புதன், 9 ஜூலை, 2014

அண்ணன் எம்.எஸ்.பாஸ்கர் பல்லாண்டு வாழட்டும்

செல்போன் அழைப்பில் எம்.எஸ்.பாஸ்கர் அழைத்தார். வணக்கம் சொன்னேன்.

“அண்ணே… தினத்தந்தியில் அரிமா நம்பி விமர்சனம் படித்தீர்களா? என்று கேட்டார்.

இப்போதுத்தான் வாக்கிங் போய் திரும்பினேன். இனிமேல்தான் படிக்கனும் என்றேன்.

”படம் முழுக்க நிறைய காக்கி சட்டைகள். அத்தனை பேரையும் பின்னால் தள்ளி மனதில் இடம் பிடிப்பவர், சப்'இன்ஸ்பெக்டர் எம்.எஸ்.பாஸ்கர்தான். சரியான தருணத்தில் அவர் விக்ரம் பிரபுவை காப்பாற்றுகிற காட்சியில், கரகோஷத்தை அள்ளுகிறார்…” என்று தினத்தந்தி விமர்சனத்தில் அவரைப் பற்றி வந்த வரிகளை படித்துக் காட்டுகிறார்.

உடனே தினத்தந்தி நிருபருக்கு போன் செய்து நன்றி தெரிவியுங்கள் என்று தெரிவித்தேன்.

நடிகர் விக்ரம் பிரபு பத்திரிகையாளர் சந்திப்பில் அரிமா நம்பி படம் பற்றி பதிலளிக்கும் போது, ஒரு நிருபர்,

’’ரொம்ப நாட்களுக்கு பிறகு அதிக இடங்களில் கைத்தட்டல்கள் பெற்ற படமாக அரிமா நம்பி படம் இருக்கிறது. அதில் எம்.எஸ்.பாஸ்கர் வருகிற இரண்டு காட்சியிலும் அவருக்கும் கைத்தட்டல்கள் விழுகிறது. அதை ஒரு கதாநாயகனாக நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?’’ என்று அவரிடம் கேட்டார்.

அதற்கு விக்ரம் பிரபு, ’’அது நல்லதுதானே? அப்படின்னா நான் நல்லப் படத்தில் இருக்கிறேன் என்றுதானே அர்த்தம். அதைத்தான் நான் எப்போதுமே விரும்புகிறேன். எனது தாத்தா, எனது தந்தை, மற்றும் என் மீதும் அதிக மரியாதையும் அன்பும் வைத்திருப்பவர் எம்.எஸ்.பாஸ்கர். அவருக்கு எனது படத்தில் ஸ்கோர் பண்னுகிற வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியே…” என்று பதிலளித்தார்.

விக்ரம் பிரபு சொன்னதைப் பற்றி எம்.எஸ்.பாஸ்கரிடம் தெரிவித்தேன். அவர் மகிழ்ச்சி அடைந்தார். கேள்வி கேட்ட அந்த நிருபருக்கு நன்றி தெரிவிக்க செல்போன் எண் என்னிடம் பெற்றுக்கொண்டார்.

பிறகு, ”இன்னைக்கு என்ன வேலை? என்று என்னிடம் கேட்டார்.

”மதியம் ராஜ் டிவியில் படப்பிடிப்பு இருக்கிறது… “ என்று பதில் சொன்னேன்.

”இன்னைக்கு இரவு ஏழு மணிக்கு தளபதி தினேஷ் மாஸ்டர் வீட்டு திருமண வரவேற்பு விழாவுக்கு போகனும். நீங்களும் வாந்திருங்க, அங்கு சந்திக்கலாம்…” என்றார்.

அதே போல விஜய் பார்க் ஹோட்டலில் நடந்த அவ்விழாவுக்கு சென்றோம்.  வெளியில் வந்து சில மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விமர்சனம் எழுதிய மற்ற பத்திரிகை நிருபர்களுக்கும் நன்றி தெரிவிக்க தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டு புறப்பாட்டார்.

நான் டூ வீலர் பார்க்கிங் சென்று கொண்டிருத போது செல்போனில் அழைப்பு. எதிர் முனையில் பத்திரிகையாளர் முருகன் மந்திரம். ’அண்ணே வருத்தமான செய்தி. எம்.எஸ்.பாஸ்கர் இறந்து விட்டாராமே?. என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.

பத்து நிமிடம் கூட ஆகவில்லை. இவ்வளவு நேரம் ஒன்றாகத்தான் இருந்தோம். இப்போதுதான் வீட்டுக்குப் போகிறார் என்றேன்

அப்போ வதந்தியா? இனையதளத்தில் செய்தி வந்திருக்கு அண்ணே?. என்று சொல்லிவிட்டு பிறகு மற்ற விஷயங்கள் பற்றி பேசினார்.

நான் வீடு வந்து சேரவில்லை. அதற்குள் மீடியா நண்பர்களிடம் இருந்து வரிசையாக அழைப்பு.

நான் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களிடம் செல்போனில் அழைத்து செய்தியை சொன்ன போது, அவர் சிரிக்கிறார். பிறகு ”காலையில் இருந்து செல்போனில் பாராட்டு தெரிவித்து செய்தி வந்தது. இப்போது இந்த செய்தியா?. திஷ்ட்டி கழிந்ததாக நினைத்துக் கொள்வோம். என்று பதில் சொன்னார்.

நள்ளிரவு வரை செல்போன் அழைப்புகளும், விசாரிப்புகளுமாக நேரம் கடந்தது.

சினிமா நிருபர்கள் பகல் முழுவதும் உழைத்து இரவு படுக்கையில் விழுந்தால் கூட அவர்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. அவர்கள் வேலை செய்யும் நிர்வாகத்துக்கு, இந்த வதந்திக்கு பதில் சொல்லிவிட்டுதானே படுக்கைக்கு செல்ல வேண்டியிருக்கிறது?. ஞாயிறு என்று கூட பார்க்காமல்?.

விஞ்ஞானம் நமக்கு பெரிய உதவியாக இருக்கிறது. சிலர் அதை ஏன் தவறாக பயன்படுத்தி இந்த மாதிரி வதந்திகளை பரப்புகிறார்கள்?.. அவர்களுக்கும் குடும்பம், உறவுகள், நண்பர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்?


வதந்தி பரப்புகிறவர்கள் இதைப் பற்றி யோசிப்பார்களா?

1 கருத்து:

  1. திஷ்ட்டி கழிந்ததாக நினைத்துக் கொள்வோம்....எம்.எஸ்.பாஸ்கர்

    பதிலளிநீக்கு