூர்த்தி, நாணயங்களை சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். இந்திய நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள் என  3 ஆயிரத்துக்கு மேல் இவர் கலெக்ஷனில் உள்ளன.

பேசி சிரிக்க வைத்த இவர் எழுதியும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். "வெண்ணிற ஆடை மூர்த்தியின் ஜோக்ஸ் டயரி'' பாகம்-1, பாகம்-2 என்ற பெயரில் 2 புத்தகங்களாக வெளிவந்திருக்கிறது. "சூப்பர் மார்க்கெட்'' என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.

வெளிநாடுகளில் "நட்சத்திர இரவு'' கலை நிகழ்ச்சிகளுக்கு `பிள்ளையார் சுழி' போட்டவரும் இவரே. அன்றைய பிரபலங்களான  மோகன் - அமலா ஆகியோரை பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்றார். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், ராஜசுலோசனா, சி..டி.சகுந்தலா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் சென்று வந்தார்.

ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளவர் இவர். இதனால், ஜோதிட கலையை கற்று பலருக்கு உதவி இருக்கிறார்.

பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை, 1970 ஆம் ஆண்டு காதலித்து மணந்தார் இவர். இவர்களுக்கு மனோ என்கிற மகன் இருக்கிறார். அதிகமாக எதற்கும் ஆசைப்படாத குணமுடையவர் இவர், அதனால்தான் இவரது வாழ்க்கை இன்றுவரை ஆனந்தமாக இருக்கிறது  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக