கன்னடத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில்
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அர்ஜுனின் இயற்பெயரைத் தமிழ்
ரசிகர்களில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை இவரது இயற் பெயர் சீனிவாச சார்ஜா.
இவரது இன்னொரு பெயர் அசோக்பாபு.
1962 ஆம் ஆண்டு, ஆகஸ்ட்
மாதம் 15ஆம் தேதி மைசூரில் பிறந்த சக்தி பிரசாத், லட்சுமி
தேவி தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் அர்ஜுன். அர்ஜுனின் அம்மா லட்சுமிதேவி
ஆசிரியராக இருந்தார். அப்பா சக்தி பிரசாத் கன்னடப் படங்களில் வில்லன் மற்றும்
துணைக் கதாப்பத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
பள்ளியில் படிக்கும் போது போலீசில் சேர வேண்டும்
என்பது அர்ஜுனின் ஆசையாக இருந்துள்ளது. புரூஸ் லீ நடித்த எண்டர் த டிராகன் படம்
பார்த்ததில் இருந்து கராத்தே மீது இவருக்கு ஆர்வம் பிறக்க தனது பதினாராவது வயதில் கராத்தே பயிற்சி பெற்ற அர்ஜுன்
அதில் கருப்பு பெல்ட்டும் பெற்றார்.
இயக்குநர் ராஜேந்திர சிங் பாபு கன்னடத்தில் ‘சிம்மதா
மரி சைன்யா' என்கிற படத்தை தொடங்கினார். முழுக்க முழுக்க சிறுவர்களை மையமாக வைத்து உருவான
அந்தக் கதையில் துடிப்பும் வேகமும் உள்ள ஒரு சிறுவன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க
தேவைப்பட்டான்.
அவரது தேடலில் கிடைத்தவர்தான் அர்ஜுன். பையன்
படிக்கட்டும். நடிப்பு வேண்டாமே என்று அர்ஜுன் தந்தை தயங்கி இருக்கிறார். இது
குழந்தைகள் படம் என்று அவரை சமாதனப் படுத்தி சீனிவாச சர்ஜா என்கிற அர்ஜுன் பெயரை அர்ஜுன்
என்று மாற்றி அந்தப் படத்தில் மாஸ்டர் அர்ஜுனாக நடிக்க வைத்தார், ராஜேந்திர சிங்
பாபு.
அம்ரிஷ் பூரி வில்லனாக நடித்த அந்தப் படத்தின்
பெரும்பகுதி படப்பிடிப்பு காட்டில் நடந்துள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில்
ஐநூறு அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கியபடி அர்ஜுன் சென்ற காட்சி
பரபரப்பானது. 1981 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் கர்நாடக மாநில திரைப்பட
விருதுகளில் இரண்டு விருதுகளை வென்றது.
அதன் பிறகு அர்ஜுனுக்கு தொடர்ந்து படங்களில்
நடிக்க வாய்ப்புகள் வந்தன. அவரது தந்தை ஒரு நடிகராக இருந்த போதிலும் அர்ஜுன்
சினிமா துறைக்கு வருவதை அவர் விரும்பவில்லை. அதனால், இளம் வயதில் அவருக்கு வந்த
வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழித்தார் அவர்.
அதற்கு காரணம், அர்ஜுனின் தந்தை இருநூறு
படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். வில்லன், துணை கதாப்பாத்திரங்கள் என்று
நடித்தாலும் வாழ்க்கை வெற்றிகரமானதாக மையவில்லை. தன்னைப் போல மகன் போராட்டமான
வாழ்க்கை வாழ வேண்டாம். இங்கு கஷ்டம் அதிகம். சினிமாவுக்கு வருகிற எல்லோரும்
வெற்றி பெற்றுவிட முடிவதில்லை. சினிமாவுக்கு உள்ளேயும், வெளியேயும் நிறைய பேர்
போராடுகிறர்கள். அந்த நிலை உனக்கு வர வேண்டாம் என்று தடுத்தார்.
ஆனால், அம்பரிஷ் விடவில்லை. அவர் நடித்த ‘ஆஷா’
படத்தில் அர்ஜுன் நடிக்க வேண்டும் என்று
கேட்டுக் கொண்டார். அம்பரிஷ் வார்த்தையை
நிராகரிக்க முடியவில்லை. ஏ.டி.ரகு என்பவர் இயக்கிய அந்தப் படத்தில் அர்ஜுனுக்கு
ஜோடியாக இந்திரா நடித்திருந்தார். 1983 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் பெரும்
வெற்றிப் படமாக அமைந்தது.
அந்த ஒரு படம் கொடுத்த வெற்றி ஐந்து கன்னடப்
படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார், அர்ஜுன். அதில் அவர் நடித்த ‘பூஜா பலா’ என்கிற
படத்தில் அவருடன் நடித்தவர், ஏவி.எம்.ராஜனின் மகள் மகாலட்சுமி. அவர், அர்ஜுனின்
திறமையைப் பார்த்து அசந்து போனவர், அதே ஆண்டில் அவரது அப்பா ஏவி.எம்.ராஜன்
தயாரிப்பில் ராமநாராயணனின் இயக்கத்தில் உருவாக இருந்த ‘நன்றி’ படத்தில் அர்ஜுன்
நடிக்க சிபாரிசு செய்திருக்கிறார்.
ஏவி.எம்.ராஜனும், மகாலட்சுமியும் அர்ஜுனின் திறமையைப்
பற்றி சொல்லியதை கேட்டு அர்ஜுனை நேரில் அழைத்துப் பார்த்த இயக்குநர் ராம நாராயாணன்,
கார்த்திக் கதாநாயகனாக நடிப்பில் உருவான ‘நன்றி’ படத்தில் இன்னொரு நாயகனாக வாய்
பேசாத வேடத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் ஏவி.எம்.ராஜனின் மகள்
மகாலட்சுமி, சாரதா என்கிற ஸ்கூல் டீச்சராகவும் நடித்திருந்தார்.
இந்த நன்றி திரைப்படம் தமிழில் அர்ஜுனுக்கு நல்ல
அறிமுகத்தையும் வரவேற்பையும் பெற்று தந்தது. தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடிக்க
காரணமாக அமைந்தது.
தமிழ், கன்னட படங்களில் அர்ஜுனின் திறமையைப்
பார்த்த தெலுங்குபட இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா, அவர் இயக்கிய மா பல்லிலோ
கொபாளுடு படத்தின் மூலம் தெலுங்கு மொழியிலும் அறிமுகமானார் அர்ஜுன்.
தமிழில் ராம நாராயணன், சோழராஜன் ஆகியோரது
படங்களில் இரண்டு நாயகர்களில் ஒருவராக தொடர்ந்து நடித்து வந்த அர்ஜுனை, கதாநாயகனாக
யார் படத்தில் அறிமுகம் செய்த, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு, அந்தப் படத்தின்
விளம்பரங்களில் ஆக்சன் கிங் என்று விளம்பரப் படுத்தினார்.
அதன் பிறகு தெலுங்கு மொழிகளில் பல படங்களில்
நடித்தவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தது ஏவி.எம்.நிறுவனம். அவர்கள் தயாரித்த
சங்கர் குரு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் இயக்குநர் எல்.ராஜா
இயக்கத்தில் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்தார் அர்ஜுன்.
அர்ஜுனின் பல படங்கள் தமிழில் இருந்து
தெலுங்கிலும், தெலுங்கில் இருந்து தமிழிலும் மொழி மாற்றம்
செய்யப்பட்டு வெளியாகின.
ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள்
குறைந்த போது சேவகன் என்கிற படத்தை சொந்தமாக தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்தது
மட்டுமின்றி அந்தப்படத்தை இயக்கும் பொறுப்பையும் ஏற்றார். அந்தப் படம் இவருக்கு இயக்குனர் நடிகர் என இரு
தகுதிகளிலும் வெற்றியைக் கொடுத்தது.
சேவகன் படத்தின் வெற்றியைக் கண்டு அவரை தேடி
நிறைய வாய்ப்புகள் வந்தன. தோல்வியில் இருந்த போது வெற்றிப் படம் கொடுக்க வேண்டும்
என்று யாரும் வரவில்லை. நமக்காக வெற்றி படம் கொடுத்ததும் வெற்றியை வைத்து தேடி
வருகிறார்கள் என்று ஆத்திரப்பட்ட அர்ஜுன், வந்த வாய்ப்புகளை மறுத்து, இனி தானே
சொந்தமாக கதை எழுதி தயாரித்து இயக்கி நடிப்பது என்கிற முடிவில் இருந்தார்.
அப்போது இயக்குநர் ஷங்கர் அணுகி ஜென்டில்மேன்
கதையை சொல்ல முயன்ற போது முதலில் கதை கேட்கவே தயங்கியவர், பிறகு, கதையை கேட்டு
நடிக்க சம்மதித்தார். 1993-ஆம் ஆண்டு 'ஜெண்டில்மேன்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றி அர்ஜுனின் திரைவாழ்வில் அவருக்கு மிகப்
பெரிய உயரத்தைப் பெற்றுத் தந்தது. தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விர்தும்
பெற்றார்.
அதே ஆண்டு வெளியான 'பிரதாப்', 'கோகுலம்' திரைப்படங்களும் வெற்றிபெற்றன 1994-ல் அவர் இயக்கி நடித்த 'ஜெய் ஹிந்த்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப்
பெற்றது. அந்தப் படத்தில் தீவிரவாதிகளைப் பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக
நடித்திருந்தார். இந்தியத் தேசப்பற்றை முன்னிறுத்திய அந்தப் படம் தேசப்பற்றை
மையமாகக் கொண்ட பல காவல்துறைப் படங்களுக்கு முன்னோடியாக அமைந்தது.
1995-ல் அர்ஜுன் முதல் முறையாக இரட்டை வேடத்தில்
நடித்து இயக்கிய 'கர்ணா' திரைப்படம்
மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் வித்யாசாகர் இசையில் அனைத்துப்
பாடல்களும் புகழ் பெற்றன.
சிறுவயதிலிருந்தே கமலின் ரசிகரான அவருக்கு கமல்ஹாசன்
தயாரிபில் நடிக்கும் வாய்ப்பு குருதிப்புனல் படத்தில் கிடைத்தது. ஒளிப்பதிவாளர்
பி.சி.ஸ்ரீராம் இயக்கிய அந்தப் படம் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் பிரிவில்
இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாக 68வது அகடாமி விழாவில் திரையிடப்பட்டது. இதில் அர்ஜுனின்
வேடத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் அடிமை சங்கிலி
படத்தில் நடித்தவர், சிவாஜியுடன் இணைந்து மன்னவரு சின்னவரு என்கிற தனது நூறாவது படத்தில்
நடித்து பெருமைப்பட்டார்.
அதன் பிறகு ரஜினி மறுத்த முதல்வன் கதையில்
ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடித்தார், அர்ஜுன். அந்தப் படம் மிகப் பெரிய
வெற்றிப் படமாக அமைந்து அவருக்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதிணை பெற்று
தந்தது.
வஸந்த் இயக்கத்தில் 2000-ம் ஆண்டில் வெளியான 'ரிதம்' வணிகரீதியான வெற்றியைப் பெறவில்லை
என்றாலும் அர்ஜுனின் திரைவாழ்வில் மிக முக்கியமான படமாக அமைந்தது.
அதன் பிறகு வெளியான வானவில், 'ஏழுமலை', ஒற்றன், 'கிரி',
'மருதமலை' போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக
அமைந்தாலும், அதில் 'கிரி', 'மருதமலை'
படங்களில் வடிவேலுவுடன் நகைச்சுவைக் காட்சிகளிலும் நடித்து சிரிக்க
வைத்தார்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் 'பொம்மலாட்டம்' படத்தில் நானா படேகருக்கு
இணையான வேடத்தில் நடித்த அர்ஜுன், 2011-ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் 50-ம் படமான 'மங்காத்தா' படத்தில் எதிர்மறை அம்சங்கள் நிரம்பிய
நாயகனை எதிர்க்கும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் மிகப்
பெரிய வெற்றியும் அரசுனுடைய கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பும் அவருடைய
திரைப்பாதையில் மாற்றத்துக்கு வித்திட்டன.
2013-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் தீமையின் மனித உருவமாக
நடித்து அசத்தினார்.
2016-ல் வெளியான மிகப்பெரிய வெற்றிபெற்ற 'இரும்புத்திரை' படத்தில் வில்லனாக அவர்
நடித்த விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அறிவும் மிடுக்கும் நிறைந்த வில்லன்
கதாபாத்திரங்களுக்கான மிகச் சிறந்த தேர்வாகத் திகழ்கிறார் அர்ஜுன்.
அர்ஜுன் கன்னடத்தில் நடித்த பிரசாத் என்கிற படம்
கர்நாடக அரசின் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதைப்
பெற்று தந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய
மொழிகளில் 160 படங்களில் நடித்துள்ள அர்ஜுன், 14 படங்களுக்கு கதை எழுதி
இருக்கிறார். ஒன்பது படங்களை தயாரித்திருக்கும் அவர், 12 படங்களை இயக்கி
இருக்கிறார்.
மற்ற கதாநாயகர்களைப் போலவே பாடகராகவும் அவதாரம்
எடுத்த அர்ஜுன் இதுவரை ஏ.ஆர்.ரகுமான், சங்கர் கணேஷ், வித்யாசாகர், தேவா ஆகியோரது
இசையமைப்பில் ஐந்து பாடல்களைப் பாடி இருக்கிறார்.
இவரது மனைவியின் பெயர் ஆஷாராணி. இவர்களுக்கு
ஐஸ்வர்யா, அஞ்சனா என இருமகள்கள் உள்ளனர். இதில்
ஐஸ்வர்யா, விஷால் கதாநாயகனாக நடித்த பட்டத்து யானை படத்தில்
கதாநாயகியாக 2௦12ஆம் ஆண்டு அறிமுகமானார்.
அதன் பிறகு அர்ஜுன் இயக்கிய சொல்லிவிடவா படத்தில் தமிழ், மற்றும் கன்னட பதிப்பில்
நடித்திருக்கிறார்.
கதாசிரியர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல தகுதிகளில்
திரையுலகில் வெற்றிகரமாக பவனி வரும் அர்ஜுன் கடந்த நாற்பது ஆண்டுகளாக நீடித்து
இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இவரது நடிப்புத் திறமை மட்டுமல்ல இவரது
பழகும் தன்மைக்கும் அதில் முக்கிய பங்குண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக