புதன், 3 செப்டம்பர், 2014

சூப்பர் ஹீரோ சரத்குமார்

தமிழ் சினிமாவில் துணைக் கதாபாத்திரங்கள். வில்லன் என படிப்படியாக நடித்து கதாநாயகனாகி நட்சத்திர அந்தஸ்தைப் பிடித்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நடிகராக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பவரான சரத்குமார்,  1954ம் ஆண்டு ஜூலை 14ம் நாள் ராமநாதன் - புஷ்பலீலா தம்பதிக்கு கடைக்குட்டி மகனாக பிறந்தவர்.

சரத்குமாருக்கு சுதர்ஷன் என்கிற அண்ணனும், மல்லிகா என்கிற அக்காவும் உடன் பிறந்தவர்கள். சரத்குமாரின் தந்தை சிவகங்கை எம்.ராமநாதன் டெல்லியில் உள்ள இந்திய பத்திரிகை தகவல் பணியகத்தில் (Press Information Bureau of India) பணியாற்றி வந்தார். இதனால், ராஜ முத்தையா பள்ளியிலும், ஐ.ஐ.டி மதராஸ் சென்ட்ரல் ஸ்கூல் மற்றும் செயின்ட் பாட்ரிக்ஸ் ஆங்கிலோ மேல்நிலை பள்ளியிலும் படித்திருக்கிறார்.

படிக்கும் காலத்தில் இருந்தே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த சரத்குமார், கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி என்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். 1970ம் ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட NCC மாணவர்களில் சரத்குமாரும் ஒருவர். ப்ரீ- யூனிவர்சிட்டி சென்னை லயோலா கல்லூரியில் முடித்த பிறகு, பி.எஸ்.சி. மேத்ஸ் நியூ காலேஜில் முடித்தார் சரத்குமார்.

உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த சரத்குமார், 1974ம் ஆண்டு மிஸ்டர் மெட்ராஸ் யூனிவர்சிட்டி டைட்டில் பட்டம் வென்றார். சரத்குமாரின் அக்காள் மல்லிகாவின் கணவர் கே.பி.கந்தசாமி நடத்தி வந்த தினகரன் பத்திரிகையின் பெங்களூர் விநியோகம் வேலை விஷயமாக பெங்களூர் சென்ற சரத்குமார், அங்கு சினிமா உலகத்தினருடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

‘சமாஜம்லோ ஸ்த்ரி’ என்ற தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு தயாரிப்பாளரின் நண்பருடன் சென்ற சரத்குமாரை தெலுங்குப் பட  இயக்குனரான முக்கால் ராமகிருஷ்ணா பேசிக் கொண்டிருந் போது, சிறந்த ஆணழகன் பட்டம் வென்ற சரத்குமாரின் உடற்கட்டை கண்டு ஆச்சர்யப்பட்ட முக்கால் ராமகிருஷ்ணா, தான் இயக்கிய ‘சமாஜம்லோ ஸ்த்ரி’ தெலுங்குப் படத்தில் சுரேந்திரபாபு என்கிற வேடத்தில் நடிக்க வைத்தார். 1986 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் சுமன், பானுசந்தர், விஜயசாந்தி மூவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

அடுத்து ‘தாயே நீயே துணை’ படத்தில் சிறு வேடத்தில் நடித்த இவருக்கு  அந்தப் படத்தின் கதாநாயகன் கார்த்திக்கின் நட்பு கிடைக்க, அதைத் தொடர்ந்து தனது நண்பருடன் இணைந்து கார்த்திக் நடித்த ‘கண் சிமிட்டும் நேரம்’ படத்தைத் தயாரித்து தயாரிப்பாளராகவும் திரையுலகில் அடியெடுத்து வைத்தார், சரத்குமார்.

கவிஞர் கண்ணதாசனின் மகன் கலைவாணன் அந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக ஒரு துணைக் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்தார். 1988-ல் வெளியான அந்தப் படமே சரத்குமாரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. அந்தப் படம் தமிழில் நூறுநாள் படமாக அமைந்ததோடு தெலுங்கில் ‘கார் கோட்ட குடு’ என்கிற பெயரில் மொழி மாற்றத்துடன் வெளியானது.

திரைப்பட கல்லலூரி மாணவரும், மணிவண்ணனின் உதவியாளருமான ஆர்.கே.செல்வமணி இயக்குனராக அறிமுகமான  புலன் விசாரணை படத்தில் கதாநாயகன் விஜயகாந்துக்கு எதிரான வில்லனாக நடித்தார் சரத்குமார். ஆட்டோ சங்கரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘புலன் விசாரணை’ படத்தில் கிளைமாக்ஸ் சண்டை காட்சி மிக பிரமாண்டமாகவும், அழகாகவும் படமாக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் மூலம் பெரிய அளவில் பேசப்பட்டார், சரத்குமார். இதே ஆண்டில் பதினைந்து தமிழ் படங்களிலும், நான்கு தெலுங்கு படங்களிலும் நடித்தார் சரத்குமார்.

தொடர்ந்து வில்லனாக நடித்து வந்த சரத்குமாரை பாசிடிவ்வான வேடத்தில் காட்டிய படம் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்தின் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் படம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குநராக அறிமுகமான 'புரியாத புதிர்' படத்தில் ஒரு முக்கிய துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார் சரத்குமார்.

அடுத்த ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய 'சேரன் பாண்டியன்' படம் மூலம் அதுவரை சிறிய துணைக் கதாபாத்திரங்களில் நடித்துவந்த சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவரானார். அந்தப் படத்தில் அவர் கதாநாயகன் இல்லை என்றாலும் அந்த படமே அவர் கதாநாயகனாக உயர்வதற்கு அடித்தளம் அமைத்தது. அந்த அளவு 'சேரன் பாண்டியன்' படத்தில் சரத்குமார் ஏற்ற கதாபாத்திரமும் அதில் அவருடைய நடிப்பும் ஒரு நாயகத்தன்மையுடன் மக்களை ஈர்த்தது.

அதே ஆண்டில் பவித்ரன் இயக்கிய 'வசந்தகாலப் பறவைகள் படத்தில் கதாநாயகனாக நடித்தார் சரத்குமார். அடுத்த ஆண்டு பவித்ரன் இயக்கிய 'சூரியன்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிபெற்று சரத்குமாரை ஒரு கதாநாயக நடிகராக நிலைநிறுத்தியது.

இயக்குனர் மணிவாசகம் இயக்கிய பெரிய கவுண்டர் பொண்ணு படமும் நூறு நாள் ஓடி சரத்குமாரின் உயரத்திற்கு துணை நின்றது.

சரத்குமாரின் 62 வது படமாக வெளிவந்த நாட்டாமை படம்  வெற்றி படமாக அமைந்தது மட்டுமின்றி  அவருக்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுத்  தந்தது. சரத்குமாரின் திரையுலக வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு படமாக விக்ரமனின் இயக்கத்தில் உருவான சூரியவம்சம் படம் அமைந்தது.

தொடர்ந்து நட்புக்காக, சிம்மராசி, மாயி, 'மகாபிரபு', சமுத்திரம், அரசு, அய்யா, ஏய் என பல படங்கள் அவருக்கு வெற்றி படங்களாக  அமைந்தன.

'பெண்னின் மனதைத் தொட்டு', 'உள்ளம் கொள்ளை போகுதே', 'ஜித்தன்' போன்ற படங்களில் கவனிக்கத்தக்க குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். 2007-ல் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் ஒரு நடிகராக தன் இயல்புக்கு மாறாக பலவீனங்கள் நிறைந்த நடுத்தர வயது மனிதராக வெகு சிறப்பாக நடித்திருந்தார்.

2006-ல் வெளியான 'தலைமகன்' ஒரு நடிகராக சரத்குமாரின் 100-வது படம். அதுவே ஒரு இயக்குநராக அவருடைய முதல் படமாகவும் அமைந்தது. ஆம் தமிழில் தன்னுடைய நூறாவது படத்தை தானே இயக்கிய நடிகர் சரத்குமார் தான். இயக்குநர் சேரன் திரைக்கதை எழுதிய அந்தப் படத்தில் தன் பழைய அவதாரமான பத்திரிகையாளராகவும் வாழ்ந்து பார்த்திருந்தார்.

2009-ல் 'பழசிராஜா' என்கிற சரித்திரப் படத்தில் மம்முட்டியுடன் நடித்து மலையாள சினிமாவில் கால்பதித்தார் அது தொடங்கி கடந்து பத்தாண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கவனம் ஈர்க்கும் கெளரவ வேடங்களிலும் நடித்துவருகிறார்.

2011-ல் தமிழில் மிகப் பெரிய வெற்றிபெற்ற 'காஞ்சனா' படத்தில் திருநங்கையாக நடித்தார் சரத்குமார். அதுவரை பல நடிகர்கள் பெண்ணாக நடித்திருந்தாலும் ஒரு நட்சத்திர நடிகர் திருநங்கையாக நடித்தது அதுவே முதல் முறை. அந்தக் கதாபாத்திரத்தில் சரத்குமார் போன்ற ஒரு மதிப்புக்குரிய நடிகர் நடித்ததன் மூலம் சமூகத்தில் திருநங்கைகள் குறித்த அவலப் பார்வையின் தாக்கம் குறைய உதவியது.

'கொல கொலயா முந்திரிகா', 'சென்னையில் ஒரு நாள்', 'கோச்சடையான்', 'நிமிர்ந்து நில்', வானம் கொட்டட்டும், கன்னடத்தில் 'மைனா', தெலுங்கு மொழியில் 'பரத் அனே நேனு' என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள சரத்குமார், 'ஜக்குபாய்', 'சண்டமாருதம்', 'சென்னையில் ஒரு நாள் இரண்டாம் பாகம், ஆகியி படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். இதில் 'சண்டமாருதம்' படத்துக்கு திரைக்கதை எழுதினார். மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரமாண்டடமாக உருவாக்கி வரும் வரலாற்று படமான பொன்னியின்செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையராக நடித்திருக்கிறார், சரத்குமார்.

பவித்ரன், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, மணிவாசகம், சுரேஷ் கிருஷ்ணா, ஏ.வெங்கடேஷ், விக்ரமன் உள்பட பல இயக்குநர்களுடன் பணியாற்றி பல வகைமைகளைச் சேர்ந்த படங்களில் நாயகனாக நடித்துள்ள சரத்குமார், 111 தமிழ்ப் படங்களிலும்  21 தெலுங்குப்  படங்களிலும், 8 மலையாளப் படங்களிலும், 5 கன்னடப்  படங்களிலும்  நடித்திருக்கிறார்.

தனது நிறுவனத்தின் சார்பில் பதினோரு படங்களை தயாரித்திருக்கும் சரத்குமார், ஏய், சாணக்கியா, தலைமகன், இலக்கணம் இல்லா காதல், சண்டை மாருதம் ஆகிய படங்களில் பாடகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சின்னத்திரையிலும் இவரது பங்களிப்பு உண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கோடீஸ்வரன் என்ற பொது அறிவுப் போட்டியைத்  தொகுத்து வழங்கினார் சரத்குமார்.

நாட்டாமை, நட்புக்காக மற்றும் சிம்மராசி படங்களுக்காக இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற சரத்குமார், தமிழக் அரசின் எம்.ஜி.ஆர்.விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ள சரத்குமார், சினிமா எக்ஸ்பிரஸ், பிலிம்பேர், தினகரன், மற்றும் தனியார் தொலைக்காட்சிகளின்  விருதுகள் பலமுறை பெற்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் பேசக் கூடிய ஆற்றல் பெற்ற சரத்குமார், மீடியா வாய்ஸ் என்ற பத்திரிகையை ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

ஒரு நடிகர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி நடிகர் சங்கத்தை கடன்களிலிருந்து மீட்டதில் விஜய்காந்துக்கு தக்க துணை புரிந்தார் சரத்குமார். விஜயகாந்த் தலைவராக இருந்த காலத்தில் பொதுச் செயலாளராகவும் பின்னர் தலைவராகவும் பதவி வகித்தார் சரத்குமார்.

1996-லிருந்து அரசியலிலும் தீவிரமாக இயங்கிவருபவர் சரத்குமார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தவர் 1998-ல் அக்கட்சியின் சார்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அதன் பிறகு 2001-ல் திமுக சார்பில் மாநிலங்களை உறுப்பினாராகி ஆறு ஆண்டுகள் முழுப் பதவிக்காலத்தை நிறைவுசெய்தார். 2007-ல் சமத்துவ மக்கள் கட்சி என்ற தனிக்கட்சி தொடங்கினார். 2011 தேர்தலில் அஇஅதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து, திருமணம் செய்துகொண்ட சரத்குமாருக்கு வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சாயாதேவியை விட்டுப் பிரிந்த சரத்குமார், நடிகை ராதிகாவை 2001 ஆண்டில்  திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு ராகுல் என்கிற மகன் இருக்கிறார்

திரையுலகில் அலைபோல் நுழைந்து மிகக் குறுகிய காலத்தில் மலை போல் உயர்ந்து நின்ற  சரத்குமாரின் வளர்ச்சி  உண்மை, உழைப்பு, உயர்வு என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில்  உருவானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக